சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 25, 2024

சாணக்கியன் 106

 

புருஷோத்தமனின் இறுதிச் சடங்குகளைச் செய்யும் போதும் மலயகேதுவின் மனம் கொதித்துக் கொண்டேயிருந்தது. புருஷோத்தமனுக்கு மரியாதை செலுத்த அருகிலிருந்த பகுதிகளின் அரசர்களும், அமைச்சர்களும் வந்து சென்றார்கள். ஆம்பி குமாரனும் தன் பிரதிநிதியை அனுப்பியிருந்தான். யூடெமஸ் கூட இரங்கல் கடிதம் அனுப்பியிருந்தான். அதைப் படிக்கையில் மலயகேது தன் கோபத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையாகச் சிரமப்பட்டான்.

 

அவன் இந்திரதத்திடம் சொன்னான். “இவன் பிணத்தைப் பார்க்காமல் என் மனம் ஆறாது அமைச்சரே. நாம் உடனடியாக அவனை ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுத்தாக வேண்டும். நாம் படைகளைத் திரட்டிக் கொண்டு செல்வதைத் தவிர வேறு கௌரவமான வழி எனக்குத் தெரியவில்லை”

 

இந்திரதத் அமைதியாகச் சொன்னார். ”நான் ஏற்கெனவே சொன்னபடி அதில் சிக்கல் இருக்கிறது இளவரசே. இப்போது நம்மிடம் இருக்கும் படைகளில் நம் வீரர்களின் எண்ணிக்கை பாதி தான். ஒரு பகுதி யவன வீரர்கள். மீதமுள்ளவர்கள் மற்ற பகுதிகளின் வீரர்கள். யாரும் தன்னிச்சையாக நடந்து கொள்ளாமல் இருக்கவும், எல்லோர் மீதும் கட்டுப்பாட்டை வைத்திருக்கவும் அலெக்ஸாண்டர், தான் கைப்பற்றிய எல்லாப் பகுதிகளிலும் இந்த யுக்தியைத் தான் கையாண்டு இருக்கிறான். யூடெமஸை எதிர்த்துப் போரிட யவன வீரர்கள் கண்டிப்பாக முன்வர மாட்டார்கள். மற்ற பகுதி வீரர்களும் சத்ரப்பான அவனை எதிர்க்கத் தயக்கமே காட்டுவார்கள். அப்படி இருக்கையில் நம் வீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு நாம் வெற்றி பெறுவது கஷ்டம்.... நான் ஆம்பி குமாரனுக்கு நடந்த நிகழ்வுகளை எல்லாம் எழுதி நமக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன். சத்ரப்பான அவன் அதைச் செய்யா விட்டால் நீதி வேண்டி வேறு வழியைத் தேடும் நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுவோம் என்றும் தெரிவித்திருக்கிறேன்.”

 

மலயகேது சந்தேகத்தோடு கேட்டான். “அவன் நமக்கு உதவுவான் என்று நினைக்கிறீர்களா?”

 

இந்திரதத் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “அவன் உதவுவான் என்று தோன்றவில்லை. விசாரிக்கிறேன் என்று சொல்லி யூடெமஸிடம் விளக்கம் கேட்டு ஒரு கடிதம் எழுதி தன் பொறுப்பு முடிந்தது என்று சும்மாயிருந்து விடுவான் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.”

 

மலயகேது இயலாமை கலந்த கோபத்தோடு சொன்னான். “அதனால் நாமும் சும்மா இருந்து விடலாமென்று சொல்கிறீர்களா அமைச்சரே. அது மட்டும் முடியாது. அப்படி நான் இருந்து விட்டால் ஒரு வீரகுலத்தில் பிறந்ததற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.”

 

இந்திரதத் மெல்லச் சொன்னார். “இன்னொரு வழி இருக்கிறது. யூடெமஸுக்கு எதிராகப் போரிட நாம் சந்திரகுப்தனின் உதவியைக் கேட்கலாம்.”

 

“அவன் உதவுவானா?”

 

“யவனர்களுக்குப் பதிலாக அவன் தலைமையை நாம் ஏற்றுக் கொண்டால் அவன் உதவும் வாய்ப்பிருக்கிறது.”

 

மலயகேது யோசித்தான். உதவி செய்ய வருபவன் எஜமானாகி விடுவதை ஏற்க அவனுக்குத் தயக்கமாகத் தான் இருந்தது. அதுவும் சிலகாலம் முன்பு வரை தட்சசீல மாணவனாகச் சாதாரணமாக இருந்த ஒருவன் வீரபாரம்பரியம் மிக்க கேகயத்தின் மீது அதிகாரம் செலுத்த முடிந்தவனாக மாறுவது அவனுக்குச் சிறிது நெருடலாகத் தான் இருந்தது.  

 

மலயகேது சொன்னான். “தந்தை இருந்த வரை அவனுடைய புரட்சிப்படையினரை அடக்கி நம்மை அண்ட விடாமல் தூரத்திலேயே வைத்திருந்தார். அவன் தலைமையில் நாம் இயங்குவதை விட நம் தலைமையின்கீழ் அவன் வருவதல்லவா நமக்குப் பெருமை”  

 

“உண்மை தான் இளவரசே. ஆனால் பிலிப்பின் மரணத்திற்குப் பின் நிலைமை மாறி விட்டது. பிலிப்பைக் கொன்று யவனர்களை வாஹிக் பிரதேசத்திலிருந்து துரத்த முடிந்த அவனுக்கு யவனர்களின் அதிகாரத்திற்குட்பட்ட நம் தலைமையை ஏற்கும் அவசியம் இல்லை. பிலிப்பைக் கொன்ற பிறகும் அவனை எதுவும் செய்ய முடியாத நிலைமையில் தான் சத்ரப்களான யூதிடெமஸும், ஆம்பி குமாரனும் இருக்கிறார்கள். அதனால் சந்திரகுப்தன் நம்மைவிடச் சௌகரியமான நிலைமையில் தான் இருக்கிறான்.”

 

மலயகேது தயக்கத்துடன் கேட்டான். ”நமக்கு வேறு வழியில்லையா?”

 

“என் அறிவுக்கெட்டிய வரை இல்லை.”

 

“சந்திரகுப்தன் நமக்கு உதவ முன்வருவானா? அவன் உதவி யூடெமஸை வீழ்த்த நமக்கு உதவுமா?”

 

இந்திரதத் சொன்னார். “அவனுடைய ஆசிரியர் விஷ்ணுகுப்தர் என் நண்பர். அவரிடம் உதவி கேட்டால் அவர் நிச்சயம் உதவுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மேலும் அவர்களது அடுத்த இலக்கு மகதம் என்பதால் தனநந்தனை வீழ்த்த சந்திரகுப்தன் தன் படைவலிமையை விரிவுபடுத்த வேண்டி இருக்கிறது. அதனால் நமக்கு உதவினால் அவனுக்கும் இலாபம் தான். அவனுடன் இணைவது யூடெமஸை வீழ்த்த நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன் இளவரசே.”

 

மலயகேது நிறைய யோசித்தான். தந்தையை இழந்த பிறகும் யூடெமஸின் அதிகாரத்தின் கீழ் இருப்பதை விட அவனை ஒழித்துக் கட்ட உதவமுடிந்த சந்திரகுப்தன் தலைமையை ஏற்றுக் கொள்வது மேல் என்று அவனுக்குத் தோன்றியது.

 

ந்திரகுப்தன் தாயின் வரவுக்குப் பின் பெரும் நிம்மதியை உணர்ந்தான். ஒரு காலத்தில் அவள் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் குறித்து அடிக்கடி கவலைப்பட்டது போல இப்போது அவன் கவலைப்பட வேண்டியிருக்கவில்லை. வாஹிக் பிரதேசத்தின் நிர்வாக வேலைகளில் அவனால் நிம்மதியாக ஈடுபட முடிந்தது. சாணக்கியர் அதில் எல்லாம் எந்தத் தலையீடும் செய்யாமலிருந்தார். அது மட்டுமல்லாமல் முக்கியப் பொறுப்புகளுக்கு யாரை நியமிப்பது என்ற மிகமுக்கிய விஷயங்களில் அவன் அவரைக் கலந்தாலோசிக்க முற்பட்ட போது கூட அதைக் காது கொடுத்து கேட்க அவர் மறுத்து விட்டார். “நீ உன் விருப்பம் போல செய்” என்று ஒதுங்கி விட்டார். ஆரம்பத்தில் அவனுக்கு அவர் அவன் மீது ஏதாவது கோபம் கொண்டு சொல்கிறாரோ என்று கூட பயம் வந்திருக்கிறது.

 

“ஏன் ஆச்சாரியரே இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் காட்டிய வழியில் அல்லவா நான் இத்தனை நாட்களும் பயணித்திருக்கிறேன். இப்போது மட்டும் ஏன் எனக்கு அறிவுரை சொல்ல மறுக்கிறீர்கள்”

 

“முட்டாளுக்கு மட்டுமே தொடர்ந்து அறிவுரை சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். புத்திசாலிக்குத் தொடர்ந்த அறிவுரைகள் தேவையில்லை. நீயே சரியாக முடிவெடுக்கும்  தகுதியைப் பெற்ற பிறகும் நான் அதில் தலையிடுவது உன் வளர்ச்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் நல்லதல்ல சந்திரகுப்தா. எல்லா விஷயங்களிலும் என்னைச் சார்ந்தே நீ இருப்பது ஆசிரியனான எனக்கும் பெருமையல்ல.”

 

“இல்லை ஆச்சாரியரே. நான் தவறாக எதாவது முடிவெடுத்து விட்டால்?’”

 

“அதை உணரும் போது அதை நீயாக மாற்றிக் கொள்வாய். அது தான் சரியாகக் கற்றுத் தெளியும் முறை.  மிகப்பெரிய தவறு எதையாவது நீ செய்யவிருக்கும் பட்சத்தில், அதன் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும் பட்சத்தில், நானாகவே கண்டிப்பாக அதைச் சுட்டிக் காட்டுகிறேன். மற்றபடி நீ உன் அறிவு சொல்கிறபடி முடிவுகள் எடுப்பது தான் சரி.”  

 

அதனாலேயே சந்திரகுப்தன் அவர் தலையிடாத விஷயங்களில் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுத்தான். அவர் போலவே பல விஷயங்களில் சிந்திக்கக் கற்றிருந்த அவன் பெருந்தவறான முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை. ஓரிரு நியமனங்களில் அவர் சற்று வேறு மாதிரியான முடிவுகள் எடுத்திருப்பார் என்றாலும் கூட அவன் முடிவுகளும் மோசமானவையாக இருக்கவில்லை என்பதால் அவர் தன் கருத்துகளை அவனிடம் சொன்னதில்லை.

அவர் அவன் பார்க்கும் போதெல்லாம் ஏதாவது வேலைகளைச் செய்து கொண்டே இருந்தார். படிப்பது, ஆட்களைச் சந்திப்பது, எங்காவது பயணம் செய்வது என்று ஓய்வில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தார். சில சமயங்களில் என்ன செய்கிறார், எதற்காகச் செய்கிறார் என்பதை அவனிடம் சொல்வார். சில விஷயங்களைச் சொல்லவே மாட்டார்.  அந்த விவரங்கள் அவனுக்கு அவசியமில்லாதவை என்று அவர் நினைப்பதாக அவனுக்குத் தோன்றும். ’உன் வேலையை நீ செய்; என் வேலையை நான் செய்கிறேன். கண்டிப்பாக இருவரும் தெரிந்திருக்க வேண்டியதை மட்டும் ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்வோம்.’ என்பது போலிருந்தது அவர் நடவடிக்கை.

 

அதிலும் சந்திரகுப்தன் பிரமிப்பையே உணர்ந்தான். எதிலும் தனக்கு அதிக முக்கியத்துவம் வேண்டும் என்று அவர் என்றுமே ஆசைப்பட்டதில்லை. அவன் தன்னைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்றும் அவர் எப்போதும் நினைத்ததில்லை. அவர் நிலைமையில் இருக்கும் எந்த மனிதனாலும் இது சாத்தியப்பட்டிருக்காது என்பதில் அவனுக்குச் சந்தேகமே இல்லை. ஒவ்வொரு நாளும் அவர் உள்ளூரில் இருக்கும் பட்சத்தில் அவரை ஒரு முறையாவது அவன் சந்தித்துப் பேசாமல் இல்லை. அவரிடம் சென்று பேசி விட்டு வரும் போதே மனம் தெளிவாவது போல் அவன் உணர்வான்.  

 

இன்றும் அவரைச் சந்திக்கச் செல்லும் முன் காவலனை அழைத்துக் கேட்டான். “ஆச்சாரியர் அவர் அறையில் தான் இருக்கிறாரா, இல்லை வெளியே சென்றிருக்கிறாரா?”

 

காவலன் சொன்னான். “கேகய அமைச்சர் அவரைச் சந்திக்க வந்துள்ளார் அரசே. ஆச்சாரியர் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார்”

(தொடரும்)

என்.கணேசன்   

1 comment:

  1. கேகயத்திற்கு வெறுமனே சாணக்கியர் உதவி செய்ய மாட்டார்.... மகதத்தை எதிர்க்க ஏதேனும் ஒரு விசயத்தை பெற்றுக் கொண்ட பின் ...ஒத்துக் கொள்ளவார்....

    ReplyDelete