பரசுராமன் அவன் மனதில் நினைத்த அந்தக் கேள்விக்கும் பதில்
அளிக்க முற்படவில்லை. அவர் சொன்னார். “உயிரோட இருக்கறப்ப
புரியாத எல்லா உண்மைகளும் இறந்த பிறகு, அதாவது ஆவியான பிறகு, புரிய வரும். ஆனால் அவர்
யோகிங்கறது அப்படி இறந்த பிறகு சைத்ராவுக்குத் தெரிஞ்ச மாதிரியில்லை. பார்த்த
ஆரம்பத்திலேயே அவரை தாத்தா சந்திச்சா பரவசமாவார்னு நினைச்சதா சொல்லியிருக்கா...”
ஷ்ரவன் யோசித்தான். ’இவர் சொல்வது
போல் சைத்ரா எப்படி அந்த யோகியை அடையாளம் கண்டு கொண்டாள்? பிரம்மானந்தாவுக்கு
யோகியை சிவசங்கரன் அடையாளம் காட்டிய மாதிரி வேறு யாராவது சைத்ராவுக்கு அடையாளம் காட்டியிருப்பார்களோ? அப்படியே
அடையாளம் தெரிந்தாலும், தாத்தாவிடம் அதை மட்டும் குறிப்பாக அவள் ஏன் சொல்கிறாள்? ஒருவேளை
அவள் மரணத்துக்கும், அந்த யோகியைச் சந்தித்ததற்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாமோ?’
ஷ்ரவனுக்கு விடைகள் கிடைக்கவில்லை. அவற்றைப்
பிறகு சிந்திப்பதற்கு ஒதுக்கி வைத்து விட்டு, ஷ்ரவன் அவரிடம் ஆர்வமாகக் கேட்டான். “டாக்டர்
கிருஷ்ணமூர்த்திக்கு மொட்டைக்கடிதம் எழுதியது யாராய் இருக்கும்னு உங்களால சொல்ல முடியுமா
சுவாமிஜி”
பரசுராமன் தன்னால் கூடுதலாய் எதுவும்
சொல்ல முடியவில்லை என்றார்.
சில விஷயங்களை தன் அபூர்வ சக்திகள்
மூலமாய் அறிந்து பட்டென்று சொல்லும் பரசுராமன், சில விஷயங்களில்
அவனைப் போலவே சாதாரண ஆளாக, எதையும் அறிய முடியாதவராக இருப்பதை ஒத்துக் கொள்ள முடிவது
அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. இந்த நேர்மை பலருக்கும் இருப்பதில்லை...
அவன் அவரிடம் சொன்னான். “உங்களைப்
பத்தி நெட்ல பார்த்தப்ப, உங்களைக் கூடப் பலரும் யோகின்னு சொல்லியிருக்கறது தெரிஞ்சுது.”
“அப்படி சிலர் யோகின்னு சொல்றாங்க. சிலர் மந்திரவாதின்னு சொல்றாங்க. சிலர் மேஜிக் வித்தை காட்டறவன்னு சொல்றாங்க.. சிலரோ போலிச் சாமியார்னு சொல்றாங்க. இப்படி பலரும் பல விதமாய் சொல்றாங்க. நான் எதையும் பெருசா லட்சியம் பண்ணறதில்லை. பண்ணினா பைத்தியம் புடிச்சுக்கும். நான் யாருன்னு எனக்குத் தெரியும். மாயை அதைக்கூடச் சில சமயம் மறக்க வெச்சுடும். அதனால நான் ரொம்ப கவனமாய் இருக்க வேண்டியிருக்கு.” என்று பரசுராமன் புன்னகையுடன் சொன்னார்.
அவர் அவனை மிகவும் கவர்ந்தார். அவர் கற்றுத் தேர்ந்திருக்கும்
கலையில் அவனுக்கு நிறைய கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. ஆனால் அதற்கு இப்போது அவனுக்கு நேரமில்லை. கண்டிப்பாக
ஒரு நாள் அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் உண்மைகளை அவரிடமிருந்து தெரிந்து கொள்ள
வேண்டும் என்று அவன் எண்ணிக் கொண்டான்.
ஷ்ரவன் அவருடன் பேசுகையில் சைத்ராவின் மரணத்தில் யோகாலயத்தினர்
காட்டிய அலட்சியத்தையும், செவென்
ஸ்டார்ஸ் மருத்துவமனையின் மேனேஜிங் டைரக்டர் சுகுமாரன் பேசிய அலட்சியப் பேச்சையும்
சுட்டிக் காட்டி வருத்தப்பட்டான்.
நாட்டின் சட்ட திட்டங்கள், பணமும், செல்வாக்கும் இருப்பவர்கள் ஏய்த்துப் பிழைக்கவும், அலட்டாமல்
அராஜகங்களில் ஈடுபட வசதியாகவும் இருப்பதை வருத்தத்துடன் சொன்னான். “சாதாரண மனுஷங்க மேல் உடனடியாய் நடவடிக்கை எடுக்க முடியற மாதிரி செல்வாக்கு
உள்ளவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியாத சமயங்கள்ல எல்லாம் எனக்கு ரத்தம் கொதிக்கும்.
கவனமாய் அதைக் கையாண்டு காலப்போக்குல தண்டிக்க முடியும்னாலும் காத்திருந்து
செய்கிறப்ப பல தடவை பொறுமையே போயிடும்…”
அவனுடைய நியாய உணர்வும், அநியாயத்தைக் கண்டு கொதிக்கும் உணர்வும் அவருக்குப்
பிடித்திருந்தது. பிரபஞ்சம் இவனைப் போன்ற ஆட்களைப் படைத்து தான்
உலகை ஓரளவு சமன்படுத்திக் கொள்கிறது என்று அவருக்குத் தோன்றியது.
ஷ்ரவன் சொன்னான்.
“கண்டிப்பாய் குற்றவாளின்னு ஊர்ஜிதம் ஆகியிருக்கற சுகுமாரனுக்கும்,
யோகாலயத்துக்கும் இடையே தொடர்பு இருக்குன்னு கூட எங்களால இன்னும் நிரூபிக்க
முடியலை சுவாமிஜி. எங்கள் ஆள் கோவிட் நோயாளிகள் பத்தி விசாரிக்கப்
போன பிறகு கூட சுகுமாரன் பிரம்மானந்தாவையோ, யோகாலயத்தையோ நேரடியாய்
தொடர்பு கொள்ளலை… வேற ரகசிய வழிகள்ல தொடர்பில் இருக்காரான்னு
தெரியல…. பிரச்சனை என்னன்னா கிணத்துல போட்ட கல் மாதிரி குற்றவாளிகள்
அவங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லாம இப்ப அமைதியாய் இருக்காங்க. செயல்பட்டுட்டு இருக்கிற குற்றவாளிகளைத் துப்பறியறது சுலபம்…”
பரசுராமனுக்கு அவன் சொல்வது புரிந்தது. அவர் தன்னால் முடிந்த எதாவது
உதவியை அவனுக்குச் செய்ய விரும்பினார். ”பிரச்சினையைத் தீர்க்கறது
தான் கஷ்டம் ஷ்ரவன். பிரச்சினையை உருவாக்கறது ரொம்பவே சுலபம்.
வேணுமானால், வெளிப்படையாய் குற்றவாளின்னு நமக்குத்
தெரியற சுகுமாரன் சும்மா இருக்க முடியாதபடி ஒரு பிரச்சினையை உருவாக்கிடலாம்.”
ஷ்ரவன் யதார்த்த நிலைமையைச் சொன்னான். “அவங்க பிரச்சினைகளைத் தீர்க்கறதுல
கெட்டிக்காரன்களாய் இருக்கற மாதிரி தான் தெரியுது சுவாமிஜி. எதையும்
அலட்டிக்காம அமைதியாய் கையாளும் ரகமாய் தான் இருக்காங்க.”
பரசுராமன் புன்னகையுடன் சொன்னார். “அடிக்கடி சந்திக்கிற
பிரச்சினையை சமாளிச்சுப் பழகி தான் அதைத் தீர்க்கறதுல யாருமே கெட்டிக்காரனாக முடியும். ஆனால் கொஞ்சமும் எதிர்பார்க்காத, தலைகால்
புரியாத பிரச்சினை வந்தால், எப்படிப்பட்டவனும் அமைதியிழப்பான். அப்படியொரு
பிரச்சினையை உருவாக்கறது பெரிய விஷயமில்லை. அரண்டு
போகிற மாதிரி ஒன்னை உருவாக்குவோம்… குற்றவாளிகள் தாங்களாய்
ஒன்னு சேர்ந்து அலைமோத ஆரம்பிப்பாங்க.... அது உனக்கு உதவலாம். ஆனால் அப்படியொரு பிரச்சினையை அவங்களுக்கு
உருவாக்க நீ எனக்கு ஒரு வேலை செய்து தரணும்”
ஷ்ரவன் உற்சாகமானான்.
“சொல்லுங்க சுவாமிஜி. நான் என்ன செய்யணும்?”
பரசுராமன் சொல்ல ஆரம்பித்தார்.
செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையின் மேனேஜிங் டைரக்டர் டாக்டர்
சுகுமாரனின் அறை, சிறப்பு மருத்துவர்களின் அறைகள் இருக்கும் வரிசையில் கடைசியாக
இருந்தது. எலும்பு, இதயம், நியூரோ, மருத்துவர்களைத்
தாண்டி இருக்கும் கடைசி அறை அவருடையது. அந்த வரிசையில்
இருந்த இருக்கைகள் எல்லாம் நிறைந்திருந்தன. சில சமயங்களில்
பார்க்க வந்த மருத்துவர் அறைக்கு வெளியே இடம் கிடைக்கா விட்டால், அடுத்ததாக
அருகில் எங்கே இடம் கிடைக்கிறதோ அங்கு நோயாளிகளும், உடன் வருபவர்களும்
அமர்ந்து கொள்வது இயல்பாக நடக்கும் விஷயம் தான். ஆகவே சுகுமாரன்
அறைக்கு வெளியே இருந்த இருக்கைகளும் காலியாக இல்லை.
அவர் அறைக் கதவருகே இருந்த முதல் இருக்கையில்
அமர்ந்து இருந்த இளைஞன் அங்கே எந்த மருத்துவரைப் பார்க்க வந்தவனும் அல்ல. ஆனால் பார்க்கிறவர்கள் யாருக்கும் அவன் எந்த வித சந்தேகத்தையும்
ஏற்படுத்தவில்லை. அவன் பார்வை அடிக்கடி நியூரோ மருத்துவரின் அறைக் கதவையே பார்த்துக்
கொண்டிருந்ததால் அவன் அந்த மருத்துவரைப் பார்க்க அமர்ந்திருக்கிறான் என்று தோன்றும்படி
அவன் அமர்ந்திருந்தான். அவன் வந்து ஒரு மணி நேரமாகப் போகிறது.
அவன் வந்ததிலிருந்து சுகுமாரனின் அறைக்குள்ளே மூன்று ஆட்கள் போய் வந்து விட்டார்கள். இப்போது நான்காவது நபர் உள்ளே போய் சுகுமாரனுடன் பேசிக் கொண்டிருக்கிறான். உள்ளே என்ன பேசுகிறார்கள் என்பது லேசாக அவன் காதில் விழுந்தது. ஆனால் அதை அவன் அதிக சிரத்தையுடன் கேட்டுக் கொள்ளவில்லை. அவன் வந்திருக்கும் உத்தேசம் அதுவல்ல.
சிறிது நேரத்தில் அந்த நான்காவது நபர் வெளியே வந்தார். ஐந்தாவதாக யாரும் உள்ளே
போகவில்லை. இரண்டு நிமிடங்கள் கழித்து சுகுமாரனும், கைபேசியில் யாருடனோ பேசியபடி வெளியே வந்தார். அவர் பார்வை
மேலோட்டமாக அவர் அறைக்கு அருகே அமர்ந்திருப்பவர்கள் மீது விழுந்தது. அவர் அறிந்த முகம் அங்கு இல்லாததால் அவர் பார்வை பிரத்தியேகமாக யார் மீதும்
நிலைக்கவில்லை. அவர் மிடுக்கான நடை நடந்து அவர்களைக் கடந்து போனார்.
அவர் தூரப் போய் மாடிப்படி ஏறும் வரை பார்த்துக் கொண்டிருந்த
இளைஞன் தன் அருகிலிருந்த நபரைப் பார்த்தான்.
அந்த நபர் கைபேசியில் உள்ள செய்தியில் ஆழ்ந்து போயிருந்தது தெரிந்தது.
அந்த இளைஞன் மெல்ல எழுந்து நின்றான். யார் கவனமும்
அவன் மேல் இல்லை. சடாரென்று அவன் சுகுமாரனின் அறைக்குள் நுழைந்தான்.
அவன் பார்வை சுகுமாரனின் மேஜையை அலசி, மேஜை மீது
இருந்த பேனாவில் நிலைத்தது. சற்று நெருங்கி வந்தவன் நாற்காலியின்
ஓரத்தில் விழுந்திருந்த சுகுமாரனின் கைக்குட்டையைப் பார்த்தான். அவன் முகம் பிரகாசித்தது. தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து
ஒரு ப்ளாஸ்டிக் உறையை எடுத்துப் பிரித்தான். தன் வலது கையின்
இரண்டு விரல்களின் நுனியில் அந்தக் கைக்குட்டையை எடுத்து அந்த ப்ளாஸ்டிக் உறையில் போட்டுக்
கொண்டு அந்த ப்ளாஸ்டிக் உறையைப் பழையபடி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.
சத்தமில்லாமல் அறைக்கதவைத் திறந்து மெல்ல எட்டிப் பார்த்தான்.
யார் பார்வையும் இங்கில்லை. நிம்மதியாக வெளியே
வந்தவன் அமைதியாக வெளியேறினான்.
(தொடரும்)
என்.கணேசன்
வேட்டை தொடங்கியது.
ReplyDeleteParasuraman will really help shravan to identify the real culprits and bring them to justice.
ReplyDeleteசுகுமாரனுக்கு மருத்துவர்களால் கண்டறியாத முடியாத படி மாந்திரிக பிரச்சினை ஏற்பட போகிறது....
ReplyDelete