சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 1, 2024

யோகி 43

 

ஷ்ரவன் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் சொன்னான். “எனக்கே தெரியாத என்னைப் பத்தின புதுத் தகவலா? சொல்லுங்களேன் பார்ப்போம்

 

நீ சீக்கிரமே உன் அம்மா சொன்ன மாதிரி ஒரு தமிழ்ப் பொண்ணைச் சந்திக்கப் போறே

 

ஷ்ரவன் திகைத்தான். ஹைதராபாதிலிருந்த போது அவன் அம்மா சொன்ன விஷயம் இவருக்கு எப்படித் தெரிந்தது. அவன், அவன் அம்மா, அப்பா மட்டுமே அறிந்த விஷயமல்லவா அது? அவன் திகைப்புடன் கேட்டான். “எங்கம்மா சொன்னது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

 

அதெல்லாம் ஒரு ரகசியக்கலை…”

 

நான் ஒரு தமிழ்ப் பொண்ணைச் சந்திக்கப் போறேன்னு சொன்னது?”

 

அதுவும் அந்த ரகசியக்கலையோட இன்னொரு பகுதி தான்

 

ஷ்ரவனுக்கு அந்தத் தமிழ்ப் பெண் பற்றிக் கூடுதலாக அறிந்து கொள்ள ஆவலாக இருந்தது. “அந்தத் தமிழ்ப்பொண்ணு எப்படி இருப்பா? குணம் எப்படி இருக்கும்?”

 

பரசுராமன் சிரித்தபடி சொன்னார். “அப்படி எல்லாமே முன்கூட்டியே தெரிஞ்சுடுச்சுன்னா, அப்புறம் வாழ்க்கைல சுவாரசியம் போயிடும். போரடிச்சுடும்.”

 

அப்படியானால் அந்தப் பெண்ணைச் சந்திக்கப் போவதையும் இவர் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்என்று ஷ்ரவன் நினைத்த போது, அவன் நினைப்பதையும் அவர் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது என்றும் தோன்றியது.

 

ஆனால் அவர் மெலிதாகப் புன்னகைத்தாரேயொழிய அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

 

ஷ்ரவன் ஆர்வத்துடன் கேட்டான். “இதெல்லாம் நீங்கள் ஆவிகள் மூலமாய் தெரிஞ்சுக்கறதா. இல்லை வேற எதாவது வழியிலயா?”

 

உன்னைப் பத்தி சொன்னது உன் அலைவரிசைகளைப் படிச்சு நான் சொன்னது. ஒருத்தரைப் பார்க்கறப்ப, அவங்க அலைவரிசைகள் மூலமாய் மேலோட்டமாய் சில தகவல்கள் தெரியும்….”

 

எனக்கும் இதெல்லாம் கத்துக்க ஆசையாய் இருக்கு சுவாமிஜிஎன்று ஷ்ரவன் ஆர்வத்துடன் சொன்னான்.

 

பரசுராமனுக்கு மகாபலிபுரத்தில் தன் முதல் குருவைப் பார்த்த நாள் நினைவு வந்தது. அப்போது அவரும் குரு சதானந்தனிடம் இப்படியே தான் சொன்னார். பரசுராமன் புன்னகையுடன், சதானந்தன் தன்னிடம் சொன்ன உண்மையையே  சொன்னார். “இதெல்லாம் கேட்கவும், பார்க்கவும் ரொம்ப சுவாரசியமாய் இருக்கும். ஆனா கத்துக்கற வழி சுவாரசியமா இருக்காது. நிறைய பயிற்சிகள் செய்யணும். நீண்ட காலம் செய்யணும். அதுவே உன் வாழ்க்கையாய் இருக்கணும். அது சீக்கிரமே அலுத்துடும்.”

 

ஷ்ரவன் பெருமூச்சு விட்டான். அவனுடைய உத்தியோகத்தில் இதற்கெல்லாம் நேரம் கிடைப்பதும் கஷ்டம் தான்.

 

பரசுராமன் சிறிதும் அகம்பாவம் இல்லாதவராய்ச் சொன்னார். “உன் உத்தியோகத்துல நீ உன் வேலையைச் சிறப்பாய் செய்யறாய். அதுவே பெருசு தான். நான் உன் உத்தியோகத்துக்கு வந்தேன்னாலும் உன் அளவு சிறப்பாய் அந்த வேலையைச் செய்ய முடியாது. ஒரு விதத்துல கடவுள் நமக்கேத்த இடங்கள்ல தான் நம்மளை இருக்க வெச்சிருக்கார். நாம இடம் மாறிகிட்டா ரெண்டு பேரும் சோபிக்க முடியாது.”

 

சொல்லி விட்டு அவனை ஒரு கணம் கூர்ந்து பார்த்தார். பின் புன்னகையுடன் சொன்னார். “ஆனாலும் உனக்கும் இந்த அமானுஷ்ய சக்திகளின் பரிச்சயம் ஓரளவு கிடைக்கும் பிராப்தம் தெரியுது

 

பலரும் வணங்கும் நிலையில் உள்ள அவர் அவன் வேலையும் சற்றும் குறைந்தது அல்ல என்றும் அவன் வேலையை அவனளவு திறமையாக அவரும் செய்ய முடியாது என்றும் அடக்கமாகச் சொல்ல முடிந்தது அவர் அடைந்திருக்கும் அவரது உயர்வாலும், பக்குவத்தாலும் தான் என்று ஷ்ரவனுக்குத் தோன்றியது.  அவரைப் பற்றியிருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் அவனிடமிருந்து நீங்கியது. கடைசியாக அமானுஷ்ய சக்திகளின் பரிச்சயம் ஓரளவு ஏற்பட பிராப்தம் உள்ளது என்று சொன்னது உற்சாகத்தை ஏற்படுத்தியது.

 

ஷ்ரவன் அவரிடம் கேட்டான். “சுவாமிஜி, சைத்ராவோட ஆவியை வரவழைச்சு நீங்க சேதுமாதவன் சார் கிட்ட தெரிவிச்சதுல கொலை பத்தின தகவல் எதுவுமில்லைன்னு கேள்விப்பட்டேன். எனக்கு ஒரு சந்தேகம். இப்ப நீங்க என் விஷயத்துல சொன்ன மாதிரி நீங்களே அந்தக் கொலை விஷயமாய் ஏதாவது தகவல்களைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியாதா?”

 

பரசுராமன் சொன்னார். “அப்படி எல்லா நேரங்கள்லயும் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிற சக்தி இருக்கிறது ரொம்ப அபூர்வம். முக்காலமும் அறிந்த ஞானிகள் லிஸ்ட்ல நான் இல்லை. என்னை மாதிரி ஆள்களுக்கு ஒரு ஆளைப் பார்த்தவுடனேயே சில தகவல்கள் தெரிஞ்சுக்க முடியும். மற்றதெல்லாம் தெரியாது.”

 

ஷ்ரவன் அவரைக் கேட்டான். “சுவாமிஜி! சைத்ராவோட ஆவி சொன்ன யோகி யாருன்னாவது உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சுதா?”

 

இல்லை ஷ்ரவன். உண்மையான யோகிகள் அதிகமாய் தங்களை வெளிப்படுத்திக்க மாட்டாங்க. அவங்களுக்கு அதற்கான தேவைகளும் இருக்காது….”

 

கிட்டத்தட்ட இதையே தத்துவப் பேராசிரியர் சிவசங்கரனும் சொன்னார்…” என்று சொன்ன ஷ்ரவன், சிவசங்கரன் பற்றிய தகவல்களையும், அவரிடம் சென்று அவன் அறிந்த தகவல்களையும் சொன்னான். அவர் பக்கத்து வீட்டுக்குத் தோட்ட வேலைக்கு வந்து கொண்டிருந்த ஒருவரை யோகியாக உணர்ந்ததையும், அதன் பின் நடந்தவற்றையும் சொல்லி விட்டுக் கேட்டான். “அவர் சொன்ன யோகியும், சைத்ராவோட ஆவி சொன்ன யோகியும் ஒரே ஆளாய் இருக்குமோ?”

 

பரசுராமன் கண்களை மூடி யோசித்து விட்டுச் சொன்னார். “இருக்கலாம்…”

 

முதல்லயே பிரம்மானந்தா சந்திச்சவரை யோகாலயத்தில் இருந்த சைத்ராவும் சந்திச்சிருக்கான்னா அவர் இப்ப யோகாலயத்துல இருக்கார்னு எடுத்துக்கலாமா?”

 

பரசுராமன் உறுதியாய் மறுத்துச் சொன்னார். “தீமையான, போலித்தனமான அலைவரிசைகள் இருக்கற இடத்தில் அந்த யோகி தங்கி இருக்க வாய்ப்பே இல்லை ஷ்ரவன்

 

ஷ்ரவன் கேட்டான். “அப்படின்னா, சைத்ரா அந்த யோகியை எங்கே சந்திச்சிருப்பாள்?”

 

ஷ்ரவன் அந்தக் கேள்வியைக் கேட்டவுடன் பரசுராமன் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார். அவர் நேரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டது ஷ்ரவனுக்குத் தெரிந்தது. பின் அவர் ஷ்ரவன் உட்கார்ந்திருக்கும் விதத்தைக் கூர்ந்து கவனித்தார். பின் கண்களை மூடிக் கொண்டார்.  இரண்டு நிமிடங்கள் அவர் மௌனமாய் இருந்து விட்டுச் சொன்னார். “தோட்டம் தெரிகிறது. பூக்கள் தெரிகின்றன. பட்டாம்பூச்சிகள் தெரிகின்றன.... அவ்வளவு தான் வேறு எதுவும் தெரியவில்லை. சைத்ராவோ, அந்த யோகியோ கூடத் தெரியவில்லை...”

 

ஷ்ரவன் யோசித்தான். ‘அப்படியானால் யோகாலயத்தின் தோட்டத்தில் தான் சைத்ரா அந்த யோகியைச் சந்தித்திருக்க வேண்டும்.’ ஷ்ரவன் கேட்டான்அந்த யோகி எப்பவாவது ஒரு தடவை யோகாலயத்துக்கு வரக்கூடியவராக இருந்தால், அப்படி வந்திருக்கும் சமயத்தில் அவள் அவரை அங்குள்ள தோட்டத்தில் சந்தித்திருக்கலாமல்லவா?”

 

அதற்கு வாய்ப்பிருப்பதாக பரசுராமன் தலையாட்டினார். பின் அவர் யோசனையுடன் சொன்னார். “அப்படியே சந்திச்சிருந்தாலும் கூட அவளுக்கு அவர் யோகின்னு எப்படித் தெரிஞ்சிருக்கும் ஷ்ரவன்? சிவசங்கரன் சொல்ற ஆளும், சைத்ரா சொல்ற ஆளும் ஒன்னாய் இருந்தால், அவர் தன்னை ஒரு யோகியாய் காட்டிகிட்டிருக்க வாய்ப்பில்லை. ஏன்னா சிவசங்கரனே அவராய் தான் கண்டுபிடிச்சிருக்கார். தத்துவப் பேராசிரியராய் இருந்து, தினமும் அதே விஷயத்தைப் படிச்சும், பேசியும் பக்குவப்பட்டு இருந்ததால தான் அவருக்கும் அந்த யோகியை அடையாளம் கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு. உதாரணத்துக்கு அவரோட பக்கத்து வீட்டுக்காரருக்கு தன் வீட்டுல தோட்ட வேலைக்கு வர்றவர் ஒரு யோகின்னு தெரிஞ்சிருக்கலையே. அவர் கிட்ட அந்த யோகியை, தோட்ட வேலைக்கு அனுப்பி வெச்சவருக்குக் கூட அது தெரிஞ்சிருக்கலை.  அதனால சைத்ரா அவரை சந்திச்சது உண்மைன்னா, சிவசங்கரன் மாதிரி யாராவது விஷயம் தெரிஞ்ச ஒருத்தர் அவளுக்கு அடையாளம் காட்டியிருக்கணும்…”

 

அடையாளம் காட்டிய ஆள் பிரம்மானந்தாவாக இருக்குமோ என்ற எண்ணம் ஷ்ரவனுக்கு வந்து, வந்த வேகத்தில் அந்த எண்ணம் போகவும் செய்தது. தன்னை மட்டுமே பிரதானப்படுத்திக் கொள்ளும் பிரம்மானந்தா, அடுத்தவரை யோகியாய்க் காட்டி இருக்க வாய்ப்பேயில்லை. எல்லாமே குழப்பமாகத் தான் இருந்தது. அந்த யோகி யோகாலயத்துக்கு அவ்வப்போது போகிறவராய் இருந்தால், பிரம்மானந்தாவுடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருப்பவராக இருக்க வேண்டும். ஒரு அசல் போலியுடன் அடிக்கடி தொடர்பில் இருக்க முடியுமா?

 

இருக்கவே முடியாது ஷ்ரவன்என்று பரசுராமன் சொன்னது அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. ’மனதில் கேட்டுக் கொண்ட கேள்விக்கு இவர் எப்படி பதில் சொல்கிறார்?’  


(தொடரும்)

என்.கணேசன்

 

7 comments:

  1. Very interesting conversations 👌

    ReplyDelete
  2. He worked there as well as a gardener and Sithra would have spotted him as she already knew more about Yogis from her grandpa and she also started looking for fulfillment in life by way of sanyasi.

    ReplyDelete
  3. Sivasankaran saw a yogi working as a gardener in the next house but did not meet him or talk to him. In the same way, Chaitra also saw a yogi working as a gardener in the yogalaya garden. The same gardener appeared as a yogi in the eyes of Sivasankaran and Chaitra. Sivasankaran did not know the name of the gardener (yogi), whereas Chaitra knew the name of the gardener (yogi), and asked her grand-father to contact him. How come Chaitra knew the name of the gardener (yogi) ?
    Gardeners in the yogalaya were not allowed to talk with yogi or yogini.

    ReplyDelete
  4. Interesting.. Total how many episodes are there in this book sir.!?

    ReplyDelete
  5. இருவரின் உரையாடல் சுவாரஸ்யமாக உள்ளது...

    ReplyDelete