சாணக்கியர் “அந்தக் கொலை நடந்த சம்பவத்தை நான் சொல்வதற்கு முன் அந்த இடத்திற்கு நான் எப்படிப் போய்ச் சேர்ந்தேன் என்று சொல்ல வேண்டும். அதற்கு என் முழு பின்னணியையும் நீ தெரிந்து கொள்வது சரியாக இருக்கும்...” என்று சொல்லி விட்டு, ஜீவசித்தியிடம் தன் குடும்பத்தைப் பற்றியும் பிள்ளைப் பிராயத்தைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்தார். அவர் தந்தை சாணக் வேத உபநிடதங்களில் விற்பன்னராக இருந்ததுடன் அரச தர்மம், மக்கள் நலன் குறித்த அக்கறை கொண்டவராகவும் இருந்ததையும் சொன்னார். தனநந்தன் மக்கள் நலனில் அக்கறை சிறிதும் இல்லாமல் கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்ததை அப்போதைய பிரதம அமைச்சரான ஷக்தார் கடுமையாகக் கண்டித்ததையும், ஷக்தாரின் நண்பரான சாணக் அவருடன் சேர்ந்து கொண்டு தனநந்தனை எதிர்த்ததையும் இருவரும் சிறைப்பட்டதையம் சொல்லி விட்டுத் தொடர்ந்தார்.
“அன்றைய அமைச்சர்கள்
தனநந்தனின் கைப்பாவையாக இருந்தார்கள், ஷக்தாரைப் போல் நேர்மைக்கு முக்கியத்துவம் தருபவர்களாக
இருக்கவில்லை என்றாலும் பிரதம அமைச்சரைக் கைது செய்ததை விரும்பவில்லை. அவர்கள் மன்னனிடம்
வேண்டிக் கொண்டு ஷக்தாரை விடுவித்தார்கள். ஆனால் என் தந்தையை விடுவிக்க மன்னனிடம் செல்வாக்குள்ள
யாரும் முயற்சிக்கவில்லை. அவர் சிறையிலேயே இறந்திருக்கலாம் என்று தந்தைக்கு மிக நெருங்கியவர்கள்
சந்தேகப்பட்டார்கள். அதைக் கேள்விப்பட்ட பிறகு நானும் என் தாயும் உடைந்து போனோம். ராஜதுரோகியின்
மகனுக்கு பிக்ஷை போட்டால் தனநந்தன் பிக்ஷை போட்டவர்களையும் தண்டிக்கக்கூடும் என்று
பயந்து எனக்கு மக்கள் பிக்ஷையும் போடவில்லை. எந்த மக்கள் நலனுக்காக என் தந்தை போராடினாரோ
அதே மக்கள் அவர் குடும்பத்தைப் பட்டினி போட்டார்கள். சிறுவன் நான் எப்படியோ உயிரைத்
தக்க வைத்துக் கொண்டேன். ஆனால் என் தாய் பட்டினியாலும், துக்கத்தாலும் இறந்து போனாள்.
அவள் அஸ்தியைக் கங்கையில் கரைத்த பின் பாடலிபுத்திரத்தில் இருக்க முடியவில்லை. என்
தந்தையின் நண்பர்களும், என் நண்பர்களும் எனக்கு உணவு கொடுத்து ஆதரிக்க முன் வந்தாலும்
அடுத்தவர்கள் தயவில் நான் அதிக நாள் வாழ விரும்பவில்லை. பாடலிபுத்திரத்தை விட்டுப்
போய் விட முடிவெடுத்தேன். என் தாயின் இறுதிக் கிரியைகளின் கடைசி நாளன்று கங்கையில்
தர்ப்பணம் விட வேண்டும் என்று போயிருந்தேன். அன்று பௌர்ணமி. உன் தந்தை இறந்த நாள்....”
ஜீவசித்தி சாணக்கியரின்
துன்பக்கதை கேட்டு மனவருத்தப்பட்டாலும் அவன் தந்தையின் மரணம் குறித்த முழுவிவரம் அறிய
துடித்துக் கொண்டிருந்தான். அதனால் அவர் சொல்லப் போவதை மிகவும் கவனமாகக் கேட்க ஆரம்பித்தான்.
“கங்கைக்குப் போய்
தர்ப்பணம் விட்ட பின்பும் ஏனோ உடனே திரும்பி வர மனம் வரவில்லை. அங்கேயே இருந்து
மாலை சந்தியாவந்தனமும் முடிந்தும் அங்கேயே இருந்தேன். இரவாகியது. கங்கையைப் பார்த்துக்
கொண்டு அமர்ந்திருப்பதில் ஏதோ ஒருவகை நிம்மதி கிடைத்துக் கொண்டிருப்பது போல் தோன்றியதால்
நள்ளிரவு வரையும் அங்கேயே இருந்தேன். பின் இனி திரும்பிச் செல்லலாம் என்று முடிவு செய்த போது தூரத்தில் குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்டது.
உடனே என் உள்ளுணர்வு ஏதோ ஒரு ஆபத்தை எனக்கு உணர்த்துவது போலிருந்தது. உடனே சற்றுத்
தள்ளியிருந்த பெரிய மரம் ஒன்றின் பின் நான் ஒளிந்து கொண்டேன். முதலில் வெள்ளைக் குதிரை
பூட்டிய ஒரு ரதத்தைத் தானே ஓட்டி வந்து கொண்டிருந்த தனநந்தன் தெரிந்தான். அவன் பின்னாலேயே
கருப்புக் குதிரை பூட்டிய ஒரு பயண வண்டியும் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அதைத்
தனநந்தனின் சாரதி ஓட்டி வந்து கொண்டிருந்தான். அதில் தான் உன் தந்தையும் மற்ற இரண்டு
பணியாளர்களும் இருந்தார்கள்”
ஜீவசித்தியின் இதயத்துடிப்பு
வேகமெடுத்தது. அவன் சாணக்கியர் வார்த்தைகளில் முழு கவனத்தையும் குவித்தான். சாணக்கியர்
அந்த சம்பவ காலத்திற்கும், இடத்திற்கும் போய் விட்டது போல் தெரிந்தது. அவர் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டே விவரிப்பது
போல் அவனுக்குத் தோன்றியது...
“ரதத்திலிருந்து
இறங்கிய தனநந்தன் முதலில் சுற்றும் முற்றும் பார்த்தான். வேறு ஆட்கள் யாராவது அக்கம்
பக்கம் தெரிகிறார்களா என்று அவன் பார்ப்பது போல் இருந்தது. ஒரு பெரிய மரத்தின் பின்னால்
நான் மறைந்து நின்றிருந்ததால் அவன் என்னைப் பார்த்திருக்க வழியில்லை. தனநந்தனின் சாரதி
பயண வண்டியின் பின்புறக் கதவின் பூட்டைத் திறப்பது தெரிந்தது. அதிலிருந்து உன் தந்தை
உட்பட மூன்று பணியாளர்கள் இறங்கினார்கள். தனநந்தன் பணியாளர்களுக்கு ஒரு இடத்தைக் காட்டுவதைப்
பார்த்தேன். பின் உன் தந்தையும், மற்ற இரு பணியாளர்களும் சேர்ந்து வேகமாக அந்த இடத்தைத்
தோண்ட ஆரம்பித்தார்கள். எதற்குக்
குழி தோண்டுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் தோண்டியது அகலமும், ஆழமும்
கொண்ட பெரிய குழி என்பது அவர்கள் எடுத்துக் கொண்ட காலத்திலிருந்து என்னால் யூகிக்க
முடிந்தது. தோண்டி முடித்த பின் ரதத்திலிருந்து பெரிய பெரிய பெட்டிகள் மூன்றைத் தூக்கிக்
கொண்டு வந்து அந்தக் குழியில் வைத்தார்கள். ஒவ்வொன்றையும் திடகாத்திரமாக அவர்கள் மூன்று
பேருமாகச் சேர்ந்து தூக்கவே சிரமப்பட்டதிலிருந்து
ஒவ்வொரு பெட்டியும் பெரியதாக மட்டுமல்லாமல் மிகவும் கனமாகவும் இருக்கிறது என்பதை என்னால்
உணர முடிந்தது.”
ஜீவசித்தி
மர்மம் தாங்க முடியாமல் கேட்டான். “அந்தப் பெட்டிகளில் என்ன இருந்தது?”
சாணக்கியர்
சொன்னார். “தொலைவில் இருந்ததால் எனக்கும் அந்தப் பெட்டிகளில் இருப்பதென்ன என்பதைத்
தெரிந்து கொள்ள முடியவில்லை. மூன்று பெட்டிகளையும்
வைத்த பின் பழையபடி அந்தக் குழியை அவர்கள் மூடினார்கள். அங்கு குழி தோண்டியிருக்கிறார்கள்
என்பதை யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக அந்த ஈரமண்ணை வேறு இடங்களில் பரப்பி அங்கிருந்த மண்ணை இங்கு
பரப்பி வித்தியாசம் தெரியாமலிருக்கும்படி செய்தார்கள். பின் பழையபடி பணியாளர்கள் பயண
வண்டியில் ஏறிக் கொள்ள அதன் பின்கதவை தனநந்தனின் சாரதி பூட்டிக் கொண்டான்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு தனநந்தன் தன் ரதத்தை ஓட்டிக் கொண்டு போகப் பின்னாலேயே தனநந்தனின்
சாரதி அந்தப் பயண வண்டியை ஓட்டிக் கொண்டு போனான்.
அவர்கள்
போன பிறகும் நான் சிறிது நேரம் அங்கேயே ஒளிந்து கொண்டு இருந்தேன். அவர்கள் திடீரென்று
திரும்பி வந்து விடுவார்களோ என்ற பயம் எனக்குள் இருந்தது. பிறகு மெள்ள நானும் நகரை
நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மூன்று நாழிகை காலம் நடந்திருப்பேன். தூரத்தில் ஏதோ ஒன்று
எரிந்து கொண்டிருந்தது. ஓடிப் போனேன். சற்று நெருங்கியவுடன் தான் அது சற்று முன் நான்
பார்த்திருந்த பயண வண்டி என்பது தெரிந்தது. உடனே தனநந்தனும் அவன் சாரதியும் அருகில்
எங்காவது இருக்கலாம் என்ற பயம் எனக்கு வந்தது.
மறுபடி ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டேன். அவர்கள் இருவரும் இருக்கவில்லை. தனநந்தனின்
ரதமும் காணோம். எரிந்து
கொண்டிருந்த அந்த வண்டியிலிருந்து சின்னதாய் முனகல் சத்தங்கள் வந்து கொண்டிருந்தன.
முதலில் அவர்கள் உச்சக் குரலில் கத்தியிருக்கலாம். ஆனால் நான் போன போது அவர்கள் இறக்க
ஆரம்பித்திருந்தார்கள். பிராணன் மிஞ்சியிருந்ததில் வந்த அந்த முனகல் சத்தம் ஈனசுரத்திலேயே
இருந்தது. நான் மெல்ல அருகில் போய்ப் பார்த்த போது அந்த சத்தமும் அடங்கி விட்டிருந்தது.”
ஜீவசித்தி
கண்கலங்கினான். அவனுக்குத் தந்தையைப் பார்த்த நினைவில்லை. அவர் இல்லாத துயரத்தை வாழ்க்கையின்
பல சமயங்களில் அவன் ஆழமாக உணர்ந்திருக்கிறான். ஆனால் அந்த நாள் வரை விதி வசமாய் ஒரு
விபத்து ஏற்பட்டு அவர் இறந்திருக்கிறார், அவன் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று
அவன் தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறான். ஆனால் உயிரை எடுத்தது விதியோ, விபத்தோ
அல்ல, தனநந்தன் என்பது புரிந்த போது துக்கத்தோடு அவன் தாங்க முடியாத ஆத்திரத்தையும்
உணர்ந்தான்.
சாணக்கியர்
குரல் கரகரக்கச் சொன்னார். “மூன்று நாட்கள் கழித்து நான் பாடலிபுத்திரத்திலிருந்து
வெளியேறி விட்டேன். வெளியேறும் போது இனி திரும்பி வரப் போவதில்லை என்று வைராக்கியத்துடன்
இருந்தேன். ஆனால் நான் பிறந்த மண் என்னைத் திரும்பத் திரும்ப வரவழைக்கிறது. முதலிரு
முறை என்னை தனநந்தனைச் சந்திக்க
வைத்தது. மூன்றாவது முறையாக வரவழைத்து உன்னைச் சந்திக்க வைத்திருக்கிறது. ஆழமாகக் காரணத்தை
யோசிக்கையில் பாடலிபுத்திரம் நம்மிடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறது என்று தோன்றுகிறது
ஜீவசித்தி”
ஜீவசித்தி கண்களைத்
துடைத்துக் கொண்டு கேட்டான். “என்ன எதிர்பார்க்கிறது அந்தணரே?”
சாணக்கியர் சொன்னார்.
“மகதத்தை தனநந்தனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறது”
(தொடரும்)
என்.கணேசன்
'மகதம் என்னும் கோட்டையை சாணக்கியரால் தகர்க்க முடியாது' என தனநந்தன் நினைத்துக் கொண்டிருக்கிறான்... இப்போது ஜீவசித்தி என்ற செங்கல் உருவப்பட்டு விட்டது.... ராக்சசர் என்ற அஸ்திவாரத்தையும் இடித்தால்... மகதம் ஒன்றுமில்லாமல் போய்விடும்....
ReplyDelete