மூராவுக்கு நடப்பதெல்லாம் எதோ ஒரு கனவு போல் இருந்தது. அவள் அடிக்கடி தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். ஒரு முறை நிஜம் என்று புரிந்தாலும் சிறிது நேரம் கழித்து மறுபடி சந்தேகம் வந்தது. கிள்ளிப் பார்த்துக் கொண்டதும் கனவில்லையே என்று உறுதிப்படுத்திக் கொள்ளத் தோன்றியது. சந்திரகுப்தன் அனுப்பிய ஆட்கள் பல்லக்கோடு அவள் குடிசை வாசலுக்கு வந்த போதிருந்து ஆரம்பித்த நிலை இது. அவளைப் போலவே அவளுடைய சகோதரரும் சகோதரர் மகனும் கூட பிரமித்துப் போனார்கள்.
அவளோடு அவள் சகோதரரையும் வரும்படி சந்திரகுப்தன்
வேண்டுகோள் விடுத்திருந்தான். சில நாட்கள் தங்கி விட்டு அவர் ஊர் திரும்பலாம் என்று சொல்லியிருந்தான். மருமகனின்
அழைப்பு அவரையும் பரவசப்படுத்தியது. ஆனால் முதுமையில் வீட்டை விட்டு அதிக
தூரம் செல்ல அவர் விரும்பவில்லை. அவரும் அவளைப் போலவே இது வரை பல்லக்கில் பயணித்தது கிடையாது.
அவருக்குத் தன் குடிசை வாசலில் பல்லக்குடன் ஆட்கள் நிற்பதே நம்ப முடியாத பேரதிசயமாக
இருந்தது. கல்வி கற்கப் போன மருமகன் அரசனாவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. யாரும்
கற்று அரசனாவதில்லை. அவன் கற்று முடித்து ஆசிரியனாகத் தானாயிருக்க வேண்டுமென்று அவர்
கணக்குப் போட்டார். அண்ணன் அப்படிச் சொன்னதால் அவளும் அப்படித்தானிருக்க வேண்டும் என்று
நம்பினாள். ஆனால் அதுவே அவர்களைப் பொருத்த வரை மிக உயர்வான நிலை. தங்கைக்கு இறைவன்
கண்திறந்து விட்டான் என்று சந்தோஷப்பட்டாலும் அவருக்கு சந்திரகுப்தன் தன்னிடமுள்ள செல்வத்தை
வீண் விரயம் செய்கிறானோ என்ற சந்தேகமும் சேர்ந்தே ஏற்பட்டது.
“பல்லக்குப் பிரயாணம்
எல்லாம் செல்வந்தர்களுக்கானது மூரா. நம் போன்ற ஏழைகளுக்கானதல்ல. செல்வம் வருகையில்
எதிர்காலத்திற்கு நாம் சேர்த்து வைத்தால் தான் எதிர்பாராத அவசரங்களுக்குச் செலவு செய்ய
முடியும். சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும் சந்திரகுப்தன் உன்னைச் சந்தோஷப்படுத்த வேண்டும்
என்று தன் தகுதிக்கு மீறி செல்வத்தை வாரி இறைப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. நீ அவனுக்குப் புத்தி சொல்லி எச்சரிக்க வேண்டும்.”
என்று தங்கையிடம் சொன்னார்.
அவள் அங்கிருந்து
கிளம்பும் போது கண்கலங்கினாள். அதைப் பார்த்து அவரும் கண்கலங்கினார். அவள் பல்லக்கில்
ஏறி அமர்வதைப் பார்த்து சந்தோஷப் பட்டார். பல்லக்கோடு அவரும் சிறிது தூரம் நடந்து வந்தார்.
பல்லக்கில் ஒரு
நாள் முழுவதும் பயணித்த அவள் அன்றிரவில் ஓரிடத்தில் இளைப்பாறிக் கண்விழிக்கையில் மறுநாள் பயணிக்க குதிரைகள் பூட்டிய ரதம் ஒன்று அவளுக்காகக்
காத்திருந்தது. பல்லக்குத் தூக்கிகள் அவளிடம் பயபக்தியுடன் கூறினார்கள். “பாடலிபுத்திரத்திற்கே
ரதத்தைக் கொண்டு வந்திருப்போம். ஆனால் அது பலர் கவனத்தைக் கவரும் என்பதால் தவிர்க்க
வேண்டி வந்தது தாயே”
அரசர்களும், அரசர்களுக்கு
இணையானவர்களும், பெருஞ்செல்வந்தர்களும் மட்டுமே குதிரைகள் பூட்டிய ரதத்தில் பயணிக்க
முடியும் என்பதை அறிந்திருந்த மூரா ரதத்தில் ஏறவே கூச்சப்பட்டாள். அவளுடைய அண்ணன் சொன்னது போல சந்திரகுப்தன் தன் சக்திக்கு
மீறி செலவு செய்து அவளைச் சந்தோஷப்படுத்த நினைக்கிறான் என்பது புரிந்தது. அரசனாகத்
தன்னைப் பாவித்து விளையாடும் சந்திரகுப்தன் அடிக்கடி தாயிடம் சொல்வான். “நான் அரசனானால்
நீ ராஜமாதா அம்மா. உன்னைப் பல்லக்கிலும் ரதத்திலும் நான் அழைத்துச் செல்வேன்....”
அவன் சொல்லும் போது
வேதனையை அவள் வெளியே காண்பிக்கா விட்டாலும் மனதிற்குள் புலம்புவாள். “அரச குடும்பத்தில்
நீ பிறந்திருந்தால் உன் கனவுகள் மெய்ப்பட்டிருக்கும் மகனே. இந்தப் பாழும் வயிற்றில்
நீ பிறந்ததால் உன் கனவுகள் கைகூட வழியில்லை.”
சொன்னபடியே இப்போது
அவன் அவளைப் பல்லக்கிலும், குதிரைகள் பூட்டிய ரதத்திலும் பயணிக்க வைக்கிறான். பெருஞ்செல்வந்தர்
யாரிடமாவது இதை இரவல் வாங்கியிருக்கலாம் என்று தோன்றியது. ஒருவேளை அந்தச் செல்வந்தரின்
மகனுக்குப் பாடம் சொல்லித் தந்து அதற்குத் தட்சிணையாக அவன் இந்த உதவியைக் கேட்டிருக்கலாம்.
ஆனால் மகன் பிள்ளைப் பிராயத்தில் விளையாட்டாய் சொன்னதை நினைவு வைத்திருந்து தற்போது
செய்து காட்டுகிறான் என்று நினைக்கையில் அவளுக்குப் பெருமையாக இருந்தது. கண்கள் ஈரமாயின.
இப்போது அவன் ஒரு
இளைஞனாக வளர்ந்திருப்பான் என்று நினைத்துக் கொண்டான். பார்க்க எப்படி இருப்பான் என்று
பல கற்பனை பிம்பங்களை மனத்திரையில் பார்த்தாள். விரைவில் அவனுக்குத் திருமணம் செய்து
வைக்க வேண்டும்...
அந்தப் பயணம் நீண்ட
பயணமாக இருந்தது. ரதத்திற்கு முன்னால் ஒரு குதிரை வீரனும், பின்னால் ஒரு குதிரை வீரனும் கூடவே
சென்றார்கள். அவளை ராஜ மாதாவைப் போலவே அவர்கள் நடத்தினார்கள். கடைசியில் ஒரு மாலை நேரத்தில்
ஒரு நகரைச் சென்றடைந்தார்கள். அவளை ஒரு மாளிகையில் தங்க வைத்து வணங்கி அவர்கள் விடைபெற்றார்கள்.
மூரா அந்த மாளிகையைப்
பிரமிப்புடன் பார்த்தாள். உள்ளேயும் எல்லாம் பிரமிக்க வைப்பது போலவே செல்வச் செழிப்போடு
இருந்தன. அங்கே
ஒரு தாதிப்பெண் இருந்தாள். மூராவை மிகுந்த மரியாதையுடன் உபசரித்த தாதிப் பெண் “இளைப்பாறுங்கள்
ராஜ மாதா. சிறிது நேரத்தில் மன்னர் வந்து விடுவார்” என்று சொன்னாள். சிறுவயதில் மற்ற
சிறுவர்களை குடிமக்களாகவும், அமைச்சர்களாகவும் நடிக்க வைத்தது போல் இப்போதும் ஆட்களை
நடிக்க வைக்கிறான் சந்திரகுப்தன் என்று நினைத்துக் கொண்ட அவளுக்குச் சிரிப்பு வந்தது.
அந்தச் செல்வந்தரின் மாளிகையிலும் ஒரு நாள் தங்க அவன் அனுமதி வாங்கியிருக்க வேண்டும்.
ஆனாலும் அவளுக்குச் சந்தோஷமாக இருந்தது.
“ராஜ
மாதா” கம்பீரமான குரல் கேட்டு அவள் திரும்பிப் பார்த்தாள். அரச உடையில் ராஜ கம்பீரத்துடன்
சந்திரகுப்தன் நின்று கொண்டிருந்தான். பார்த்துப் பல வருடங்களாகியிருந்த போதிலும் அவனை
அடையாளம் காண்பதில் அவளுக்குச் சிரமம் இருக்கவில்லை. வளர்ந்து கட்டழகு இளைஞனாக வளர்ந்திருந்த
மகனைப் பாசத்தோடும் பிரமிப்போடும் பார்த்த அவளைத் தொடர்ந்து பார்க்க விடாமல் கண்ணீர்
திரை போட்டது.
சந்திரகுப்தன்
தாயின் மலைப்பை ரசித்தவனாக வந்து அவள் கால்களைத் தொட்டு வணங்கினான். அவள் கைகளை முந்திக்
கொண்டு அவள் கண்ணீர் அவன் தலையைத் தீண்டியது. நிமிர்ந்த மகனை அணைத்துக் கொண்டு அவன்
மார்பில் தலை வைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்த அந்தத் தாய்க்கு அவனிடம் பேச வார்த்தைகள்
கிடைக்கவில்லை. அவன் கண்களும்
கலங்கின. வீடு விட்டு வந்த பின் அவன் எதாவது குறையை எப்போதாவது உணர்ந்தான் என்றால்
அது அவள் அருகே இல்லையே என்பதாக மட்டுமே இருந்தது. தாயை அணைத்துக் கொண்ட அவனாலும் கண்ணீர்ப்
பெருக்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இருவரும்
பிரிவின் துக்கத்தைச் சேர்ந்த பிறகு சிறிது நேரம் அழுது முடித்துக் கொண்ட பின் பேச
முடிந்த போது மூரா சொன்னாள். “இப்போதும் என்ன
சிறுவனைப் போல அரச விளையாட்டு சந்திரகுப்தா?”
“இது
விளையாட்டு அல்ல அம்மா. உன் மகன் விளையாடும் வயதை என்றோ தாண்டி விட்டேன்” என்று சொன்ன
சந்திரகுப்தன் அவளைப் பட்டு மெத்தை ஆசனத்தில் அமர்த்தி அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக்
கொண்டு அவளைப் பாசத்துடன் பார்த்தான்.
அவள்
மகன் தலையை வருடியபடி பிரமிப்புடன் சொன்னாள். “உன் மாமா சொன்னார். யாரும் படித்து அரசனாவதில்லை
என்று”
“உண்மை
அம்மா. யாரும் படித்து அரசனாவதில்லை. ஆனால் படித்ததைப் பயன்படுத்தி முறையாக முயற்சி
செய்தால் யாரும் அரசனாகி விடலாம் அம்மா”
மகன்
சொன்னது உடனடியாகப் புரியா விட்டாலும் அந்த வார்த்தைகளை திரும்ப ஒரு முறை மனதில் அசை
போட்ட போது அந்தத் தாய்க்கு ஏதோ புரிவது போல் இருந்தது. அவளிடம் அவன் அரசனான விதத்தைச்
சுருக்கமாக சந்திரகுப்தன் சொன்னான். அவர்கள் இருவருக்கும் பேசிக் கொள்ள நிறைய இருந்தது.
விடிகிற வரை பேசினார்கள்.
முடிவில்
மூரா மனநிறைவுடன் சொன்னாள். “நீ கனவு கண்டபடியே சாதித்து விட்டாய். மகிழ்ச்சி சந்திரகுப்தா.”
சந்திரகுப்தன்
சொன்னான். “இப்போது கனவு நீண்டு விட்டது அம்மா. ஆச்சாரியர் அவர் கனவை என் கனவோடு இணைத்துப்
பெரிதுபடுத்தி விட்டார். இனியும் நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது”
(தொடரும்)
என்.கணேசன்
"அவள் கைகளை முந்திக் கொண்டு அவள் கண்ணீர் அவன் தலையைத் தீண்டியது" அழகான வார்த்தைகள். நன்று
ReplyDeleteவெறும் ஏழ்மையை மட்டுமே பார்த்த ஒரு ஏழைத்தாயின் மனநிலையை அருமையாக காட்டியுள்ளீர்கள் ஐயா... பின் உண்மை தெரிந்து பிரம்மித்த இடமும் அற்புதம்....
ReplyDeleteமகதத்தை எதிர்க்க போகிறோம் என்பதை மூரா தெரிந்து கொண்டால்....மேலும் ஆடிப்போய் விடுவார்.....
Presentation is excellent.
ReplyDelete