சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 19, 2024

யோகி 37


நீண்ட காலம் கழித்து இப்படிச் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது அருணாச்சலத்தின் மனதுக்கு நிறைவாக இருந்தது. அவர் பரசுராமனிடம் கேட்டார். “சரி எப்படி சைத்ராவோட ஆவியை வரவழைச்சுக் கேட்பாய்?”

 

அதுக்கெல்லாம் ஒரு இடம், முகூர்த்த காலம், செயல்முறைன்னு இருக்கு. அந்த இடத்துல, அந்த முகூர்த்த காலத்துல, அந்த முறைப்படி தான் செய்யணும்.  நான் முதல்ல சரியான முகூர்த்த காலத்துல உன் நண்பர் சேதுவைப் போய்ப்பார்க்கறேன். புதன் கிழமை நான் துபாய் போறேன். அப்படியே கனடா, அமெரிக்கா போக வேண்டியிருக்கு. திரும்பி வர மூனு மாசமாகும். அதனால இந்தியால இருந்து கிளம்பறதுக்கு முன்னால் என்னால என்ன செய்ய முடியும்னு பார்க்கறேன்...”

 

அருணாச்சலம் திருப்தியடைந்தார். அவர் ஷ்ரவனிடம் இந்த வழக்கின் ரகசிய விசாரணையை ஒப்படைத்திருப்பதைச் சொன்னார். “அந்தப் பையன் இதுவரைக்கும் பல சிக்கலான வேலைகளை எல்லாம் வெற்றிகரமாய் முடிச்சிருக்கான். இதுலயும் கண்டுபிடிச்சுடுவான்னாலும், நீ கண்டுபிடிச்சு சொல்ற விஷயங்கள் அவன் வேலையைச் சுலபமாக்கும்னு நம்பறேன்.”

 

ன்ஸ்பெக்டர் செல்வத்திற்கு தூத்துக்குடிக்கு பணி இடமாற்றம் செய்த ஆணை அன்று திடீரென்று வந்தது பேரிடியாக இருந்தது. அவர் போக வேண்டியிருக்கும் போலீஸ் ஸ்டேஷன் தூத்துக்குடியில் பிரச்சினைக்குப் பிரசித்தமானது. அங்கு போனால், சம்பளத்தைத் தவிர வேறு வருமானத்துக்கு வாய்ப்பே இல்லை. அது மட்டுமல்ல, அங்கே தினமும் ரௌடிகளையும், சண்டைகளையும், கலவரத்தையும் சமாளிக்க வேண்டியிருக்கும். ’தண்டனைப் பணியிட மாற்றமாக அனைவரும் சொல்லும் அந்த ஸ்டேஷனுக்கு என்னை ஏன் மாற்றுகிறார்கள்?’ என்று பதறியவராக, செல்வம் உடனே தன் மேலதிகாரியைத் தொடர்பு கொண்டார். 

செல்வத்தின் மேலதிகாரி சொன்னார். “உனக்கு மட்டும் இல்லைய்யா, உன்னையும் சேர்த்து மொத்தம் 27 பேரை ட்ரான்ஸ்ஃபர் பண்ணியிருக்காங்க.”

 

சார் நான் பிள்ளைகுட்டிக்காரன். பசங்க எல்லாம் ஸ்கூல் லெவல்ல தான் இருக்காங்க. அந்த ஸ்டேஷன் பத்தி உங்களுக்குத் தெரியாததில்லை...”

 

செல்வம். இங்கே வேலை பாக்கறவங்க எல்லாரும் பிள்ளைகுட்டிக்காரன்க தான். சாமியாரையெல்லாம் போலீஸ்ல வேலைக்கு வெச்சுக்கறதில்லை. அந்த ஸ்டேஷன்ல இருக்கறவனும் மனுஷன் தானேய்யா? அவனுக்கும் ஒரு விடிவுகாலம் வேணுமில்லையாய்யா?. அவன் மூணு வருஷமாய் புலம்பிகிட்டு இருந்தான். இப்ப தான் அவனுக்கு விடிஞ்சிருக்கு. நீ போய் ஒன்னு ரெண்டு வருஷம் வேலை பாரு. அப்புறமா பார்ப்போம்...” என்று சொல்லி விட்டார்.

 

செல்வம் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். மேலதிகாரி சொன்னது போல் தூத்துக்குடியிலிருக்கும் அந்த ஸ்டேஷனுக்குப் போக அவருக்கு மனமில்லை. சிறிது பணம் செலவானாலும் இந்த பணியிட மாற்றத்தை உடனே ரத்து செய்யத் துடித்தார். அவரது போலீஸ் நண்பர் ஒருவர் இது போன்ற வேலைகள் செய்து தருவதில் கெட்டிக்காரர். அவரை அழைத்துப் பேசினார்.

 

செல்வம், நான் விசாரிச்சுட்டேன். இந்த 27 ட்ரான்ஸ்பரும் நெறைய புகார்கள் இருக்கற ஆள்களுக்குத் தான் செஞ்சிருக்காங்க. அதுவும் டிஜிபி ஆபிஸ்ல இருந்து வந்த லிஸ்ட்டுன்னு சொல்றாங்க. வழக்கமான ட்ரான்ஸ்ஃபரா இருந்திருந்தா நாம ஏதாவது செஞ்சிருக்கலாம். இப்ப நிலைமை என்னன்னா டிஜிபி ஆபிஸ்லயோ, முதலமைச்சர் ஆபிஸ்லயோ செல்வாக்கு இருந்தா மட்டும் தான், இந்த ட்ரான்ஸ்ஃபர் ஆர்டரை ரத்து செய்ய முடியும்.” என்று அந்த நண்பரும் கையை விரித்து விட்டார்.

 

செல்வத்திற்குக் கோபம் வந்தது. ‘இந்த 27 பேரைத் தவிர மத்த அத்தனை போலீஸ்காரன்களும் உத்தமன்களா? வாய்ப்பு கிடைச்சவன் தப்பு செய்யறான். தப்பு செய்யாதவனுக்கு வாய்ப்பு கிடைக்கலன்னு அர்த்தம்.... புகார் நெறய இருக்காம்... பேனாவும், பேப்பரும் கிடைச்சா எவன் வேணும்னாலும், எவன் மேல வேணும்னாலும் புகார் எழுதி அனுப்பலாம். அதையெல்லாம் பெருசா எடுத்துகிட்டு....’

 

பேராசிரியர் சிவசங்கரனுக்கு ஷ்ரவன் போன் செய்து அவரைச் சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்ட போது, அவர்என்ன விஷயமாய் என்னை சந்திக்க விரும்புகிறீர்கள்?” என்ற ஒரு கேள்வியை மட்டும் கேட்டார். தான் தத்துவ விஷயங்களில் ஆர்வமுள்ளவன் என்றும், சில சந்தேகங்களை அவரிடம் நேரடியாகக் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள விரும்புவதாகவும் அவன் சொன்ன போது மனிதர் எந்த பந்தாவும் இல்லாமல் உடனடியாக அன்று மாலை ஐந்து மணிக்குச் சந்திக்க அனுமதி கொடுத்தார்.

 

ஷ்ரவன் மாலை ஐந்து மணிக்கு வேளச்சேரியில் இருக்கும் சிவசங்கரன் வீட்டுக்குப் போன போது அவர் லுங்கியும் டி ஷர்ட்டும் அணிந்திருந்தார். தலைமுடி முழுமையாக நரைத்திருந்தாலும், உடற்கட்டில் இளமையாகத் தான் தெரிந்தார். பல காலம் பழகியவர் போல அவனை வரவேற்று அமரச் சொன்னார்.

 

ஷ்ரவன் அமர்ந்தபடி சொன்னான். “நீங்க உங்களைச் சந்திக்க உடனடியாய் அனுமதி தந்ததுல ரொம்ப சந்தோஷம் சார். நான் உங்கள் புத்தகங்கள் எதையும் படிச்சதில்லை. ஆனால் உங்களைப் பத்தி என் நண்பன் ஒருத்தன் ரொம்ப உயர்வாய் சொன்னதிலிருந்து உங்களைப் பார்த்துப் பேசணும்னு ஆசை…”

 

உங்க நண்பன் பெயர்?”

 

ஸ்ரீகாந்த். திருச்சிக்காரன்…”

 

உடனே சிவசங்கரன் நினைவு கூர்ந்தார். “துபாய்ல கொஞ்ச காலம் இருந்த ஆள். ஷேர் மார்க்கெட்டிங்ல நல்ல ஞானமுள்ள ஆள்அந்த ஸ்ரீகாந்த் தானே?”

 

ஷ்ரவன் சொன்னான். “அவனே தான் சார்…”

 

நல்ல பையன்…. அவன் ஆலோசனைப்படி ரெண்டு கம்பெனி ஷேர்ஸ் வாங்கினேன். ரெண்டுலயுமே நல்ல லாபம் கிடைச்சுது…. நீங்களும் திருச்சியா? உங்க ரெண்டு பேருக்கும் எப்படி பரிச்சயம்?”

 

ஷ்ரவன் யோகாலயத்தையும், பிரம்மானந்தாவையும் எப்படியாவது பேச்சில் கொண்டு வந்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்ததால் அவனுக்கு இந்தக் கேள்வி மிக உபயோகமாயிருந்தது.  யோகாலயத்துல ஒருவார தியான வகுப்புக்கு போயிருந்தப்ப தான் நான் ஸ்ரீகாந்தை சந்திச்சேன். சீக்கிரமே நல்ல நண்பர்களாயிட்டோம். அப்ப தான் உங்களைப் பத்தியும் ஸ்ரீகாந்த் உயர்வாய் சொன்னான்….”

 

சிவசங்கரன் கேட்டார். “யோகாலயத்துல தியானப் பயிற்சி எல்லாம் எப்படி இருந்துச்சு?”

 

நல்லா இருந்துச்சு சார். ஆனா யோகி பிரம்மானந்தாவை சந்திக்க முடியல. அவர் எந்த வகுப்பும் எடுக்கல…”

 

சிவசங்கரன் இடிச்சிரிப்பு சிரித்தார். “என்னப்பா நீ விவரம் தெரியாதவனாய் இருக்கியே. யோகி பிரம்மானந்தா உனக்கு பாடம் சொல்லித் தர வந்தா உனக்கு வாத்தியார் ஆயிடுவார். யோகி பிரம்மானந்தா, வாத்தியார் பிரம்மானந்தா ஆகலாமோ? நீ யார்? சமூகத்துல உன் அந்தஸ்து என்ன? உன் சொத்து மதிப்பு எவ்வளவு? உன்னைச் சந்திக்கறதால அவருக்கு என்ன பெருமை? இதை எல்லாம் நீ யோசிச்சிருக்கியா?’

 

ஷ்ரவன் புன்னகையுடன்இல்லை சார்என்றான்.  

 

யோகி பிரம்மானந்தாவைப் பார்க்கணும்ன நீ சினிமா நடிகனாவோ, அமைச்சராகவோ, அம்பானி, அதானி குடும்பத்து ஆளாகவோ இருக்கணும். இல்லாட்டி வெளிநாட்டுப் பிரபலங்களுக்கு நெருக்கமானவனாக இருந்து அவர்களோட நட்பை அந்த ஆளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடிஞ்சவனாய் இருக்கணும். அப்படி இருந்தா, உனக்கு உடனடியா யோகி பிரம்மானந்தாவை சந்திக்க அனுமதி கிடைக்கும்.  இல்லைன்னா நீ டிவில அல்லது ஏதாவது மீட்டிங்ல தூர இருந்து அந்த ஆளைப் பார்த்து திருப்தி அடைஞ்சுக்கணும். நீயும் ஸ்ரீகாந்தும் யோகா க்ளாஸ்க்கு போனீங்களே. அந்த யோகா சிஸ்டம் எல்லாம் யார் வடிவமைச்சுக் கொடுத்ததுன்னு தெரியுமா?”

 

யோகி பிரம்மானந்தா உருவாக்கின முறையாய் தான் அங்கே சொன்னாங்க

 

சிவசங்கரன் எகத்தாளமாய் சிரித்தார். “நல்ல வேளை பரமசிவன் கைலாசத்துல இருந்து யோகாலயத்துக்கு இறங்கி, பிரம்மானந்தாவுக்கு நேரடியாய் சொல்லிக் கொடுத்ததாய் சொல்லலை. உண்மை என்னன்னா பிரம்மானந்தா ப்ரேம் ஆனந்தா இருந்தப்ப திருவனந்தபுரத்துக்கார பத்மநாப நம்பூதிரி சொல்லிக் கொடுத்தது எல்லாம். இந்த ஆளு கத்துகிட்ட ஒவ்வொன்னுக்கும் பேரை மட்டும் மாடர்னா மாத்தி வெச்சுகிட்டான். குருவாய் இருந்த பத்மநாப நம்பூதிரியைப் பத்தி ஒரு வார்த்தை கூட இந்த ஆள் எப்பவுமே வெளிப்படையாய் சொன்னதில்லை. காரணம் நம்ம யோகிக்கே குருவாய் இருந்தவர்னு எவனாவது கிறுக்கன் இவனை விட பத்மநாப நம்பூதிரியை உயர்வாய் நினைக்க ஆரம்பிச்சுட்டான்னா என்ன பண்றதுன்னு தான். அதனால சித்தர் கோரக்கர், பதஞ்சலி மகரிஷி - இந்த ரெண்டு பேரை மட்டும் தான் தன்னை விட உயர்வாய் சொல்வான் சில்லறைப் பயல்

 

பிரம்மானந்தருக்கு சிவசங்கரன் பேச்சில் மரியாதை குறைந்து வருவது  ஷ்ரவனுக்கு வேடிக்கையாக இருந்தது. யோகியிலிருந்து சில்லறைப் பயல் வரை இறக்கியாகி விட்டது.  ஷ்ரவன் பிரம்மானந்தா பற்றி முன்பே எதுவும் தெரியாதவன் போலவும், இப்போது தான் இந்தத் தகவல்கள் அறிந்து திகைப்பது போலவும் காட்டிக் கொண்டான். 


 (தொடரும்)

என்.கணேசன்





3 comments:

  1. என்ன சார் இப்படி உண்மையை போட்டு உடைத்து விட்டீர்கள்...

    ReplyDelete
  2. பிரம்மானந்தாவின் மஹா சிவராத்திரி அலப்பறைகளை பற்றி போடுங்க சார்.....

    ReplyDelete
  3. பிரம்மானந்தா...நம் நாட்டில் தன்னை ஒரு யோகி என ஏமாற்றி திரியலாம்... ஆனால், இந்த உலகத்தையே.. தன்னை ஒரு யோகி என நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்... அது ஒரு தனி திறமை அல்லவா...

    ReplyDelete