சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 5, 2024

யோகி 35

 

ல்பனானந்தாவிடம் ஒரு முதியவர் அங்கு சொல்லிக் கொடுத்த ஒரு மூச்சுப் பயிற்சிக்கும், வேறொரு பிராணாயாமப் பயிற்சி மையத்தில் சொல்லிக் கொடுத்த மூச்சுப் பயிற்சி ஒன்றுக்கும் இடையே இருக்கும் ஒரு முக்கிய வித்தியாசத்தைச் சுட்டிக் காட்டி இரண்டில் எது சரி என்று கேள்வி கேட்டார்.

 

கல்பனானந்தா அந்த இரண்டு வித மூச்சுப் பயிற்சிகளுக்கும் பின்னணியில் இருக்கும் அறிவியல் நுட்பங்களை விளக்கி, யோகாலயத்தில் சொல்லித் தந்த மூச்சுப் பயிற்சி எப்படி மேலானது என்பதையும் விளக்கினாள்.

 

அடுத்த கேள்வியை ஸ்ரீகாந்த் கேட்டான். “நான் கேட்கறது அதிகப்பிரசங்கித்தனம்னு நீங்க நினைக்கக்கூடாது ஸ்வாமினி. யோகாலயம் இவ்வளவு சிறப்பா ஆன்மீகப் பணிகள் செய்யறதா சொல்றீங்க. அப்படி ஆன்மீகம் சிறப்பா நடக்கற இடம் எந்த சந்தேகத்துக்கும், புகாருக்கும் அப்பாற்பட்டதா இருக்க வேண்டாமா? சில நாளுக்கு முன்னாடி ஒரு டாக்டர் அவங்க பொண்ணு உயிருக்கு உங்க யோகாலயத்துல ஆபத்து இருக்கறதா புகார் சொல்லி, கடைசில மகளைப் பார்க்க கோர்ட் வரைக்கும் போக வேண்டி இருந்ததெல்லாம் சரியாய் தோணலையே. இதெல்லாம் தவிர்த்திருக்க வேண்டிய விஷயங்க தானே?”

 

கல்பனானந்தா எதிர்பாராதவிதமாய் தாக்கப்பட்டவள் போல் அதிர்ந்து போனாள். ஷ்ரவனே இப்படி ஒரு கேள்வியை ஸ்ரீகாந்த் எழுப்புவான் என்று சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிகப்பிரசங்கித்தனமாகக் கேட்பதாய் நினைக்கக்கூடாது என்று சொல்லி விட்டு அதிகப்பிரசங்கித்தனமாகவே ஸ்ரீகாந்த் இப்படிக் கேட்டது வேடிக்கையாக ஷ்ரவனுக்குத் தோன்றியது. ஆனாலும் இந்த அருமையான கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறாள் என்றறிய ஷ்ரவன் கல்பனானந்தாவைக் கூர்ந்து பார்த்தான். கல்பனானந்தா ஒரு நிமிடம் பேச்சிழந்து போய் பின் மெல்லச் சமாளித்தாள்.

 

நான் இந்த வகுப்புகள்ல நடத்தின பயிற்சிகள்ல எதாவது சந்தேகம் இருந்தால் சொல்லுங்கன்னு சொன்னேன். இந்த மாதிரியான சர்ச்சைக்குரிய கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. சட்ட ரீதியாக கோர்ட்டிலேயே தீர்க்கப்பட்ட ஒரு வழக்கு அது. கூடுதலாய் நான் சொல்ல எதுவுமில்லை. இந்தப் பயிற்சிகள் சம்பந்தமாய் எதாவது கேள்விகள் இருந்தால் நீங்கள் கேட்கலாம்

 

ஸ்ரீகாந்திடம் அந்த மாதிரியான கேள்விகள் இருக்கவில்லை. அவன் மௌனமாகஒன்றுமில்லைஎன்று தலையசைக்க, ஒரு பெண் குண்டலினி சக்தி பெற இந்தப் பயிற்சிகள் உதவுமா என்று கேட்க கல்பனானந்தா அதற்கான பதிலைச் சொல்ல ஆரம்பித்தாள். ஆனால் பழைய அமைதி அவள் முகத்தில் இல்லை. ஸ்ரீகாந்தின் கேள்வியின் பாதிப்பிலிருந்து அவள் இன்னும் மீளவில்லை என்பது ஷ்ரவனுக்குத் தெளிவாகவே தெரிந்தது.

 

யோகாலயத்திலிருந்து ஸ்ரீகாந்த் சீக்கிரமே கிளம்பி விட்டான். அவன்  திருச்சிக்குப் போகும் ரயில் இன்னும் முக்கால் மணி நேரத்தில் கிளம்பவிருப்பதால், சாவகாசமாக அனைவரிடமும் தனித்தனியாகப் பேசி விடைபெற்றுக் கொள்ளும் அளவுக்கு அவனுக்கு நேரமில்லை என்று ஷ்ரவனிடம் சொல்லி விட்டு கடைசி வகுப்பு முடிந்தவுடனேயே கிளம்பி விட்டான். ஷ்ரவனுக்கு அந்த நல்ல, சுவாரசியமான மனிதனைப் பிரிவது சிறிது வருத்தமாகத் தான் இருந்தது.

 

ஸ்ரீகாந்த் கிளம்பிய போது கல்பனானந்தாவைச் சிலர் சூழ்ந்து நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் ஏதோ கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க அவளும் அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் என்றாலும்  அவள் பார்வை ஸ்ரீகாந்த் வகுப்பை விட்டு வெளியேறும் வரை அவன் பக்கம் அடிக்கடி வந்ததை ஷ்ரவன் கவனித்தான்.

 

கல்பனானந்தாவிடம் தெரிந்து கொள்ள நிறைய இருப்பதாக ஷ்ரவன் நினைத்தான்.  பிரம்மானந்தாவின் பிரதான சிஷ்யையான அவள், சைத்ராவின் மரணம் சம்பந்தமான முக்கிய ரகசியங்களை அறிந்திருக்கக்கூடியவள் என்று அவனுக்கு உறுதியாகத் தோன்றியது. ஒன்றும் அறியாதவளாகவோ, சம்பந்தப்படாதவள் ஆகவோ அவள் இருந்திருந்தால் ஸ்ரீகாந்த் கேட்டதில் இந்த அளவு பாதிக்கப்பட்டு இருக்க மாட்டாள் என்று எண்ணிய ஷ்ரவன் அவளுடைய நன்மதிப்பில் இருப்பது நல்லது என்று கணக்கிட்டான். அடுத்த வகுப்புகளுக்கு வரும் போது அவனுக்கு அது பேருதவியாக இருக்கும் என்று எண்ணினான்.

 

கிளம்புவதற்கு முன் ஷ்ரவன் அவளிடம் சொன்னான். “சுவாமினி உங்க வகுப்பும் சரி, நீங்க சந்தேகங்களைத் தெளிவிக்கறதும் சரி, ரொம்ப எளிமையாய், எல்லாருக்கும் புரிகிற மாதிரியாய் இருந்தது. ரொம்ப நன்றி

 

அவன் அப்படிச் சொல்லிய உத்தேசம் அவளுடைய நல்லபிப்பிராயத்தில் இருப்பது என்றாலும் கூட, அவன் சொன்னது பொய்யல்ல. அவன் எதையும் உயர்வு நவிற்சியாய் சொன்னால் அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் அளவு அவள் புத்திசாலி தான் என்பதை யூகித்திருந்த அவன், அப்படிச் சொல்வது அவளுடைய சந்தேகத்தை அதிகப்படுத்தும் என்பதால் அதைத் தவிர்த்தான்.

 

கல்பனானந்தா அழகாய் புன்னகைத்து அவனுக்கு நன்றி தெரிவித்துக் கிளம்பினாள். ஷ்ரவனும் பரிச்சயமானவர்களுடன் விடைபெற்றுக் கொண்டு யோகாலயத்திலிருந்து கிளம்பினான்.

 

ன்றிரவு ஷ்ரவன் டி.ஜி.பி ராகவன் வீட்டுக்குச் சென்றான். யோகாலயத்தில் தோட்டக்காரன் மருதகாசியாக வேலை செய்யும் குமரேசனும் அப்போது அங்கே வந்திருந்தான்.   குமரேசனுக்குச் சொல்ல அதிகம் இருக்கவில்லை. யோகாலயத்தின் முன்பகுதியை விட இரண்டாம் கேட் தாண்டிய உட்பகுதி தான் தீவிரமாய் கண்காணிக்கப்படும் பகுதி என்று சொன்னான். அந்த இரண்டாம் கேட் தாண்டி மிக முக்கியஸ்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அவன் சொன்னான்.

 

முக்கியஸ்தர்கள்னா?” ராகவன் கேட்டார்.

 

அதிகம் வர்றது அரசியல்வாதிகளும், சினிமாக்காரங்களும் தான். சில சமயம் பெரிய அதிகாரிகளும் வர்றதுண்டு

 

உங்கள மாதிரி வேலைக்காரங்க அங்கே தாராளமாய் போகலாமா?”  

 

வேலை இருந்தால் போகலாம். ஆனா சும்மா போனா, அங்கே கண்காணிச்சுட்டு இருக்கறவங்க உடனடியா வந்துடுவாங்க. ஏன் வந்தாய், இங்கே என்ன வேலைன்னு கேட்பாங்க. தொடர்ச்சியா அப்படிக் கேட்கற மாதிரி எவனாவது நடந்துகிட்டா வேலையை விட்டு உடனே நீக்கிடறாங்க. அப்படி ஒரு தோட்டக்காரனை அவங்க துரத்திக் காலியான இடத்துக்கு தான் நான் வேலைக்குப் போய்கிட்டிருக்கேன்னு கேள்விப்பட்டேன்.”


ஷ்ரவன் கேட்டான். ”அங்கே ஒரு ஃபேன்சி நம்பர் வெள்ளை பென்ஸ் கார் இருக்கே. அதை யார் பயன்படுத்தறாங்க?”

 

பாண்டியன் தான் அதுல அதிகம் போறது.”

 

பாண்டியன்கிறது யார்?”

 

யோகாலயத்துல அந்த ஆள் தான் பிரம்மானந்தாவுக்கு அடுத்தபடியா எல்லாம். மேனேஜர்ன்னு எல்லாரும் அவரைக் கூப்பிடறாங்க. அங்கே வேலைக்கு ஆள்களை எடுக்கறது, நீக்கறது, சம்பளத்தை நிர்ணயம் பண்றது எல்லாம் அவர் தான். சில சமயம் முக்கியஸ்தர்களோட பிரம்மானந்தா பேசறப்பவும் கூட பாண்டியன் போய் அங்கே சேர்ந்துக்கறதுண்டு. அவர் கீழ்மட்ட வேலைக்காரங்க யார் கிட்டயும் நேரடியாய் பேசறதில்லை. ஆனாலும் அவரைப் பாத்து எல்லா வேலைக்காரங்களும் பயந்து நடுங்கறாங்க

 

குமரேசன் சொல்வதைப் பார்த்தால் அந்த நள்ளிரவில் பென்ஸ் காரில் யோகாலயத்திலிருந்து போனது பாண்டியனாகத் தான் இருக்க வேண்டும். அந்த நள்ளிரவில் கேட் கதவைத் திறக்கையில் கூர்க்கா காட்டிய பயபக்தி ஷ்ரவனுக்கு நினைவுக்கு வந்தது. அது குமரேசன் சொன்னதை உறுதிப்படுத்தியது., சில முக்கியஸ்தர்களுடன் பிரம்மானந்தா பேசும் போது பாண்டியனும் சென்று சேர்ந்து கொள்வதுண்டு என்பது பாண்டியன் வெறும் மானேஜர் மட்டுமல்ல, அதற்கும் மேல் என்பதைத் தெரியப்படுத்தியது.

 

பாண்டியன் எத்தனை வருஷமாய் அங்கே இருக்கிறார்?”

 

தெரியலை. ஆனா யோகாலயாவை ஆரம்பிச்ச கொஞ்ச காலத்துக்குள்ளேயே அந்த ஆள் பிரம்மானந்தா கூட வந்து சேர்ந்துகிட்டவர் போல தான் தெரியுது

 

ஷ்ரவன் ராகவனிடம் கேட்டான். “பாண்டியன் பத்தி நம்ம கிட்ட என்ன தகவல்கள் இருக்கு

 

ராகவன் சொன்னார். “அந்த ஆளப் பத்தி நம்ம கிட்டயும் தகவல்கள் இல்லை. ஆனா குமரேசன் சொல்றதை எல்லாம் பார்த்தா, அந்த ஆள் பத்தியும் நாம தெரிஞ்சுக்க வேண்டியது முக்கியம் மாதிரி தெரியுது.”  

 

ஷ்ரவன் குமரேசனிடம் கேட்டான். “பாண்டியனும் துறவியா?”

 

இல்லை... வேஷ்டி, சட்டையோட தான் அவர் இருக்கார்...”

 

ஷ்ரவன் அடுத்ததாய் கல்பனானந்தா  பற்றி விசாரித்தான். அவளுக்கு அங்கே அனைவரும் மிகுந்த மரியாதை தருகிறார்கள் என்று சொன்ன குமரேசன் அவள் தான் தோட்ட வேலைகளை மேற்பார்வை பார்ப்பவள் என்றும் சொன்னான். ”ஆனால் அவங்களும் வேலை சம்பந்தமான விஷயங்களைச் சுருக்கமாய் பேசறதோட சரி அதற்கு மேல் ஒரு வார்த்தை அதிகமாய் பேசறதில்லை.”

 

முக்கியஸ்தர்களோட பிரம்மானந்தா பேசறப்ப கல்பனானந்தாவும் போகிறதுண்டா?’

 

சில சமயங்கள்ல அவங்களும் போகிறதுண்டு. ஆனா அவங்க போகிற சமயங்கள்ல பாண்டியன் போகிறதில்லை. பாண்டியன் போகிறப்ப அவங்க போகிறதில்லை. அது ஏன்னு தெரியல

 

ஷ்ரவன் கேட்டான். “நீங்க அங்கே வேலையில இருக்கறப்ப வந்த முக்கியஸ்தர்கள் யார் யார்?”

 

குமரேசன் ஒரு நடிகர், இரண்டு அரசியல்வாதிகள் பெயரைச் சொன்னான். மற்ற சிலரும் வந்து போயிருக்கிறார்கள், நீண்ட நேரம் பிரம்மானந்தாவுடன் பேசி விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் தெரியாத ஆட்கள் என்று சொன்னான்.

 

நீங்க வேலை செய்யறப்ப அவங்க பேசிக்கறது எதாவது காதில் விழுந்திருக்கா?”


(தொடரும்)

என்.கணேசன்







4 comments:

  1. இதே போல நிஜ உலக பிரம்மானந்தாவிடமும் "எதற்கு காடுகளை அழித்து கட்டிடங்கள் கட்டுகிறீர்கள்?" என கேட்டால்.... "நாங்கள் அரசு அனுமதியுடன் கட்டுகிறோம்...பிழை எனில் அதை கண்டிப்பது அரசாங்க வேலை" என கூறுவார்....

    ReplyDelete
  2. So mysterious than a Terrorist organisation?

    ReplyDelete
  3. interesting looking forward the suspense

    ReplyDelete