ஷ்ரவனுடைய திகைப்பைப் பார்த்து திருப்தியடைந்த சிவசங்கரன் இகழ்ச்சியுடன் சொன்னார். ”நீ உட்கார்ந்திட்டிருக்கற நாற்காலில உட்கார்ந்து என் கிட்ட சந்தேகங்கள் கேட்டுட்டு இருந்தவன்ப்பா ப்ரேம் ஆனந்த். இங்கே அடிக்கடி வருவான். கும்பிடு போட்டு உட்கார்ந்துக்குவான். பல ஞானிகளோட பேர் கூட நான் சொல்லி தான் அவனுக்குத் தெரியும். அப்படிப்பட்டவன் நாலு வருஷம் முன்னாடி ஒரு பொது நிகழ்ச்சில பார்த்தப்ப என்னைத் தெரியாதவன் மாதிரி கடந்து போனான். காரணம் பழைய ப்ரேம் ஆனந்தோட சம்பந்தப்பட்டவன் நான். அந்தப் பழைய ப்ரேம் ஆனந்தாய் அவனை அடையாளம் காட்டற யாரையும் அவன் தனக்குத் தெரிஞ்ச ஆளாய் காட்டிக்கறதில்லைன்னு பிறகு தான் தெரிஞ்சுது. ரொம்ப அமைதியான ஆள் மாதிரியும், எதனாலயும் பாதிக்கப்படாத ஆள் மாதிரியும் தன்னைக் காட்டிக்கற அவன் அமைதியைக் குலைக்கணும்னா நீ பெருசா ஒன்னும் செய்துட வேண்டியதில்லை. அவனை ப்ரேம் ஆனந்த்னு கூப்பிட்டுப் பாரு போதும். அவனோட ஈகோ இப்ப எவ்வளவு பெருசா வளர்ந்துடுச்சுன்னா, இப்ப எல்லாம் யோகிங்கற வார்த்தையைச் சேர்க்காம வெறும் பிரம்மானந்தான்னு கூப்பிட்டாலே கூட அவன் பொறுத்துக்கறது இல்லையாம்...”
ஷ்ரவன் புன்னகைத்தான். ஸ்ரீகாந்த்
யோகி என்ற அடைமொழியைத் தவிர்த்து பிரம்மானந்தா என்று சொன்ன போது யோகாலயத்து துறவிகள்
கூட அதை ரசிக்கவில்லை. அவனுக்குப் பதில் சொல்லும் போது அவர்கள் யோகி பிரம்மானந்தா
என்று அழுத்திச் சொன்னது நினைவுக்கு வந்தது.
சிவசங்கரன் தொடர்ந்து ப்ரேம் ஆனந்தின்
சில்லறைத்தனத்தைப் பற்றி சொல்லிக் கொண்டே போனார். பலரிடமிருந்து
கற்றதையும், அறிந்ததையும் கூட சொந்த ஞானோதயம் போல் சொல்வது தான் ப்ரேம்
ஆனந்தின் வழக்கம் என்றும் சொன்னார். எல்லாம் ஷ்ரவன்
அறிந்தது தான் என்றாலும் புதிதாய் அறிய நேர்ந்தது போல் அவன் திகைப்பைக் காட்டிச் சொன்னான். “மெய்ஞானமடைஞ்ச
ஒருத்தர் இப்படி நடந்துக்கறது ஆச்சரியமாய் தான் இருக்கு”
“இதுல ஒரு
ஆச்சரியமும் இல்லை. அவன் எப்படி நடந்துக்கறாங்கறது வெளிப்படையாய் தெரியற உண்மை. அப்படி
நடந்துக்கறவன் மெய்ஞானம் அடைஞ்சவனாய் இருக்க முடியுமான்னு தான் நீ உன்னைக் கேட்டுக்கணும். உண்மையைப்
புரிஞ்சுக்கணும். அறுவடையப் பார்த்தா விதைச்சது என்னன்னு தெரிஞ்சுடாதா என்ன? ஆனா நம்ம
சமூகத்துல இருக்கிற மரமண்டைகளுக்கு இந்த எளிமையான புரிதல் கூட கிடையாது. அவனவன்
பேசற பேச்சைக் கேட்டும், போடற டிராமாவையும் பார்த்தும் மயங்கிடுவாங்க. அரசியல்னாலும்
சரி, ஆன்மீகம்னாலும் சரி ஏமாறுறதுக்குன்னே தயாராயிருப்பாங்க…”
உண்மை தான் என்பது போல் ஷ்ரவன் தலையாட்டினான்.
சிவசங்கரன் சற்று அமைதியடைந்து சொன்னார். “தம்பி. ப்ரேம்
ஆனந்தைச் சொல்லி தப்பில்லை. இந்த முட்டாள் ஜனங்களை ஏமாத்திப் பிழைக்கிறது பெரிய ஜெகஜால
வித்தையில்லைங்கறதுனால அவனும் ‘யோகி’ ஆகிப் பிழைக்கிறான். உண்மையான
யோகிக்கு பணமோ, புகழோ, அங்கீகாரமோ தேவையில்லை. சொல்லப்
போனா வெளிய இருந்து வர்ற எதுவுமே அவனுக்குத் தேவையில்லை. அவன் உள்ளுக்குள்ளே
அடைஞ்சிருக்கற நிலையே போதும். அவன் அமைதியாய், நிறைவாய்
வாழ்ந்துட்டுப் போயிடுவான். அவனை நீ யோகின்னு கூப்பிட்டாலும், பைத்தியம்னு
கூப்பிட்டாலும், ரெண்டுமே அவனைப் பாதிக்காது.”
ஷ்ரவன் கேட்டான். “அந்த மாதிரி
ஒரு யோகியை உங்கள் வாழ்க்கைல நேர்ல பார்த்திருக்கீங்களா சார்?”
“அந்தப்
பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கு. நான் பார்த்தது
மட்டுமில்ல, ப்ரேம் ஆனந்துக்கும் அந்த நிஜ யோகியை நான் அடையாளம் காட்டியிருக்கேன்”
இங்கு வந்த பின் அவன் அறிந்து கொண்ட
சுவாரசியமான முதல் புதிய தகவல் இது என்பதால் ஷ்ரவன் உற்சாகமடைந்தான். அவன் ஆர்வத்துடன்
கேட்டான். “யார் சார் அவர்? அவரை எங்கே
எப்போ பார்த்தீங்க?”
சிவசங்கரன் முகம் மென்மையாகியது. அவர் கண்கள்
மின்ன, சொன்னார். “அது ரொம்ப காலத்துக்கு
முன்னாடிப்பா. பிரம்மானந்தா ப்ரேம் ஆனந்தா இருந்த காலக்கட்டம் அது. அந்த யோகியோட
பெயர் கூட எனக்குச் சரியா இப்ப ஞாபகம் இல்லை. அவர் பிரபலமான
ஆள் கிடையாது. யோகின்னு மட்டுமல்ல, அவரை ஒரு
ஆன்மீகவாதியாய் கூட யாரும் நினைச்ச மாதிரி தெரியல. ஒரு மடத்துலயோ, ஆசிரமத்துலயோ
கூட அவர் இருக்கல. ஒரு தோட்டக்காரரா அவர் இருந்தார். அவருக்குக்
கிட்டத்தட்ட என் வயசு இருக்கும். பக்கத்து வீட்டுக்குத் தோட்ட வேலைக்கு சுமார் ஒரு வருஷம்
வந்துகிட்டிருந்தார். வாரத்துல
ஒரு நாள் தான் வருவார். ஒரு மணி நேரம் பக்கத்து வீட்டுத் தோட்டத்துல வேலை பண்ணிட்டுப்
போவார்… ஒரு தோட்டக்காரரை நான் யோகியாய் உணர்ந்த அந்த நாளை என்னால்
என்னைக்குமே மறக்க முடியாது....”
சிவசங்கரன் அந்த நாளுக்கே போய் விட்டது
போலவும், அவர் அந்த ஜன்னல் வழியாக பழைய காட்சியை இப்போதும் பார்ப்பது
போலவும் ஷ்ரவனுக்குத் தோன்றியது. இப்போது அந்த ஜன்னல்
வழியே தெரிந்தது ஒரு அடுக்கு மாடிக் கட்டிடம் தான். ஆனால் அவர்
பார்த்துக் கொண்டிருப்பது பழைய நினைவில் தெரிந்த காட்சியை என்பதை ஷ்ரவன் உணர்ந்தான்.
அவர் குரல் கரகரக்கச் சொன்னார். “ஒரு சாயங்கால
நேரம்.... நான் டீ குடிச்சுகிட்டே எதோ ஒரு யோசனையாய் இந்த ஜன்னல் பக்கம்
வந்தப்ப தான் பக்கத்து வீட்டுத் தோட்டத்துல வேலை செஞ்சுகிட்டு இருந்த அவரைப் பார்த்தேன். என் பார்வை
அவர் மேல காந்தமாய் ஒட்டிகிச்சு. ரொம்பவும் அமைதியாய் தெரிஞ்ச அவர் மேல இருந்து என் பார்வையை
விலக்கிக்க முடியல. அமைதி. சாந்தம், அன்பு, நிறைவு- இந்த வார்த்தைகளுக்கு
எல்லாம் அடையாளமாய் அவர் எனக்குத் தெரிஞ்சார். அவர் அந்தத்
தோட்டத்து செடிகள் கிட்ட பேசிகிட்டு இருந்த மாதிரி எனக்கு ஏன் தோணுச்சுன்னு தெரியல. காரணம்
அவர் உதடுகள் அசையல. ஆனாலும் அவர் அன்பாய் பேசிகிட்டிருக்கிற மாதிரியும், அந்தச்
செடிகளும் ஆனந்தமா அவர் கிட்ட பேசிகிட்டிருக்கிற மாதிரியும் எனக்குத் தோணுச்சு. ஏதோ ஒரு
சக்தி வளையம் அவரைச் சுத்தி இருக்கற மாதிரியும் உணர்ந்தேன். பார்க்கப்
பார்க்க எனக்குள்ளேயும் அமைதி, சாந்தம், அன்பு எல்லாம் நிறையற
மாதிரி தோணுச்சு. ஒரு பரிபூரண நிலை அது. இதுக்கு
மேல வேறொன்னும் வேண்டாம்னும் தோணுச்சு....”
சிவசங்கரன் ஒரு கணம் நிறுத்தி மறுபடி
அந்தப் பரிபூரண நிலையை அப்படியே உணர முயன்றது போல் ஷ்ரவனுக்குத் தோன்றியது. சில வினாடிகள்
மௌனமாக இருந்து விட்டு அவர் தொடர்ந்தார்.
“ஷ்ரவன் நாம எத்தனையோ ஆசைப்படறோம். அதை அடையறப்ப
சந்தோஷப்படறோம். அது இயற்கை. ஆனா அந்த சாயங்கால
நேரத்துல என்னோட தனிப்பட்ட எந்த ஆசையும் நிறைவேறல. எதுவும்
எனக்குச் சாதகமாய் நடந்துடல. ஆனாலும் நிறைவை உணர்ந்து இதுக்கு மேல வேறொன்னும் வேண்டாம்னு
நினைக்கிற ஒரு நிலை அந்த மனிதரைப் பார்க்கற எனக்கே கிடைச்சதுன்னா, அந்த மனிதரோட
உள் நிலை எப்படி இருக்கும், யோசிச்சுப் பார். அப்பவே
எனக்கு அவர் ஒரு உன்னதமான யோகின்னு புரிஞ்சு போச்சு. அவரைப்
பார்த்துட்டு நின்னுகிட்டிருந்தேன். அந்த நாள் ஒரே ஒரு
தடவை அவர் பார்வை என் மேல் விழுந்துச்சு. கனிவுங்கற வார்த்தைக்கு
முழு அர்த்தமாய் அவர் பார்வை இருந்துச்சு. அதுக்கும்
மேல என்னோடு எந்த தொடர்பும் ஏற்படுத்திக்கற உத்தேசம் அவர் கிட்ட இருக்கல. அவர் போகிற
வரைக்கும் அவரைப் பார்த்துட்டே நின்னுட்டிருந்தேன். அவர் போய்
ஒரு மணி நேரம் வரைக்குமே கூட எனக்கு அந்த நிறையுணர்வு இருந்துச்சு.”
”அதுக்கப்பறம்
அவர் வர்ற நாளுக்காக நான் ஒவ்வொரு வாரமும் காத்துகிட்டிருப்பேன். அவர் அங்கே
வேலை பார்க்கற அந்த ஒரு மணி நேரமும் நான் இந்த ஜன்னல் வழியா அவரையே பார்த்துட்டு நின்னுட்டிருப்பேன். மனசு தானாய் லேசாகும். அவரோட அமைதியும், சாந்தமும்
என்னையும் தொத்திக்கும். அந்த அனுபவத்தை வார்த்தையால விவரிக்க முடியாதுப்பா…. அந்த ஆள்
என் அளவு படிச்சவராயிருக்க வாய்ப்பு இல்லை. எனக்குத்
தெரிஞ்ச தத்துவ ஞானங்களோட பெயர்கள் கூட அவருக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை… ஆனால் அவர்
மாதிரி என் வாழ்க்கைல ஒரே ஒரு மணி
நேரம் இருக்க முடிஞ்சுதுன்னா அது என் பெரும் பாக்கியமாய் இருக்கும்னு நான் பல தடவை
நினைச்சிருக்கேன்…”
“நீங்க அவர் கிட்ட எப்பவாவது பேசியிருக்கீங்களா சார்?”
saantham . amaithi , anbu , niraivu ulla oruvarai naanum kandaen .
ReplyDeletecould you tell about that person
Deleteதன் இயற் பெயரை வெறுத்தல்,
ReplyDeleteதலையில் முடி உதிர்வை மறைக்க குல்லா போடுதல்,
வெள்ளை முடியை கருமை படுத்துதல்,
முகத்துக்கு அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தல்,
பதஞ்சலியின் யோகசூத்திரம் புத்தகம் எழுதுவார்கள்.ஆனால் புத்தகத்தின் அட்டையில் இவர்கள் படமும் பெயரும் பெரியதாக இருக்கும்...
இப்படி தன் இயற்கை தோற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பிரம்மானந்தாக்கள்... ஆத்ம ஞானத்தை போதிப்பது வேடிக்கையிலும் வேடிக்கை....
Wow great feeling ji
ReplyDeleteசார், யோகி எப்போது கிண்டிலில் கிடைக்கும். இன்னும் ஒன்னரை வருடம் காத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. அதே நேரம் இடப்பிரச்சினை காரணமாக வழக்கமான பதிப்பு வாங்க முடியவில்லை.
ReplyDeleteகிண்டிலில் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பில்லை.
Delete