அங்கு அவன் சென்றதற்கான உத்தேசம் என்ன என்று ஆச்சாரியர் கேட்டவுடன்
ஆம்பி குமாரன் மேற்பூச்சு பூசாமல், சுற்றி வளைக்காமல் கேட்டான். “உங்களையும், உங்கள்
இயக்கத்தையும் பொருத்த வரை என் நிலை என்ன? நீங்கள் என்னை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
சாணக்கியர் அவனிடமிருந்து
இந்த நேரடிக் கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆம்பி குமாரன் நிறையத் தான் மாறியிருக்கிறான்.
அவர் அமைதியாகச் சொன்னார் ”ஆம்பி குமாரா. அலெக்ஸாண்டரை இங்கு வரவழைத்தவன் என்று உன்னை
எடுத்துக் கொண்டால் நீ எங்கள் நண்பன் அல்லவே அல்ல. நீ முன்பு போல் பேச வந்திருந்தால் நான் இதைச்
சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் நீ மனம் மாறி வந்திருப்பதால் உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன்.”
அவர்
சொன்னது கசப்பாக இருந்தாலும் ஆம்பி குமாரன் ஆச்சாரியரின் இந்த நேரான பேச்சில் திருப்தி அடைந்தான். நாம் மாறும் போது அடுத்தவர்களும்
அதற்கேற்றாற் போல் மாறி விடுகிறார்கள் என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படிப் பேசுகிற ஆச்சாரியர் தான் இப்போது அவனுக்குத் தேவை. எத்தனையோ
காலம் போலித்தனமாக அவரிடம் நடந்து கொண்டிருக்கிறான். அவர் அந்தக் கலையில் ஆயிரம் மடங்கு
வல்லவராக இருப்பதை அனுபவபூர்வமாக அவன் கண்டிருக்கிறான். அவர் மனதில் என்ன உள்ளது என்பதை
அனுமானத்தில் அறியும் அளவு அவன் எப்போதும் புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்ள முடியாது.
இந்த மனிதரை இப்படி அணுகுவது தான் அவனுக்கு நல்லது என்பது அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது.
அவன்
சொன்னான். “எனக்குப் புரிகிறது ஆச்சாரியரே.
புருஷோத்தமனிடம் எனக்கிருந்த வெறுப்பினால் அலெக்ஸாண்டருக்கு நட்புக்கரம் நீட்டினேன்.
அலெக்ஸாண்டருடன் சேர்ந்து புருஷோத்தமனை எதிர்த்து வெல்ல ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டது
நடந்த போதும் நான் எதிர்பார்த்தது நடக்காமல் புருஷோத்தமனும் அலெக்ஸாண்டரின் நண்பனானான்.
என்னைச் சுற்றி எல்லாமே மாறி விட்ட போதிலும் நான் பழைய நிலையிலேயே இருக்கிறேன். இப்போது
ஞானோதயம் வந்திருக்கிறது. ஆனால் நடந்தது எதையும் மாற்றும் சக்தி எனக்கில்லை. பல இடங்களில்
நீங்களும் உங்கள் புரட்சிப்படையும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இதையெல்லாம்
எதிர் கொள்ள அலெக்ஸாண்டர் திரும்பி வருவானா என்று தெரியவில்லை… அவன் வராத பட்சத்தில்
நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குக் குழப்பமாய் இருக்கிறது.”
சாணக்கியர்
சொன்னார். ”அலெக்ஸாண்டர் இங்கு திரும்பிவர மாட்டான்
ஆம்பி குமாரா. அவன் வருவதாக இருந்தால் இரண்டு சத்ரப்களை அவசரமாக
நியமித்திருக்க மாட்டான். அதனால் இனி இங்குள்ள போக்கை நீயும்
யூடெமஸுமே தீர்மானிக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் எங்களுக்கு
எதிராகச் செயல்பட்டால் நாங்கள் உங்களை எதிரிகளாகவே எண்ணிச் செயல்பட
வேண்டியிருக்கும் ஆம்பி குமாரா”
“உங்கள்
வெளிப்படையான பேச்சுக்கு நன்றி ஆச்சாரியரே நானும் வெளிப்படையாகவே உண்மை நிலையைச் சொல்ல
விரும்புகிறேன். யூடெமஸ் எனக்கு ஒரு தூதனை
அனுப்பியிருக்கிறான். அதில் சிந்து நதி வரை அவன் பார்த்துக் கொள்வதாகவும், அதற்குத்
தெற்கில் நான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறான்.”
சாணக்கியர் சொன்னார். “அவன் உயிர்ப்பயம்
அவனைத் தெற்கிற்குப் போகாமல் தடுக்கிறது ஆம்பி குமாரா. இனி நாங்கள்
வென்ற பகுதிகள் பக்கம் நீ வருவாயானால் அது உன் தவறான தலையெழுத்தாகி விடும்”
அந்தத் தலையெழுத்திற்குப் பயந்தவனாய்
ஆம்பி குமாரன் சொன்னான். “ஆச்சாரியரே. காந்தாரம் தாண்டி
வேறெங்கும் சென்று ஆதிக்கம் செலுத்த நான் விரும்பவில்லை. இங்கு என்னை
நிம்மதியாக இருக்கவிட்டால் போதும் என்ற மனநிலையிலேயே இருக்கிறேன். அதற்கு
நான் என்ன செய்வது என்று புரியவில்லை. உங்கள் பழைய மாணவனின்
அறிவுக்கூர்மை உங்களுக்குத் தெரியும். இந்த சமயத்தில்
உங்கள் அறிவுரை எனக்கு உதவியாக இருக்கும்”
பழைய ஆம்பி குமாரன் மறந்தும் சொல்ல
முடியாத வார்த்தைகள் அவை. அவன் வெளிப்படையாக
தன் மனநிலையைச் சொன்னதையும், உதவி கேட்டதையும் ரசித்தவராக சாணக்கியர்
சொன்னார். “ஆம்பி குமாரா நான் ஏற்கெனவே சொன்னபடி நாங்கள்
வென்ற பகுதிகளை ஒரு சத்ரப்பாக நீ மீட்கும் கட்டாயத்தில் வந்தால் உன்னை எதிர்த்துப்
போராடும் நிர்ப்பந்தம் எங்களுக்கு ஏற்படும். நீ அதைச் செய்யாமல்
காந்தாரத்திலேயே பாதுகாப்பாக இருக்க விரும்பினால் மறைமுகமாக எங்களுக்கு நிதியுதவியும்
செய்வாயானால் இங்கு எந்தப் புரட்சியும் வெடிக்காமல், உனக்கு எந்த ஆபத்தும் நேராமல்
புரட்சிப் படையினர் பார்த்துக் கொள்வார்கள்.”
ஆம்பி குமாரனுக்கு
ஒரு கணம் கோபம் வந்து, வந்த வேகத்திலேயே போய் விட்டது. அலெக்ஸாண்டரும் வரமாட்டான்,
யூடெமஸும் எச்சரிக்கையுடன் தொலைவிலேயே இருக்கத் தீர்மானிக்கிறான் என்றால் சத்ரப்
பதவி என்றைக்கும் அவன் உயிருக்கு உலை வைக்கும் பதவியாகவே இருக்கும். உயிருக்கு மேல்
என்ன இருக்கிறது என்று விரக்தியுடன் நினைத்தவனாய் ஆம்பி குமாரன் சொன்னான். “நான் உதவுவது
வெளியே தெரிய வாய்ப்பில்லை என்றால் நிதியுதவி அளிப்பது எனக்கு எந்தப் பிரச்சினையும்
இல்லை ஆச்சாரியரே. ஆனால் அலெக்ஸாண்டரோ, யூடெமஸோ என்னைப் போர் புரிய வாஹிக் பிரதேசத்திற்குப்
போக நிர்ப்பந்தித்தால் நான் என்ன செய்வது?”
சாணக்கியர் சொன்னார்.
“அப்படி ஒரு கட்டளை வருமானால் நீ யூடெமஸையும் இங்கே வரச் சொல். சேர்ந்து போனால் தான்
வெற்றி கிடைக்கும் என்று சொல். அல்லது அவன் சொல்வதற்கு முன் இன்னும் ஒருபடி மேலேயே
போய் நீயாகவே அவனுக்குச் செய்தி அனுப்பு. இழந்த பகுதிகளை மீட்க வேண்டுமானால் பெரும்படையுடன்
அவனும் வந்தால் தான் அது சாத்தியம் என்று சொல். அவன் கண்டிப்பாக
வர மாட்டான். அதனால் நீயும் போக வேண்டி வராது”
ஆம்பி குமாரனுக்கு
அவர் ஆலோசனை பிடித்திருந்தது. அந்த விவரமானவனைச் சமாளிக்க இந்த விவரமானவரின் ஆலோசனை
தான் சரி. “நன்றி ஆச்சாரியரே. அப்படியே செய்கிறேன். ஆனால் நான் எந்த வெளிப்படையான ஆதரவையும் புரட்சியாளர்களுக்குத்
தர முடியாது. இந்த மறைமுக நிதியுதவி கூட வெளியே தெரிய வருமானால் எனக்கு ஆபத்து என்பதை
நீங்கள் அறிவீர்கள்....”
சாணக்கியர் சொன்னார்.
“அதை நான் அறிவேன். எந்த இரகசியமும் எங்கள் பக்கத்திலிருந்து கசியாது ஆம்பி குமாரா.
அது குறித்து உனக்கு சிறிது சந்தேகமும் தேவையில்லை. நான் வாக்குத் தருகிறேன்”
அலெக்ஸாண்டரை வரவழைத்தவன்,
யவனர்களின் தற்போதைய சத்ரப் என்ற இரண்டு காரணங்களே புரட்சிப்படையினர் சதி செய்து அவனைக்
கொல்ல போதுமாயிருப்பதாக அவன் எண்ணி எண்ணி இனி பயக்கத் தேவையில்லை. ஆச்சாரியரிடம்
அவன் நேர்மையாக நடந்து கொள்ளும் வரையில் அவரும் அப்படியே நடந்து கொள்வார். அவர் வாக்குத்
தந்த பின் கவலைப்பட ஏதுமில்லை…
நிதியுதவி எவ்வளவு,
எப்படித் தருவது என்பது குறித்து தாழ்ந்த குரலில் பேசி இருதரப்பும் ஏற்றுக் கொள்ள முடிந்த
ஒரு முடிவுக்கு வந்து அவரை வணங்கி விட்டுக் கிளம்பிய போது ஆம்பி குமாரனின் மனதிலிருந்த
பெரிய பாரம் இறங்கி விட்டிருந்தது.
ஆ,ம்பி
குமாரனின் வரவும் அவனுடன் ஏற்படுத்திக் கொண்ட ரகசிய உடன்படிக்கையும் சாணக்கியரையும்
திருப்தியடைய வைத்தது. காந்தாரத்தை இப்போது புரட்சிப் படையினர் கைப்பற்றுவது கஷ்டமென்றாலும்
சரியாகத் திட்டமிட்டால் முடியாத காரியமல்ல. ஆனால் அப்படி ஒருவேளை வென்றாலும் அதைத்
தாண்டியிருக்கும் வட பகுதிகள் யவனர்களின் வசம் இருப்பதால் இந்த எல்லைப் பகுதியான காந்தாரம்
ஒரு பிரச்சினையான பகுதியே. அதனால் நிதியுதவி செய்யச் சம்மதித்த ஆம்பி குமாரன் சாவதை
விட வாழ்வதே அவர்களுக்கு இலாபம். மேலும் அவர்கள் கவனம் திருப்ப வேண்டிய முக்கிய பகுதி
மகதமே….
அரண்மனை திரும்பிய ஆம்பி குமாரன் யூடெமஸின்
தூதனை வரவழைத்துக் கம்பீரமாகச் சொன்னான். “சத்ரப் யூடெமஸுக்கு என் வாழ்த்துகளையும்
வணக்கங்களையும் தெரிவிப்பாயாக, தூதனே. கலவரம் நடந்து புரட்சிக்காரர்கள் வென்ற
பகுதிகளைத் திரும்பவும் மீட்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்
என்றாலும் அது இப்போது இங்கிருக்கும் படைபலத்தை
வைத்துக் கொண்டு என் ஒருவனால் சாத்தியமல்ல என்பதை சத்ரப் யூடெமஸிடம் சொல் தூதனே. அதனால்
அப்படி சக்கரவர்த்தியோ சத்ரப் யூடெமஸோ கூட எதிர்பார்க்கும்
பட்சத்தில் ஒரு வலிமையான படையுடன் சத்ரப் யூடெமஸ் உடனடியாகக் கிளம்பி வருவது தான்
அதற்கு உகந்ததாக இருக்கும். மற்ற பணிகளை அவர் பிறகு பார்த்துக்
கொள்ளட்டும். மற்றபடி நம் பகுதிகளில் வழக்கமான நிர்வாகத்தை மட்டும் பார்த்துக் கொள்வதானால்
அதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை…”
(தொடரும்)
என்.கணேசன்