சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Saturday, November 11, 2023

யோகி 22

(தீபாவளி போனஸ் அத்தியாயம்) 

ராகவன் ஷ்ரவனுக்குப் போன் செய்து அவன் கேட்டுக் கொண்டபடி அவர்கள் ஆள் ஒருவன் யோகாலயத்தில் வேலைக்குச் சேர்ந்து விட்டதாகச் சொன்னார். ”அங்கே இப்போதைக்குத் தோட்ட வேலை பார்க்கத் தான் ஆள் தேவைன்னு தெரிஞ்சுது. இந்தியாவில் ரஜனீஷ் ஆசிரமத்துக்கு இணையான தோட்டங்கள் இருக்கிற ஆசிரமம் இது தானாம். அங்கேயிருக்கற துறவிகளும் தினசரி அந்த தோட்ட வேலை செய்யறாங்கன்னாலும், வெளியாட்களையும் தோட்ட வேலைக்கு எடுத்துக்கறாங்க. அதனால தைரியமான, புத்திசாலித்தனமான ஒருத்தனை அந்த வேலைக்கு அனுப்பிச்சிருக்கேன். குமரேசன்னு பெயர். அங்கே மருதகாசிங்கற பேர்ல போய் சேர்ந்திருக்கான். ரெண்டு நாளாச்சு. காலைல ஆறு மணியில இருந்து மத்தியானம் ரெண்டு மணி வரைக்கும் வேலை... காலைல காபி டிபன், மதியம் சாப்பாடு தந்துடறாங்க... மதியம் ரெண்டு மணிக்கு அவன் கிளம்பிடலாம். அங்கே வேலை செய்ய முக்கியமான நிபந்தனை என்னன்னா செல்போனை யோகாலயத்துக்குள்ளே கொண்டு போகக்கூடாது. கேட்ல செக்யூரிட்டி கிட்டே கொடுத்துட்டுப் போயிடணும். வர்றப்ப தான் எடுத்துகிட்டு வர முடியும்

 

ஷ்ரவன் சொன்னான். “உள்ளே எதையும் போட்டோ எடுக்கறதோ, வீடியோ அல்லது ஆடியோ ரிகார்ட் பண்றதோ அவங்களுக்குப் பிரச்சினை ஆயிடலாம்னு நினைக்கிறாங்க போல இருக்கு

 

அது தான் காரணமாயிருக்கும். இந்த வேலை செய்யறவன் தோட்டத்துல மட்டும் தான் இருக்கணும். சாப்பிடற ஹால் ஒன்னு உள்ளே இருக்காம். அங்கே மட்டும் சாப்பிடற நேரத்துல போய்க்கலாம். மத்தபடி தோட்டம் தவிர எங்கேயும் எப்பவுமே போக அனுமதி இல்லையாம்.”

 

கண்காணிக்க ஆட்கள் இருக்காங்களா?”

 

ஆமாம். அது மட்டுமில்லாம கண்காணிப்பு காமிரா எல்லா இடங்கள்லயும் இருக்காம். யாராவது அவங்கவங்க இருக்க வேண்டிய, போக வேண்டிய இடங்களையும் தாண்டிப் போனா உடனடியா ரெண்டு அல்லது மூனு நிமிஷத்துக்குள்ளே என்னன்னு விசாரிக்க ஆள் வந்துடறாங்கலாம்...”

 

அப்படின்னா புது ஆள்களைக் கூடுதலாய் அவங்க கண்காணிக்க வாய்ப்பிருக்கு. குமரேசனை எச்சரிக்கையோட இருக்க சொல்லணும்.”

 

அதை குமரேசனும் தெரிஞ்சுதான் வெச்சிருக்கான்... கவனமாயிருக்கான்... நீ எப்ப போறதாயிருக்கே?”

 

அடுத்த திங்கள்கிழமைல ஆரம்பிக்கிற யோகா க்ளாஸ்ல சேர்றதுக்கு ஆன்லைன்ல அப்ளை செஞ்சிருக்கேன். சைத்ரா போன அதே கோர்ஸ். ஒரு வாரம் அங்கேயே தங்கி படிக்க பணம் அனுப்பிச்சிட்டேன்.”

 

நல்லது. இப்ப என்ன பண்ணிகிட்டிருக்கே?”

 

பிரம்மானந்தாவோட வாழ்க்கை வரலாறைப் படிச்சிகிட்டிருக்கேன்...”

 

அவர் வாழ்க்கை வரலாறு எப்படியிருக்கு?’

 

ரொம்ப சுவாரசியமாயிருக்கு

 

உண்மையாகவே பிரம்மானந்தாவின் வாழ்க்கை வரலாறு சுவாரசியமாகத் தான் இருந்தது.

 

பிரம்மானந்தாவின் இயற்பெயர் ப்ரேமானந்த். ராஜபாளையத்தில் பிறந்து வளர்ந்தவர். தந்தை பள்ளிக்கூட ஆசிரியர். தந்தை தாய்க்கு ப்ரேமானந்த் மூத்த பிள்ளை. உடன் பிறந்தவள் ஒரு தங்கை மட்டுமே. ராஜபாளையத்திலேயே அவரது பள்ளிக் கல்வியும், கல்லூரிக் கல்வியும் இருந்தது என்பதைத் தவிர ப்ரேமானந்தின் இளமைப்பருவம் பற்றி அதிக தகவல்கள் இல்லை. கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பின் அங்கிருந்த தொழிற்சாலை ஒன்றில் ஒரு வருடமும், பின் மதுரையில் தனியார் கம்பெனியில் இரண்டு வருடங்களும் வேலை பார்த்து பின் சொந்தமாக நாட்டு மருந்து, மூலிகைகள் வியாபாரம் இரண்டு வருடம் செய்திருக்கிறார். அப்படி மூலிகைகள் வியாபாரம் செய்கையில் மூலிகைகள் பொறுக்க, சதுரகிரி மலைக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது. அப்போது சதுரகிரிக்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்த பத்மநாப நம்பூதிரி என்ற யோகா மாஸ்டரிடம் அவர் யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் கற்றிருக்கிறார். பத்மநாப நம்பூதிரி கேரளாவிலும் தமிழகத்திலும் பெரிய நகரங்களில் யோகா வகுப்புகள் நடத்துபவர். அவருடைய யோகா வகுப்புகள் திருவனந்தபுரம், நாகர்கோயில், கொச்சி, கோழிக்கோடு, திருச்சூர், கோயமுத்தூர், சேலம் முதலான நகரங்களில் சிறப்பான முறையில் நடந்து கொண்டிருந்தன.  ப்ரேமானந்த் மிகவும் சூட்டிப்பாகவும், பேச்சில் கெட்டிக்காரராகவும் இருந்து பயிற்சிகளையும் சிறந்த முறையில் கற்றுக் கொள்ளவும் செய்யவே தன்னோடு யோகா பயிற்சி கற்றுக் கொடுக்கும் வேலைக்கு வர விருப்பமிருக்கிறதா என்று பத்மநாப நம்பூதிரி கேட்டிருக்கிறார். ப்ரேமானந்துக்கு அப்போதைய வியாபாரத்தில் நல்ல வருமானம் இல்லாதிருந்ததால் அதற்கு உடனே சம்மதித்து உடன் சென்றிருக்கிறார்.

 

பத்மநாப நம்பூதிரி திருவனந்தபுரத்தில் வாழ்பவர். அவருடைய யோகா வகுப்புகளின் தலைமையகமும் அங்கேயே இருந்தது. பத்மநாப நம்பூதிரியுடன் சேர்ந்து ஒரு வருடம் யோகா பயிற்சியாளராக திருவனந்தபுரத்தில் இருந்த ப்ரேமானந்த் அடுத்த வருடம் சென்னையில் புதிதாக ஆரம்பித்த கிளையில் யோகா பயிற்சியாளராகச் சென்றார். அதன் பின் அவர் வாழ்க்கை திசை மாறியது.

 

சென்னையில் யோகா கற்றுக் கொள்ள வந்த பெரிய செல்வந்தர்களுடன் அவருக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. அவர்கள் அவருடைய பேச்சினால் மிகவும் கவரப்பட்டார்கள். அந்த சமயத்தில் ஒரு முறை சொந்த ஊருக்குச் சென்ற போது யோக சித்தி கிடைத்ததாக அவர் கூறினார். அவர் தன்னுடைய நூல் ஒன்றில் அந்தப் பேரானந்த அனுபவத்தை எழுதியிருந்ததை ஷ்ரவன் படித்தான்.

 

சென்னையிலிருந்து  நான் ராஜபாளையத்திற்குப் போய்ச் சேர்ந்த போது இரவாகி விட்டிருந்தது. அம்மா எனக்காகச் செய்திருந்த பலகாரங்களைச் சாப்பிட்டு பயணக்களைப்பினால் இரவு நன்றாக உறங்கி விட்டேன். மறுநாள் அதிகாலையில் என் கனவில் ஒரு சித்தர் தோன்றினார். அவரை நான் அதற்கு முன் எப்போதும் பார்த்திரா விட்டாலும் அந்தச் சித்தர் கோரக்கர் என்று எனக்குத் தோன்றியது. அப்படி ஏன் தோன்றியது என்று எனக்குத் தெரியவில்லை. என் ஆத்மாவே முந்தைய பிறவிகளில் அவரைக் கண்டிருந்த அனுபவத்தால் அடையாளம் கண்டு கொண்டதாகவே நினைக்கிறேன். அவர் என்னிடம் சொன்னார். “காலம் நெருங்கி விட்டது. சஞ்சீவிகிரிக்குப் போ 

 

உடனே நான் விழித்துக் கொண்டேன். சதுரகிரிக்கு ஆரம்பத்தில் சஞ்சீவிகிரி என்ற பெயர் தான் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு நான் ஏன் செல்ல வேண்டும், எதற்குக் காலம் நெருங்கி விட்டது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கோரக்கர் சதுரகிரியில் பல காலம் வாழ்ந்தவர். அதனால் அங்கு வரச் சொல்கிறாரா இல்லை எல்லாமே என் கற்பனையா, அர்த்தமில்லாத கனவா என்று தெரியவில்லை. ஆனாலும் மறுநாள் காலை டிபன் சாப்பிட்டு விட்டு சதுரகிரி மலைக்கு என் ஸ்கூட்டரில் புறப்பட்டேன். மலை அடிவாரத்தில் ஸ்கூட்டரை நிறுத்தி சதுரகிரிமலை ஏறினேன். அதற்கு முன்பும் பல முறை அந்த மலையில் ஏறியிருக்கிறேன் என்றாலும் அன்றைய தினம் சதுரகிரி கூடுதல் அமைதியுடன் இருப்பது போல் தோன்றியது. “சரி வந்தாகி விட்டது. இனி என்ன?” என்று மானசீகமாக கோரக்கர் சித்தரிடம் கேட்கிறேன். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. சரி வந்ததற்கு முதலில் சுந்தர மகாலிங்கம் சன்னிதியில் வணங்கி விட்டுத் திரும்புவோம் என்று நினைத்துக் கொண்டேன். சுந்தர மகாலிங்கத்தின் விசேஷம் என்னவென்றால் மற்ற லிங்கங்களைப் போல் அது நேராக இருக்காமல் சாய்ந்த நிலையில் தான் இருக்கும். சன்னிதியில் அந்த லிங்கத்தை மனதார வணங்கிய போது அது வரை உணராத ஒரு சிலிர்ப்பை நான் உணர்ந்தேன். அது ஏன்? என் சிற்றறிவுக்கு அதற்கும் காரணம் தெரியவில்லை.”

 

சன்னிதியை விட்டு வெளியே வந்த போது தூரத்தில் ஒரு பாறையின் மீது கோரக்கர் நின்றிருப்பது தெரிந்தது. கனவில் கண்ட அதே தோற்றம்! மெய் சிலிர்த்தபடி நான் கைகூப்பினேன். அவர் கை ஆசிர்வதிப்பது போல் உயர்ந்தது. திடீரென்று பார்த்தால் சுற்றிலும் அவரைப் போன்ற சித்தர்கள் பலர் அங்கங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரையும் எனக்கு அடையாளம் தெரியவில்லை என்றாலும் அவர்கள் சித்தர்கள் என்பதில் சந்தேகமில்லை. சதுரகிரி மலையே சித்தர்கள் வாழும் மலையல்லவா? அவர்கள் எல்லோரும் எதற்கோ காத்துக் கொண்டிருந்தது போல் எனக்குத் தோன்றியது. அடுத்த கணம் என் முன்னால் ஒரு பேரொளி தோன்றியது. கண்கள் கூச நான் உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டேன். ஆனால் அத்தனை சித்தர்களும் கைகூப்பி வணங்குவதை என்னால் பார்க்க முடிந்தது.  இவர்கள் அனைவரும் யாரை வணங்குகிறார்கள் என்று நான் திகைப்புடன் திரும்பவும் அந்த ஜோதியைப் பார்த்தேன். ஜோதிக்கு நடுவே சுந்தர மகாலிங்கம் சாய்ந்த நிலையில் தெரிந்தது. பிரமித்துப் போய் நானும் கைகூப்பினேன்.”

 

அந்த சுந்தர மகாலிங்கத்தில் முதலில் நெற்றிக் கண் தெரிந்தது. பின் மற்ற இரண்டு கண்களும், மூக்கும், காதுகளும், உதடுகளும் தெரிய ஆரம்பிக்க நான் வசியம் செய்யப்பட்டவன் போலவே உணர்ந்தேன். ”ஈசனே! இது என்ன காட்சி! இதைக் காண நான் எத்தனை காலம் தவம் செய்திருக்கிறேன்என்று நான் என் ஆத்மாவின் கூக்குரலைக் கேட்டேன்.... இதை எழுதும் போதும் சரி இதுபற்றிப் பேசும் போதும் சரி, ஒவ்வொரு முறையும் என் உடம்பில் என்னை அறியாமல் மயிர்க்கூச்செறிவது ஏன்?”


(தொடரும்)

என்.கணேசன்






9 comments:

  1. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சர்..

    ReplyDelete
  2. Wow!!!great writing Anna

    ReplyDelete
  3. Happy Deepavali Mr. Ganesan. Your storytelling is so magnificent and sounds so real. We are able to feel as if we are witnessing the whole story.
    Thank you for sharing this for free.
    May God bless you and your family.

    ReplyDelete
  4. Happy Deepavali Sir. Story goes very well. God bless you.

    ReplyDelete
  5. பிரம்மானந்தா தன் ஞான அனுபவத்தை பற்றி சொல்வது உண்மையா...? அல்லது கதையா...? அல்லது வேறொருவரின் அனுபவமா...? என்று தெரியவில்லை... ஆனால், சுவாரஸ்யமாகவும் , பிரம்மிப்பாகவும் இருக்கிறது....

    ReplyDelete
  6. Happy Deepawali sir, the novel is in a very interesting stage now and truth will come out as expected.

    ReplyDelete
  7. Real spiritual incidents are not openly told to others by spiritual persons. Such incidents will be kept within themselves. When Arjuna was unable to see the VISWA RUUPAM of Lord Krishna, Krishna gave him a special vision power to see his VISWA RUUPAM. Then only, Arjuna saw the VISWA RUUPAM. Krishna gave a special vision power to Yashoda to see the whole universe inside his mouth, and then made her to forget the whole thing. Lord Shiva was seen by ordinary human vision is unbelievable. Five minutes of meditation cured the broken bone is also unbelievable. One need not have a room to meditate. One can meditate in any open space, open side of the road, and open public place as long as he can concentrate his mind. When his bone was broken, he could sit on the side of the road, meditate for five minutes, and cure his broken bone. He need not go to the nearby hospital, when he was able to meditate for five minutes on the side of the road and cure his broken bone. Seeing Lord Shiva by ordinary human vision and cure broken bone by meditation for five minutes is a fraud.

    ReplyDelete