சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 20, 2023

யோகி 24

 

ந்தே நிமிட தியானத்தில், எலும்பில் ஏற்பட்ட விரிசலை பிரம்மானந்தா சரிசெய்து கொண்டது எந்த ஆஸ்பத்திரியில், எந்த நாளில் என்ற தகவல்கள் எங்கும் தரப்படவில்லை. அவரது விமர்சகர்கள் அதை அவருடைய அபாரக் கற்பனை என்று கேலி செய்தார்கள். நடந்தது உண்மை தான் என்றால் ஆதாரம் காட்டுங்கள் என்று சொன்னார்கள். பிரம்மானந்தா ஆதாரம் காட்டும் சிரமத்தை எடுத்துக் கொள்ளவில்லை.  சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் அந்தக் காலத்தில் இருந்த அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் விசாரித்து விட்டதாகவும், எந்த ஆஸ்பத்திரியிலும் அந்த நிகழ்வை யாரும் நினைவு கூரவில்லை என்றும் விமர்சகர்கள் சொன்னார்கள்.

 

ஒரு பேட்டியில் அவரிடம் நேரடியாகவே அந்த நிகழ்வைச் சந்தேகிக்கும் கேள்வி கேட்கப்பட்டது. “உங்கள் விமரிசகர்கள் தங்கள் பழைய எலும்பு விரிசல் தியானத்தால் குணமானது என்பதை நம்ப மறுக்கிறார்களே?”

 

பிரம்மானந்தா அலட்டிக் கொள்ளாமல் சொன்னார். “இறைவனையே நம்ப மறுக்கும் மனிதர்களைக் கொண்ட உலகம் இது. அவர்கள் நான் சொல்வதை நம்ப மறுப்பதில் ஆச்சரியம் இல்லை. யாருடைய நம்பிக்கையும் சான்றிதழும் எனக்குத் தேவையில்லை. தியானத்தின் மகிமையைத் தெரிவிக்க வேண்டி தான் அந்த நிகழ்வைச் சொன்னேன். மற்றபடி அதைச் சொல்லி எலும்பு முறிவுக்கான ஆஸ்பத்திரி நடத்தி சம்பாதிக்கும் உத்தேசம் எனக்கு இல்லவே இல்லைசொல்லி விட்டு கலகலவென்று பிரம்மானந்தா சிரித்து அந்தக் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

அவர் பிரபலமாகி விட்ட பின் தந்த பேட்டிகளில் பேட்டியாளர்களைப் பிரமிக்க வைக்குமளவு, தன் கற்பனை வளத்தைக் கட்டவிழ்த்து விட ஆரம்பித்தார்.  அதை உண்மை என்று நிரூபிக்கும் அவசியம் இல்லாதபடியும் பார்த்துக் கொண்டார். ஒரு முறை ஒரு பேட்டியில் முற்பிறவியில் அவர் பதஞ்சலி முனிவரின் பிரதான சீடராய் இருந்ததைச் சொன்னார். அந்த நிகழ்வுகள் எல்லாம் சில சமயங்களில் தனக்கு திடீர் என்று நினைவுக்கு வருவதாய்ச் சொன்னார்.

 

யோக நூல்களைத் தொகுத்து, யோக சூத்திரங்களை இவ்வுலகுக்குத் தந்த அவர் குருவின் உத்தரவால் தான், இப்பிறவியில் அவர் யோகாலயத்தை நிறுவியதாய்க் கண்கலங்கக் குறிப்பிட்டார். அவர் குருவின் யோக சூத்திரங்கள் இந்த உலகிற்கு வழிகாட்டுவது போல், அவருடைய யோகாலயமும் இந்த உலகுக்கு காலம் உள்ள வரையும் வழிகாட்டும் என்று நம்புவதாகவும் குரல் கம்ம அவர் சொன்னார்.  ஆனால்  எதற்கும் காரணமாகத் தன்னை நினைக்கவில்லை என்றும், இதுவரை நடந்ததும், இனி நடக்க இருப்பதும் எல்லாம் சுந்தரமகாலிங்கத்தின் அருளாலும், அவருடைய குரு பதஞ்சலியின்   ஆசியாலும் தான் என்று நினைப்பதாயும் சொன்னார். அவருடைய  தன்னடக்கத்தை அவருடைய பக்தர்களும், தீவிர ஆதரவாளர்களும் பாராட்டினார்கள். அவர் முற்பிறவியில் பதஞ்சலி முனிவரின் பிரதான சீடர் அல்ல என்பதை நிரூபிக்க முடியாமல் அவருடைய எதிர்ப்பாளர்கள் திணறினார்கள்.

 

அவருடைய பேச்சுகள் பலதும் வார்த்தைக்கு வார்த்தை ஓஷோவின் புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அவர் விமர்சகர்கள் சொன்னார்கள். அதை பிரம்மானந்தா முழுவதுமாக மறுத்தார். “யோகா உட்பட எல்லா ஞானமும் சதுரகிரியில் என் மூளைக்குள் டவுன்லோடு ஆன சங்கதிகள். எல்லாம் அந்த சுந்தர மகாலிங்கம் எனக்குப் போட்ட பிச்சை. இளமைக்காலத்தில் நான் ஒருசில புத்தகங்கள் படித்திருக்கிறேன். அதுவும் ஓஷோவின் புத்தகங்கள் அல்ல. சதுரகிரியில் நான் மெய்ஞான அனுபவம் பெற்ற பிறகு எந்தப் புத்தகம் படிக்கும் அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. முற்றிலும் ஞானமடைந்த பிறகு புத்தகங்களில் இருப்பதெல்லாம் அரைகுறைகளாகவும், தவறானவைகளாகவும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் அவற்றையெல்லாம் படிக்கும் அவசியமோ, பொறுமையோ எனக்கில்லாமல் போய் விட்டது.”

 

பெரும்பாலும் எந்த ஒரு கேள்விக்கும் அவர் எளிமையான பதில் சொல்வதைத் தவிர்த்தார் என்பதையும் ஷ்ரவன் கவனித்தான். கடினமான கேள்விகளுக்கு மட்டுமல்லாமல் எளிமையான கேள்விகளுக்கும் கூட அவர் பெரிய பெரிய வார்த்தைகள் சொன்னார். வரலாறையும், அறிவியலையும், விஞ்ஞானிகளையும், மேற்கோள் காட்டிப் பேசினார். பேட்டியின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத எதிர்கேள்விகள் கேட்டு பிரம்மானந்தா அசத்தினார். பல சமயங்களில் தாங்கள் கேட்டதற்கும், இவர் கேட்கும் பதில் கேள்விகளுக்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் திருதிருவென பேட்டியாளர்கள் விழிப்பது தெரிந்தது. அவர்கள் பதில் தெரியாமல் தடுமாறுவதை ரசித்துஇதற்குப் பதில் கிடைக்கும் போது நீங்கள் கேட்கும் கேள்விக்கும் தானாய் பதில் புரிந்து விடும்என்று சொல்வார். எந்த ஒரு கேள்விக்கும் அவர்தெரியாதுஎன்ற பதிலை மட்டும் இதுவரை சொன்னதேயில்லை. 

 

அவர் பேச்சில் குறிப்பிடும் வரலாற்று உண்மைகள் ஆதாரமற்றவை என்றும், அவர் கூறும் அறிவியல் கருத்துகளுக்கும் அடிப்படை எதுவும் இல்லை என்றும் அவரை விமர்சிப்பவர்கள் சொன்னார்கள். அந்த விமர்சனத்தை அவரோ, அவருடைய பக்தர்களோ காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அதையெல்லாம் நாத்திகர்களும், மாற்று மதத்தவர்களும் உள்நோக்கத்தோடு செய்யும் அவப் பிரசாரமாகச் சொன்னார்கள்.

 

அதே சமயத்தில் உண்மைக்காக மட்டுமே அவரை விமர்சிக்கிறார்கள் என்று சொல்ல முடியாதபடி தான் அவருடைய விமர்சகர்களும் பெரும்பாலும் இருந்தார்கள். அவருடைய யோகாலயம் பற்றியும், அவருடைய கருத்துக்களைப் பற்றியும் மிகவும் கடுமையாக இளம்பரிதி என்ற இளைஞன் விமர்சித்து வந்தான். அவன் அவரைப் பல கேள்விகள் யூட்யூபில் கேட்டு விட்டுஎங்கே பதில்?”  எங்கே பதில்?” என்று அடுத்தடுத்த யூட்யூப்களில் கேட்டு வந்தான். பிரம்மானந்தாவின் பரம பக்தர் ஒருவர்முதலில் உன் பெற்றோர் உனக்கு வைத்த பெயர் என்ன? உன் மதம் என்ன? என்று வெளிப்படையாகத் தெரிவித்து விட்டு கேள்விகள் கேள். இப்படி புனைப்பெயரில் முகமூடிகளைப் போட்டுக் கொண்டு கேள்விகள் கேட்பதை நிறுத்துஎன்று ஆவேசமாகத் தன் யூட்யூபில் கேட்டார். இளம்பரிதியிடமிருந்து அதற்குப் பதில் இல்லை. ஆனால் அதன் பின்எங்கே பதில்?” என்று கேட்பதை அவன் நிறுத்திக் கொண்டான்.   

 

ஷ்ரவன்யாருக்கும் வெட்கமில்லைஎன்று நினைத்தான். அவன் கவனம் அடுத்ததாக பிரம்மானந்தாவின் குடும்ப உறுப்பினர்கள் பக்கம் திரும்பியது. பிரம்மானந்தாவின் பெற்றோர் அவர் யோகாலயம் ஆரம்பித்த காலத்திலேயே இறந்து போயிருந்தார்கள். அவரது ஒரே தங்கை தற்போது தன் மகனுடன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறாள். அவள் எப்போதாவது இந்தியா வருகையில் அண்ணனைப் பார்த்து விட்டுப் போகிறாள் என்பதைத்தவிர அவள் அவருடன் அதற்கதிகத் தொடர்பில் இல்லை. அதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் அவர் குடும்பத்தினரின் ஆதிக்கம் யோகாலயத்தில் தற்போது எதிலும் இல்லை என்பது புரிந்தது. 

 

ஷ்ரவன் அடுத்ததாய் யோகாலயம் பற்றிய மற்றவர்கள் அபிப்பிராயங்களை அறிய விரும்பினான். இணையத்தில் நிறைய பேர் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார்கள். சிலர் அவரை கடவுள், பதஞ்சலியின் சீடர், யோகி, ஞானக்கடல், அறிவுப்பொக்கிஷம், மகான், சித்தர் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். சிலர் அவர் புளுகர், போலி, பினாமி, தற்பெருமைப் பிரியர், ஏமாற்றுப் பேர்வழி என்றெல்லாம் வர்ணித்திருந்தார்கள். இரண்டு வித அபிப்பிராயங்களுக்கும் காரணங்களை அவர்கள் விவரித்திருந்தார்கள். அவற்றில் எது உண்மை, எது பொய் என்பதை விருப்பு வெறுப்பில்லாமல் ஆராய வேண்டியிருந்தது.

 

ஆரம்பத்தில் யோகாலயத்திற்கான இடத்தை வாங்க பிரம்மானந்தா சிரமப்பட்டதைப் போல் பின்பு சிரமப்படவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. தொடர்ந்து சுற்றிலும் இருக்கும் இடங்களை வாங்கி யோகாலயத்தை விரிவுபடுத்திக் கொண்டே போவதற்கு வேண்டிய அளவு பணம் அவரிடம் இருந்திருக்கிறது. சிலரை மிரட்டி இடம் வாங்கியிருக்கிறார் என்ற புகார் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் பலத்த எதிர்ப்பை யாரும் காட்டியதாகத் தகவல் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சிகளிலும் இருக்கும் முக்கியஸ்தர்கள் கூட பிரம்மானந்தாவுக்கு நெருக்கமாகவே இருந்து வந்ததால் அவரை எதிர்த்து யாரும் சோபிக்க முடியவில்லை.  பல அரசியல்வாதிகளின் பணம் அவரிடம் இருக்கிறது, பலரது பினாமியாகவும் அவர் இருக்கிறார் என்று சிலர் பொதுவாக அபிப்பிராயம் தெரிவித்தாலும் அது வதந்தியாகவே வலம் வந்ததே ஒழிய உறுதியாக ஆதாரத்துடன் குற்றம் சாட்ட முடிந்தவர்கள் யாருமில்லை.

 

சிலர் யோகாலயத்தில் சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் குற்றவாளிகள் மறைவாக வாழ்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள். அவர்களுக்கு பிரம்மானந்தா அடைக்கலம் தந்து பிரதிபலனாகப் பெரிய தொகையைப் பெற்றுக் கொள்கிறார் என்றும் சொன்னார்கள். ஆனால் அதற்கும் நம்பத்தகுந்த எந்த ஆதாரத்தையும் விமர்சிகர்களுக்குத் தர முடியவில்லை.

 

ஷ்ரவன் எந்த வதந்தியையும், புகாரையும் அலட்சியப்படுத்தி விடவில்லை. உண்மை எதிலும் இருக்கலாம். இனி யோகாலயத்தின் உள்ளே என்ன இருக்கிறது, என்ன நடக்கிறது என்பதை அவனே சென்று தான் கண்காணித்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும்


(தொடரும்)

என்.கணேசன்



6 comments:

  1. Excellent characterization makes Brahmananda real

    ReplyDelete
  2. Waiting for shravan,'s entry inside ashram

    ReplyDelete
  3. அடுத்து,பிரம்மானந்தாவின் யோகா வகுப்பில் நடக்கும் கூத்துக்களையும், தீட்சை என்ற பெயரில் அழ வைப்பதையும் காண ஆவலாக உள்ளேன்...

    ReplyDelete
  4. Perfect characterisation...

    ReplyDelete
  5. யோகி 23-ம் பகுதியில் பிரம்மானந்தாவின் விடுபட்டுள்ள சிறப்பம்சங்களை சிலவற்றை comment-ல் எழுதியிருந்தேன்...அது, 24-ம் பகுதியுடன்... அது ஒத்து போகிறது...அருமை...

    ReplyDelete
  6. Resemblance with jacky Vasudev

    ReplyDelete