அலெக்ஸாண்டரின் ஆணை புருஷோத்தமனுக்கு வந்து சேர்ந்தது. அந்த ஆணையில்
பாரதத்தின் புதிய சத்ரப் ஆக யூடெமஸ் என்ற யவனப் படைத்தலைவனையும், ஆம்பி குமாரனையும்
சேர்த்து அலெக்ஸாண்டர் நியமித்திருந்தான். அவர்கள்
இருவரும் இணைந்து நிர்வாகம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள்
முடிவுகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும் அவன் தெரிவித்திருந்தான். அதைப் படித்து
விட்டு புருஷோத்தமன் கொதித்தெழுந்தார்.
“நம்மைத்
தொடர்ந்து அவமானப்படுத்துவது என்று அலெக்ஸாண்டர் முடிவெடுத்து விட்டானா, இந்திரதத்? பிலிப்
நடந்து கொண்டபடி இனி ஆம்பி குமாரனும் நடந்து கொள்வான். அவனையும்
நாம் அனுசரித்துப் போக வேண்டுமா? அவன் எந்த வகையில் நம்மை விட உயர்வென்று நினைத்து அவனை அலெக்ஸாண்டர்
சத்ரப் பதவிக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறான்? ஆம்பி குமாரனுடன்
சேர்ந்து நம்மை ஆட்டிப் படைக்க யூடெமஸ் என்பவனையும் அலெக்ஸாண்டர் சேர்த்திருக்கிறான். நாம் பொறுத்துப்
போவதற்கு ஒரு எல்லையே இல்லையா?
இந்திரதத்துக்கு கேகய மன்னரை எப்படி
சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. ஆம்பி குமாரனும், புருஷோத்தமனும்
இனி நட்பு பாராட்ட வேண்டும் என்று அலெக்ஸாண்டர் அங்கிருந்த போதே வற்புறுத்தி இருந்தாலும்
அது இரு பக்கமும் சாத்தியமாகவில்லை. ஆனால் ஆம்பி குமாரன்
கேகய நாட்டுக்கு ஆரம்பத்திலிருந்து செய்து கொண்ட சிறு தொந்திரவுகளைச் செய்வதை வேறு
வழியில்லாமல் நிறுத்தியிருந்தான். அலெக்ஸாண்டர் மற்ற பகுதிகளுக்குப் போருக்குப் போகையில் ஆம்பி
குமாரனை அழைத்துக் கொண்டு போகாமல் புருஷோத்தமனை அழைத்துக் கொண்டு போனதில் புருஷோத்தமன்
முக்கியத்துவம் தரப்பட்டது போல உணர்ந்ததாலும், ஆம்பி குமாரன்
தட்சசீலத்திற்குச் சென்று விட்டதாலும் பிணக்கத்தை வெளியே காட்டிக் கொள்ளும் அவசியம்
இருவருக்கும் வரவில்லை. இப்போது ஆம்பி குமாரனை சத்ரப் ஆக்கியதன் மூலம் அலெக்ஸாண்டர்
அவர்களுக்கிடையே இருந்த பழைய பகையைப் புதுப்பிக்க காரணத்தை உருவாக்கி விட்டது போலாகி
இருக்கிறது....
இந்திரதத் சொன்னார். “அரசே. உண்மையில்
யூடெமஸைத் தான் சத்ரப்பாக அலெக்ஸாண்டர் நியமிக்க நினைத்திருக்க வேண்டும். ஆனால் பிலிப்புக்கு
ஏற்பட்ட கதி இனி வரவிருக்கும் யவன சத்ரப்களை பயமுறுத்தும் என்பதால் ஆம்பி குமாரனையும்
அந்தப் பதவியில் இணைத்துவிட அலெக்ஸாண்டர் தீர்மானித்திருக்க வேண்டும். புரட்சி
செய்பவர்களின் ’பாரத மண்ணில் அன்னியர்’ என்ற கோஷம்
ஆம்பி குமாரனையும் சத்ரப்பாக ஆக்கியிருப்பதால் சற்று வலுவிழக்கும் என்று கூட அலெக்ஸாண்டர்
எண்ணியிருக்கலாம்.”
“அப்படி
மண்ணின் மைந்தன் ஒருவனை இணைக்க வேண்டும் என்று அலெக்ஸாண்டர் நினைத்திருந்தால் ஆம்பி
குமாரனை விட நானல்லவா அந்தப் பதவிக்குப் பொருத்தமானவன்? எங்கெங்கோ
புரட்சி வெடித்தாலும் கேகய நாட்டுக்குள் நான் அதைக் கட்டுப்படுத்தி அல்லவா வைத்திருக்கிறேன்?”
அதை ஆம்பி குமாரனும் காந்தாரத்தில்
சாதித்திருக்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டி அவரைப் புண்படுத்த மனமில்லாமல் இந்திரதத்
மௌனம் சாதித்தார். அவர் மனம் இத்தனைக்கும் மூல காரணமாய் இருந்த அவர் நண்பர்
விஷ்ணுகுப்தரை மெச்சியது. என்ன தான் நண்பரின் அறிவுகூர்மையை முன்பே உணர்ந்திருந்தாலும், யவனர்களின்
பிரம்மாண்ட சக்திக்கு முன்னதாய் பர்வதேஷ்வரன் என்றழைக்கப்பட்ட புருஷோத்தமனே அடிபணிய
வேண்டி வந்த போது வெறும் ஆசிரியராக இருக்கும் விஷ்ணுகுப்தர் என்ன செய்து விட முடியும்
என்ற கேள்வி அவர் மனதில் அடிக்கடி எழுந்திருந்தது. விஷ்ணுகுப்தர்
எத்தனையோ செய்ய முடியும் என்று செய்து காட்டித் தன்னை நிரூபித்து விட்டார். இப்போதும்
புரட்சி இங்கும், காந்தாரத்திலும் பெரிய அளவில் வெடிக்காதது புருஷோத்தமனின்
சாமர்த்தியத்தாலும், ஆம்பி குமாரனின் சாமர்த்தியத்தாலும் அல்ல என்று தான் இந்திரதத்துக்குத்
தோன்றியது. பாரதத்தின் எல்லைகளான காந்தாரத்திலும், கேகயத்திலும்
பழைய நிலைமையே தொடர்வது நல்லது என்று ஏதோ சில காரணங்களால் விஷ்ணுகுப்தர் நினைத்திருக்க
வேண்டும். ஏனென்றால்
மக்கள் மனதில் எப்போதோ சந்திரகுப்தனும், யவனர்கள் அன்னியர்கள்
என்ற உணர்வும் இடம் பிடித்தாகி விட்டது.
மற்ற இடங்களில் செய்ததைப் போல் புரட்சிப்படைகள் காந்தாரத்திற்கும், கேகயத்திற்கும்
வந்தாலும் அவர்களுக்கு உதவும் மனநிலையில் தான் மக்கள் இருக்கிறார்கள். மக்களே
எதிராகத் திரும்பினால் ஆம்பி குமாரனும் புருஷோத்தமனும் கூட என்ன செய்து விடமுடியும்?
இதே சிந்தனைகள் தான் ஆம்பி குமாரன் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தன. அதனால் தான் அவனுக்கு அலெக்ஸாண்டர் தந்த சத்ரப் பதவியும் இனிக்கவில்லை. பழைய ஆம்பி குமாரனாக அவன் இருந்திருந்தால் இன்னேரம் தன் வாழ்நாள் இலட்சியம் நிறைவேறி விட்டது போல் பேரானந்தம் அடைந்திருப்பான். புருஷோத்தமன் மீது அதிகாரம் செய்யும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கின்றது என்று வெற்றிப் புளங்காகிதம் அடைந்திருப்பான். சத்ரப் என்ற அதிகாரத்தோடு கேகயத்திற்கு ஒரு முறை போய் வரும் திட்டத்தையும் போட்டிருப்பான். பாரதத்தில் அலெக்ஸாண்டரின் பிரதிநிதியாக வலம் வரும் கனவு பாதி பலித்து விட்ட போதிலும் பல இடங்களில் புரட்சி, கலவரங்கள் வெடித்து மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் எதற்கும் சந்தோஷப்படும் நிலைமையில் அவன் இல்லை.
முக்கியமாக அவனை அதிகம் யோசிக்க வைத்தது பிலிப்பின் மரணம். அலெக்ஸாண்டரின் சத்ரப்புக்கே
இப்படி நேரும் என்று அவன் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த நிகழ்வைத் தொடர்ந்து பல இடங்களிலும் சந்திரகுப்தன் தலைவனாகவும்,
அரசனாகவும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு கொண்டாடப்படும் தகவல்கள் தினமும்
அவனுக்குக் கிடைத்து வருகின்றன. இத்தனைக்கும் பின்னால் ஆச்சாரியர்
விஷ்ணுகுப்தர் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. எல்லாம்
அவருடைய திட்டங்களே, ஒவ்வொரு அடியையும் சந்திரகுப்தன் அவர் சொன்னபடியே
எடுத்து வைக்கிறான் என்று அவனுடைய ஒற்றர்கள் சொல்கிறார்கள்.
ஆம்பி குமாரன் அறிவாளியல்ல என்றாலும் அடிமுட்டாளும் அல்ல. அவன் கர்வம் தான் அவனை எத்தனையோ
விஷயங்களை யோசிக்க விடாமல் தடுத்திருக்கிறது; எத்தனையோ விஷயங்களைக்
கற்றுக் கொள்ள விடாமல் செய்திருக்கிறது. அதை அவன் முதல் முறையாக
உணர ஆரம்பித்தான். சந்திரகுப்தன் என்ற சாதாரண மாணவன் ஆச்சாரியரின்
அறிவுரைப்படி நடந்து கொண்டு பிரம்மாண்டமான சக்தியாக உருவாகி வருகிறான். அவனைப் போலவே ஆம்பி குமாரனும் ஆச்சாரியரின் மாணவன் தான். சாதாரண மாணவன் அல்ல. அரசகுமாரனாகவும் இருந்தவன்.
முட்டாள்தனமான கர்வத்தை விட்டொழித்து அவர் அறிவுரைகளைக் கேட்டிருந்தால்
இப்போது எத்தனையோ உயரத்திற்குப் போயிருக்கலாம். இப்போது யோசிக்கையில்
முன்பு அவரிடம் நடந்து கொண்டதெல்லாம் முட்டாள்தனத்தின் உச்சமாகவே அவனுக்குத் தோன்றியது.
அவரை உயிரோடு எரிக்க ஒரு மாளிகையைக் கூடக் கட்டி கரியாக்கியிருக்கிறான்.
அவர் அறிவுக்கு அவன் சிறுமதியின் திட்டம் எதுவும் தெரியவராது என்று நினைக்குமளவுக்கு
முட்டாளாக இருந்திருக்கிறான். அவர் அவனை மதிக்கவில்லையே தவிர அவன் அத்தனை செய்தும் பிலிப்பை ஒழித்துக்கட்டியதைப்
போல அவனைத் தீர்த்துக் கட்ட அவர் நினைக்கவில்லை. நினைத்திருந்தால்
அவருக்கு அது முடியாத காரியமாக இருந்திருக்காது.
இப்போது அவன் காந்தார அரசனாக மட்டுமல்லாமல் அலெக்ஸாண்டரின் சத்ரப்
என்ற அந்தஸ்தையும் பெற்று விட்டான்.
மக்கள் மனதை எப்படி ஆட்கொள்வது என்று சூட்சுமம் தெரிந்த மனிதர் அவர்.
அவர் நினைத்தால் அவனை மக்களின் எதிரியாகவும் மாற்ற முடியும்.
அதை நினைக்கையிலேயே அவன் மனம் நடுங்கியது.
அவன் காவலன் அவன் சிந்தனைகளைக் கலைத்தான். “அரசே, சத்ரப் யூடெமஸிடமிருந்து ஒரு தூதன் வந்திருக்கிறான்”
“வரச்சொல்”
என்ற ஆம்பி குமாரன் யூடெமஸ் என்ன செய்தி அனுப்பி இருக்கிறானோ என்று
கவலைப்பட்டான். யூடெமஸ் சிந்துப் பிரதேசத்தில் புஷ்கலாவதி என்ற நகருக்கு வந்து
சேர்ந்திருக்கிறான் என்றும் அங்கிருந்து தான் தன் நிர்வாகப் பணிகளைச் செய்யவிருக்கிறான்
என்றும் சில நாட்களுக்கு முன் அவனுக்குத் தகவல்
கிடைத்திருந்தது.
யூடெமஸின் தூதன் மிகவும் பணிவுடன் வணங்கி விட்டுச் சொன்னான். ”சத்ரப் ஆம்பி குமாரருக்கு
அன்பான வாழ்த்துக்களை சத்ரப் யூடெமஸ் அனுப்பி உள்ளார். புதிய
பொறுப்பைத் தங்களுடன் இணைந்து ஏற்றுக் கொள்வதைப் பெருமையாக அவர் கருதுகிறார்.
அவருக்கு ஏற்கெனவே பாரசீகப் பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பு உட்பட முந்தைய
பணிகளும் இருப்பதால் இந்தப் புதிய பொறுப்பை உடனடியாக வந்து ஏற்பதில் அவருக்கு
நடைமுறைச் சிக்கல்கள்
இருப்பதைத் தங்களால் உணர முடியும் என்று அவர் நம்புகிறார். அதனால் அங்குள்ள வேலைகள்
முடியும் வரை சிந்து நதிக்குத் தெற்குப் பகுதியின் நிலைமைகளைக் கண்காணிக்கவும்,
கட்டுப்படுத்தவும் தேவையானவற்றைத் தாங்கள் செய்து வரும் படியும்,
சிந்து நதி வரை உள்ள பகுதிகளின் நிர்வாகப் பொறுப்பை அவர் மற்ற பணிகளுடன்
சேர்த்து பார்த்துக் கொள்வதாகவும் தங்களுக்குத் தெரிவிக்கிறார்”
ஆம்பி குமாரன் அபாயத்தை உணர்ந்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
ஆம்பி குமாரனின் உயிருக்கு ஆபத்து ஒன்றும் கிடையாது.... ஆனால், அங்குள்ள நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது சிரமமான காரியம்.
ReplyDelete