யூடெமஸ் பிலிப் கொல்லப்பட்ட பகுதிகளின் பக்கத்தில் கூடப்
போகப் பிரியப்படவில்லை என்பதை அவன் அனுப்பியிருந்த தகவல் தெரிவித்தது. யவனர்களைக்
குறி வைத்துக் கொல்கின்ற பகுதியை நிர்வாகிக்கப் போய் உயிரை இழக்க அவன் தயாரில்லை. அதனால்
அவன் சிந்துநதியைத் தாண்டாமல் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறான். யவனர்களின்
இன்னொரு சத்ரப்பான ஆம்பி குமாரனுக்கும் அந்த அளவே ஆபத்து இப்பகுதிகளில் இருக்கிறது
என்பதை அவன் அறியவில்லையா, இல்லை அது பற்றிய கவலை அவனுக்கில்லையா என்று ஆம்பி குமாரனுக்குத்
தெரியவில்லை. அலெக்ஸாண்டரின் படைத்தலைவனாக இருந்தும் தொடைநடுங்கியாக இருக்கும்
யூடெமஸை எண்ணும் போது ஆம்பி குமாரனுக்கு வெறுப்பாக இருந்தது.
அதோடு இன்னொரு அச்சம் அவன் மனதில் மெல்ல
எழுந்தது. நாளை புரட்சிக் காரர்கள் வென்ற பகுதிகளை மறுபடி ஏன் மீட்கவில்லை
என்று அலெக்ஸாண்டர் கேள்வி எழுப்பினால் அப்பகுதிகள் எல்லாம் ஆம்பி குமாரர் கட்டுப்பாட்டில்
தான் இருக்கிறது, அவரிடம் தான் அந்தப் பகுதிகளின் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறேன். அவரிடம்
தான் கேட்க வேண்டும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளும் உத்தேசமும் யூடெமஸுக்கு
இருக்குமோ? இத்தனை தூரம் சிந்திப்பவன் இதையும் சிந்தித்து வைத்திருக்கலாம்,,,,,,,
ஆம்பி குமாரன் யூடெமஸின் சூழ்ச்சியில்
சிக்கி விடக்கூடாது என்று எச்சரிக்கை அடைந்தான். அவன் சிறிது
யோசித்து விட்டு யூதிடெமஸின் தூதுவனிடம் சொன்னான். ”இன்று விருந்தினர்
விடுதியில் ஓய்வு எடுத்துக் கொள் வீரனே. யோசித்து சத்ரப்
யூடெமஸுக்கு என் பதிலை நாளை சொல்கிறேன்.”
”தங்கள்
உத்தரவு சத்ரப்” என்று தூதுவன் பணிவாக வணங்கிக் கூறி விட்டு விடைபெற்றான்.
தூதுவன் சென்ற பின் இந்த குறுக்குபுத்தி
கொண்ட யூடெமஸுக்கு என்ன பதில் சொல்லி அனுப்புவது என்று ஆம்பி குமாரன் யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்கும் கூடக் குறுக்கு புத்தி பல சமயங்களில் வேலை செய்திருக்கின்றது
என்றாலும் அதை வைத்து அவன் சாதித்தது பெரிதாக ஒன்றுமில்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. அவனுக்கு
ஒரு செயலின் விளைவு என்னவாக இருக்கும் என்று பல படிகள் கடந்து யோசிக்கிற அறிவெல்லாம்
கிடையாது. அதெல்லாம் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் போன்ற ஆட்கள் அனாயாசமாகச்
செய்வது....
ஆச்சாரியரின் நினைவு வந்தவுடன் ஆம்பி
குமாரனுக்கு அவனுடைய எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு அவரிடம் கிடைக்கும் என்று தோன்றியது. அவரை எதிரியாக
வைத்திருப்பது ஆபத்து என்று மறுபடியும் உள்ளுணர்வு சொன்னது. இத்தனை
காலம் செய்த முட்டாள்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் என்று சில நாட்களாக
அவன் எண்ணுவது மேலும் உறுதிப்பட்டது.
நேற்று தான் அவர் தட்சசீலம் திரும்பி
வந்திருப்பதாக அவன் ஒற்றன் தெரிவித்திருந்தான். நீண்ட யோசனைக்குப்
பிறகு ஆம்பி குமாரன் உடனடியாக ஆச்சாரியரைச் சந்தித்துப் பேச முடிவெடுத்தான்.
சாணக்கியர் தன் முன்னால் வணங்கி நின்ற ஆம்பி குமாரனிடம் பெரிய
மாற்றத்தைக் கண்டார். சூழ்ச்சி செய்து அவரைக் காண வரும் போதெல்லாம் அவன் உத்தேசம்
அவன் முகத்தில் அவன் கட்டுப்பாட்டையும் மீறி வெளிப்பட்டு விடும். இன்று அவனிடம்
உண்மையான பணிவு தெரிந்தது. வழக்கத்தை விட அதிகமாகக் குனிந்த அவன் அவர் கால்களை பயபக்தியுடன்
தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டபடி தலை நிமிராமல் சொன்னான். “என்னை மன்னித்து
விடுங்கள் ஆச்சாரியரே”
சாணக்கியர் அவனைக் கூர்ந்து பார்த்தபடி
கேட்டார். “எதற்கு ஆம்பி குமாரா?”
ஆம்பி குமாரன் ஆத்மார்த்தமாகச் சொன்னான். “நான் இங்கே
கல்வி கற்கும் போது உங்கள் மாணவனாக இருக்கும் அருகதையை வளர்த்துக் கொள்ளவில்லை. அப்போதும்
சரி பின்பும் சரி நிறைய தவறுகள் செய்திருக்கிறேன்.”
அவன் அதை நடித்துப் போலித்தனமாய் சொல்லியிருந்தால்
அதற்கேற்றாற் போல் பூடகமாக ஏதாவது சாணக்கியரும் சொல்லியிருப்பார். அபூர்வமாய்
அவன் உண்மையான வருத்தத்தோடு மன்னிப்பு கேட்கிறான். சாணக்கியர்
சொன்னார். “தவறு செய்யாதவர்கள் யாருமில்லை ஆம்பி குமாரா?”
“உண்மை ஆச்சாரியரே. ஆனால் நான்
தவறுகளை மட்டுமே செய்திருக்கிறேன். சில தவறுகள் மன்னிக்க
முடிந்தவை அல்ல. ஆனாலும் என் முட்டாள்தனத்தால் செய்திருக்கிறேன். கல்வி கற்கும்
காலத்திலேயே ஏற்பட்ட ஆரம்ப கோணல் பின் எதையும் நேராகவும் சரியாகவும் செய்ய என்னை அனுமதிக்கவில்லை. என் தந்தை
எப்போதும் என்னிடம் “மகனே ஏன் சிந்திக்க மறுக்கிறாய்?” என்று கேட்பார்.. அந்தக்
கேள்வி என்னை என்றைக்குமே கோபமூட்டியிருக்கிறதே ஒழிய யோசிக்க வைத்ததில்லை. அர்த்தமில்லாத
கர்வம் என் சிந்திக்கும் திறனை மழுங்கடித்து விட்டிருக்கிறது. மன்னிக்கப்படும்
அருகதை இல்லா விட்டாலும் ஒரு காலத்தில் உங்கள் மாணவனாக இருந்தவன் என்பதற்காகவாவது என்னை
மன்னிப்பீர்களா ஆச்சாரியரே?” சொல்கையில் ஆம்பி குமாரனின் குரல் கரகரத்தது. அவன் கண்களில்
ஈரம் தெரிந்தது.
சாணக்கியர் சொன்னார். “செய்த தவறை உணர்ந்து பச்சாதாபப்படுபவன் என்றும் மன்னிப்புக்கு அருகதை உள்ளவனாகிறான் ஆம்பி குமாரா. மேலும், மாணவர்களின் தவறை மன்னிக்க முடியாதவன் ஆசிரியனாக இருக்க அருகதை இல்லாதவனாகிறான்”
சில கணங்கள் உணர்ச்சிவசப்பட்டவனாய்
பேச்சிழந்து நின்ற ஆம்பி குமாரன் பின் மெல்லச் சொன்னான். “நன்றி ஆச்சாரியரே.....”
மறுபடி சிறிது மௌனம் சாதித்து விட்டு
ஆம்பி குமாரன் சொன்னான். “உங்கள் மாணவர்களும், சின்ஹரனும்
நீங்கள் காட்டிய வழியில் பயணம் செய்து மகத்தான வெற்றிகளைக் கண்டு வருவதற்கு உங்களுக்கு
வாழ்த்துகளும் கூட ஆச்சாரியரே.”
அவனைக் கூர்ந்து பார்த்த சாணக்கியருக்கு
அவன் முகத்தில் கபடம் தெரியவில்லை. ஆம்பி குமாரன் சொன்னான். “தற்போது
அலெக்ஸாண்டர் என்னையும் யூடெமஸையும் பாரதத்தின் சத்ரப்களாக நியமித்திருக்கிறான் ஆச்சாரியரே. காந்தார
அரசனாகவும், அலெக்ஸாண்டரின் சத்ரப்பாகவும் தங்களுக்கு நேரடியாக ஆதரவு
தர முடியா விட்டாலும் கூட இந்த வெற்றிகளைச் சாதித்தவர்கள் நான் படித்த கல்விக்கூடத்தின்
மாணவர்கள், என் முந்தைய சேனாதிபதி, என் ஆச்சாரியர்
என்று நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது”
அலெக்ஸாண்டரின் இந்தப் புதிய நியமனம் பற்றி சாணக்கியர் இப்போது தான் அறிகிறார். பிலிப்புக்கு நேர்ந்த கதி தான் ஆம்பி குமாரனின் ஞானோதயத்துக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் அனுமானித்தார். அடுத்த சத்ரப் அவனுடைய பாதுகாப்பிற்காகப் பணிந்து வந்திருக்கிறான். ஆனால் பழைய சூழ்ச்சி மனப்பான்மை இல்லாமல் அவன் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. சின்ஹரன் அவருடன் இணைந்ததிலும் அவனுக்கு வருத்தம் இருப்பதாகத் தெரியவில்லை. அதே சமயத்தில் காந்தார அரசனாகவும், அலெக்ஸாண்டரின் சத்ரப் ஆகவும் நேரடியாக ஆதரவு தருவது சாத்தியமல்ல என்றும் யதார்த்த நிலைமையை சொல்கிறான். மறைமுக ஆதரவு தருவதாகச் சூசகமாகத் தெரிவிக்கிறான். தன் முன்னாள் மாணவனின் புதிய அவதாரம் சாணக்கியரை யோசிக்க வைத்தது.
அவர் அமைதியாகச் சொன்னார். “உன்னிடம் தெரியும் மாற்றங்கள் உன் முன்னாள்
ஆசிரியனுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன ஆம்பி குமாரா”
முதல் முறையாக அவரிடமிருந்து கிடைத்த
அந்தப் பாராட்டு அவனுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. அவன் மனம்
நெகிழ்ந்து ஆத்மார்த்தமாகச் சொன்னான். ”அரச புத்திரனாகவே
வாழ்க்கையை ஆரம்பித்ததால் அது ஒன்றே போதும் என்ற தவறான தலைக்கனம் என்னிடம் உருவாகியிருந்தது
ஆச்சாரியரே. அதனால் அரியணையைப் போலவே எல்லாம் தானாக எனக்கு வாய்த்து விடும்
என்று தோன்றியிருந்தது. கல்வி கூட எனக்கு கசந்த காரணம் அதில் கூடுதல் நன்மை எதையும் என்னால் யோசித்து உணர முடியாமலிருந்தது தான். இல்லா விட்டால்
உங்கள் மாணவனாகும் வாய்ப்பைப் பெற்றும் காலிப் பாத்திரமாகவே இந்தக் கல்விக்கூடத்திலிருந்து
போகும் துர்ப்பாக்கியத்தை நான் பெற்றிருக்க மாட்டேன்...”
காலம் ஆம்பி குமாரனையும் மாற்றி தன்
சக்தியை நிரூபித்து விட்டது என்று சாணக்கியர் நினைத்துக் கொண்டார். அவர் மென்மையாகச்
சொன்னார். “ஆனால் இந்தக் கல்விக்கூடம் மாணவனாக உன்னிடம் ஒரு காலத்தில்
மாற்றத்தைப் பார்க்கா விட்டாலும், ஒரு மன்னனாக இன்றைக்கு உன்னிடம் பெரிய மாற்றத்தை பார்க்கிறது
என்பதே சிறப்பு தான் ஆம்பி குமாரா. உன் பழைய தவறுகளை
ஒத்துக்கொள்ள மட்டுமே நீ இங்கு வரவில்லை என்று நினைக்கிறேன். இன்று நீ
இங்கு வந்த உத்தேசம் என்ன என்பதை மனம் விட்டுச் சொல்”
(தொடரும்)
என்.கணேசன்
Such turning of ambikumaaran..
ReplyDeleteHow many episodes chanakyan 1 still have sir
History Refurbished..
ReplyDeleteAt last Ambikumaran proved himself as Chanakya's pupil. Very interesting.
ReplyDeleteஅலெக்சாண்டர் இருவரையும் சத்ரப்பாக நியமித்ததில் ஏதேனும் சூழ்ச்சி இருக்கும் என தோன்றுகிறது.....
ReplyDeleteசாணக்கியர் ஆம்பி குமாரனை மன்னித்து ஏற்றுக் கொண்ட விதமும்... அவர் கூறிய வார்த்தைகளும் ...அவரின் மேன்மையை பிரதிபலிக்கிறது....