அலெக்ஸாண்டரின் பார்வை தன் மீது நிலைப்பதை கொய்னஸ் கவனித்தான். அவனை மற்ற வீரர்களும் கெஞ்சும் விழிகளுடன் பார்ப்பதையும் பார்த்தான். ’தயவு செய்து நம் உள்ளத் தவிப்பை சக்கரவர்த்தியிடம் நீயாவது சொல்’ என்ற பிரார்த்தனையை அவர்கள் பார்வையில் அவனுக்குப் படிக்க முடிந்தது. மேலும், யாராவது ஒருவர் பேசியேயாக வேண்டும். ’எண்ணங்களைத் தெரிவியுங்கள்’ என்று சக்கரவர்த்தியாகவும், சகவீரனாகவும் அலெக்ஸாண்டர் கூடக் கேட்டாகி விட்டது. இந்த ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறினால் தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்ல இனியொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்பது கொய்னஸுக்குத் தெளிவாகவே தெரிந்தது.
கொய்னஸ் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு உணர்ச்சிபூர்வமாகவும், மிகுந்த கவனத்துடனும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து ஆத்மார்த்தமாகப் பேச ஆரம்பித்தான். “சக்கரவர்த்தி, உங்களைப் போன்றொரு மாவீரனின் தலைமையில் தாயகத்தை விட்டுக் கிளம்பி வந்திருக்கும் நாங்கள் தாங்கள் சொன்னது போல பாக்கியசாலிகளே. வந்த வழியெல்லாம் வென்று கொண்டே வந்திருக்கிறோம். தங்கள் தலைமை எங்களுக்கு மனதில் அசைக்க முடியாத உறுதியும், நாடி நரம்புகளில் வீரத் துடிப்பும், எல்லையில்லாத உற்சாகமும் தந்திருக்கிறது. உங்களிடம் சேர்ந்து கொண்ட பின் எங்களுக்குத் தோல்வியைச் சந்திக்கும் துர்ப்பாக்கியம் ஏற்படவில்லை. வெற்றியும், செல்வமும், புகழும் எங்களுக்குக் கிடைத்திருப்பதை நாங்கள் மறுக்கவுமில்லை. ஆனால் சக்கரவர்த்தி நம் தாயகத்தை விட்டுக் கிளம்புகையில் நாம் எத்தனை பேர் இருந்தோம், இப்போது எத்தனை பேர் இருக்கிறோம் என்பதைத் தயவு செய்து எண்ணிப் பாருங்கள். எத்தனையோ வீரர்கள் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள், எத்தனையோ வீர்ர்கள் நோய்வாய்ப்பட்டும், காயங்கள் அடைந்தும், வெற்றியடைந்த பகுதிகளைப் பாதுகாக்கும் வேலையை ஏற்றும் அங்கங்கே பின் தங்கியிருக்கிறார்கள்... இறந்தவர்கள் பாக்கியசாலிகள். ஆனால் இருப்பவர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அதற்குக் காரணம் இருக்கின்றது...”
“நாங்கள் தாயகம் விட்டுக் கிளம்பி ஆண்டுகள் பலவாகி விட்டன. பெற்றோரை விட்டு, மனைவி மக்களை விட்டு, தாய் மண்ணை விட்டு வந்திருக்கும் எங்களுக்கு எந்தப் படைபலத்தைப் பார்த்தும் பயமில்லை. தோல்வியை எதிர்பார்த்தும் பயம் இல்லை. ஏனென்றால் உங்கள் தலைமையில் அந்தப் பயத்திற்கு எங்களுக்கு அவசியம் இருந்ததும் இல்லை, இருக்கப்போவதுமில்லை. ஆனால் தாயகம் திரும்புவோமா, பெற்றோர், பெண்டு பிள்ளைகளைப் பார்ப்போமா என்ற ஏக்கம் எங்களுக்குத் தீவிரமாக வர ஆரம்பித்து விட்டது. நாங்கள் திரும்பிச் செல்லும் போது நீங்கள் சொல்லும் புகழையும், வெற்றியையும், செல்வத்தையும் பகிர்ந்து கொள்ள எத்தனை பேர் எங்கள் வீடுகளிலும், குடும்பங்களிலும் மிச்சமிருப்பார்கள் என்ற கவலை எங்களுக்கு வர ஆரம்பித்து விட்டது.”
”சக்கரவர்த்தி, குடும்பத்தையும், நேசிப்பவர்களையும் புறக்கணித்து விட்டு, உலகையே வெல்வதில் அர்த்தம் என்ன இருக்கிறது, என்ன பலனடையப் போகிறோம் என்று எங்கள் மனதில் எழும் கேள்வியை எங்களால் அலட்சியம் செய்ய முடியவில்லை. பயணத்தின் ஆரம்பத்தில் இருந்த உற்சாகமும், மன உறுதியும், வெற்றி காணும் துடிப்பும் எங்களுக்குக் குறைந்து கொண்டே வந்து இப்போது காலியாகி விட்டதன் காரணம் பயணத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி எங்கள் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை தெரியவில்லை என்பது தான். தாயகம் திரும்ப வேண்டும் என்றாலும் வந்த அளவு தூரமே மறுபடி சென்று கடக்க வேண்டும் என்பதால் இப்போதே கிளம்பினாலும் அங்கு போய்ச் சேரப் பல ஆண்டுகள் இனியும் தேவைப்படும் என்பதெல்லவா உண்மை நிலைமை? அப்படியிருக்கையில் இனியும் தூரச் செல்லும் மனமும், வலிமையும் எங்களிடம் துளியும் இல்லை. போதும் சக்கரவர்த்தி நாம் தாயகம் திரும்புவோம். தேவை என்று பின்பும் தங்களுக்குத் தோன்றினால் சில காலம் கழித்து மறுபடி வேண்டுமானால் வருவோம். ஆனால் இப்போதைக்கு உங்கள் வீரர்கள் தாயகம் திரும்புவதையே விரும்புகிறார்கள். அந்தக் கோரிக்கையையே உங்கள் முன் வைக்கிறார்கள்...”
அலெக்ஸாண்டர் இந்த வார்த்தைகளை சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. கொய்னஸ் பேசி முடித்தவுடன் வீரர்கள் சேர்ந்து செய்த கரகோஷம் அப்பகுதியை அதிர வைத்ததையும் எதிர்பார்த்திருக்கவில்லை. நாங்கள் நினைப்பதை கொய்னஸ் வார்த்தைப்படுத்தியிருக்கிறான் என்று அவர்கள் அதன் மூலம் அவனுக்கு உணர்த்தியதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“ஒருவேளை
அவர் தன் முடிவை மாற்றிக் கொள்ளா விட்டால்...? தொடர்ந்து
மகதத்துடன் போர் புரிய முன்னேறிச் செல்லத் தீர்மானித்தால் நாம் என்ன செய்வது?”
(தொடரும்)
என்.கணேசன்
இந்த வாரத்திலேயே கிடைத்திருக்க வேண்டிய புதிய நாவல்கள் பிரிண்டர்கள் சந்தித்த எதிர்பாராத சில பிரச்சினைகளால், கிடைக்க தாமதமாகியுள்ளன. யோகி, மாயப் பொன்மான், கீதை மட்டுமல்லாமல் பழைய ஐந்து நூல்களின் அடுத்த பதிப்பும் தந்திருப்பதாலும், யோகி போன்ற பெரிய நூல்களைத் தைக்காமல் வெளியிடுவதை நான் விரும்பாததாலும் என்னால் அவர்களை அவசரப்படுத்தவும் முடியவில்லை. அடுத்த வார மத்தியில் கண்டிப்பாக எல்லா நூல்களும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அன்புடன்
என்.கணேசன்
I felt as if I am witnessing the historical event. You have portrayed both sides very well sir.Amazing.
ReplyDeleteஅலெக்சாண்டரை போன்றதொரு வீரனுக்கு மகதத்தை போன்றதொரு சவாலான பகுதியை வெல்ல உற்சாகமாக கிளம்பும் போது... வீரர்கள் இப்படி பின் வாங்குவது சகிக்க முடிந்ததல்ல....
ReplyDeleteSir,yogi,Maya ponmam,entha mathiriyana novels?
ReplyDeleteYogi thriller. Mayaponmaan love story
Delete