சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 22, 2023

யாரோ ஒருவன்? 139


ஜீம் அகமது தன் உள்ளுணர்வை என்றுமே மதிப்பவன். அவன் என்றுமே கண் முன்னால் தெரியும் நிஜங்களை விட உள்ளுணர்வு வார்த்தைகள் இல்லாமல் உணர்த்தும் விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருபவன். அவனுடைய அந்த உள்ளுணர்வு எதோ ஒரு ஆபத்து நெருங்குகிறது என்று அவனைத் திரும்பத் திரும்ப எச்சரிக்க ஆரம்பித்திருக்கிறது. மேற்பார்வைக்கு எந்த ஆபத்தும் தெரியவில்லை. அவன் ஆட்களும் எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். பின் என்ன ஆபத்து?...

அவன் ஜனார்தன் த்ரிவேதிக்குப் போன் செய்தான். “பீம்சிங் வேலையை முடிச்சுட்டானா?”

ஜனார்தன் த்ரிவேதி உற்சாகத்துடன் சொன்னார். “முடிச்சுட்டானாம்.  காளிங்க சுவாமியோட சீடர்களுக்குப் போன் பண்ணி அரை மணி நேரத்துக்கு முன்னாடி தான் விஷயத்தைத் தெரிஞ்சுகிட்டேன். சுவாமிஜி அவனை அனுப்பிச்சதிலிருந்தே அவன் கூட அவரோட விசேஷ சக்தியால தொடர்புல இருந்துகிட்டிருப்பார்னு சீடன் சொன்னான். அதனால அந்த ரத்தினக்கல்லை எடுத்துகிட்டு நாகராஜ் வீட்டுல இருந்து பீம்சிங் கிளம்பிட்டான்கிறத சுவாமிஜி சந்தோஷமா அப்பவே சொல்லிட்டாராம். இப்ப காளிங்க சுவாமி காளி சிலை காலடியில உட்கார்ந்திருக்காராம். அவர் கடைசியா எதோ யுக்தியோ, வழியோ தெரியணும்னு பிடிவாதமா உட்கார்ந்திருக்கற மாதிரி தெரியுதுன்னு சீடன் சொன்னான். அதனால நீங்க எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டியதில்லை அஜிம்ஜீ. இனி அவர் ஆக வேண்டியதைப் பார்த்துக்குவார்.”

அஜீம் அகமது போனை வைத்த பிறகு நிறைய யோசித்தான். எல்லாம் திட்டமிட்டபடி தான் போய்க்கொண்டிருக்கிறது. அப்படியானால் ஆபத்து எந்த ரூபத்தில் வந்து கொண்டிருக்கிறது? அவன் செல்போன் இசைத்தது.  

பேசியது அவன் ஆள் தான். “பாஸ் ஒரு கெட்ட செய்தி. நீங்க நோய்டால எங்கேயோ ஒளிஞ்சிட்டிருக்கலாம்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான்ராவுக்குத் தகவல் கிடைச்சிருக்கறதா நமக்கு வழக்கமா உளவு சொல்றவன் தெரிவிச்சான்...”

அஜீம் அகமது கேட்டான். “அவன் ஆள் எப்படி?”

இது வரைக்கும் அவன் குடுத்த தகவல் எதுவுமே பொய்யா இருந்ததில்லை. அவன் சொன்ன தகவல்கள் எல்லாம் சரியா தான் இருந்துருக்கு. ரொம்ப காலமா நமக்கு உதவியாய் இருக்கான்.  ஒரு பொய்யான தகவல் சொல்லியிருந்தான்னா அடுத்த தகவல் எதுவும் தர்றதுக்கு அவனை நாம உயிரோட வெச்சிருக்க மாட்டோமே... ஆனா நாம இவ்வளவு எச்சரிக்கையா இருந்து எப்படி அவங்க தெரிஞ்சுகிட்டாங்கன்னு புரியலை....”

மகேந்திரன் மகனுக்கு ரா கடும் பாதுகாப்பு கொடுக்க ஆரம்பித்த போதே அஜீம் அகமது இதை எதிர்பார்த்தேயிருந்தான். சொல்லப் போனால் அவர்கள் அவன் நோய்டாவில் இருப்பதைத் தெரிந்து கொண்டதே தாமதம் தான். ஆபத்து நெருங்குவதாக உள்ளுணர்வு எச்சரித்தது இதைத் தானாக இருக்க வேண்டும். இந்தப் பகுதி தான் என்று அறிந்து கொண்டவர்கள் இந்த இடம் தான் என்று இரண்டு நாள்களில் தெரிந்து கொண்டு விடுவார்கள்.... இங்கிருந்து போவதற்கு அவன் வேறு இரண்டு இடங்களை ஏற்கெனவே தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறான். அதில் எந்த இடம் என்றும், எந்த நேரம் போவதென்றும், எப்படிப் போவதென்றும் அவன் உடனடியாக யோசிக்க ஆரம்பித்தான்.


காளிங்க சுவாமி இந்த முறை உக்கிரபூஜை எதுவும் செய்யப் போகவில்லை. பூஜைகளாலும், மந்திரங்களாலும் அணுகுகையில் மாகாளி அரைகுறையான பதில்களைத் தான் தருகிறாள். சில சமயங்களில் மௌனம் சாதித்து விடுகிறாள். தாயிடம் அடம் பிடித்துக் கேட்கும் பிள்ளையாகவே மாறி விடுவது நல்லது என்று அவருக்குத் தோன்றியது.

தாயே! எதற்காக நான் வாழ்நாளெல்லாம் காத்திருந்தேனோ அதை இன்னொருவனுக்கு அளித்தாய் என்று குறைபட்டுக் கொண்டதற்கு நீ அவனிடமும் அது சில நாட்கள் தான் இருக்கும் என்று ஆறுதல் சொன்னாய். அவன் மேல் நான் பொறாமை கொண்டதற்கு அது ஆறுதல் ஆனதே ஒழிய என்னிடம் அது வருமா, வந்தால் அது எனக்கு ஆபத்தாகி விடுமா, என்னிடம் எத்தனை நாட்கள் இருக்கும் என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை. அவனிடமிருக்காதென்றால் என்னிடம் தான் இனி என்றும் இருக்கும் என்று நான் அனுமானித்தது தவறாக இருக்கலாமோ என்று நான் சந்தேகப்படும்படி நாகராஜ் குழப்பி விட்டான். நீ சொல் தாயே! சகல சக்திகளையும் தரும் அந்த விசேஷ நாகரத்தினத்தைப் பெற்றவுடனேயே அறிய வேண்டிய அத்தனையையும் அறிந்து விட்டிருக்கும் அவன் அதன் பாதையே ஆபத்தானது என்று சொல்கிறான். அதை வைத்திருப்பவன் எதையும் சாதிக்க முடியும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் அது ஏற்கெனவே ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து வந்திருக்கிறது போல் தோன்றுகிறது. அதே சமயத்தில் அதை வைத்திருக்கையில் நினைப்பதெல்லாம் நடக்கவும் நடக்கிறது என்பதும் தெரிகிறது. இதெல்லாம் ஒன்றுக்கொன்று முரண் போலத் தான் தெரிகிறது. நாகராஜ் அவனிடமிருந்து அது போக வேண்டிய காலம் வந்து விட்டதென்றும், அவனுக்கு அதன் தேவை முடிந்து விட்டதென்றும் சொல்லி எந்த எதிர்ப்புமில்லாமல் அதைத் தந்து விட்டான். அது உண்மையில் ஒரு பொக்கிஷம் என்றால், அதை ஏன் அவன் எந்த வருத்தமுமில்லாமல் கொடுக்கிறான்? அது உன் அருளால் தான் எனக்குக் கிடைக்கவில்லை என்று சொல்கிறானே, அது உண்மையா? என்னிடம் வந்தால் என் சீடர்கள் கூட அபகரிக்கும் வாய்ப்பு இருப்பது போல பயமுறுத்துகிறானே அது சரி தானா? அந்த விசேஷ நாகரத்தினத்தில் என்னென்னமோ வில்லங்கம் இருக்கிறது போல் தெரிகிறதே. இனி நான் என்ன செய்வதென்று வழி காட்டு அன்னையே…. இது விஷயத்தில் எனக்கு ஒரு தெளிவை ஏற்படுத்து!”

தோன்றியதை எல்லாம் தாயிடம் கொட்டி விட்டுதெளிவு பிறந்த பிறகு தான் உன் காலடியை விட்டு நகர்வேன்என்று உறுதி பூண்டவராய் மாகாளியின் பதிலை உள்வாங்க காளிங்க சுவாமி மௌனமானார். காலம் நீண்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து காளி சிலை மேல் சரசரவென்று ஏறிய பாம்பு ஒன்று மெல்லச் சீறியது. அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை மாகாளி அவருக்குத் தெரிவித்து விட்டாள். அவர் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை அந்த வழிகாட்டலில் இருந்து அவர் தெரிந்து கொள்ள வேண்டுமாம். பக்தர்கள் சிந்திக்கவும் தயங்கும் சோம்பேறித்தனத்தை தெய்வம் ஊக்குவிப்பதில்லை…. காளிங்க சுவாமி பெருமூச்சு விட்டபடி புன்னகைத்தார்.


டேராடூன் விமான நிலையத்திலிருந்து பீம்சிங் ரிஷிகேசத்திற்கு ஜீப்பில் போய்க் கொண்டிருந்தான். அவனுக்குச் சீக்கிரத்திலேயே பைத்தியம் பிடித்து விடும் போலத் தோன்றியது. ஆனால் அப்படித் தோன்றுவதே அவனைப் பயமுறுத்துவது போலிருந்தது.  தயவு செய்து இனி இந்த மாதிரி எதையும் நினைக்காதே....” காளிங்க சுவாமி சொன்ன கணத்திலிருந்து அவன் மனம் பேயாட்டம் ஆடியது. மனம் என்னவெல்லாம் நினைத்து விடுமோ என்று அவனுக்குப் பயமாய் இருந்தது. நன்மைகள் எதையும் அவனுக்கு நினைக்கத் தோன்றவில்லை. விபத்திலிருந்து வியாதி வரை மனம் அதில் போவேன், இதில் போவேன் என்று இது வரை எண்ணாததை எல்லாம் எண்ணிப் பார்க்கும் முனைப்பில் இருந்தது. ஒரு கணம் சும்மா இருக்க முடியாத ஒரு குறும்புக்காரக் குழந்தையைத் தனியாகச் சமாளிக்க வேண்டியிருந்த பலவீனமான தாய் போல் அவன் உணர்ந்தான்.

இந்த நிலையிலிருந்து காளிங்க சுவாமி காப்பாற்றுவார் என்று அவன் எதிர்பார்த்தால் காளிங்க சுவாமி அந்த அறிவுரையைச் சொல்லி விட்டு மௌனமாகியிருந்தார்.  அவருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. கடைசியில் பைத்தியம் பிடித்து விடும் போலத் தோன்றவே பயந்து போய் அனுமாரிடம் தான் பீம்சிங் அடைக்கலம் புகுந்தான்.  ஜெய் அனுமான், ஜெய் அனுமான்என்று இடைவிடாமல் முணுமுணுக்க ஆரம்பித்த பின் அவன் மனது வேறெந்த எண்ணமும் எழ வழியில்லாமல் சற்று அடங்கியது. அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் இத்தனை தடவை அனுமார் நாமத்தை ஜபித்ததில்லை. அனுமான் ஜெயந்தி அன்று மட்டும் 108 முறை சொல்வான். பக்தனாக இருந்த போதும் அவனுக்கு அதுவே பெரிய சாகசம் போலத் தோன்றும். இன்றோ அனுமார் நாம ஜபத்தில் 1008 ஐயும் எப்போதோ தாண்டி விட்டிருந்தான். நிறுத்தத் தான் வழி தெரியவில்லை.  

அவன் ஜீப் ரிஷிகேசத்தை நெருங்கிய போது மெல்ல அவன் காளிங்க சுவாமியின் இருப்பை மனதில் உணர்ந்தான். அவர் விழிகள் அவனைக் கருணையுடன் பார்த்தது போல் தெரிந்தது.

பீம்சிங் சொன்னான். “ரிஷிகேசம் வந்து விட்டேன் சுவாமி. இன்னும் சிறிது நேரத்தில் உங்கள் காளி கோயிலில் இருப்பேன்.”

சுவாமிஜியின் கட்டளை தெளிவாக மனதில் பதிவாகியது. “நீ இங்கே வர வேண்டாம். நேராக லக்‌ஷ்மண் ஜூலாவுக்குப் போ”

(தொடரும்)
என்.கணேசன்


தற்போது விற்பனையில் யாரோ ஒருவன்? இரண்டாம் பதிப்பும், மற்ற புதிய நாவல்களும், நூல்களும்







2 comments:

  1. உங்கள் கதாநாயகர்கள் அமானுஷ்யன், கிரிஷ், நரேந்திரன், நாகராஜன் என்று வியப்பில் ஆழ்த்துகிறார்கள். அமானுஷ்யன் போன்று நாகராஜன் வேறு நாவலில் வலம் வருவானா?

    ReplyDelete
  2. அஜீம் அகமதுக்கு இறுதி காலம் நெருங்கி விட்டது....

    தியானம் செய்ய ஆரம்பித்த காலங்களில் மனதை ஒரே விசயத்தில் நிலை நிறுத்த பாடுபட்டவர்களால் பீம்சிங்கின் நிலையை நன்றாக உணர முடியும் 😂😂😂

    ReplyDelete