சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 15, 2023

யாரோ ஒருவன்? 138



ரேந்திரன் ரா தலைவரைச் சந்தித்து நிலவரத்தைச் சொன்னான்.

நம் ஆட்கள் தொழிற்சாலையில் இருந்து எதிர் வீட்டில்  இருக்கும் அவனை கண்காணித்ததில்  அவன் உள்ளே ஒரு பாதுகாப்பான அறையில் தான் தங்கி இருக்கிறான் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் சார். தொழிற்சாலையில் இருந்து பார்க்கையில் வீட்டின் கீழேயும், முதல் மாடியிலும் இருக்கும் இரண்டு அறைகளின் ஜன்னல்கள் தெரிகின்றன. ஒருவேளை அவன் அந்த இரண்டு அறைகளில் ஒன்றில் வசிப்பவனாக இருந்தால் இங்கிருந்து துப்பாக்கியால் சுட்டு அவன் கதையை முடித்திருக்கலாம். அல்லது அடிக்கடி அந்த அறைகளுக்கு வருபவனாக இருந்தாலும் அவன் கதையை முடித்திருக்கலாம். ஆனால் உள்ளே பாதுகாப்பான அறைகளில் ஒன்றில் தங்கியிருக்கும் அவன் நம் ஆட்கள் கவனிக்க முடிந்த ஜன்னல்கள் உள்ள அறைகளுக்கு வருவதேயில்லை

ரா தலைவர் சொன்னார். “அப்படி அவன் வந்து பார்ப்பவனாக இருந்தால் அவன் நம் ஆட்கள் வேவு பார்ப்பதைக் கண்டுபிடித்துமிருப்பான்.”

நரேந்திரன் புன்னகைத்தான். “அதையே தான் நானும் நினைத்தேன்... நம் ஆட்கள் கவனித்ததில் இரண்டு ஷிப்டில் அந்த வீட்டைப் பாதுகாக்கும் இரண்டு கூர்க்காக்களும் கூட ஒருமுறை கூட உள்ளே சென்று அவனைச் சந்திப்பவர்களாக இல்லை. அவர்கள் வேலை வெளியே கண்காணிப்பதோடு முடிந்து விடுகிறது. அவன் சகாக்கள் இரண்டு மூன்று பேர் மட்டுமே அவனைச் சந்திக்க முடிந்தவர்களாக இருக்கிறார்கள்….” 

ரா தலைவர் யோசனையுடன் கேட்டார். “சரி அவன் எதிர்பாராத சமயத்தில் திடீரென்றுசர்ஜிகல் அட்டேக்செய்தால் என்ன நரேந்திரன்?”

நரேந்திரன் சொன்னான். “நாம் ஏற்கெனவே அறிந்தபடி அவன் அந்த தொழிற்சாலைக்குக் கண்டிப்பாக வெடிகுண்டு வீசி எறிந்து பெரிய அழிவை ஏற்படுத்தி விட்டுத் தப்பிக்கப் பார்ப்பான். அவனுக்கு இது போன்ற நிலைமைகள் புதிதல்ல. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல இருக்கும் எல்லா நிலைமைகளையும் அவனுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு தப்பித்து விடுவான். ஒருவேளை நாம் பிறகு அவனைப் பிடித்தாலோ கொன்றாலோ கூட தொழிற்சாலையில் அத்தனை தொழிலாளிகள் உயிரையும் கூட அதற்குப் பதிலாக பலி கொடுத்தது போல் ஆகி விடும்”

“அப்படியானால் என்ன செய்யலாம் என்கிறாய்?”

“சார் அவன் இந்த வீட்டை விட்டு விட்டு வேறெங்காவது அவனாகவே ஓடி ஒளியத் திட்டமிடும்படி நாம் செய்ய வேண்டும். அவன் அப்படித் தப்பித்துப் போகும் வேளையில் அதிக சேதாரமில்லாமல் அவனைப் பிடிக்கலாம் அல்லது கொல்லலாம்.”

“ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாயா நரேந்திரன்?”

“சார் நாம் அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டோம் என்று தெரிந்தாலும் அவன் கண்டிப்பாக வழக்கமான பாணியில் தொழிற்சாலைக்கு வெடிகுண்டு வீசி விட்டுத் தான் தப்பிப்பான். ஆனால் நாம் அவனைச் சீக்கிரம் கண்டுபிடித்து விடுவோம் என்ற சந்தேகம் வந்தால் அவன் வெறுமனே தப்பித்துப் போக மட்டும் பார்ப்பான்… ”

ரா தலைவர் அவனைக் கேள்விக்குறியுடன் பார்க்க நரேந்திரன் சொன்னான். “சார். அவன் நோய்டாவில் எங்கோ ஒரு இடத்தில் பதுங்கி இருக்கிறான் என்ற தகவல் இப்போது தான் நமக்குக் கிடைத்திருப்பதாக நாம் அவர்களுடைய ’இன்ஃபார்மர்’ மூலமாக அவனுக்குத் தகவல் கசியச் செய்வோம். எப்படியும் அவன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க நமக்கு குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும் என்று அவன் கணக்குப் போட்டு இங்கிருந்து வேறு இடத்திற்குப் போவது நல்லது என்று கண்டிப்பாக முடிவு செய்வான். உடனடியான அபாயம் இல்லை, ஆனால் தொடர்ந்து இங்கு இருக்க முடியாது என்ற நிலைமையில் அவன் கண்டிப்பாக வேறு பிரச்சினை எதுவும் பண்ணாமல் இங்கிருந்து கிளம்புவான்…. அப்போது நாம் பிடித்து விடலாம். அல்லது கொன்று விடலாம்….”

நரேந்திரன் அவர் மேசையில் ஒரு வரைபடம் விரித்தான். “நான் இந்த யோசனையைச் சொன்னவுடன் அன்வர் அஜீம் அகமது இந்த நோய்டா பகுதியைக் கடப்பதற்கு முன் அவனைக் கொன்று விட எங்கே எத்தனை ஆட்களை ஒளிந்தபடி காத்திருக்க வைக்கலாம் என்று அருமையான திட்டத்தை உருவாக்கி இருக்கிறான்….”

பொதுவாக இது போன்ற திட்டங்களில் அதிகாரிகள் திட்டங்களுக்கு உதவியவர்கள் பெயர்களைச் சொல்வதும் அபூர்வம். அத்தனை புகழும் தங்களுக்கே கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிற மனப்போக்கு எல்லாத் துறைகளிலும் அதிகம். அப்படி இருக்கையில் இந்தத் திட்டத்தை அன்வர் உருவாக்கி இருக்கிறான் என்பதை வெளிப்படையாகத் தலைவரிடம் தெரிவித்த நரேந்திரனைத் தலைவர் மனதில் வெகுவாக சிலாகித்தார். ‘கண்டிப்பாக ஒரு நாள் இவன் மிகச் சிறந்த தலைவனாக உருவாவான்’.

இந்தத் திட்டத்திற்கு எத்தனை ஆட்கள், எத்தனை வாகனங்கள், என்னென்ன வசதிகள் வேண்டும் என்பதையும் நரேந்திரன் தெரிவித்ததைக் கேட்டுக் கொண்ட தலைவர் “சரி. உடனடியாகத் தயாராவோம். நீ சொன்னபடி நாமே தகவலைக் கசிய வைப்போம்.” என்றார்.


காளிங்க சுவாமி திரிசங்கின் நிலைமையில் இருந்தார். பீம்சிங் நாகராஜின் வீட்டினுள் நுழையும் வரை அவருக்கிருந்த தெளிவு அதன் பின் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. நாகராஜ் விசேஷ நாகரத்தினத்தை மறைத்தோ ஒளித்தோ வைக்காமல் வெள்ளித் தட்டில் வெளியிடத்திலேயே வைத்திருந்ததில் பீம்சிங்கை விட அதிகமாக அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கும் அற்புதசக்தி வாய்ந்த அந்த விசேஷ நாகரத்தினத்தை பீம்சிங் எடுத்துப் போக வருவான் என்று அவன் எதிர்பார்த்துக் காத்திருந்ததும், அவர் மந்திரக்கவசத்துக்கோ, பீம்சிங்கின் திருட்டுத் திறனுக்கோ வேலை தராமல் எடுத்துக் கொண்டு போக அனுமதிப்பான் என்று அவரால் கற்பனை கூடச் செய்து பார்த்திருக்க முடியவில்லை. அவன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் அவர் காதுகளில் ரீங்காரம் செய்கின்றன.  

இந்த விசேஷ நாகரத்தினம் போகப் போகும் பாதையை நான் அறிவேன் சுவாமிஜி….”

விசேஷ நாகரத்தினம் அவனிடம் கிடைத்ததுமே அவன் அறிய வேண்டியது அனைத்தையும் அறிந்திருப்பான். அதனால் தான் அந்த வார்த்தைகளை அவன் சொல்லியிருக்கிறான். அவனிடமிருந்து பஞ்சமி நாளில் அந்தக் குறிப்பிட்ட நாழிகையில் பீம்சிங் கைக்கு அந்த விசேஷ நாகரத்தினம் போயே ஆகும் என்று அவன் அறிந்திருந்ததால் தான் சின்ன எதிர்ப்பும் காட்டாமல் பீம்சிங்கிடம் ஒப்படைத்து விட்டான்.

அடுத்ததாகச் சொன்னான். “அந்தப் பாதையை யார் வழி மறித்து எடுத்தாலும் அவர்களைக் கொன்று விட்டு அது தான் நிர்ணயித்த பாதையைத் திரும்பத் தொடரும்…” நாகராஜ் வழிமறித்து சாக விரும்பவில்லை!

விசேஷ நாகரத்தினம் இறைவனுக்கிணையான சக்திகள் தரும் என்று மட்டுமே அவர் அறிந்திருந்தாரே ஒழிய அதை வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நினைப்பதெல்லாம் நடந்து தொலைக்கும் என்று அவர் எண்ணியிருக்கவில்லை. பீம்சிங் டயர் பஞ்சராவதை நினைக்க அப்படியே ஆனதும், வெடிகுண்டு புரளி பற்றி நினைக்க அதுவும் அப்படியே ஆனதும் அவரைத் திகிலடைய வைத்தது. இப்போது தான் அடுத்ததாக நாகராஜ் சொல்லி இருந்தது அவர் அடிவயிற்றைக் கலக்கியது.   எச்சரிக்கையாக இருங்கள் சுவாமிஜி. உங்களிடம் வந்து சேர்ந்தால் அது உங்களிடமிருந்து இடம் மாறி உங்கள் சீடர்களிடம் போய்ச் சேர அதிக காலம் ஆகாது.”

அந்த விசேஷ நாகரத்தினத்தை வைத்திருப்பவன் நினைக்கிறபடி எல்லாம் நடக்கும் என்றால், அதை யாரும் எடுத்துக் கொள்ளலாம், எதுவும் நினைக்கலாம் என்றால் அவருடைய சீடர்கள் கையில் கிடைத்தால் அதற்குப் பின் அவர்கள் சீடர்கள் இந்தக் காட்டுக் காளி கோயிலில் சதா சர்வகாலம் இருட்டிலிருக்கும் வாழ்க்கையை ஏன் தொடரப் போகிறார்கள். அவர்களில் ஒருவனே சுவாமிஜி ஆகலாம், தன் சகாவையும், பழைய சுவாமிஜியையும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனால் தான் அவன் அடுத்த எச்சரிக்கையைச் செய்திருக்கிறான்.

அதை வைத்திருக்கத் தகுதியானவர் என்று நீங்கள் உங்களை நினைக்கிறீர்கள். அப்படி இருந்தும் உங்கள் மாகாளி உங்களிடம் அதைக் கொண்டு சேர்க்காததற்குக் காரணம் உங்கள் தகுதிக்குறைவல்ல. உங்களைக் காப்பாற்றும் அருளைத் தான் மாகாளி காட்டியிருக்கிறாள். அந்த அருளால் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்...”

காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்ற வார்த்தை அவரைப் பீதியடையச் செய்தது. அபாயம் இருந்தால் அல்லவா காப்பாற்றிக் கொள்ள வேண்டி வரும்?

அவன் கேட்ட கேள்வி இப்போதும் அவர் காதில் அறைகிறது. என்னிடமிருந்து இந்த ரத்தினக்கல் விலகும் காலம் வந்து விட்டது என்று சொன்ன மாகாளியிடம் சுவாமிஜி அவரிடம் அது வந்து சேருமா, அப்படி வந்து சேர்ந்தாலும் எத்தனை நாளைக்கு அது இருக்கும் என்று கேட்டிருக்கிறாரா என்று கேள் பீம்சிங்

அதை அவர் கேட்டிருக்கவில்லை என்றாலும் கூட ’கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மாகாளி பதில் சொல்வதில்லை என்பது தானே பிரச்சினையே’ என்று எண்ணியபடியே காளி சிலையின் காலடியில் அமர்ந்த காளிங்க சுவாமி ”தாயே அவன் சொன்னதில் உண்மை இருக்கிறதா? இல்லை அவன் வார்த்தை ஜாலங்களில் விளையாடுகிறானா?” என்று காளியிடம் கேட்க மாகாளி மௌனம் சாதித்தாள்.

(தொடரும்)
என்.கணேசன்

இரண்டு நாட்களில் யாரோ ஒருவன், இருவேறு உலகம் இரண்டாம் பதிப்பும், யோகி, மாயப்பொன்மான், கீதை காட்டும் பாதை - மூன்று புதிய நூல்களும் வெளியீடு!












3 comments:

  1. இன்னும் அதே பரபரப்பு ...

    ReplyDelete
  2. சுவாமிஜி எடுக்கும் முடிவில் அஜீம் அகமதுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்று நினைக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. I think அஜிம் அகமது எடுக்கும் முடிவில் தான் சுவாமிஜிக்கு பாதிப்பு என்று,,

      பார்ப்போம்

      Delete