அன்று அலெக்ஸாண்டர் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தான். போரிட்டு தன் சாம்ராஜ்ஜியத்தில் ஒரு செல்வச் செழிப்பான பகுதியை இணைத்துக் கொள்ள முடிவெடுத்து இயங்குவதற்கு முன் இந்த உற்சாக மனநிலை எப்போதுமே அவனுக்கு இருக்கும். வெற்றியை அவனுக்குப் பெற்றுத் தருவது இந்த உற்சாகமும், துடிப்பான மனநிலையுமாகவே இதுவரை இருந்திருக்கின்றன. உடலின் நாடி நரம்புகளில் எல்லாம் வீரம் முறுக்கேற அவன் மகதத்தின் எல்லைகளை ஒரு உத்தேச வரைபடத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது செல்யூகஸ் சத்தமிடாமல் வந்து நின்றான்.
கண்களை வரைபடத்திலிருந்து எடுக்காமலேயே அலெக்ஸாண்டர் கேட்டான். “என்ன செல்யூகஸ்?”
செல்யூகஸ் தயக்கத்துடன் சொன்னான். “நம் வீரர்களிடம் திடீரென்று ஒருவித உற்சாகக்குறைவை என்னால் உணர முடிகிறது சக்கரவர்த்தி. கிட்டத்தட்ட எல்லோருமே சுரத்தில்லாமல் இருக்கிறார்கள்.”
அலெக்ஸாண்டர் நிமிர்ந்து உட்கார்ந்து செல்யூகஸை நேர் பார்வை பார்த்தான். “என்ன காரணம்?”
“சரியாகத் தெரியவில்லை சக்கரவர்த்தி. ஆனால் நாம் போர் தொடுக்கப் போகும் மகதத்தின் படை வலிமையைப் பற்றிய தகவல்கள் கசிந்து அது குறித்து எல்லோரும் பேசிக் கொள்வதைப் பார்த்தால் அதுகூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது”
“படைவலிமையை எண்ணிக்கை தீர்மானிப்பதில்லை செல்யூகஸ், மன வலிமையே தீர்மானிக்கிறது என்பதை நம் வீரர்கள் நன்றாக அறிவார்கள்”
“அவர்கள் அறிந்தது எதுவும் இப்போது அவர்கள் உற்சாகத்தை மீட்டுத் தர முடிந்ததாகத் தெரியவில்லை சக்கரவர்த்தி. நீங்கள் அவர்களிடம் பேசி உற்சாகமூட்டுவது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. இதே மனநிலையில் அவர்கள் இருந்தால்...”
செல்யூகஸ் வாக்கியத்தை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்திக் கொண்டான். தோல்வி குறித்த அனுமானங்களைக் கூட அலெக்ஸாண்டர் ரசிப்பதில்லை என்பது தான் அதற்குக் காரணமாக இருந்தது.
அலெக்ஸாண்டர் சொன்னான். “உடனடியாக நம் படைவீரர்களிடம் நான் பேச ஏற்பாடு செய் செல்யூகஸ். இந்த உற்சாகக்குறைவு ஒரு மோசமான தொற்று வியாதி. இதை உடனடியாகப் போக்கா விட்டால் அடுத்தவர்களுக்கும் பரவி மந்த நிலையை அனைவரிடத்திலும் உருவாக்கி விடும்....”
செல்யூகஸ் முக்கால் மணி நேரத்தில் படைவீரர்களை ஒன்று திரட்டி அணிவகுத்து சீராக நிற்கச் செய்தான். அலெக்ஸாண்டர் வந்து உற்சாகத்துடன் பேச ஆரம்பித்தான்.
“உலகம் வெல்ல என் தலைமையில் கிளம்பியிருக்கும் மாவீரர்களே நாம் பாக்கியம் செய்தவர்கள். மாசிடோனியா என்ற சிறு பகுதியிலிருந்து சில வருடங்களுக்கு முன் கிளம்புகையில் மனதில் அசைக்க முடியாத உறுதியும், நாடி நரம்புகளில் வீரத் துடிப்பும், எல்லையில்லாத உற்சாகமும் நம்மிடம் இருந்தன. மகத்தான வெற்றிக்கு கூடுதலாக வேறு எதுவும் தேவையில்லை என்று நிரூபிக்கும் படியாக நாம் வரிசையாக வந்த இடமெல்லாம் வென்று நம் கொடியை நாட்டியிருக்கிறோம். நம் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தி இருக்கிறோம். நம் பராக்கிரமத்தைக் கண்டு பயந்து நம்மிடம் சரணடைந்தவர்கள் ஏராளம். நமக்கு வலிமை கூட்டும்படியாக நம்முடன் சேர்ந்து கொண்டவர்களும் ஏராளம். நாளுக்கு நாள் நம் சாம்ராஜ்ஜியமும், பெருமையும், புகழும் வளர்ந்து கொண்டே வருகின்றது. நாம் உயர்ந்து கொண்டே வருகிறோம். வாழ்ந்தால் இப்படி இருக்க வேண்டும் என்று நம்மைப் பார்த்து எல்லோரும் கனவு காணக் கற்றுக் கொள்கிறார்கள். அத்தனை சிறப்பை எட்டிய பிறகும் நாம் அடைய வேண்டியிருக்கும் உயர்வுகள் இன்னும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். எத்தனையோ செல்வங்கள் நம்மிடம் இது வரை சேர்ந்திருந்த போதும் அதற்கெல்லாம் பல மடங்குச் செல்வம் நம் கைக்கு வர மகத சாம்ராஜ்ஜியத்தில் காத்திருக்கிறது. அங்குள்ள செல்வம் அளவிட முடியாதது என்று விஷயமறிந்தவர்கள் சொல்கிறார்கள். நாம் திரும்பிச் செல்கையில் நம் கைகளில் அந்தச் செல்வம் இருக்கும். ஆக சரித்திரம் படைப்பது மட்டுமல்லாமல், புகழின் உச்சியை அடைவது மட்டுமல்லாமல், நம் இல்லங்களுக்குக் கொண்டு சென்று நிரப்பி மகிழும்படியாக மாபெரும் செல்வத்தையும் அடையும் வாய்ப்பையும் தரும் ஒரு போரை விரைவிலேயே நாம் ஆரம்பிக்கவிருக்கிறோம்….”
அலெக்ஸாண்டர் நிறுத்தினான். பொதுவாக இது போல் அவன் உற்சாகமாகப் பேசி நிறுத்துகையில் அவன் வீரர்களிடமிருந்து உற்சாக முழக்கங்கள் கிளம்புவது வழக்கம். ஆனால் இன்று அவர்கள் ஊமைகள் போலவே நின்றிருந்தார்கள். அவர்கள் முகத்தில் களையோ, உற்சாகமோ தெரியவில்லை. அவன் வார்த்தைகள் அவர்களை எட்டியது போலவே தெரியவில்லை. அவன் எதை எதிர்பார்த்திருந்தாலும் இந்தக் கனத்த மௌனத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. செல்யூகஸ் சந்தேகப்படுவது போல மகதப்படைகளின் அளவு தன் வீரர்களை இந்த அளவு பாதிக்கும் என்பதை அலெக்ஸாண்டரால் நம்ப முடியவில்லை. தன் ஏமாற்றத்தையும், எண்ணங்களையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் அலெக்ஸாண்டர் தொடர்ந்தான்.
“செல்வத்தின் அளவிற்கேற்ப மகதத்தின் படை வலிமையும் அதிகம் என்றே சொல்கிறார்கள். அவர்களின் படை அளவு என்னவாக இருந்தாலும் அவர்களின் மனவலிமை நமக்கு ஈடானதாக இருக்க முடியாது. இதை நான் வெற்றுப் பெருமைக்குச் சொல்லவில்லை. நாம் நம் மண்ணின் அளவை விடப் பலமடங்கு பூமியை இன்று ஆக்கிரமித்திருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நம் மனவலிமையே. வென்றே தீர்வோம் என்ற அசைக்க முடியாத தீர்மானமும், உறுதியுமே நமக்கு ஒவ்வொரு போரிலும் வெற்றியைத் தேடித் தந்திருக்கின்றன. நம்மை விடவும் வலிமையான எத்தனையோ படைகளை நாம் நம் மனவலிமையாலும், தந்திரங்களாலும், யுக்திகளாலுமே சந்தித்து வெற்றி அடைந்திருக்கிறோம். மகதத்தையும் நாம் அப்படியே வெல்லப் போகிறோம். அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டியதில்லை. இந்த அலெக்ஸாண்டர் என்றுமே வெற்று வார்த்தைகள் பேசியதில்லை. செய்வோம் என்று சொன்னதைச் செய்யாமல் இருந்தவன் அல்ல நான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படி இருந்தும் ஏதோ ஒரு உற்சாகக் குறைவை நான் உங்களிடம் உணர்கிறேன். அது என்னைக் குழப்புகிறது. உங்கள் மனதில் இருப்பதை மறைக்காமல் மனம் விட்டுச் சொல்லும்படி நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.”
மறுபடி உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை உரக்கச் சொல்ல ஆரம்பித்தும் அதனால் எந்தப் பாதிப்பும் வீரர்களிடம் தெரியாததால் சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்தி அவர்கள் எண்ணத்தை அறிய முடிவெடுத்துப் பேசி முடித்த போது அலெக்ஸாண்டரின் மனதில் ஏராளமான உணர்ச்சிகள் அலை மோதின. எதிரிலிருப்பவர்கள் அவன் படையினராகத் தெரியாமல் அன்னியர்களாகத் தோன்ற ஆரம்பித்ததை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அலெக்ஸாண்டர் கேட்டுக் கொண்டபடி யாரும் அவனிடம் எதையும் சொல்லத் துணியவில்லை. ஒரு நீண்ட கனத்த மௌனம் அங்கு நிலவ ஆரம்பித்தது. அவர்கள் சொல்ல முடிந்த வார்த்தைகளை விட அந்தக் கனத்த மௌனம் அலெக்ஸாண்டரை அதிகம் வதைத்தது. அவனுடன் நின்றிருந்த செல்யூகஸும் திகைத்தபடி நின்றிருந்தான். யவன வீர்ர்களின் உற்சாகக்குறைவு அலெக்ஸாண்டர் பேசினால் பஞ்சாய் பறந்து விடும் என்று அவன் எதிர்பார்த்திருந்தான். இது வரை பல முறை அப்படித் தான் நடந்திருக்கிறது. ஆனால் முதல் முறையாக ஒரு விதிவிலக்கு நிகழ்கிறது….
யாராவது பேசுவார்கள் என்று எதிர்பார்த்து சற்று நேரம் அமைதியாகப் பொறுத்துப் பார்த்த அலெக்ஸாண்டர் பின் உணர்ச்சி வசப்பட்டவனாக வருத்தத்துடன் சொன்னான். “நான் அரியணையில் இருக்கும் போது சக்கரவர்த்தியாக இருந்தாலும், போரிடும் போது உங்களுடன் சகவீரனாகச் சேர்ந்து தான் போராடியிருக்கிறேன். சக்கரவர்த்தியாக நான் கேட்டதற்கு நீங்கள் பதில் சொல்ல மறுத்தாலும் உங்களுடன் சகவீரனாக இருந்து போராடிய இந்த அலெக்ஸாண்டருடன் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள மறுப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை”
அலெக்ஸாண்டர் முதல் முறையாக அவர்களைப் பாதித்தான். போர்க்களத்தில் அவன் எப்போதுமெ தன் பாதுகாப்பைத் தேடிக் கொண்டு போராடியவன் அல்ல. அவர்களில் ஒருவனாகத் தான் இருந்திருக்கிறான். அவர்கள் இனியும் பதில் சொல்லாமல் தவிர்ப்பது சரியென்று அவர்களுக்குத் தோன்றவில்லை. அவர்களின் இந்த மனநிலை அலெக்ஸாண்டருக்கு எதிரானதல்ல. அவர்கள் இப்போதும் அவனை மதிக்கிறார்கள். நேசிக்கிறார்கள். அவனை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்ளாமல் தங்கள் மனதில் இருப்பதை அவனிடம் எப்படித் தெரிவிப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஒருசில வீரர்கள் கொய்னஸைப் பார்த்தார்கள். அவன் அலெக்ஸாண்டரின் நன்மதிப்பைப் பெற்றவன். நல்ல பேச்சாளனும் கூட….
சில வீரர்கள் கொய்னஸைப் பார்ப்பதை அலெக்ஸாண்டர் கவனித்தான். அவன் பார்வை கொய்னஸ் மீது கூர்மையாக நிலைத்தது.
(தொடரும்)
என்.கணேசன்
விரைவில் அச்சில் வெளிவரவுள்ளது...
அலெக்சாண்டர் வாழ்வில் முக்கியமான நிகழ்வு அருமையான பதிவு பதிவுக்கு நன்றி
ReplyDeleteஎன்ன சொல்லப் போகிறான்
கொய்னஸைப் பதிலுக்கு காத்திருக்கிறேன்
விஸ்ணுகுப்தரின் திட்டத்தை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.... யவனவீரர்களின் உற்சாக குறைவுக்கான மூலத்தை கண்டறிந்து மைனிகாவை... அலெக்சாண்டர் நெருங்குவதற்கு முன்னதாகவே... மைனிகா அங்கிருந்து கிளம்பி விட்டாள்.....
ReplyDelete