சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 24, 2023

யாரோ ஒருவன்? 135



கோயமுத்தூரில் கடைசி நாள் அதிகாலை வாக்கிங் போக நாகராஜ் கிளம்பிய போது சுதர்ஷன் வரவில்லை என்று சொன்னான். இரவு உறங்க நேரமாகி விட்டதால் களைப்பாக இருக்கிறதென்றும் சிறிது நேரம் தூங்க விரும்புவதாகவும் அவன் சொன்ன போது நாகராஜ் மேற்கொண்டு ஒன்றும் கேட்காமல் தனியாக வாக்கிங் கிளம்பினான். வழக்கமான இடத்தில் முன்பே வந்து தீபக் நின்று கொண்டிருந்தான்.

குட் மார்னிங்என்று தீபக் சொன்ன போது அந்தக் குரலில் வழக்கமான உற்சாகம் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக வார்த்தைப்படுத்த முடியாத மற்ற பல உணர்ச்சிகள் நிறைந்திருந்தன. நாகராஜ்குட் மார்னிங்என்று சொல்லியபடி நடக்க அவனுடன் இணைந்து தீபக் நடக்க ஆரம்பித்தான்.

நாகராஜின் விரல்களில் தன் விரல்களை இணைத்துக் கொண்டபடி தீபக் கரகரத்த குரலில் கேட்டான். “இந்த வாக்கிங் முடியற வரைக்கும் மட்டும் நான் உங்க கிட்ட உங்க மகனாய் பேசலாமா?”

மாதவனாய் ஒரு அரைமணி நேரம் மாறுவதும் நாகராஜுக்குச் சுலபமாயில்லை. கசப்புகளும், வருத்தங்களும் நிறைந்த அந்த அடையாளத்திற்குள் நுழைவது குறுகிய காலமானாலும் கண்ணீருடன் அல்லாமல் திரும்பி வர முடியாது. ஆனால் ரஞ்சனியின் உறுதியும், மாதவனின் துடிப்பும் நிறைந்த அவர்கள் மகன் தீபக்கின் மிகச்சிறிய கோரிக்கையை அவனால் மறுக்க முடியவில்லைநாகராஜ் தலையசைத்தான்.

என்னை முதல்ல பாக்கறப்பவே உங்களுக்கு தெரியும். இல்லப்பா. என் பிறந்த தேதி கேட்டது கூட கணக்கு சரியான்னு பார்த்துக்க தான் இல்லையா?”

அதற்கும் நாகராஜ் தலையசைத்தான். சிறிது நேரம் தீபக் ஒன்றும் சொல்லவில்லை. பின் மறுபடி கேட்டான். “அந்தக் கனவை வரவழைச்சது, பிறகு நிறுத்தினது, கொடிவேரி நீர்வீழ்ச்சில அந்தக் காட்சியை வரவழைச்சது, சத்தியமங்கலத்துல உங்கம்மா அப்பாவை பார்க்க வெச்சது எல்லாம் நீங்க தான். இதையெல்லாம் சுத்தி வளைச்சு செஞ்சு, உண்மையை போகற கடைசி நேரத்துல சொல்லாம ஆரம்பத்துலயே சொல்லியிருந்தா இந்த சில நாள்களாவது நான் உங்க மகனாய் இருந்திருப்பேனில்லையாப்பா

ஆனா உனக்கு அதை நம்ப முடிஞ்சிருக்காது. ஜீரணிக்கறதும்  சுலபமாயிருந்திருக்காது தீபக்நாகராஜ் மென்மையாகச் சொன்னான்.

அது உண்மை. இப்போதும் தீபக்கால் நடந்திருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.... குறுகிய நேரத்தில் நாகராஜிடம் பேச ஏராளமான விஷயங்கள் அவனுக்கு இருக்கின்றன. ஆனால் எதை எப்படிப் பேசுவது, சொல்வது என்று தீபக்குக்குத் தெரியவில்லை. எப்போதும் வாய் மூடாமல் எதாவது சொல்லிக் கொண்டே வரும் தீபக் அப்படி வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுவது நாகராஜின் மனதை நெகிழச் செய்தது. நாகராஜ் அறிவான். இதெல்லாம் திடீரென்று எந்த மனிதனும் சுமக்க முடிந்த சுமை அல்ல....

மிக முக்கியமான விஷயங்களையாவது இன்று பேசி விட வேண்டும் என்று நினைத்த தீபக் மெல்லச் சொன்னான். “நான் பிறந்ததிலிருந்தேஅவரைதான் அப்பான்னு நினைச்சுட்டிருந்தேன். அவரும் என் மேல ஆரம்பத்திலிருந்தே பாசமாய் தான் நடந்திருக்கார். நேத்திலிருந்து அம்மா அவங்க கிட்ட இருந்து மனசளவு விலகிட்டாங்க. அதை வெளிப்படையா தெரிவிச்சுட்டாங்க. நானும் வெறுத்து ஒதுக்கினால் அவருக்கு வேற யாரும் இல்லை. அதனால அவர் செஞ்சது தப்புன்னாலும் என்னால யாரோ ஒரு ஆளா அவரை நினைச்சு ஒதுக்க முடியல.... அதுல உங்களுக்கு வருத்தமில்லையே...”

நாகராஜ் சொன்னான். “வருத்தமில்லை

தீபக் சொன்னான். “உங்களைக் கொல்ல முயற்சி பண்ணினவர் பொண்ணை நான் காதலிச்சுட்டிருக்கேன். கல்யாணமும் அவளைத்தான் செய்யணும்னு நினைச்சிருக்கேன். நடந்த உண்மையெல்லாம் தெரிஞ்சும் என் காதலை என்னால மாத்திக்க முடியலை. அதுலயும் உங்களுக்கு வருத்தமில்லையே

அந்தப் பொண்ணு நல்ல பொண்ணு. அவளையே கல்யாணம் பண்ணிக்கோ.” நாகராஜ் சொன்ன போது கண்கலங்கிய தீபக்தேங்க்ஸ்ப்பாஎன்றான்.

சிறு மௌனத்திற்குப் பின் கேட்டான். “கல்யாணத்துக்கு வருவீங்களா?”

நாகராஜ் சொன்னான். “வர மாட்டேன். அதுக்குன்னு இல்லை. உன் பாட்டி தாத்தா செத்தாலும் நான் வரப் போகிறதில்லை. மாதவன்னு பழைய அடையாளம் என்னைக் கொஞ்சமாவது ஒட்டிகிட்டிருக்கிற கடைசி நிமிஷங்கள் நீ கேட்டுகிட்ட இந்த நிமிஷங்கள் தான்....”

தீபக் ஏமாற்றத்தையும் பெருந்துக்கத்தையும் உணர்ந்தான். சிறிது நேரம் அவனால் பேச முடியவில்லை. ”நானும் அம்மாவும் எப்பவாவது அந்த ஆசிரமத்துக்கு வரலாமா?”

மாதவனைத் தேடி வர்றதானா வராதீங்க. இனிமே நீங்க அவனை எப்பவுமே பாக்க முடியாது..”

உங்களுக்கு மாதவனா என் கிட்ட சொல்ல எதாவது இருக்காப்பா....”

ஒரு நிமிடம் யோசித்து விட்டு நாகராஜ் சொன்னான். “உங்கம்மாவை நீ நல்லா பார்த்துப்பே அது எனக்குத் தெரியும். ஏன்னா நீ ரொம்ப அவளை நேசிக்கறே. அதே மாதிரி எங்கம்மா அப்பாவையும் நல்லா பார்த்துக்கோ. ரொம்ப அன்பானவங்க. தங்கமானவங்க. அவங்கள ரொம்ப நல்லா வெச்சு பார்த்துக்கணும்னு ஒரு காலத்துல எப்பவுமே ஆசைப்பட்டிருக்கேன். அந்த ஆசைல விதி விளையாடிடுச்சு. முடிஞ்சா என் மகனா நீ எனக்காக அதைச் செய்.” சொல்லச் சொல்ல நாகராஜின் குரலுடைந்தது.

தீபக் தலையசைத்து விட்டுக் கேட்டான். “அவங்க காலம் முடியற வரைக்குமாவது நீங்க மாதவனாய் இருக்கலாமில்லைப்பா. நீங்க உயிரோடிக்கீங்கன்னு தெரிஞ்சா அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க....”

நாகராஜ் மென்மையாகவும் உறுதியாகவும் சொன்னான். “சந்தோஷத்தை விட துக்கப்படறதுக்கான வாய்ப்பு தான் அதிகம் தீபக். முதலாவது இந்த நாகராஜ் கிட்ட மாதவனோட எந்த சாயலும் இல்லை. பழைய மாதவனாய் நான் முழுசா மாறவும் முடியாது. அதை எல்லாம் ஏத்துக்கறது அவங்களுக்கு சுலபமா இருக்காது. அது மட்டுமில்லாம, நான் மாதவனா வந்தா நடந்த எல்லாத்தையும் சொல்ல வேண்டியிருக்கும். நடந்திருக்கறத ஜீரணம் பண்றது அவங்களுக்கு சுலபமாய் இருக்காது. நடக்கப் போகிறதை ஜீரணிக்கறதும் சுலபமாய் இருக்காது. நடந்த உண்மை எல்லாம் தெரிஞ்சதுக்கப்பறம் நீ சரத்தை அப்பான்னு சொல்றதையும், கல்யாணோட மகளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதையும் அவங்களுக்கு ஏத்துக்க சுலபமாயிருக்காது. அதனால மாதவனோட பழைய சரித்திரம், புதிய முகம் அவங்களுக்கு துக்கம் தர்ற மாதிரி தான் முடியும். அதனால யோசிச்சு தான் இந்த முடிவை நான் எடுத்தேன் தீபக்.”

அவன் சொன்னதும் தீபக்குக்குச் சரியாகவே தோன்றியது. தந்தையின் விரலை இறுக்கிப்பிடித்தபடியே மௌனமாக நடந்த அவனுக்கு ஐந்து நிமிடங்களில் வீடு வந்து விடும் என்கிற தொலைவில் ஒரு புல்வெளியைக் கடக்கையில் ஒரு ஆசை தோன்றியது. மெல்லக் கேட்டான். “அப்பா எனக்கு ஒரே ஒரு ஆசை. இந்தப் புல்வெளில அஞ்சு நிமிஷம் உட்கார்றீங்களா? நான் உங்க மடியில அஞ்சே அஞ்சு நிமிஷம் படுத்துக்கட்டா?”

நாகராஜனால் பேச முடியவில்லை. மௌனமாக அவன் அந்தப் புல்வெளியில் அமர்ந்தான்.  தீபக் அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான். அவன் தலைமுடியைக் கோதியபடி நாகராஜ் அவன் முகத்தையே பார்க்க, அவனும் தந்தையின் முகத்தையே பார்த்தபடி படுத்திருந்தான். ஓரிரு நிமிடங்களில் நீர்த்திரை இருவர் பார்வையையும் மறைத்தது.

மெல்ல நாகராஜ் சொன்னான். “நேரமாயிடுச்சு தீபக்….”

தீபக் எழுந்து கொள்ள இருவரும் நாகராஜின் வீடு வரும் வரை மௌனமாகவே நடந்தார்கள். வீடு நெருங்கியதும் வார்த்தைகள் இல்லாமலேயே இருவரும் கைவிரல்களை விடுவித்துக் கொண்டார்கள். ஏதாவது சொல்லி விடைபெறுவது தான் பொருத்தமாக இருக்கும் என்றாலும் வார்த்தைகளை மனமுடையாமல் சொல்ல முடியுமா என்பது இருவருக்குமே நிச்சயமில்லை. தீபக் தந்தையின் கையை முத்தமிட்டுத் தலையாட்டினான். நாகராஜ் மகன் தலையைத் தொட்டு கண்களை மூடி குருஜியைப் பிரார்த்தித்துக் கொண்டு மனதார ஆசிர்வதித்தான்.

பின் தலையசைத்து விட்டு அவன் வீட்டு கேட்டைத் திறக்க தீபக் பின்னாலேயே வந்தான். “நான் சுதர்ஷன் அங்கிள் கிட்டயும் பை சொல்லிடறேன்

சுதர்ஷன் உள்ளேயிருந்து கண்கலங்க தந்தையும் மகனும் விடைபெறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தீபக் இப்படிச் சொன்னதும் கண்களைத் துடைத்துக்  கொண்டு சுதர்ஷன் வெளியே வந்தான். நாகராஜ் உள்ளே போய் விட்டான்.

பை அங்கிள். என்னை ஞாபகம் வெச்சுக்கோங்கஎன்று சொன்ன தீபக்கை கண்கலங்க ஆரத்தழுவிக் கொண்டான் சுதர்ஷன்.

உன்னை எப்பவுமே என்னால மறக்க முடியாது தீபக்என்று அவன் மனதாரச் சொன்னான்.

கண்கலங்கியபடியே தீபக் “அப்பா கூட நீங்க தான் இருக்கப் போறீங்க. அவரை நல்லா பார்த்துக்கோங்க அங்கிள்என்று சொன்னபோது சுதர்ஷன் அழுது கொண்டே சொன்னான். “அதை நீ சொல்ல வேண்டியதேயில்லை தீபக். மகராஜ் எங்களுக்கு உயிர்…”



(தொடரும்)
என்.கணேசன்

12 comments:

  1. Chweeeet conversation between father and son., ovvoru ud la yum lesaa kan kalangavekkreenga sir neenga..

    ReplyDelete
  2. Madhavan ah vida Deepak romba paavam,

    ReplyDelete
  3. This Kind of Writing, Narration can't be from Thoughts. It is So real and Connected Directly to Heart. I hope Mahraj is real and I will meet him one day

    ReplyDelete
  4. very emotional for me.. I lost my father 2 years before I didn't get opportunity to say good bye to him .. while reading this I felt the pain of missing/losing father..

    ReplyDelete
  5. கண்ணில் நீர் அவர்கள் இருவருக்கு மட்டும் இல்லை எனக்கும் சேர்த்து தான்.

    ReplyDelete
  6. கண்கள் குளமாயின

    ReplyDelete
  7. பதிவு முழுவதும் உணர்ச்சி பிழம்பு. கண்ணீரில் மனம் காணாமல் போனது. மீள சற்று நேரம் ஆனது

    ReplyDelete
  8. மாதவனை பொறுத்தவரை துறவறம் செல்ல போகிறார்...ஆனால், தீபக் மற்றும் ரஞ்சனியை பொறுத்தவரை மாதவன் திரும்ப வர முடியாத (மரணத்திற்கு இணையான) இடத்திற்கு செல்கிறான்... மிகவும் வேதனையான விசயம்... காலம்தான் அவர்கள் காயத்திற்கு மருந்து....

    ReplyDelete
  9. For my age I stopped being sentimental but after reading this I felt tears in my eyes. Awesome writing anna.

    ReplyDelete
  10. நாகராஜ் ஏன் சுதர்சனை உதவியாளனாக வைத்திருக்கிறான் என்பது இப்போது நன்றாக புரிகிறது....
    ரஞ்சனி மற்றும் தீபக்கை சந்திக்கும் சமயங்களில் நாகராஜுடன் இருப்பதை தவிர்த்துக்கொண்டான்....

    ReplyDelete
  11. எத்தனை முறை படித்தாலும் கண்கள் கலங்குவதை நிறுத்த முடிவதில்லை. தந்தை மகன் இருவருக்கும் இழப்புகள் அதிகம். .யார் பாவம் என்று சொல்ல தெரியவில்லை.

    ஆசிரியர் அவர்களே, இதுவரை உங்கள் நாவலை படித்து இப்படி மனம் கசிந்ததில்லை.

    ReplyDelete
  12. Very emotional episode sir, can't control tears.

    ReplyDelete