சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 6, 2023

சாணக்கியன் 51

 

மைனிகாவும் அவளுடன் இந்தப் பயணத்தைத் தொடர்ந்திருந்த தாசிப் பெண்களும் அதிகாலை நான்கு மணிக்கு ஒரு சிறுநதிக் கரையில் கூடினார்கள். அந்தச் சிறுநதிக் கரையில் கூடிய அந்தப் பெண்களை யாரும் சந்தேகிக்கக் காரணமிருக்கவில்லை. படைவீரர்கள் குளிக்க வருவதற்கு முன் குளித்து விட்டுப் போக நதிக்கரைக்கு வந்திருக்கும் பெண்களைப் போலவே அவர்கள் தோன்றினார்கள். மெல்லிய குரல்களில் அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்ட மொழியும் அப்பகுதி மக்களுக்கே கூடப் பழக்கமானதல்ல என்பதால் யவன வீரர்கள் அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்டால் கூட பேசிக் கொள்வதென்ன என்று கண்டுபிடித்து விட வழியில்லை.

 

மைனிகா கேட்டாள். “உங்கள் முயற்சிகள் எந்த அளவு யவன வீரர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன?”

 

ஒரு தாசி சொன்னாள். “தீவிரமாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.”

 

இன்னொரு தாசி சொன்னாள். “சொந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்து விட வேண்டும். மனைவி குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்று அவர்களுக்கு ஆழமாகத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது....”

 

மற்றவர்களின் கருத்துகளும் இந்த இரண்டு கருத்துகளின் அடிப்படையிலேயே இருந்தன. மைனிகா திருப்தியுடன் சொன்னாள். “இப்படியே தொடருங்கள். அவர்களிடம் அவர்கள் குழந்தைகளைப் பற்றி விசாரியுங்கள். மனைவி மற்றும் பெற்றோரைப் பற்றி விசாரியுங்கள். அவர்கள் ஊரைப் பற்றிக் கேளுங்கள். உங்கள் கேள்விகள் அந்த நினைவுகளை அதிகரிக்க வைக்கட்டும். அது மட்டுமல்ல. அவர்கள் தங்கள் ஊருக்கே திரும்பப் போய் விட வேண்டும் என்ற யோசனையை தங்களுக்குள் பேசிக் கொள்ளவும் ஊக்குவியுங்கள். இதை யாராவது சக்கரவர்த்திக்குத் தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும் அல்லவா என்று அவர்கள் மீதுள்ள அக்கறையில் கேட்பதாகக் காண்பித்துக் கொள்ளுங்கள்…”

 

தாசிகள் தலையசைத்தார்கள். அனைவரும் மௌனமாக நதியில் நீராட ஆரம்பிக்க மைனிகாவின் மனம் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது. தட்சசீலத்தில் சின்ஹரனை வசப்படுத்தி, ஏற்றுக் கொண்ட வேலையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு கேகய நாட்டுக்குத் திரும்பிய பிறகு மறுபடியும் அரசியல் சதுரங்கக் களத்தில் இயங்க இன்னொரு வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கும் என்று அவள் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

கேகய நாட்டுடன் போர் புரிய அலெக்ஸாண்டர் வருவதற்கு சில நாட்கள் முன்னதாகவே விஷ்ணு குப்தர் அவளைச் சந்திக்க ரகசியமாக வந்திருந்தார். அந்த தட்சசீல ஆசிரியர் அமைச்சர் இந்திரதத்தின் நண்பர், மிகவும் கூரிய அறிவு படைத்தவர் என்பதைத் தவிர அவரைப்பற்றி அவளுக்கு அதிகம் தெரியாது.  ஆனாலும் அவர் ஒரு வாடிக்கையாளராக வரக்கூடிய ஆள் அல்ல என்பதில் அவளுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. ஏனென்றால் உத்தேசம் அதுவானால் பார்வையிலேயே அது வெளிப்பட்டு விடும். அதனால் அவள் மிகுந்த மரியாதையுடன் அவர் காலைத் தொட்டு வணங்கினாள். அவர் ஆசி வழங்கியது வித்தியாசமாக இருந்தது. “கேகயத்துக்குச் சேவை புரிந்தது போல புனித பாரதத்துக்கும் சேவை செய்யும் வாய்ப்பை இறைவன் உனக்கு அளிக்கட்டும்.”

 

மைனிகா புன்னகையுடன் கேட்டாள். “கேகயம் புனித பாரதத்திற்குள் அல்லவா இருக்கிறது ஆச்சாரியரே? கேகயத்துக்குத் தொண்டு செய்வது பாரதத்திற்குத் தொண்டு செய்வதேயல்லவா?”

 

நிறையவே வித்தியாசம் இருக்கிறது. ஒரு போதும் சிறுபகுதி முழுமைக்கு இணையானதாக மாற முடியாது. மேலும் உன்னுடைய கேகய நாடு யவனர் வசமாகப் போகிறது மைனிகா. அதைத் தடுக்க வழியில்லை. அதனால் இனி நீ கேகயத்துக்கு மட்டும் தொண்டு செய்வதாக இருந்தால் அது யவனர்களுக்குத் தொண்டு செய்வது போலத் தான்

 

அவரைத் தவிர வேறு யாராவது அப்படிச் சொல்லியிருந்தால் மைனிகா எள்ளி நகையாடியிருப்பாள். கேகய நாட்டின் படை வலிமையும் மன்னரின் வலிமையும் அவள் நன்கு அறிவாள். ”கேகய நாட்டை யவனர்களோ, காந்தாரமோ வசப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல ஆச்சாரியரே. சந்தேகம் இருந்தால் அதைத் தாங்கள் தங்கள் நண்பரான கேகய அமைச்சரிடம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.”

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “கேகய நாட்டின் பலம் இந்திரதத்துக்குத் தெரியும். உனக்கும் தெரியும் மைனிகா. ஆனால் யவனர்களின் பலத்தை நீங்கள் யாரும் சரியாக அறிய மாட்டீர்கள். யவனர்களின் சக்கரவர்த்தி அலெக்ஸாண்டரின் பலத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள். வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது ஒரு பக்க கணிப்பு மட்டுமல்ல. இருபக்கமும் சரியாகக் கணக்கில்  எடுத்துக் கொண்டால் மட்டுமே யாரும் முடிவை யூகிக்க முடியும். ஆம்பி குமாரனும் அலெக்சாண்டரோடு கைகோர்த்துக் கொண்டிருக்கும் நிலைமையில் கேகயம் வெற்றியடைவதற்கு வாய்ப்புகள் குறைவு…”

 

மைனிகா சொன்னாள். “எந்த ஒரு சூழலையும் சரியாகக் கையாண்டு, முறையாக முயன்றால் முடியாதது என்பது கிடையாதல்லவா ஆச்சாரியரே. தோல்வியை ஒப்புக் கொண்டு சரணடைவதை விட முடிந்ததை முயற்சி செய்வது அல்லவா வீரம்?”

 

விஷ்ணுகுப்தர் அவள் சொன்னதை ரசித்தார். அழகும் அறிவும் ஒருங்கே சேர்ந்த அந்த தாசியை மனதினுள் அவரால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. ”நீ சொல்வது வாஸ்தவம் தான். ஆனால் சமாளிக்க முடிந்ததை விடப் பெரிய அளவில் வெள்ளம் நம் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்குமேயானால் அதைத் தடுக்க நம்மால் செய்ய முடிந்தது ஏதுமில்லை. அந்தச் சூழ்நிலையில் நாம் செய்ய வேண்டியதும், செய்ய முடிந்ததும் நம் உயிரையும், முடிந்த வரை நம் விலையுயர்ந்த உடைமைகளையும், காப்பாற்றிக் கொள்வது மட்டுமே. முழுவதுமாக ஒரு தீமையைத் தவிர்க்க முடியாது என்றால் அடுத்தபடியாக நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்தத் தீமையின் விளைவுகளைக் குறைப்பதே

 

மைனிகாவால் அவர் சொல்லும் யதார்த்தத்தை மறுக்க முடியவில்லை. அவரைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னாள். “உண்மை ஆச்சாரியரே. தாங்கள் இதை எல்லாம் என்னிடம் சொல்வது எதற்காக என்று நான் அறிந்து கொள்ளலாமா?”

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். ”கேகயத்தைக் காப்பாற்ற முடியாது மைனிகா. ஆனால் யவனர்கள் இங்கிருந்து மற்ற பகுதிகளை வென்று கொண்டே போவதைத் தடுத்து நிறுத்தலாம். இந்தப் புனித பாரதத்தில் அன்னியர் ஆதிக்கம் முழுவதுமாகப் பரவுவதைத் தடுக்கலாம்இந்தப் புனித பாரத மண்ணின் புத்திரியாக நீ மனம் வைத்தால் அது உன்னால் முடியும்

 

பாரதம் என்று சொல்லும் போதே அவர் குரலில் ஒரு பிரத்தியேக சிலிர்ப்பு தோன்றுவதை அவளால் உணர முடிந்தது. அதுமட்டுமல்லாமல் அவர் அப்படிச் சொல்லி விட்டு தன் சொந்தக் காரியத்திற்கு உதவி கேட்பதைப் போல் ஆத்மார்த்தமாகக் கைகூப்பிய போது அவளுக்கு என்னவோ போலிருந்தது.  அவள் போகப் பொருளாகத்தான் மனிதர்களால் அதிகம் பார்க்கப்பட்டிருக்கிறாள். கேகய ஒற்றர்களுக்குத் தொழிலில் அவள் உதவி புரிந்து வந்ததால் அவர்கள் மட்டுமே சம மரியாதை தந்து அவளிடம் பழகி வந்திருக்கிறார்கள். ஆனால் கைகூப்பி அவளை யாரும் வணங்குவது இதுவே முதல் முறை. அதுவும் வணங்குபவர் பல அரசர்கள், இளவரசர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு ஆசிரியராக இருந்திருப்பவர் என்பதால் அவளுக்கு அது கூச்சத்தையும், நெகிழ்ச்சியையும் ஒருங்கே ஏற்படுத்தியது.

 

அவள் உணர்ச்சிவசப்பட்டவளாகச் சொன்னாள். ”இந்தச் சாதாரண தாசியின் தகுதியை உள்ளதற்கும் அதிகமாக உயர்த்துகிறீர்கள் ஆச்சாரியரே. தங்களைப் போன்ற உயர்ந்தவர்கள் கைகூப்பும் அளவுக்கு எந்தப் பெருமைக்கும் உரியவள் அல்ல நான்”

 

விஷ்ணுகுப்தர் அமைதியாகச் சொன்னார். “பிறந்த குலமும், செய்யும் தொழிலும் யார் தகுதியையும் நிர்ணயிப்பதில்லை மைனிகா. எண்ணும் எண்ணங்களும், வாழும் விதமும், செய்யும் செயல்களும் மட்டுமே ஒருவரது தகுதியை அடையாளம் காட்டுபவை. அந்த வகையில் நீ வணக்கத்திற்கு உரியவள் என்றே நான் கருதுகிறேன்.  நீ முன்பு கேகயத்திற்காக ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டு உன்னை நிரூபித்துமிருக்கிறாய். கேகயத்திற்காக அன்று நீ செய்த சேவை இன்று பாரதத்திற்குத் தேவைப்படுகிறது. அலெக்ஸாண்டரை இந்த மண்ணிலிருந்து விரட்ட உன் உதவியை இந்த அடியவன் எதிர்பார்க்கிறேன்””

 

மைனிகா சொன்னாள். “நான் முன்பு தட்சசீலத்தில் சேனாதிபதி சின்ஹரன் விஷயத்தில் பங்காற்றியதை வைத்து இப்படிக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சின்ஹரனிடம் பலித்த அதே யுக்தி யவன அரசன் அலெக்ஸாண்டரிடமும் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை. அப்படி பலிப்பதாக இருக்குமென்றால் கேகயத்தைக் காப்பாற்றவே நான் அந்த முயற்சியை எடுக்கலாமே….”


(தொடரும்)

என்.கணேசன்




4 comments:

  1. Chanakyan is a good psychologist also. Superb.

    ReplyDelete
  2. விஸ்ணுகுப்தர் ... அலெக்சாண்டருக்கு முன்னதாக தன் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்...சிறப்பு....

    ReplyDelete
  3. I have not thought this strategy..was thinking he would call other kings to get United!!!

    ReplyDelete