சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 10, 2023

யாரோ ஒருவன்? 133



ஞ்சனி சொன்னபடியே இவ்வளவு சீக்கிரத்தில் திரும்பி வருவாள் என்று சரத்தும் தீபக்கும் எதிர்பார்த்திருக்கவில்லை. காரில் முன்சீட்டில் சரத்துடன் தீபக் அமர்ந்து கொள்ள பின்சீட்டில் ரஞ்சனி அமர்ந்து கொண்டாள். போகும் போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. வீட்டுக்குப் போனவுடன் சரத் ரஞ்சனியின் கைகளைப் பிடித்துக் கொண்டு உருக்கமாக மன்னிப்புக் கேட்க முயன்ற போது ரஞ்சனி தீயைத் தொட்டவள் போல் பதறி கையை உதறி விட்டுப் பின் வாங்கினாள்.

இன்னொரு தடவை உன் விரல் என் மேல பட்டாலும் நான் இந்த வீட்டுல இருக்க மாட்டேன்...” வார்த்தைகள் உறுதியாக வந்தன.

சரத் ஓங்கி அறைந்தது போல உணர்ந்தான். அவள் தொடர்ந்து சொன்னாள். “இன்னொரு விஷயம். லீவு நாள்கள்ல நான் என் பையனை அவனோட பாட்டி தாத்தா வீட்டுக்குக் கூட்டிகிட்டு போயிடுவேன். சம்மதம்னா இங்கே இருக்கேன். இல்லாட்டி இப்பவே இங்கேயிருந்து போயிடறேன்....”

சரத் மெல்லத் தலையசைத்தான். அவள் அவர்கள் அறைக்குச் சென்று தன் படுக்கையை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து முன்னறையில் போட்டுக் கொண்டாள். தீபக் சரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சரத் இனி இவன் என்ன சொல்வானோ என்று பெருந்துக்கத்துடன் தீபக்கைப் பார்த்தான். அவன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாயிருக்கவே சரத் கண்கலங்கியபடி தானாகவே சொன்னான். “என்னை மன்னிச்சுடுடா. நிஜமாவே நான் அன்னைக்கு அப்படி நடந்துகிட்டதுக்கு இப்ப கூசறேன். ஆனா... ஆனா.... பழச மாத்தற சக்தி எனக்கில்லையே தீபக்...”

தீபக் கண்கள் ஈரமாகச் சொன்னான். “முடிஞ்சது முடிஞ்சு போச்சு. நீங்க போய்த் தூங்குங்கப்பா

சரத் அந்த வார்த்தைகளில் உடைந்து போனான். தீபக் திரும்பவும் அவனை அப்பா என்றழைப்பான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.... அணை உடைந்த வெள்ளம் போல் வரும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்து அறைக்கு விரைந்தவன் உள்ளே போய் குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தான்.

ரஞ்சனிக்கு அவர்கள் இருவரும் பேசிக் கொண்டது காதில் விழுந்தது. மகன் எதையுமே கேட்காமல் சரத்தை மன்னிப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. நெகிழ்ச்சியுடன் மனதில் சொல்லிக் கொண்டாள். ‘அவன் மாதவனின் மகன்... மன்னிப்பது அவனுக்குச் சுலபமாக முடிகிறது. ஆனால் என்னால் அது முடியாது....’


ல்யாண் வீட்டில் மேகலாவும், தர்ஷினியும் அவனிடமும், வேலாயுதத்திடமும் ஒரு வார்த்தை கேட்கவுமில்லை, ஒரு வார்த்தை சொல்லவுமில்லை. மேகலா மகள் அறையிலேயே உறங்கப் போய் விட்டாள். ஒரு இறுக்கமான சூழ்நிலை வீட்டில் நிலவுவதை கல்யாணுக்குச் சகிக்க முடியவில்லை. வேலாயுதம் அவனைச் சமாதானப்படுத்தினார். “மூனு நாள் கோபமிருக்கும், நாலு நாள் பேச்சிருக்கும். அப்பறம் எல்லாம் சரியாயிடும்டா”. அதுவும் சரி தான் என்று கல்யாண் நினைத்துக் கொண்டான்.

வேலாயுதம் கடைசியாக நாகராஜிடம் நாகரத்தினக்கல் தரும்படி சொன்னதற்கு அவன் சொன்ன பதிலைக் கோபத்துடன் மகனிடம் சொன்னார். “அந்தப் பாம்பாட்டிக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பாரேன்...”

கல்யாண் எரிச்சலோடு சொன்னான். “அவன் மணாலிலயே அந்த பாம்பாட்டிக்கு அதைத் தரணும்னு சொல்லிகிட்டிருந்தான்.”

வேலாயுதம் சொன்னார். “இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடலை. அந்தப் பாம்பாட்டி பக்கத்துல புலியகுளத்துல தான் இருக்கான். அவனை மிரட்டி அதை வாங்கிடறது ஒன்னும் கஷ்டமில்லை. அனாமதேயமான அவன் நமக்கு எதிரா எதுவும் பண்ணிட முடியாது. வேணும்னா போனா போகுதுன்னு அவனுக்கு அஞ்சாயிரமோ, பத்தாயிரமோ வீசியெறி...”

காலையில் முதல் வேலையாக அதைச் செய்ய வேண்டுமென்று கல்யாண் நினைத்தான்.


பீம்சிங் நேற்று போலவே இன்றும் பதினொன்றரைக்கு நாகராஜின் வீட்டுக்கு எதிரில் வந்து விட்டான். அங்கு சூழ்நிலையும் நேற்று போலவே தான் இருந்தது. காலையிலிருந்து காளிங்க சுவாமியின் பார்வை அவனுக்குள்ளிருந்து தெரிந்து சங்கடப்படுத்தியிருக்கவில்லை. ஆனால் இப்போது பழையபடி அவர் பார்வையை அவன் உணர ஆரம்பித்தான். சுவாமிஜி கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

சரியாக 11.45க்கு பீம்சிங் தெருவைக் கடந்தான். நாகராஜின் வீட்டின் வெளி கேட்டின் கதவை அவன் மெல்லத் திறந்தான். வாசற்கதவு வெறுமனே சாத்தி இருந்தது. அவன் தள்ளியவுடன் திறந்து கொண்டது. அவன் சத்தமில்லாமல் உள்ளே நுழைந்தான். முன்னறையில் நிறைய சில அட்டைப்பெட்டிகளில் பொருள்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த முன்னறையைத் தாண்டி மெல்ல உள்ளே போன போது ஹாலில் சில சாக்குமூட்டைகளில் பொருள்கள் கட்டிவைக்கப்பட்டிருந்தன. வீடு காலி செய்யப் போகிறார்கள் போலிருக்கிறது என்று பீம்சிங் அனுமானித்தான். சாக்குமூட்டைகளுக்குப் பக்கத்திலேயே  ஒருவன் படுத்திருந்தான். அவன் தான் நாகராஜின் உதவியாளாக  இருக்க வேண்டும். அவன் காளிங்க சுவாமி சொன்னபடியே ஆழமான உறக்கத்தில் இருந்தான்.


அன்று நிறுத்தி நிதானமாக காளிங்க சுவாமி சொன்ன வார்த்தைகள் பீம்சிங்குக்கு மனப்பாடம் ஆகியிருந்தன. “.... கண்களை மூடிக்கொள். உன் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள். நின்றபடியே மூன்று முறை சுற்று. சுற்றும் போது கண்களை மூடி இருந்தாலும் ஒரு திசைப் பக்கம் வருகையில் அந்த இடத்தில் பிரகாசம் தெரியும். அந்த வெளிச்சம் உன் கண்களைக் கூச வைக்கும் வெளிச்சமாக இருக்கும். மூன்றாவது முறை அந்த வெளிச்சத்தின் பக்கம் வரும் போது கண்களைத் திறந்து பார். அதன்பின் அந்த வெளிச்சம் உனக்கு வழிகாட்டும்...”  

பீம்சிங் அவர் சொன்னபடியே செய்தான். நின்றபடியே சுற்றும் போது ஒரு திசையில் கண்களை மூடியிருந்தும் ஒளிவெள்ளம் தெரிந்தது. மூன்றாவது முறை அவன் ஒளியை உணர்ந்து கண்களைத் திறந்த போது ஒளிவந்த இடம் ஒரு பூஜை அறையாய் இருந்தது.   பூஜை அறையில் தேஜஸுடன் கீழே அமர்ந்திருந்த மனிதன் நாகராஜாக இருக்க வேண்டும். நாகராஜ் அவனைப் பார்த்துப் புன்னகைக்க ஒரு கணம் அவனுடைய சப்தநாடியும் ஒடுங்கியது.

பயப்படாதே. அவன் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. அவனால் அசையக்கூட முடியாதுகாளிங்க சுவாமி சொல்வதை பீம்சிங் உணர்ந்தான். பீம்சிங் பயத்தை விட்டு பூஜையறையில் நுழைந்தான். பூஜையறையின் பீடத்தில் ஒரு பாம்பு படம் எடுத்து நின்று கொண்டிருந்தது. அதற்குக் கீழே ஒரு வெள்ளித் தட்டில் காளிங்கசுவாமி காட்டியிருந்தபடியான ரத்தினக்கல்கள் மூன்று இருந்தன. அதற்கு நடுவில் இரண்டுமடங்கு பெரிதாக ஒரு ரத்தினம் இருந்தது. அது காளிங்க சுவாமி சொன்னது போலவே மூன்று மடங்கு அதிகமாக ஜொலிப்பதாய் இருந்தது. பீம்சிங் நெருங்கியவுடன் அந்தப் பாம்பு வேகமாக அங்கிருந்து சரசரவென வெளியேறியது.

நாகராஜ் அந்த நாகரத்தினக் கல்லை பூஜையறையில் வெளிப்பார்வைக்குத் தெரிகிறபடியே வைத்திருப்பான் என்று காளிங்க சுவாமி எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஏதாவது பீரோவுக்குள்ளோ, இரகசிய இடங்களிலோ வைத்திருப்பான் என்றும் பீம்சிங் அதை எடுக்க சிறிதாவது சிரமப்பட வேண்டியிருக்கும் என்று எண்ணியிருந்தார். அப்படி மறைத்து வைத்திருந்தால் கண்டுபிடிக்க வழிகளையும் அவர் அவனுக்குச் சொல்லித் தந்திருந்தார். ஆனால் நாகராஜ் அந்தச் சிரமத்தையும் அவனுக்குத் தரவில்லை.

பீம்சிங்குக்குப் பயம் போயிருந்தாலும் நாகராஜ் அவனையே பார்த்துக் கொண்டிருப்பது அசௌகரியமாக இருந்தது. ஹாலில் தூங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆளைப் போல காளிங்க சுவாமி இவனையும் தூங்க வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவன் நினைத்துக் கொண்டான்.   

உன் வேலையில் நான் குறுக்கிட மாட்டேன் பீம்சிங்.” என்று நாகராஜ் சொன்னான்.

பீம்சிங்கால் கேட்காமலிருக்க முடியவில்லை. “ஏன்?”

இதனால் எனக்கு ஆக வேண்டிய வேலை இன்று சாயங்காலத்தோடு முடிந்து விட்டது. இது என்னிடமிருந்து போகும் காலமும் வந்து விட்டது. அதனால் தாராளமாக அதை எடுத்துக் கொள். எனக்கு உன்னிடம் பேச வேண்டியிருக்கிறது. அதனால் தான் தூங்காமல் இருந்தேன்.” நாகராஜ் சிலை போல் உடல் அசையாமல் அமர்ந்திருந்தாலும் அமைதியாகப் பேசினான்.

காளிங்கசுவாமி பீம்சிங்கின் மனதில் சொன்னார். “முதலில் நான் சொன்னபடி அந்த ரத்தினத்தை எடுத்துக் கொள். பிறகு பேசு…”

பீம்சிங்கும் முக்கிய வேலை செய்யும் நேரத்தில் பேசிக் கொண்டிருப்பவன் அல்ல. அவன்பொறுங்கள்என்று சொல்லி விட்டு அந்தக் கற்களை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்து காளிங்க சுவாமி சொல்லியிருந்தது போலவே அவர் பூஜை செய்து தந்திருந்த மஞ்சள் துணியை எடுத்து அதில் அந்தப் பெரிய ரத்தினக்கல்லை பயபக்தியுடன் எடுத்து வைத்து அதை மடித்து பத்திரப்படுத்திக் கொண்டான்.

நீ இப்போது எடுத்து வைத்துக்கொண்ட ரத்தினக்கல் என்ன, அதன் சக்தி என்ன என்று உனக்குத் தெரியுமா?” நாகராஜ் கேட்டான்.

காளி கோயிலில் அமர்ந்து இங்கே நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த காளிங்க சுவாமி ஆபத்தை உணர்ந்தார். “பீம்சிங் அங்கே அதிகம் பேசிக் கொண்டு நிற்காதே. உடனே கிளம்பி விடுஎன்று அவர் சொல்வதை பீம்சிங் தன் மனதில் உணர்ந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. Superb and thrilling and touching. All in one novel.

    ReplyDelete
  2. Wowww,, 3 shorts were in 3 ways...

    "Beemsingh enna seiya poraar oh therila"..

    ReplyDelete
  3. Superb sir. As always waiting for next Monday

    ReplyDelete
  4. நாகராஜ் கையை விட்டு அந்த விஷேஷ நாகரத்தினம் போவது உறுதி... ஆனால், காளிங்க சுவாமிக்கும் கிடைக்கப்போவதில்லை....

    ReplyDelete