பீம்சிங் போவதற்கு ஒரு அடி எடுத்து வைத்திருப்பான். நாகராஜ்
கேட்டான். “ஏன் உனக்குப் பயம் பீம்சிங்? மூன்று
நாழிகை நேரம் என்னால் பேசுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. ஏன், இதை விட
என் குரலையும் நான் அதிகப்படுத்திக் கொள்ள முடியாது. நான் உன்னிடம்
பத்து நிமிடங்களுக்கு மேல் பேசவும் போவதில்லை. அப்படி
இருக்கையில் என்னிடம் பேச உனக்கென்ன பயம்?”
பீம்சிங் நாகராஜ் திரும்பத் திரும்ப
ஏன் பயம், என்ன பயம் என்று கேட்பதை ரசிக்கவில்லை. “பயமெல்லாம்
இல்லை. என்ன விஷயம் சொல்லுங்கள்?”
“நீ இப்போது
எடுத்து வைத்துக்கொண்ட ரத்தினக்கல் என்ன, அதன் சக்தி என்ன
என்று உனக்குத் தெரியுமா?” நாகராஜ் மறுபடியும் கேட்டான்.
“அதெல்லாம்
எனக்குத் தெரிய வேண்டியதில்லை. நான் எதிர்பார்க்கும் தொகை கிடைத்தால் அதற்கான வேலை செய்து
கொடுப்பது தான் என் தொழில்” பீம்சிங் கறாராய் சொன்னான்.
“உனக்கு
பத்து லட்சம் ரூபாய் தந்து அணுகுண்டு எடுத்து வரச் சொன்னால் பணம் வாங்கிக் கொண்டு அதை
எடுத்துக் கொடுக்கக் கிளம்பி விடுவாயா?”
”அதற்கு
நான் என்ன பைத்தியமா?”
“நீ ஒத்துக்
கொண்டு வந்த வேலை அதற்குக் குறைந்தது அல்ல. நீ இப்போது
மஞ்சள் துணியில் மடித்து எடுத்து வைத்துக் கொண்ட ரத்தினக்கல் தவறான ஆளிடம் கிடைத்தால்
உலகத்தையே சில நாட்களில் சுடுகாடாக மாற்றி விடலாம்.”
காளிங்க சுவாமி அவனை உடனடியாக அங்கிருந்து
கிளம்பும்படி எச்சரித்தார். நாகராஜ் பேச்சைக் கேட்பது அவனுக்கு நல்லதல்ல, அவருக்கும்
நல்லதல்ல.
அவர் எச்சரித்தவுடன்
பீம்சிங்கும் அங்கிருந்து உடனே கிளம்புவதே நல்லது
என்று எண்ணி இரண்டடி எடுத்து வைத்தவுடன் நாகராஜ் சொன்னான். “பாவம் உன்
அனுமான்”
அனுமான் பெயரைச் சொன்னவுடன் ஏன் அப்படிச் சொன்னான் என்று நாகராஜைக் கேட்காமல்
போக பீம்சிங்கால் முடியவில்லை. கேட்டான்.
நாகராஜ் சொன்னான். “ஒவ்வொரு
திருட்டுக்கும் முன்னால் அனுமாரைக் கும்பிட்டு விட்டு திருடப் போவாய். உனக்கு
அனுக்கிரகம் பண்ணி அனுமார் அந்தப் பாவத்தில் பங்கெடுத்துக் கொண்டார்…”
பீம்சிங் கோபத்தோடு சொன்னான். “இது வரைக்கும்
நான் ஏழையிடமிருந்தும், பாவப்பட்டவனிடமிருந்தும் எதையும் திருடியதில்லை. அளவுக்கு
அதிகமாய் இருப்பவனிடமிருந்தும், ஏமாற்றி சேர்த்து வைத்தவனிடமிருந்தும் தான் திருடியிருக்கிறேன். அதை பாவமில்லை”
நாகராஜ் சிரித்துக் கொண்டே சொன்னான். “நீ சினிமா
அதிகம் பார்க்கிறவன் என்று தெரிகிறது”
பீம்சிங்கும் புன்னகைத்தான். ”சரி அது
சினிமா வசனமாகவே இருக்கட்டும். அது முழுவதும் சரியென்று தான் நினைக்கிறேன். இப்போதே
இதை எடுத்துக் கொண்டு
போய் கொள்ளைக்காரனிடம் தரப்போவதில்லை.
உங்களை மாதிரி நாகசக்தி இருக்கும் ஒரு நல்ல சுவாமிஜியிடம் தான் தரப்போகிறேன்.”
சொன்னதுடன் அங்கே வெள்ளித் தட்டில் இருந்த மற்ற ரத்தினக்கல்களைக் காட்டி
விட்டுச் சொன்னான். “இதையும் எடுத்துக் கொண்டு வர வேண்டுமா என்று
கேட்டதற்கும் வேண்டாம் என்று சொன்னவர் அந்த சுவாமிஜி. அதனால்
சரியான கைக்குத் தான் போகிறது இது. அது மட்டுமல்ல
இது உங்களிடமிருந்து விலகிப் போகும் காலம் நெருங்கி விட்டதென்று மாகாளியே சுவாமிஜியிடம் சொல்லி இருக்கிறாளாம். அதனால்
உலகத்தையும், அனுமாரையும் பற்றிக் கவலைப்படுவதை நீங்கள் விட்டு விடலாம்...”
பீம்சிங்கின்
பதிலை காளிங்க சுவாமி மிகவும் ரசித்தார். ”சபாஷ்” என்று அவர் சொல்வதை பீம்சிங் உணர்ந்தான்.
நாகராஜ் சொன்னான். “என்னிடமிருந்து
இந்த ரத்தினக்கல் விலகும் காலம் வந்து விட்டது என்று சொன்ன மாகாளியிடம் சுவாமிஜி அவரிடம்
அது வந்து சேருமா, அப்படி வந்து சேர்ந்தாலும் எத்தனை நாளைக்கு
அது இருக்கும் என்று கேட்டிருக்கிறாரா என்று கேள் பீம்சிங்”
பீம்சிங் திகைத்தான்.
என்ன இது? அங்கிருந்து அந்த சுவாமிஜி என் மூலமாக இவர் பேசுவதைக் கேட்கிறார். அதைத்
தெரிந்து கொண்டு இவரும் அவரைக் கேள்வி கேட்கிறார். இருவருக்கும் இடையே நான் என்ன டெலிபோனா?
காளிங்க சுவாமி
நாகராஜின் கேள்வி கேட்டு துணுக்குற்றார். அவன் கேட்டது மிகச்சரி. அவர் காளியிடம் அதைக்
கேட்கவில்லை. கேட்டால் அவளிடமிருந்து எதாவது கசப்பான பதில் வந்து விட்டால் என்ன செய்வதென்ற
பயத்தால் அவர் கேட்டிருக்கவில்லையா என்பதை இது வரை யோசித்ததில்லை.
நாகராஜ் சொன்னான்.
“காலப் பெட்டகத்திலிருந்து சில காட்சிகளை எடுத்துக் காண்பிக்க எனக்கு சாதாரண நாகரத்தினக்கற்கள்
போதவில்லை. இந்த விசேஷ நாகரத்தினத்தின் சக்தி தேவைப்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்டு
விட்டு இப்போது இதற்கு விடை தந்து விட்டேன். இந்த விசேஷ நாகரத்தினம் போகப் போகும் பாதையை நான்
அறிவேன் சுவாமிஜி. அந்தப் பாதையை யார் வழி மறித்து எடுத்தாலும் அவர்களைக் கொன்று விட்டு
அது தான் நிர்ணயித்த பாதையைத் திரும்பத் தொடரும். எச்சரிக்கையாக இருங்கள் சுவாமிஜி.
உங்களிடம் வந்து சேர்ந்தால் அது உங்களிடமிருந்து இடம் மாறி உங்கள் சீடர்களிடம் போய்ச்
சேர அதிக காலம் ஆகாது. அதை வைத்திருக்கத் தகுதியானவர் என்று நீங்கள் உங்களை நினைக்கிறீர்கள்.
அப்படி இருந்தும் உங்கள் மாகாளி உங்களிடம் அதைக் கொண்டு சேர்க்காததற்குக் காரணம் உங்கள்
தகுதிக்குறைவல்ல. உங்களைக் காப்பாற்றும் அருளைத் தான் மாகாளி காட்டியிருக்கிறாள். அந்த
அருளால் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்...”
காளிங்க சுவாமி
திகைத்தார். நாகராஜ் பீம்சிங்கிடம் சொன்னான்.
“இனி நீ போகலாம் பீம்சிங். கடவுளுக்கு நான் செய்யும் தொழில் பிடிக்கவில்லை என்றால்
இந்த அளவு வருமானமிருக்கிற வழியை எனக்குக் காட்டட்டும் என்று ஒரு முறை சொல்லியிருக்கிறாய்.
உண்மையிலேயே அப்படி ஒரு வழி காட்டச் சொல்லி அவரிடம் எப்போதாவது கேட்டிருக்கிறாயா?”
பீம்சிங் ஒரு கணம்
பேச்சிழந்து போய் நாகராஜைப் பார்த்தான். நாகராஜ் புன்னகையுடன் சொன்னான். “திருட்டு
வேலைக்குக் கூட உனக்கு அனுக்கிரகம் செய்யும் கடவுள் நீ வேண்டினால் நல்ல வழிக்கு அனுக்கிரகம் செய்ய மாட்டாரா. எதற்கும்
அனுமாருக்கு ஒரு வாய்ப்பு தந்து பார் பீம்சிங்”
சொல்லிவிட்டு நாகராஜ்
தன் கண்களை மூடிக் கொள்ள, பீம்சிங் தன்னையுமறியாமல் அவனைக் கைகூப்பி வணங்கி விட்டு
அங்கிருந்து கிளம்பினான். ஏனோ காளிங்க சுவாமியும் எதுவும் சொல்லாமல் அவனுக்குள் மௌனம்
சாதித்தார்.
அஜீம் அகமது கடிகாரத்தைப் பார்த்தான். இரவு பன்னிரண்டரை. பீம்சிங் வேலையைச் செய்து கொண்டிருக்கலாம், அல்லது
முடித்தும் இருக்கலாம். அவனை நேரடியாக அழைத்துத் தெரிந்து கொள்ள அவன் விரும்பினாலும்
காளிங்க சுவாமி அதற்கு அனுமதிக்கவில்லை. மந்திரக் கவசம் போட்டு அனுப்பியிருப்பதால்
அப்படிக் கூப்பிட்டு பேசுவது மந்திரக் கவசத்தைப் பலவீனப்படுத்துவது போலாகி விடும் என்று
சொல்லியிருந்தார். எப்படியும் ஒரு நாளில் தெரிந்து விடும். இத்தனை பொறுத்திருந்து விட்டு
இப்போது அவசரப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றாலும் எங்கிருந்தோ ஆபத்து நெருங்கிக் கொண்டிருப்பது
போல அவனுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.
ரகசியப் போனில்
அவன் ஆளை அழைத்து அஜீம் அகமது கேட்டான். “மகேந்திரன் மகனுக்கு ரா பலத்த பாதுகாப்பு
தந்திருக்கிற மாதிரி அவன் வீட்டுக்கும் தந்திருக்கிறதா என்ன?”
“நரேந்திரன் வீட்டிலிருக்கும்
போது தான் வீட்டுக்குப் பலத்த பாதுகாப்பு இருக்கிறது. அவன் இல்லாத போது பாதுகாப்பு
ஏற்பாடுகள் பெரிதாக இல்லை”
“அப்படியானால் தனியாக
இருக்கும் அவன் தாய்க்குப் பாதுகாப்பு பலமாக இல்லை. சரிதானே”
“சரி தான்”
அஜீம் அகமது இந்தத்
திட்டத்தில் மகன் கிடைக்கா விட்டால் அந்தத் தாயைக் குறி வைப்பதும் கூட முக்கியமானது
என்று நினைத்தான். மகனுக்கு வலிக்க வேண்டும். அஜீம் அகமது பெயரைக் கேட்டாலே அவன் அலற
வேண்டும். அஜீம் அகமதை வெல்ல இதுவரை ஆள் எவனும் பிறக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள
வேண்டும்.
(தொடரும்)
என்.கணேசன்
Good going.
ReplyDeleteகாளிங்க சுவாமிக்கு போய் சேர்ந்தாலும் பரவாயில்லை...ஆனால்,அஜும் கைக்கு போய் சேரக்கூடாது....
ReplyDeleteதீபக் அவுங்க தாத்தா,பாட்டியை விரைவில் சந்திக்க வேண்டும்...பாவம் இருவரும்...இந்த சந்திப்பாவது அவர்களுக்கு ஆறுதல் தரும்...