சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 24, 2022

சாணக்கியன் 32

 

நீண்ட யோசனைக்குப் பின் மன்னரிடம் விஷ்ணுகுப்தர் யாரென்ற உண்மையைத் தெரிவிப்பதே நல்லது என்ற முடிவுக்கு ராக்ஷசர் வந்தார். மன்னரை எதிர்த்து சபதமிட்டிருக்கிற விஷ்ணுகுப்தர் சாணக்கின் மகன் என்ற உண்மை மன்னருக்குத் தெரிந்திருப்பது எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும் என்று அவருக்குத் தோன்றியது.

 

மறுநாள் ராக்ஷசர் தனநந்தனிடம் விஷ்ணுகுப்தரைப் பற்றிய உண்மையைத் தெரிவித்த போது தனநந்தன் சிறிது அதிர்ச்சியடைந்தான். “அந்த அந்தணன் அதைச் சொன்ன போது கூட பைத்தியம் எதோ உளறுகிறது என்று தான் நான் நினைத்தேன் ராக்ஷசரே. உண்மையிலேயே அது சாணக்கின் மகன் தான் என்பது நிச்சயமாக எனக்குத் தெரிந்திருந்தால், அந்த ஆளை முறைப்படி நடத்தியிருக்கலாம்.” சொல்லும் போது அவன் கண்களில் அளவு கடந்த வெறுப்பு மேலோங்கி நின்றதை ராக்ஷசர் கவனித்தார்.

 

தனநந்தன் சிறிது நேரம் கடந்தகால நினைவுகளில் சஞ்சரித்தான். மனக்கண்ணில் சாணக்கைப் பார்த்தபடியே அவன் ராக்ஷசரிடம் சொன்னான். ”சாணக்கும் எனக்கு அக்காலத்தில் என் காலணிக்குள் சிக்கிக் கொண்ட சிறுகல்லாகவே இருந்தான் ராக்ஷசரே. மன்னர் என்ற மரியாதையை என்னிடம் என்றுமே காட்டியதில்லை. முச்சந்தியில் நின்று எனக்கு எதிராக முழக்கங்கள் இட்ட முட்டாள் அவன். அவன் சொல்வதைக் கேட்கவென்று மக்கள் கூட்டம் எப்போதும் இருந்தது. ஆனால் அவன் சிறைப்பட்ட போது சிதறிய அந்தக்கூட்டம் பின் எப்போதும் பாடலிபுத்திரத்தில் ஒன்றுகூடவில்லை...”

 

ராக்ஷசர் ஒன்றும் சொல்லவில்லை. மன்னரின் நினைவுகள் சஞ்சரிக்கும் காலத்தில் பிரதம அமைச்சராக இருந்த ஷக்தார் கூட சாணக் மீது அபிமானம் கொண்டவராக இருந்தார் என்று ராக்ஷசர் கேள்விப்பட்டிருக்கிறார். தனநந்தன் புரட்சிக்காரரான சாணக்கின் வாயடைத்ததைப் போலவே ஷக்தாரையும் ஒதுக்கி வைத்த சரித்திரத்தையும் கேள்விப்பட்டிருக்கிறார். விஷ்ணுகுப்தருக்கு விதி அனுகூலமாக இருந்திருக்கிறது. இல்லாவிட்டால் பாரதத்திற்காக கவலைப்படவும் அவருக்கு உயிர் இருந்திருக்காது. அவர் குறித்து அதிகப்பிரசங்கி, பைத்தியக்காரர் என்ற அபிப்பிராயங்கள் மட்டுமே மன்னரிடம் இருந்ததால் விஷ்ணுகுப்தர் பேச்சினால் ஏற்பட்ட கோபம் மன்னரைத் தீவிர நடவடிக்கை எடுக்கத் தூண்டாமல் அவரை வெளியேற்றுவதோடு நிறுத்தி விட்டது.

 

தனநந்தன்  சொன்னான். “எனக்கு ஒரு விஷயம் பெரும் ஆச்சரியத்தைத் தருகிறது ராக்ஷசரே. ஏன் சிலரால் தங்கள் வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டு ஒழுங்காக இருக்க முடிவதில்லை? சாணக்கும் பெரிய பண்டிதன். அமைதியாக மாணவர்களுக்கும், ஞானத்தை விரும்புபவர்களுக்கும் பாடம் நடத்திக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அந்த வேலையைச் செய்யாமல் என்னை எதிர்த்து கலவரப்பேச்சுகள் பேசி அழிந்து போனான். அவன் மகனும் தன் வேலையை விட்டு விட்டு எனக்கு அறிவுரை சொல்ல ஒரு முறை வந்தான். இப்போது என்னைப் படையைத் திரட்டிக் கொண்டு வடக்கே வரச் சொல்கிறான். இவன் பேசும் பாரதம் எங்கிருக்கிறது? அதற்கு இவன் என்ன பிரதிநிதியா? அதற்கு நான் உதவ வேண்டும் என்று இவன் எதிர்பார்ப்பதே பைத்தியக்காரத்தனம் இல்லையா? இது என்ன இவர்களது பரம்பரை வியாதியா? இதில் வேடிக்கை என்னவென்றால் என் ராஜ்ஜியத்திலிருந்து என்னையே புறந்தள்ளுவேன் என்று சபதம் வேறு போடுகிறான்... இது பைத்தியம் முற்றி விட்டதன் அறிகுறியே அல்லவா?.” சொல்லி விட்டு தனநந்தன் வாய் விட்டுச் சிரித்தான்.

 

ராக்‌ஷசரால் சிரிக்க முடியவில்லை. ஏதோ ஒரு ஆபத்தை இப்போதும் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரிடம் அவர் உணர்ந்தார். காவலர்களால் தூக்கப்படும் வரை இருந்த விஷ்ணுகுப்தர் வேறு. காவலர்களால் தூக்கப்பட்ட பின் மாறிய விஷ்ணுகுப்தரே வேறு. முன்பிருந்த வேதனை, துக்கம், பணிவு எல்லாம் போய் கோபம், அகங்காரம், அசாத்திய அமைதிக்கு மாறியதுடன் பெயரைக் கூட விஷ்ணுகுப்தர் என்று சொல்லாமல் சாணக்கின் மகன் சாணக்கியன் என்று சொன்னது ஏதோ ஒரு புதிய அவதாரம் எடுத்தது போலக் காட்டியது வெறும் மனப்பிரமை என்று அவரால் ஒதுக்க முடியவில்லை. ஆனால் மகத மன்னரை ராஜ்ஜியத்திலிருந்தே வெளியேற்றுவேன் என்று சொன்னது தனநந்தன் சொன்னது போல பைத்தியம் முற்றியதன் அறிகுறியாகவே எடுத்துக் கொள்ளத் தோன்றியது.

 

“என்ன யோசிக்கிறீர்கள் ராக்‌ஷசரே?”

 

’அந்த மனிதரிடம் இருக்கும் ஏதோ ஒன்று என்னை யோசிக்க வைக்கிறது மன்னா’ என்று மனதில் சொன்ன ராக்‌ஷசர் அந்த மனப்பிரமையை வாய்விட்டுச் சொல்வது அனாவசியம் மட்டுமல்ல முட்டாள்தனமும் கூட என்று உணர்ந்ததால் விஷ்ணுகுப்தரைப் பற்றிய எண்ணங்களை ஒதுக்கி விட்டு அவர் கொண்டு வந்த தகவலை மையமாக வைத்து இனி செய்ய வேண்டியது என்ன என்பதைப் பேச ஆரம்பித்தார்.

 

“ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் கொண்டு வந்த தகவல்கள் இரண்டு மன்னா. யவன மாவீரன் அலெக்ஸாண்டர் படையோடு பரதக்கண்டம் நோக்கிக் கிளம்பி வருவது ஒன்று.  ஆம்பிகுமாரன் அலெக்ஸாண்டரோடு நட்பு பாராட்டப் போகிறான் என்பது இன்னொன்று. இரண்டு தகவல்களில் முதலாவது நாமும் நம் ஒற்றர்கள் மூலம் அறிந்தது தான். இரண்டாவது தகவல் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ஆச்சாரியர் சொல்லும் தகவல் சரியாகத் தான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. தட்சசீலத்தில் அவர் வசிப்பதால் காந்தாரத் தலைநகரில் நடக்கும் விஷயங்கள் அவருக்கு முதலில் தெரியும் வாய்ப்பு இருக்கிறது. ஆம்பிகுமாரன் குணாதிசயங்களும் அதற்குத் தகுந்தபடி தான் முதலிலிருந்தே இருக்கின்றன.

 

தனநந்தன் யோசனையுடன் கேட்டான். “அலெக்ஸாண்டரின் படை வலிமை குறித்து நமக்கு என்ன தகவல் கிடைத்திருக்கிறது ராக்‌ஷசரே”

 

ராக்‌ஷசர் பெருமையுடன் சொன்னார். “மகதப்படை வலிமையில் ஐந்தில் ஒரு பங்கு தான் இருக்கும் அரசே”

 

தனநந்தன் சந்தேகத்துடன் கேட்டான். “அந்த அளவு படை வலிமையை வைத்துக் கொண்டு அவன் இவ்வளவு தூரம் எப்படி வென்று வந்திருக்கிறான் ராக்‌ஷசரே”

 

“அவன் போர் யுக்திகளில் சிறந்தவன் என்று சொல்கிறார்கள் அரசே. மேலும் அவன் இது வரை நம் படை போன்ற வலிமையான படையைச் சந்திக்கவில்லை. அதனால் தான் விஷ்ணுகுப்தர் நாம் சென்றால் அலெக்ஸாண்டரை வென்று விடலாம் என்று சொல்கிறார். நம் ராஜ்ஜிய எல்லைகளை விஸ்தரித்துக் கொள்ள இது அருமையான சந்தர்ப்பம் என்று சொல்கிறார். இதில் அவர் கணிப்பு அறிவுபூர்வமாகவே இருக்கிறது. ஆனால் இது நாம் அறியாத ஒன்றல்ல. இதை அறிந்தும் நாம் அதைச் செய்யக் கிளம்பாமல் இருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. அதை அவரிடம் நாம் சொல்லவில்லை. அவருக்கு அதைத் தெரிவிக்கும் அவசியமும் நமக்கில்லை. அவர் சாஸ்திரங்கள் படித்த அளவு தந்திரங்கள் அறிந்தவர் அல்ல என்பதால் நம் காரணத்தை அவர் அறிய வழியில்லை....”

 

ராக்‌ஷசர் பிரதம அமைச்சர் ஆன பிறகு தனநந்தன் நிர்வாக விஷயங்களிலோ, இது போன்ற அரசியல் தீர்மானங்கள் எடுப்பதிலோ அதிக சிரமம் எடுத்து சிந்திப்பதில்லை. அறிவுகூர்மை வாய்ந்த அவர் அந்த விஷயங்களை மிகவும் சிறப்பாகவே கவனித்து வந்தார். அவராக அவனிடம் அதை விளக்க முன்வந்தாலும் அவன் பாதி கவனத்துடன் தான் கேட்பான். அவனுடைய கேளிக்கைகளிலும், ஆடம்பரங்களிலும் ஒரு குறையுமில்லாமல் இருக்க செல்வம் அவனுக்கு அத்தியாவசியம் என்பதால் தனநந்தன் தன் பெயருக்கேற்றபடி கஜானாவை நிரப்புவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்தான். முக்கிய முடிவெடுக்கும் தருணங்களில் மட்டும் அவர் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதையும், அது ஏன் என்பதையும் சொல்வார். அவன் அதற்குத் தலையசைப்பான்.

 

இப்போதும் அலெக்ஸாண்டர் விஷயத்தில் அவனுடைய பிரதம அமைச்சர் எதோ தீர்மானித்து வைத்திருக்கிறார் என்பது அவனுக்குத் திருப்தியாக இருந்தது. அவன் அவரைக் கேள்விக்குறியுடன் பார்க்க ராக்‌ஷசர் விளக்கினார். “விஷ்ணுகுப்தர் சொல்கிறபடி நாமாக அவர் சொல்கிற பாரத எல்லை வரை போவதென்றாலும் இடையில் உள்ள பகுதிகள் நம் தலைமையில் ஒன்று சேர்வது இயலாததே. அப்படி ஒன்று சேர்ந்தாலும் கூட அவர்களைப் பிறகு ஆளவோ, நம் ராஜ்ஜியத்துடன் இணைக்கவோ அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள். அலெக்ஸாண்டரைத் துரத்தியடித்து விட்டுத் திரும்பும் போது அவர்களைப் பழைய சுதந்திரத்தோடு விட்டு விட்டுத் தான் நாம் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நாம் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் அவர்களுடன் நாம் சண்டையிடவும் வேண்டியிருக்கலாம். ஏற்கெனவே அலெக்சாண்டர் ஆம்பிகுமாரனுடன் சண்டையிட்டு களைத்திருக்கும் நமக்கு இந்த இடைப்பட்டவர்களையும் போரில் வெல்ல முடிந்தாலும் போரின் இழப்புகள் மேலும் நமக்கு கூடும்.

 

தனநந்தன் கேட்டான். “அலெக்ஸாண்டரும் ஆம்பிகுமாரனும் அவர்களை எல்லாம்  வென்று விட்டு நம்மை நெருங்கினால்?”

 

“பல தொடர் போர்களில் வென்று விட்டு களைத்து வரும் அலெக்ஸாண்டர் ஆம்பிகுமாரன் படைகளை அவர்களை விடப் பலமடங்கு வலிமையான நம் படை வெல்வது எளிது தான். மேலும் நாம் அவர்களைத் துரத்திக் கொண்டே காந்தாரம் வரை கூடப் போகலாம். இடைப்பட்டவர்கள் ஏற்கெனவே வெல்லப்பட்டவர்கள். போரிட்டு வலிமை குன்றியவர்களாக இருப்பார்கள். அவர்களை நம்முடன் இணைப்பது எளிது. அவர்களுக்கும் அலெக்ஸாண்டரையும் ஆம்பிகுமாரனையும் விட நாம் தேவலை என்ற எண்ணம் இருக்கும். நம்முடன் இணைந்து கொள்ள ஒத்துக் கொள்வார்கள். விஷ்ணுகுப்தர் சொன்னது போல அத்தனை பகுதிகளையும் இணைத்து நம் ராஜ்ஜியம் விஸ்தீரணமடையப் போவது உண்மை தான். ஆனால் அது அவர் எதிர்பார்ப்பது போல் இப்போதல்ல. அது அலெக்ஸாண்டர் நம்மை நெருங்கிய பிறகு தான் நடக்கப் போகிறது”

 

தனநந்தனுக்கு அவர் கணக்கு அருமையான தந்திரமாகத் தோன்றியது. அவன் தன் பிரதம அமைச்சரைப் பெருமிதத்துடன் பார்த்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

2 comments:

  1. விஸ்ணுகுப்தர் பாரத நன்மை பற்றி யோசிக்கிரார்... தனநந்தன் தன் சுயலாபத்தை பற்றி யோசிக்கிரான்....

    ReplyDelete
  2. Realistic calculations on their part. You have beautifully portrayed both sides sir. Amazing.

    ReplyDelete