காளிங்க சுவாமி அவனிடம் சொன்னார். “பயப்படாதே. ஒரு சக்தி
வாய்ந்த கவசம் உனக்குப் போட்டிருக்கிறேன். நீ உன்
வேலை முடித்து இங்கே வந்து அந்த ரத்தினத்தை ஒப்படைக்கும் வரை இந்த சக்திக் கவசம் உன்னோடு
எப்போதுமே இருக்கும்….”
பீம்சிங் தன் உடலைப் பார்த்தான். எந்தக்
கவசமும் அவன் உடம்பில் இருப்பது போல் தெரியவில்லை.
காளிங்க சுவாமி சொன்னார். “அந்தக்
கவசத்தைச் சாதாரண கண்களால் பார்க்க முடியாது. ஞானக்கண்ணால்
தான் பார்க்க முடியும்”
பீம்சிங் தலையசைத்தான். அவனுக்கு
இப்போது இருட்டு பழகிப் போயிருந்தது. கர்ப்பக்கிரக விளக்கு
வெளிச்சம் எட்டாத கோயில் இருட்டு மூலையில் நின்று கொண்டிருந்த இரண்டு சீடர்களைக் கூட
அவனால் நிழல் போலப் பார்க்க முடிந்தது.
காளிங்க சுவாமி மிக ஒல்லியாகத் தெரிந்தார்…. முகத்தில்
கண்கள் மட்டுமே பிரகாசமாய் ஜொலித்தன. மூக்கு கழுகின்
மூக்கு போல கூர்மையாகவும் முனையில் சற்று வளைந்தும் தெரிந்தது.
அவர் சொன்னார். “இந்த மந்திரக்கவசம்
இருக்கும் வரை உன்னை எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது. பாம்புகள்
தான் உன்னைப் பார்த்து பயப்படும். நீ பாம்புகளைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை.”
அவர் சொன்னதை அவனும் தன்னுள்ளே உணர்ந்தான். பாம்புகளைப்
பற்றி இப்போது யோசிக்கையில் பயம் எதுவும் எழவில்லை.
காளிங்க சுவாமி கேட்டார். “இனி பாம்புகளைப்
பார்க்கலாம் அல்லவா?”
அவன் தலையசைத்தான். அடுத்த
கணம் கோயிலில் பாம்புகள் நிறைந்திருந்தன. அவன் கண்ணுக்கெட்டிய
தூரத்தில் எல்லாம் பாம்புகள் தெரிந்தன. அவன் அமர்ந்திருந்த
மண்டலத்திலேயே கூட மூன்று சிறிய பாம்புகள் இருந்தன. அவன் திகைத்தான். இத்தனையும்
திடீரென்று எப்படி இங்கே வந்து சேர்ந்தன?
அவர் சொன்னார். “நீ ஆரம்பத்திலேயே
பயப்பட்டதால் தான் இந்தப் பாம்புகளை உன் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்தேன். இவை இங்கேயே
தான் இருந்தன...”
பீம்சிங் திகைத்தான். அவன் உணர்ந்த
திகைப்பு அவர் சொன்ன தகவலுக்கு மட்டுமல்லாமல் அவன் மனதில் நினைப்பதற்கெல்லாம் அவர்
பதில் சொல்வதற்காகவுமாய் இருந்தது.
காளிங்க சுவாமி சொன்னார். ”எழுந்து
போய் காளியை வணங்கி விட்டு வா”
பீம்சிங் எழுந்து போய் காளியை வணங்கினான். அவன் நடந்த
போதும் வணங்கிய போதும் தானாய் பாம்புகள் இடம் கொடுத்து ஒதுங்கிய அதிசயத்தைப் பார்த்தான். வணங்கி
நிமிர்ந்த போது காளி சிலையில் கூட இரண்டு பாம்புகள் சுற்றியிருந்ததை அவன் கவனித்தான். முன்பெல்லாம்
அவனுக்குக் கிலியை ஏற்படுத்திய பாம்புகள் அங்குமிங்கும் சுற்றி இருப்பது இப்போது எறும்புகள்
ஊர்வதைப் போல் ஒரு பொருட்டே அல்லாத விஷயமாக மாறி விட்டிருந்தது.
காளியை வணங்கி விட்டு வந்த போது காளிங்க
சுவாமி முன்பிருந்த இடத்தில் இருக்கவில்லை. கர்ப்பக்கிரக
விளக்கொளி படாத தெற்கு மூலையிலிருந்து அவர் குரல் மட்டும் கேட்டது. “இங்கே வா”
அவன் குரல் வந்த திசையில் மெல்ல கவனமாய்
நடந்தான். ஏனிந்த ஆள் இருட்டான இடமாகவே பார்த்து உட்கார்ந்து கொள்கிறார்
என்ற எண்ணம் வர ஆரம்பித்து அவர் எண்ணங்களை வாய் விட்டுச் சொல்வது போலவே புரிந்து கொள்ளக்கூடியவர்
என்ற நினைவு வந்து அப்படியே நிறுத்திக் கொண்டான்.
காளிங்க சுவாமி இருட்டில் இருந்தாலும்
அவர் இருக்கும் இடத்தில் ஏதோ இரண்டு
ரத்தினக்கற்கள் பச்சையும் நீலமும் கலந்த நிறத்தில் மின்னுவது தெரிந்தது. நெருங்கிய
போது அவர் கையில் தான் அந்த ரத்தினங்கள் மின்னுகின்றன என்பது புரிந்தது. அவர் அந்தக்
கற்களை அவனிடம் நீட்டியபடி சொன்னார். “நீ எடுத்து வரப் போகும் ரத்தினக்கல் இந்த கல்களை விட இரட்டை
மடங்கு பெரியதாக இருக்கும். அதன் ஜொலிப்பும் இதை விட மூன்று மடங்கு அதிகமாய் இருக்கும்.”
அவற்றைக் கையில் வாங்கிய போது பீம்சிங்
ஒரு சிலிர்ப்பை உணர்ந்தான். இந்த ஜொலிப்பு அசாதாரணமாக இருப்பதையும் அவன் கண்டான்.
அவர் ஒரு சீட்டை நீட்டினார். “இந்த விலாசத்தில்
தான் அந்த ரத்தினம் இருக்கின்றது. இதை வைத்திருப்பவன் சக்தி வாய்ந்தவன். நாகசக்தியை
வசப்படுத்தியிருப்பவன்”
பீம்சிங் கேட்டான். “உங்களை
மாதிரியா?”
இப்போதைக்கு நாகராஜ் அவரையும் விட சக்தி
வாய்ந்தவன் தான். அதை ஒத்துக் கொள்வதில் சிறு வருத்தம் இருந்தாலும் “என்னையும்
விட அவன் சக்தி வாய்ந்தவன்” என்று காளிங்க சுவாமி வெளிப்படையாகச் சொன்னார். ஆனால் அது
இன்னும் சில நாட்களுக்குத் தான். அந்த விசேஷ நாகரத்தினம் இடம் மாறும் போது சக்தி அளவுகளும்
இடம் மாறும். ஒரு வரலாற்றுப் பிழை சரிசெய்யப்படும்.
அவர் சிறுவனாக இருந்த போதே இந்தப் பாதைக்கு
வந்து விட்டார். கடந்த 75 வருடங்களாக அவர் ஆயில்ய நட்சத்திர நாட்களில் ராகு காலத்தில்
நாகங்களுக்கு விசேஷ பூஜை செய்கிறார். அந்த நாட்களில்
பூஜை முடியும் வரை அவர் தண்ணீர் கூடக் குடிப்பதில்லை. வருடத்திற்கு
மூன்று முறை உக்கிர பூஜை செய்கிறார். அந்த உக்கிர பூஜை
நாட்களில் முழு நாளும் அவர் பட்டினி தான். அப்படி
மிகவும் நியம நிஷ்டைகளைக்
கடைப்பிடித்து ஏராளமான பூஜைகள் செய்து இந்த நாகசக்தியின் உச்சத்திற்காகவே வாழ்ந்து
வரும் அவருக்கும், தீவிரமாகவோ,
உக்கிரமாகவோ எப்போதும் பூஜைகள் செய்திராத நாகராஜுக்கும் சரிசமமாய் நாகரத்தினங்கள் சில
நாட்கள் முன்பு வரை கிடைத்திருந்தன. அது அவரை அதிருப்தி அடைய வைத்தாலும் கூட காளிங்கசுவாமி
அந்த இளைஞன் அதிர்ஷ்டக்காரன் என்று எண்ணி விட்டு விட்டார். நமக்கும் தான் கிடைத்திருக்கிறது.
அவனைப் போல் கஷ்டப்படாமல் பெற்று விடாமல் உழைத்து அதைச் சம்பாத்தியமாகப் பெற்றிருக்கிறோம்
என்று அவர் தன்னைச் சமாதானம் செய்து கொண்டிருந்தார். அவருடைய முக்கிய இலக்கே விசேஷ
நாகரத்தினமாக இருந்தது. அது அவருக்குக் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு
இருந்தார். அதற்காக பூஜைகளைத் தொடர்ந்து முறையாகச் செய்து வந்தார். ஆயிரம் ஆண்டுக்கு
ஒரு முறை கிடைக்கும் விசேஷ நாகரத்தினம் அதிர்ஷ்டத்தில் கிடைத்து விடாது. விருப்பு வெறுப்பு
இல்லாமல் நடுநிலையாக அவர் யோசித்த பிறகும் அதைப் பெற அவரை விட அருகதை உள்ளவர்கள் வேறு
யாருமில்லை என்பது அவருக்குத் தீர்க்கமாகத் தெரிந்தது. ஆனால் மற்றவர்களுக்கு எல்லாம்
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சரியாகச் சொல்பவர் சொந்த விஷயத்தில் வழுக்கி விட்டார்.
(இது போன்ற சக்திகள் மற்றவர்கள் விஷயத்தில் வேலை செய்வது போல சொந்த விஷயத்தில் பல சந்தர்ப்பங்களில்
சரியாகப் பலிப்பதில்லை.) அருகதைக்கு மதிப்பில்லாமல் போய் விட்டது.
அவருக்குக்
கிடைக்காமல் அந்த விசேஷ நாகரத்தினம் நாகராஜ் கையில் போய் சேர்ந்ததை அவரால்
இப்போதும் ஜீரணிக்க முடியவில்லை. காளியின் உபாசகனான அவருக்கு அன்று காளி சொன்ன
பதில் இப்போதும் அவருடைய அறிவுக்கு எட்டவில்லை. ’அவன் எதையும் எதிர்பார்க்காமல் அன்புகாட்டுகிறானாம். அதனால் தான் அந்த விசேஷ நாகம் அவனிடம் அதைத் தந்து
விட்டு இறந்ததாம். அன்பு நாய்க்குட்டி
கூட அபரிமிதமாகக் காட்டும். அதற்காக
நாய்க்குட்டியிடம் அந்த நாகரத்தினத்தை நாகம் தந்து விடுமா?
என்ன பைத்தியக்காரத்தனமிது? நாகங்கள் இதை எப்படி தீர்மானிக்கலாம்? மந்திர தந்திரங்களின் சூட்சுமத்தை அறிந்த ஒருவன் கட்டளையிடும் போது அதை இந்த
நாகங்கள் அனுசரித்துப் போக வேண்டியவை அல்லவா?’
காளியிடமே தன் இந்தக்
கருத்தை காளிங்க சுவாமி சொல்லி இருக்கிறார். காளி அதற்குப்
பதிலே சொல்லவில்லை...
பீம்சிங் சந்தேகத்தோடு கேட்டது அவருடைய
எண்ண ஓட்டத்தைக் கலைத்தது. “உங்களை விட அவர் அதிகமாய் சக்தி வாய்ந்தவர்ன்னு சொல்றீங்க
சுவாமிஜி. அப்படி இருக்கறப்ப நீங்க போட்டிருக்கிற மந்திரக்கவசத்தை அவரால
உடைக்க முடியாதா? அவரால என்னைத் தடுத்து நிறுத்த முடியாதா?”
(தொடரும்)
என்.கணேசன்
Your lively writing is exceptional sir.
ReplyDeleteபீம்சிங்க்கு ஏற்பட்ட சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது... அதற்குள் தொடரும்னு போட்டுடிங்களே...ஐயா...
ReplyDeleteஅன்பு நாய்க்குட்டி கூட அபரிமிதமாக காட்டும்..... அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மாமலை! விஷேச நாகரத்தினம் அன்பானவருக்குக் கிடைத்ததில் அதிசயம் என்ன...
ReplyDelete