காளிங்க சுவாமி பீம்சிங்கின் அறிவுபூர்வமான சந்தேகத்தைக் கேட்டு
விட்டுப் புன்னகைத்தார். அது பற்கள் தெரியாத புன்னகையாக இருந்தது. அவர் சொன்னார். ”ஒருவன் எத்தனை சக்தி படைத்தவனாக
இருந்தாலும் அவனை மீறிய சக்திகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். இந்த மந்திரக்கவசத்தை அவனால் உடைக்க முடியாது. அதனால்
அவன் உன்னை அழிக்க முடியாது. அதுமட்டுமல்ல அந்த ரத்தினக்கல் அவனை
விட்டு விலக வேண்டிய காலம் நெருங்கிவிட்டதென்று மாகாளி சொல்லி இருக்கிறாள். அவள் வாக்கு
பொய்க்காது. என் பூஜையால் பஞ்சமி திதியில்,
அதாவது ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45லில் இருந்து
மூன்று நாழிகை நேரம் அவன் சக்திகள் அனைத்தும் இல்லாமல் போகும். அதனால் நீ அந்த நேரத்தில் அந்த பெரிய ரத்தினக்கல்லை அவனிடமிருந்து எடுப்பதை
அவனால் தடுக்க முடியாது. அவனால் கை கால்களைக்கூட அசைக்க முடியாது.
அதனால் அதைப் பற்றி நீ கவலைப்பட வேண்டியதில்லை…”
பீம்சிங் கேட்டான்.
“மூன்று நாழிகை என்றால் எவ்வளவு மணி நேரம்?”
காளிங்க சுவாமி சொன்னார். ”ஒரு நாழிகை என்பது 24 நிமிஷம். மூன்று நாழிகை என்பது 72 நிமிஷம். மூன்று உனக்கு அதிர்ஷ்ட எண்ணும் தானே?”
அவனைப் பற்றி அவர் அறியாத விஷயம் எதுவும் இருக்க முடியாதென்று
பீம்சிங்குக்குத் தோன்றியது.
அதனால் ஆச்சரியப்படுவதை நிறுத்திக் கொள்வது தான் சரி என்று நினைத்தவனாய்
இரவு 11.45 மணியிலிருந்து 72 நிமிடம் என்றால்
12.57 மணி வரை என்று கணக்கிட்டு மனதில் இருத்திக் கொண்டபடி
அடுத்த சந்தேகம் கேட்டான். “ஒருவேளை
நாம் முயற்சி செய்யப் போவது முன்பே தெரிந்து அந்த ரத்தினத்தை அவர் வேறெங்காவது ஒளித்து
வைத்து விட்டால் என்ன செய்வது?”
காளிங்க சுவாமி சொன்னார். “அந்த
ரத்தினத்தை அப்படியெல்லாம் அவன் எங்கேயாவது ஒளித்து வைக்கவெல்லாம் முடியாது.
அதை வைத்திருக்க சில விதிமுறைகள் எல்லாம் உண்டு. அதை வைத்திருக்க ஒரு பவித்திரமான இடத்தை உருவாக்கி அந்த இடத்தில் தான் வைக்க
வேண்டும். அந்தப் பவித்திரமான இடத்தை உருவாக்க அவன்
21 நாட்கள் விசேஷ பூஜை செய்திருக்க வேண்டும். அதனால்
அவன் திடீரென்று அதை வேறு இடத்தில் மாற்றி வைக்க முடியாது…”
பீம்சிங்குக்கு இந்த விஷயங்கள் குழப்பமாக இருந்தன. அதற்கு மேல் என்ன கேட்பது
என்று அவன் யோசித்த போது அவர் சொன்னார். “நீயும் அந்த ரத்தினக்கல்லை
எடுத்து எங்கேயாவது வைத்துக் கொண்டு வந்து விட முடியாது. இந்த்
மஞ்சள் துணியில் வைத்துக் கட்டி தான் எடுத்து வர முடியும்”
அவர் ஒரு மஞ்சள் துணியை அவனிடம் காட்டி விட்டு அதை ஒரு கருப்புப்
பையில் போட்டு அவனிடம் தந்தார்.
அந்த விசேஷ நாகரத்தினம் அவருக்குத் தான் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று
நம்பி அவர் அதை வைக்க 21 நாட்கள் பிரத்தியேக பூஜை செய்து எடுத்துவைத்திருந்த
துணி தான் அது.
அதை அவன் வாங்கிக் கொண்ட பின் அவர் சொன்னார். “இந்தக் கணத்திலிருந்து
அந்த ரத்தினக்கல்லை நீ என்னிடம் இதனுடன் ஒப்படைக்கும் வரை நீ மது அருந்தக் கூடாது.
புகைபிடிக்கக்கூடாது. யாருடனும் உடல் உறவில் ஈடுபடக்கூடாது.
சுத்தமில்லாத கையால் இதையோ அந்த ரத்தினத்தையோ தொடக்கூடாது. மொத்தத்தில்
நீ வணங்கும் தெய்வ விக்கிரகம் உன் கையில் இருக்கும் போது நீ எப்படி இருப்பாயோ அப்படி
இருக்க வேண்டும். இந்த மஞ்சள் துணி உனக்கு அந்த அளவு பவித்திரமானதாக
இருக்க வேண்டும்.”
அவன் தலையசைத்தான்.
பின் கேட்டான். “அங்கே நாகராஜ் தனியாகத் தான் இருப்பாரா,
அவருடன் வேறு யாராவது இருப்பார்களா? காவலுக்கு யாரையாவது அவர் வைத்திருக்க மாட்டாரா? அவர்கள்
என்னைத் தடுக்க மாட்டார்களா?”
காளிங்க சுவாமி சொன்னார். “நாகராஜுடன்
ஒரே ஒரு ஆள் தான் இருப்பான். உனக்கு நான் போட்டிருக்கும் மந்திரக் கவசம் அவனை உறங்க வைத்து
விடும். நீ அந்த வீட்டை நெருங்கும் போதே அவன் ஆழ்ந்து உறங்கி விடுவான். அதனால்
அந்தக் கவலையும் வேண்டாம்...”
அப்படியானால் போனவுடன் அந்த ரத்தினக்கல்
எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிப்பது ஒன்று தான் கொஞ்சம் சிரமமான வேலையாக
இருக்கும் போல பீம்சிங்குக்குத் தோன்றியது.
“அதுவும்
உனக்குக் கஷ்டமாக இருக்காது. ஆனால் அந்த வீட்டுக்குள் நுழைந்த கணம் முதல் அந்த ரத்தினக்கல்லை
எடுத்துக் கொண்டு நீ வெளியே வரும் வரை நான் சொல்வதை, சொன்னபடியே
பின்பற்ற வேண்டும். அதில் சின்னத் தவறு கூட வரக்கூடாது...”
என்று சொன்ன காளிங்க சுவாமி அவனிடம் நிறுத்தி நிதானமாகச் சொல்ல ஆரம்பித்தார்.
சொல்லிக் கொண்டே
வந்தவர் இடையில் “அந்த இடத்தில் அந்தப் பெரிய ரத்தினக்கல்லுடன் நான் சற்று முன் காட்டினது
போல் சிறிய மூன்று ரத்தினக்கல்களும் இருக்கும்...” என்று சொன்ன போது குறுக்கிட்டு பீம்சிங்
கேட்டான். “அந்தக் கல்களையும் சேர்த்து எடுத்து வர வேண்டுமா?”
“அந்தச் சின்ன ரத்தினக்கல்களை
நீ எடுத்து வர வேண்டாம். அவை அவனுடையவை. நமக்கு வேண்டியதில்லை” என்று உறுதியாகச் சொன்னார்.
அடுத்தவர் பொருள்
அவருக்கு வேண்டியதில்லை. அதில் அவருக்கு ஆசையும் இல்லை. விசேஷ நாகரத்தினம் அருகதையாலும்,
செய்திருக்கும் பூஜைகளாலும் அவருக்கு வந்து சேர வேண்டியது. அதனால் அது மட்டும் போதும்
என்று மனதில் உறுதியாகச் சொல்லிக் கொண்ட காளிங்க சுவாமி தொடர்ந்து அந்தக் கல்லை எப்படி
எடுக்க வேண்டும் என்பதிலிருந்து ஆரம்பித்துச்
சொன்னார்.
அவன் மிகவும் கவனமாக அவர் சொன்னதை எல்லாம்
கேட்டுக் கொண்டான். அவர் சொன்னதை மறுபடி அவரிடம் சொல்லச் சொல்லி பீம்சிங்கிடம்
அவர் கட்டளையிட்டார். அவன் அப்படியே திரும்பச் சொன்ன பிறகு
திருப்தி அடைந்து சொன்னார். “சரி இந்தக் கருப்புப் பையை காளியின் பாதத்தில் வைத்து விட்டு
நீ போய் உடை மாற்றிக் கொண்டு வா. பின் மறுபடி இந்தப் பையைக் காளியின் பாதத்தில் இருந்து எடுத்துக்
கொண்டு திரும்பிப் பார்க்காமல் போ.”
அவன் அவர் சொன்னபடியே
காளியின் பாதத்தில் அந்தக் கருப்புப் பையை வைத்து விட்டு உடைகளை மாற்றிக் கொண்டு வந்து
மறுபடி அந்த கருப்புப் பையை காளியின் பாதத்திலிருந்து எடுத்துக் கொண்டு காளியையும்,
காளிங்க சுவாமியையும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி விட்டுக் கிளம்பினான்.
அப்போது நேரம் நள்ளிரவைக்
கடந்திருந்தது. அவன் போகும் போது காளிங்க சுவாமியின் பார்வை அவனுடனேயே வருவது போன்றதொரு
உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. காளி கோயிலிலிருந்து வெகு தூரம் அவன் தாண்டி வந்தும் அந்த
உணர்வு போகாதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போது வழியில் ஓரிரு பாம்புகளும் தென்பட்டன.
அவன் வருவதைக் கண்டு அவை வேகமாக வழிவிட்டு பக்கவாட்டில் செல்வதை பீம்சிங் திருப்தியுடன்
பார்த்தான். இப்போது குரங்குகள் கூட அவனை நெருங்கவில்லை. தூரத்திலிருந்தே பயத்துடன்
அவனைப் பார்த்தன.
காளிங்க சுவாமியின்
மந்திரக் கவசம் இந்த வேலை முடிந்த பிறகு கூடத் தொடர்ந்து இருந்தால் நன்றாக இருக்கும்
என்று பீம்சிங் புன்னகையோடு நினைத்துக் கொண்டான்.
அஜீம் அகமது கையில் நரேந்திரன் வசிக்கும் அபார்ட்மெண்ட்ஸின்
வரைபடம் இருந்தது. 32 ப்ளாட்கள் இருக்கும் அந்த அபார்ட்மெண்ட்ஸில் வசிக்கும் நபர்கள்
பற்றிய முழு விவரங்களும் கூடவே இருந்தன. குடும்பத் தலைவனுக்கு என்ன உத்தியோகம், எங்கே
வேலை, குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், அந்த ப்ளாட்களில் வேலைக்கு வருபவர்கள்
யார் யார், எங்கிருந்து வருகிறார்கள் என்ற அனைத்து விவரங்களையும் அஜீம் அகமது பொறுமையாகப்
படித்தான். அடுத்தபடியாக நரேந்திரன் தன் ப்ளாட்டிலிருந்து எப்போதும் எந்த நேரத்தில்
கிளம்புவான். அவன் ஆபிஸ் போய் வரும் வழி எந்த வழி, போகும் போதோ, வரும் போதோ வழியில்
எங்காவது அவன் நிற்பதுண்டா, எங்காவது செல்வதுண்டா என்ற விவரங்கள் தனியாக இருந்தன. அஜீம்
அகமது அதையும் பொறுமையாகவும், கவனமாகவும் படித்தான். ஒரு வேளை காளிங்க சுவாமி வழித்
திட்டம் நிறைவேறா விட்டால் நரேந்திரனை எப்படி தீர்த்துக் கட்டுவது என்று இந்தத் தகவல்களை
வைத்துக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
ரொம்ப பரபரப்பாக உள்ளது.... பீம்சிங் எப்போது நாகராஜிடம் சென்று அந்த ரத்தினக்கல்லை எடுத்து வரப்போகிறான்?
ReplyDeleteSuper
ReplyDeleteNice explanation, as usual N Ganesan's touch in all the lines of this chapter. Treat to read.
ReplyDeleteLets wait for Beemsingh's mistakes :)
ReplyDeleteவணக்கம் அய்யா,அடுத்ததாக என்ன நாவல் எழுத இருக்கிறீர்கள்? நன்றி
ReplyDeleteVery intriguing. Eagerly waiting for next.
ReplyDeleteYogi, a spiritual thriller.
Delete