தனநந்தன் பொறுமையை முழுவதுமாக இழந்தான். சென்ற முறையே இங்கு வந்து அகம்பாவம் காட்டிய மனிதர் இப்போதும் உதவி கேட்கும் தொனியில் அவன் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை சொல்வது அவனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. ராக்ஷசர் கூட இறுகிய முகத்தோடு பதில் சொன்னது அவருக்கும் இந்த ஆளின் அதிகப்பிரசங்கித்தனம் சிறிதும் பிடிக்கவில்லை என்பதைக் காட்டியது.
தனநந்தன் கோபத்தால் கொதித்தபடி ஆணையிட்டான். “காவலர்களே, இந்தப் பைத்தியக்கார அந்தணனின் குடுமியைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் வெளியே தள்ளுங்கள்….”
காவலர்கள் வேகமாக விஷ்ணுகுப்தரை நோக்கி விரைந்து வர இந்த முறை ராக்ஷசர் அவர்களைத் தடுக்க முனையவில்லை. இந்த ஆசிரியரைப் போன்ற ஆட்களுக்குச் சம்பிரதாயமான மரியாதை தருவது கூட திரும்பவும் அவர்களை இங்கே வரவழைக்கலாம். அவர் அதை விரும்பவில்லை.
விஷ்ணுகுப்தர்
சிலை போல் நின்றார். அவர் கண்களில் தீக்கனல் தெரிந்தது. அவர் வலது கை அவர் முடிந்திருந்த
குடுமியை நிதானமாக அவிழ்த்தது. காவலர்கள் இருவர் இருபுறமும் நின்று அவர் கைகளைப் பிடித்து
அப்படியே தூக்கினார்கள். பொதுவாக இது போன்ற சமயங்களில் தூக்கப்படுபவர்கள் திமிறுவது
தான் வழக்கம். ஆனால் விஷ்ணுகுப்தர் திமிறவில்லை. ஒரு பொம்மையைத் தூக்குவது காவலர்கள்
அவரைத் தூக்கிக் கொண்டே வாயிற்பக்கம் திரும்பி நடக்க ஆரம்பிக்க அவர் தன் முகத்தை தனநந்தன்
பக்கம் திருப்பி அழுத்தந்திருத்தமாக உரக்கச் சொன்னார். “பெரிய ராஜ்ஜியத்தின் அரசன்
என்ற ஆணவத்தில் என்னை வெளியே தள்ளச் சொன்ன தனநந்தனே, ஒரு நாள் இந்த ராஜ்ஜியத்தில் இருந்தே
உன்னை புறந்தள்ளா விட்டால் நான் சாணக்கின் மகன் சாணக்கியன் அல்ல. அது வரை இன்றவிழ்த்த
குடுமியை நான் முடிய மாட்டேன்...”
தனநந்தனுக்கு அவர்
என்ன பேசுகிறார் என்றே புரியவில்லை. கோபத்தின் அளவு குழப்பமும் அவனுக்கு அதிகமாக இருந்தது.
இந்தப் பைத்தியம் முதலில் விஷ்ணு என்று எதோ பெயர் சொல்லியது. இப்போது சாணக்கின் மகன்
சாணக்கியன் என்று சொல்கிறது. இந்த சபதத்தைச் செய்யும் அளவு சக்தி வாய்ந்த அரசர்கள்
கூட இந்த பரதக்கண்டத்தில் யாருமில்லை. அப்படி இருக்கையில் கேவலம் ஒரு ஆசிரியன், மகதப்
பேரரசின் மன்னனிடமே இப்படி சபதம் செய்ய வேண்டுமானால் கண்டிப்பாக பைத்தியம் முற்றித்
தான் போயிருக்க வேண்டும். அதனால் தான் பெயரும் ஏதேதோ சொல்கிறது...
தனநந்தனைப் போலவே
தான் ராக்ஷசருக்கும் ஆரம்பத்தில் தோன்றியது என்றாலும் அவருக்கு இனம் புரியாத நெருடலை
உணர வைத்தது விஷ்ணுகுப்தரின் கோபத்திலும் நிதானம் மாறாத போக்கும் அவருடைய அழுத்தந்திருத்தமான
சபதமும் தான். இப்படி ஒரு வேண்டுகோளோடு யாரும் மகத மன்னரிடம் வரவும் மாட்டார்கள், அவமானப்படுத்தப்பட்டதற்கு
இப்படியொரு சபதம் போடவும் மாட்டார்கள். விஷ்ணுகுப்தரின் கண்களில் தெரிந்த தீக்கனலும்
தகிக்கிற ஆழத்தைப் பெற்றிருந்தது. சாணக்கின் மகன் சாணக்கியன் என்று சொன்னது தான் எல்லாவற்றையும் விட அதிகமாகக் குழப்பியது... இதென்ன
புதுக்குழப்பம்...
ராக்ஷசருக்கு
சாணக் என்ற பண்டிதர் ஒருவர் ஒரு காலத்தில் பாடலிபுத்திரத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்டது
நினைவிருக்கிறது. சாணக் தீவிரவாதக் கருத்துக்களை மன்னருக்கெதிராகப் பரப்புரை
செய்து தண்டிக்கப்பட்டவர் என்றும் அவர் கேள்விப்பட்டிருக்கிறார். அந்தப் பழங்கதைகள்
பற்றி விரிவாக அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அதையெல்லாம் அறிந்து கொள்ள அவர் ஆர்வம்
காட்டியதுமில்லை. விஷ்ணுகுப்தர் சொல்லும் சாணக் அவராக இருக்க வாய்ப்பிருப்பதாய்த்
தெரியவில்லை. பாடலிபுத்திரம் எங்கே, தட்சசீலம்
எங்கே என்று தோன்றினாலும் அங்கிருந்து அடிக்கடி இங்கே வந்து அறிவுரை சொல்லிப் போகும்
இந்த மனிதரைப் பார்த்தால் எதையும் தொலைவை வைத்துத் தீர்மானிப்பது சரியல்ல என்றும் தோன்றுகிறது. விஷ்ணுகுப்தரைத்
தூக்கிக் கொண்டு காவலர்கள் போவதைப் பார்த்துக் கொண்டேயிருக்கையில் இன்னொரு விஷயம் வித்தியாசமாகத்
தோன்றியது. அவமானப்படுத்தப்பட்டு காவலர்களால் வெளியேற்றப்படும் நபர்
போல அல்லாமல் விஷ்ணுகுப்தர் காவலர்களால் பல்லாக்கில் தூக்கப்பட்டுக் கொண்டு போகும்
அரசர் அல்லது அமைச்சர் போன்ற அசையாத கௌரவ அமைதித் தோற்றத்தில் தெரிந்தார். சற்று முன்
மன்னரைப் பார்த்து சபதமிட்ட மனிதர் இப்போது முகத்தைத் திரும்பிக் கொண்டு விட்டதால்
முகம் பார்க்க முடியாவிட்டாலும் பின்னால் இருந்து பார்க்கையில் ஆடாமல் அசையாமல் திமிறாமலிருந்த
அந்த மனிதரைப் பார்த்து ராக்ஷசரால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. இது பைத்தியம்
நடந்து கொள்ளும் முறையாக இருக்க வழியில்லையே....
அவர் பார்வை அரசவையில்
ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த ஒற்றன் மீது விழுந்தது. பார்வையாலேயே ராக்ஷசர் அவனிடம்
விஷ்ணுகுப்தரைக் கண்காணிக்கக் கட்டளையிட்டார்.
காவலர்களால்
வெளியே வந்து வீசப்பட்ட விஷ்ணுகுப்தர் மனதில் விரக்தி, வேதனை, கோபம் மூன்றையும் மீறி
வைராக்கியம் பிரதானமாக மேலோங்கி நின்றது. அன்னை
பூமியை அன்னியரிடமிருந்து இப்போதைக்குக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கலாம். ஆனால்
எந்த நிலைமையும் அப்படியே இருந்து விட வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்த தனநந்தனைப்
போன்ற தரங்கெட்டவனால் காப்பாற்றப்பட பாரத அன்னையே விரும்பவில்லையோ என்னவோ! நடந்து முடிந்ததை மாற்றும் சக்தி யாருக்கும் இல்லை தான். ஆனால்
நடக்கப் போகும் நிகழ்வுகளை நிச்சயிக்கக்கூடிய சக்தி நிச்சயம் இந்த சாணக்கியனுக்கு உண்டு.
’தட்சசீல ஆச்சாரியர் விஷ்ணுகுப்தனாக இது வரை காய்கள் நகர்த்தி வெற்றி பெற முடியவில்லை.
ஆனால் சாணக்கின் மகன் சாணக்கியனாக கண்டிப்பாக தீவிரமாக அரசியல் களத்தில் காய்கள் நகர்த்தி
வெல்லத் தான் போகிறேன். ஒருவேளை தனநந்தன் தாயகத்தைக் காப்பாற்ற
முன் வந்திருப்பானேயானால் நான் என் தந்தையின் மரணத்தையும் மன்னித்திருப்பேன். ஆனால் பழைய கணக்குகளையும் சேர்த்துத் தீர்த்து
புதிய சரித்திரத்தை எழுத வேண்டியிருப்பது இறைவனின் சித்தமானால், அப்படியே ஆகட்டும்.”
விஷ்ணுகுப்தராகப்
பிறந்த மண்ணிலேயே சாணக்கியனாக மறுபிறவி எடுப்பதாக உணர்ந்த அவர் தரை மண்ணை கையில் எடுத்து
நெற்றியில் பூசிக் கொண்டார். “தாய் மண்ணே உன் பிள்ளையை ஆசிர்வதிப்பாயாக!” விஷ்ணுகுப்தராக
விழுந்த மண்ணிலிருந்து சாணக்கியனாக எழுந்த போது அவரிடம் பேரமைதி குடிகொண்டிருந்தது.
இனி ஒவ்வொரு அடியாக யோசித்து, திட்டமிட்டு எடுத்து வைக்க வேண்டும். அமைதியிழப்பது
சக்தி விரயம். அதை இந்தச் சாணக்கியன் அனுமதிக்கக் கூடாது. இனி ஒவ்வொரு கணமும், சக்தியும்,
மிக முக்கியம்….!”
அமைதியாக எழுந்து நடக்க ஆரம்பித்த சாணக்கியரை அந்தக் காவலர்கள் திகைப்புடன் பார்த்தார்கள். தூக்கி வீசியது இந்த ஆளைத் தானா என்று அவர்கள் திகைத்து நிற்க அவர்களைத் திரும்பியும் பார்க்காமல் சாணக்கியர் நடக்க ஆரம்பித்தார். ஒற்றனும் திகைத்தபடியே அவரைப் பின் தொடர்ந்தான். அவன் ஒற்றனாக எத்தனையோ வித்தியாசமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறான். ஆனால் இப்படியொரு ஆளைப் பார்த்திருக்கவில்லை. கணத்திற்குக் கணம் ஒரு ஆளால் இப்படி மாற முடியும் என்று அவனிடம் முன்பே யாராவது சொல்லியிருந்தால் அவன் கண்டிப்பாக நம்பியிருக்க மாட்டான்.
விடுதிக்குச்
சென்று உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்த லாயத்தில் கட்டியிருந்த குதிரையைக் கிளப்பிக்
கொண்டு வெளியே வந்த போது தூரத்தில் அவர் நண்பன்
கோபாலன் தூரத்தில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. மற்ற சமயமாக இருந்திருந்தால் இத்தனை
தூரம் வந்து விட்டு கோபாலனைப் பார்க்காமல்
போக இந்த முறை மனம் அனுமதித்திருக்காது. ஆனால் இப்போது அவர் கோபாலனைப் பார்த்து பேசி
விட்டுப் போவது கோபாலனுக்கே நல்லதல்ல. அவரைக்
கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒற்றன் அதைக் கண்டிப்பாக ராக்ஷசரிடமோ, தனநந்தனிடமோ
சொல்வான். தேவையில்லாமல் கோபாலன் சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி வரலாம். நண்பனுக்கு
நல்லது செய்ய முடியாமல் போனாலும் கெடுதலாவது செய்யாமலிருப்போம் என்று எண்ணியவராக வேகமாகக்
குதிரையேறி எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தார்.
கோபாலனுக்கு விடுதி வாசலில் குதிரையேறிக் கொண்டிருப்பது அவரது நண்பன் விஷ்ணுகுப்தர் போலத் தோன்றியது. அவர் கண்களைக் குறுக்கிக் கொண்டு கூர்மையாகப் பார்த்துக் கொண்டே வேகமாக நடந்து வந்தார். அதற்குள் குதிரையேறிய அந்த நபர் வேகமாகப் போய் பார்வையிலிருந்து மறைந்து விடவே ஏமாற்றமடைந்தார்.
கோபாலனைப்
பார்த்து விட்டு வேகமாக அங்கிருந்து சாணக்கியர் போவதையும், அவரைப் பார்த்து விட்டு
கோபாலன் வேகமாக வருவதையும் ஒற்றன் கவனித்து விட்டான். “அரசவையில் அத்தனை நடந்து, வெளியே
வீசப்பட்டும் ஒன்றும் நடக்காதது போல மண்ணை நெற்றியில் பூசிக் கொண்டு எழுந்து அமைதியாக
நடந்து வந்த ஆசாமி இந்த ஆளைப் பார்த்து விட்டு வேகமாகப் போகிறாரென்றால் இந்த ஆளுக்கு
அந்த ஆள் தெரிந்தவராகத் தான் இருக்க வேண்டும் என்று கணக்கிட அவனுக்கு நேரம் அதிகம்
தேவைப்படவில்லை. இப்போது அவன் கவனம் கோபாலன் மீது நிலைக்க ஆரம்பித்தது.
(தொடரும்)
என்.கணேசன்
I felt as if I witnessed the historical incident because of your writing style. Hats off to you sir.
ReplyDeleteசாணக்கியரின் மன உறுதி அற்புதம்... அவர் எப்படி இவ்வளவு பெரிய ராஜ்ஜியத்தை அசைப்பார்? என்பதை நம்ப முடியவில்லை...
ReplyDeleteJust miss.அமைதியிழப்பது சக்தி விரயம்... எல்லோருக்கும் எப்போதும் பொருந்தும்
ReplyDelete