சிந்திக்கச் சில உண்மைகள் என்னுடைய நூல்களிலிருந்து...
தன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.
Wednesday, November 30, 2022
Monday, November 28, 2022
யாரோ ஒருவன்? 114
Thursday, November 24, 2022
சாணக்கியன் 32
நீண்ட யோசனைக்குப் பின் மன்னரிடம் விஷ்ணுகுப்தர் யாரென்ற உண்மையைத் தெரிவிப்பதே நல்லது என்ற முடிவுக்கு ராக்ஷசர் வந்தார். மன்னரை எதிர்த்து சபதமிட்டிருக்கிற விஷ்ணுகுப்தர் சாணக்கின் மகன் என்ற உண்மை மன்னருக்குத் தெரிந்திருப்பது எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு உதவும் என்று அவருக்குத் தோன்றியது.
மறுநாள் ராக்ஷசர் தனநந்தனிடம்
விஷ்ணுகுப்தரைப் பற்றிய உண்மையைத் தெரிவித்த போது தனநந்தன் சிறிது அதிர்ச்சியடைந்தான். “அந்த அந்தணன்
அதைச் சொன்ன போது கூட பைத்தியம் எதோ உளறுகிறது என்று தான் நான் நினைத்தேன் ராக்ஷசரே. உண்மையிலேயே
அது சாணக்கின் மகன் தான் என்பது நிச்சயமாக எனக்குத் தெரிந்திருந்தால், அந்த ஆளை
முறைப்படி நடத்தியிருக்கலாம்.” சொல்லும் போது அவன் கண்களில் அளவு கடந்த வெறுப்பு மேலோங்கி
நின்றதை ராக்ஷசர் கவனித்தார்.
தனநந்தன் சிறிது நேரம் கடந்தகால நினைவுகளில்
சஞ்சரித்தான். மனக்கண்ணில் சாணக்கைப் பார்த்தபடியே அவன் ராக்ஷசரிடம்
சொன்னான். ”சாணக்கும் எனக்கு அக்காலத்தில் என் காலணிக்குள் சிக்கிக்
கொண்ட சிறுகல்லாகவே இருந்தான் ராக்ஷசரே. மன்னர்
என்ற மரியாதையை என்னிடம் என்றுமே காட்டியதில்லை. முச்சந்தியில்
நின்று எனக்கு எதிராக முழக்கங்கள் இட்ட முட்டாள் அவன். அவன் சொல்வதைக்
கேட்கவென்று மக்கள் கூட்டம் எப்போதும் இருந்தது. ஆனால் அவன்
சிறைப்பட்ட போது சிதறிய அந்தக்கூட்டம் பின் எப்போதும் பாடலிபுத்திரத்தில் ஒன்றுகூடவில்லை...”
ராக்ஷசர் ஒன்றும்
சொல்லவில்லை. மன்னரின் நினைவுகள் சஞ்சரிக்கும் காலத்தில் பிரதம அமைச்சராக
இருந்த ஷக்தார் கூட சாணக் மீது அபிமானம் கொண்டவராக இருந்தார் என்று ராக்ஷசர் கேள்விப்பட்டிருக்கிறார். தனநந்தன்
புரட்சிக்காரரான சாணக்கின் வாயடைத்ததைப் போலவே ஷக்தாரையும் ஒதுக்கி வைத்த சரித்திரத்தையும்
கேள்விப்பட்டிருக்கிறார். விஷ்ணுகுப்தருக்கு விதி அனுகூலமாக இருந்திருக்கிறது. இல்லாவிட்டால்
பாரதத்திற்காக கவலைப்படவும் அவருக்கு உயிர் இருந்திருக்காது. அவர் குறித்து
அதிகப்பிரசங்கி, பைத்தியக்காரர் என்ற அபிப்பிராயங்கள்
மட்டுமே மன்னரிடம் இருந்ததால் விஷ்ணுகுப்தர் பேச்சினால் ஏற்பட்ட கோபம் மன்னரைத் தீவிர
நடவடிக்கை எடுக்கத் தூண்டாமல் அவரை வெளியேற்றுவதோடு நிறுத்தி விட்டது.
தனநந்தன் சொன்னான். “எனக்கு ஒரு விஷயம்
பெரும் ஆச்சரியத்தைத் தருகிறது ராக்ஷசரே. ஏன்
சிலரால் தங்கள் வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டு ஒழுங்காக இருக்க முடிவதில்லை? சாணக்கும்
பெரிய பண்டிதன். அமைதியாக மாணவர்களுக்கும், ஞானத்தை விரும்புபவர்களுக்கும் பாடம் நடத்திக்
கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் அந்த வேலையைச் செய்யாமல் என்னை எதிர்த்து கலவரப்பேச்சுகள்
பேசி அழிந்து போனான். அவன் மகனும் தன் வேலையை விட்டு விட்டு எனக்கு அறிவுரை சொல்ல ஒரு
முறை வந்தான். இப்போது என்னைப் படையைத் திரட்டிக் கொண்டு வடக்கே வரச் சொல்கிறான். இவன்
பேசும் பாரதம் எங்கிருக்கிறது? அதற்கு இவன் என்ன பிரதிநிதியா? அதற்கு நான் உதவ வேண்டும்
என்று இவன் எதிர்பார்ப்பதே பைத்தியக்காரத்தனம் இல்லையா? இது என்ன இவர்களது பரம்பரை
வியாதியா? இதில் வேடிக்கை என்னவென்றால் என் ராஜ்ஜியத்திலிருந்து என்னையே புறந்தள்ளுவேன்
என்று சபதம் வேறு போடுகிறான்... இது பைத்தியம் முற்றி விட்டதன் அறிகுறியே அல்லவா?.”
சொல்லி விட்டு தனநந்தன் வாய் விட்டுச் சிரித்தான்.
ராக்ஷசரால் சிரிக்க
முடியவில்லை. ஏதோ ஒரு ஆபத்தை இப்போதும் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரிடம் அவர் உணர்ந்தார்.
காவலர்களால் தூக்கப்படும் வரை இருந்த விஷ்ணுகுப்தர் வேறு. காவலர்களால் தூக்கப்பட்ட
பின் மாறிய விஷ்ணுகுப்தரே வேறு. முன்பிருந்த வேதனை, துக்கம், பணிவு எல்லாம் போய் கோபம்,
அகங்காரம், அசாத்திய அமைதிக்கு மாறியதுடன் பெயரைக் கூட விஷ்ணுகுப்தர் என்று சொல்லாமல்
சாணக்கின் மகன் சாணக்கியன் என்று சொன்னது ஏதோ ஒரு புதிய அவதாரம் எடுத்தது போலக் காட்டியது
வெறும் மனப்பிரமை என்று அவரால் ஒதுக்க முடியவில்லை. ஆனால் மகத மன்னரை ராஜ்ஜியத்திலிருந்தே
வெளியேற்றுவேன் என்று சொன்னது தனநந்தன் சொன்னது போல பைத்தியம் முற்றியதன் அறிகுறியாகவே
எடுத்துக் கொள்ளத் தோன்றியது.
“என்ன யோசிக்கிறீர்கள்
ராக்ஷசரே?”
’அந்த மனிதரிடம்
இருக்கும் ஏதோ ஒன்று என்னை யோசிக்க வைக்கிறது மன்னா’ என்று மனதில் சொன்ன ராக்ஷசர்
அந்த மனப்பிரமையை வாய்விட்டுச் சொல்வது அனாவசியம் மட்டுமல்ல முட்டாள்தனமும் கூட என்று
உணர்ந்ததால் விஷ்ணுகுப்தரைப் பற்றிய எண்ணங்களை ஒதுக்கி விட்டு அவர் கொண்டு வந்த தகவலை
மையமாக வைத்து இனி செய்ய வேண்டியது என்ன என்பதைப் பேச ஆரம்பித்தார்.
“ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் கொண்டு வந்த தகவல்கள் இரண்டு மன்னா. யவன மாவீரன் அலெக்ஸாண்டர் படையோடு பரதக்கண்டம் நோக்கிக் கிளம்பி வருவது ஒன்று. ஆம்பிகுமாரன் அலெக்ஸாண்டரோடு நட்பு பாராட்டப் போகிறான் என்பது இன்னொன்று. இரண்டு தகவல்களில் முதலாவது நாமும் நம் ஒற்றர்கள் மூலம் அறிந்தது தான். இரண்டாவது தகவல் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் ஆச்சாரியர் சொல்லும் தகவல் சரியாகத் தான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. தட்சசீலத்தில் அவர் வசிப்பதால் காந்தாரத் தலைநகரில் நடக்கும் விஷயங்கள் அவருக்கு முதலில் தெரியும் வாய்ப்பு இருக்கிறது. ஆம்பிகுமாரன் குணாதிசயங்களும் அதற்குத் தகுந்தபடி தான் முதலிலிருந்தே இருக்கின்றன.”
தனநந்தன் யோசனையுடன் கேட்டான்.
“அலெக்ஸாண்டரின் படை வலிமை குறித்து நமக்கு என்ன தகவல் கிடைத்திருக்கிறது ராக்ஷசரே”
ராக்ஷசர் பெருமையுடன்
சொன்னார். “மகதப்படை வலிமையில் ஐந்தில் ஒரு பங்கு தான் இருக்கும் அரசே”
தனநந்தன் சந்தேகத்துடன் கேட்டான்.
“அந்த அளவு படை வலிமையை வைத்துக் கொண்டு அவன் இவ்வளவு தூரம் எப்படி வென்று வந்திருக்கிறான்
ராக்ஷசரே”
“அவன் போர் யுக்திகளில்
சிறந்தவன் என்று சொல்கிறார்கள் அரசே. மேலும் அவன் இது வரை நம் படை போன்ற வலிமையான படையைச்
சந்திக்கவில்லை. அதனால் தான் விஷ்ணுகுப்தர் நாம் சென்றால் அலெக்ஸாண்டரை வென்று விடலாம்
என்று சொல்கிறார். நம் ராஜ்ஜிய எல்லைகளை விஸ்தரித்துக் கொள்ள இது அருமையான சந்தர்ப்பம்
என்று சொல்கிறார். இதில் அவர் கணிப்பு அறிவுபூர்வமாகவே இருக்கிறது. ஆனால் இது நாம்
அறியாத ஒன்றல்ல. இதை அறிந்தும் நாம் அதைச் செய்யக் கிளம்பாமல் இருக்கிறோம் என்றால்
அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. அதை அவரிடம் நாம் சொல்லவில்லை. அவருக்கு அதைத் தெரிவிக்கும்
அவசியமும் நமக்கில்லை. அவர் சாஸ்திரங்கள் படித்த அளவு தந்திரங்கள் அறிந்தவர் அல்ல என்பதால்
நம் காரணத்தை அவர் அறிய வழியில்லை....”
ராக்ஷசர் பிரதம
அமைச்சர் ஆன பிறகு தனநந்தன் நிர்வாக விஷயங்களிலோ, இது போன்ற அரசியல்
தீர்மானங்கள் எடுப்பதிலோ அதிக சிரமம் எடுத்து சிந்திப்பதில்லை. அறிவுகூர்மை வாய்ந்த
அவர் அந்த விஷயங்களை மிகவும் சிறப்பாகவே கவனித்து வந்தார். அவராக அவனிடம் அதை விளக்க
முன்வந்தாலும் அவன் பாதி கவனத்துடன் தான் கேட்பான். அவனுடைய கேளிக்கைகளிலும், ஆடம்பரங்களிலும்
ஒரு குறையுமில்லாமல் இருக்க செல்வம் அவனுக்கு அத்தியாவசியம் என்பதால் தனநந்தன்
தன் பெயருக்கேற்றபடி கஜானாவை நிரப்புவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருந்தான்.
முக்கிய முடிவெடுக்கும் தருணங்களில் மட்டும் அவர் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதையும்,
அது ஏன் என்பதையும் சொல்வார். அவன் அதற்குத் தலையசைப்பான்.
இப்போதும் அலெக்ஸாண்டர்
விஷயத்தில் அவனுடைய பிரதம அமைச்சர் எதோ தீர்மானித்து வைத்திருக்கிறார் என்பது அவனுக்குத்
திருப்தியாக இருந்தது. அவன் அவரைக் கேள்விக்குறியுடன் பார்க்க ராக்ஷசர் விளக்கினார்.
“விஷ்ணுகுப்தர் சொல்கிறபடி நாமாக அவர் சொல்கிற பாரத எல்லை வரை போவதென்றாலும் இடையில்
உள்ள பகுதிகள் நம் தலைமையில் ஒன்று சேர்வது இயலாததே. அப்படி ஒன்று சேர்ந்தாலும் கூட
அவர்களைப் பிறகு ஆளவோ, நம் ராஜ்ஜியத்துடன் இணைக்கவோ அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்.
அலெக்ஸாண்டரைத் துரத்தியடித்து விட்டுத் திரும்பும் போது அவர்களைப் பழைய சுதந்திரத்தோடு
விட்டு விட்டுத் தான் நாம் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். நாம் ஒத்துக் கொள்ளவில்லை
என்றால் அவர்களுடன் நாம் சண்டையிடவும் வேண்டியிருக்கலாம்.
ஏற்கெனவே அலெக்சாண்டர் ஆம்பிகுமாரனுடன்
சண்டையிட்டு களைத்திருக்கும் நமக்கு இந்த இடைப்பட்டவர்களையும் போரில் வெல்ல முடிந்தாலும்
போரின் இழப்புகள் மேலும் நமக்கு கூடும். “
தனநந்தன் கேட்டான். “அலெக்ஸாண்டரும்
ஆம்பிகுமாரனும் அவர்களை எல்லாம் வென்று விட்டு
நம்மை நெருங்கினால்?”
“பல தொடர் போர்களில்
வென்று விட்டு களைத்து வரும் அலெக்ஸாண்டர் ஆம்பிகுமாரன் படைகளை அவர்களை விடப் பலமடங்கு
வலிமையான நம் படை வெல்வது எளிது தான். மேலும் நாம் அவர்களைத் துரத்திக் கொண்டே காந்தாரம்
வரை கூடப் போகலாம். இடைப்பட்டவர்கள் ஏற்கெனவே வெல்லப்பட்டவர்கள். போரிட்டு வலிமை குன்றியவர்களாக
இருப்பார்கள். அவர்களை நம்முடன் இணைப்பது எளிது. அவர்களுக்கும் அலெக்ஸாண்டரையும் ஆம்பிகுமாரனையும்
விட நாம் தேவலை என்ற எண்ணம் இருக்கும். நம்முடன் இணைந்து கொள்ள ஒத்துக் கொள்வார்கள்.
விஷ்ணுகுப்தர் சொன்னது போல அத்தனை பகுதிகளையும் இணைத்து நம் ராஜ்ஜியம் விஸ்தீரணமடையப்
போவது உண்மை தான். ஆனால் அது அவர் எதிர்பார்ப்பது போல் இப்போதல்ல. அது அலெக்ஸாண்டர்
நம்மை நெருங்கிய பிறகு தான் நடக்கப் போகிறது”
தனநந்தனுக்கு அவர் கணக்கு
அருமையான தந்திரமாகத் தோன்றியது. அவன் தன் பிரதம அமைச்சரைப் பெருமிதத்துடன் பார்த்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
Monday, November 21, 2022
யாரோ ஒருவன்? 113
Thursday, November 17, 2022
சாணக்கியன் 31
ஒற்றன் பாடலிபுத்திர ஆசிரியர் கோபாலனை அறிவான். அதனால் உள்ளூர் நபரைக் கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தவனாக வேகமாக சாணக்கியரைப் பின் தொடர்ந்து போனான். நகர வாயிற்கதவைத் தாண்டி அவர் வெளியேறுவதைப் பார்த்து விட்டு ராக்ஷசர் மாளிகைக்குச் சென்றான். அவரிடம் அவன் கண்ட விவரங்களைச் சொன்னான்.
ஒற்றன் சொன்ன விஷயங்கள் தட்சசீல ஆச்சாரியரை
மேலும் விசித்திர மனிதராக ராக்ஷசருக்கு அடையாளம் காட்டின. வெளியே
வீசப்பட்ட மனிதர் இந்த அளவு அமைதியாக தரை மண்ணை நெற்றியில் பூசிக் கொண்டு, வித்தியாசமாக
எதுவும் நடக்கவில்லை என்பது போல நடந்து கொண்டதும், பின் நகரை
விட்டு வெளியேறியதும் அவருக்கு விசித்திரமாகவே தோன்றியது. தட்சசீல ஆச்சாரியர் பாடலிபுத்திர ஆசிரியர் ஒருவரைப் பார்த்து
விட்டு வேகமாகப் போனதும், அந்த ஆசிரியரும் முன்கூட்டியே அறிந்தவர் போல ஆச்சாரியர் போவதைக்
கூர்ந்து பார்த்ததும் இருவரும் முன்பே அறிமுகமானவர்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தவே உடனடியாக
அந்த உள்ளூர் ஆசிரியரை அழைத்து வர காவலர்களை அனுப்பினார்.
“பிரதம அமைச்சர்
ராக்ஷசர் தங்களைச் சந்திக்க விரும்புகிறார்” என்று காவலர்கள்
வந்து சொன்ன போது கோபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மகதத்தில்
மன்னருக்கு அடுத்தபடியான சக்தி வாய்ந்த மனிதரான ராக்ஷசர் அவரைச்
சந்திக்க விரும்புவது நன்மையின் அறிகுறியாகவும் தெரியவில்லை. இந்தச்
சாதாரண ஆசிரியனைச் சந்திக்க ராக்ஷசருக்கு என்ன காரணம் இருக்கும் என்று பதற்றத்துடன் யோசித்தபடியே
கோபாலன் உடனே கிளம்பிப் போனார்.
ராக்ஷசர் தன்
முன் வந்து நின்ற ஆசிரியரை ஒரு குற்றவாளியை ஆராய்ந்து பார்ப்பது போல் கூர்ந்து பார்த்தார். கோபாலனின் தர்மசங்கட நெளியலை அவர் லட்சியம்
செய்யவில்லை. பின் மெல்லக் கேட்டார். “தட்சசீல ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரை
உங்களுக்கு எப்படித் தெரியும்?”
கோபாலன் திகைத்துப் போனார். ஒரு கணத்தில் எல்லாம் பிடிபடுவது போல் இருந்தது.
இன்று பயணியர் விடுதியிலிருந்து குதிரையில் வேகமாகப் போன நபர் அவர் சந்தேகப்பட்டது
போலவே நண்பன் விஷ்ணுவாகவே இருந்திருக்க வேண்டும். விஷ்ணு அவரைப்
பார்த்ததாக அவருக்குத் தோன்றியது பிரமையல்ல. பார்த்து விட்டும்
பார்க்காதது போல் விஷ்ணுகுப்தர் போகிறார் என்றால் கண்டிப்பாக எதாவது காரணம் இருக்க
வேண்டும். அந்த சமயத்தில்
யாராவது கண்காணித்துக் கொண்டிருந்திருக்கலாம். சந்திப்பது பிரச்னை
ஆகலாம் என்று தவிர்த்திருக்கலாம். மேலும் யோசித்த போது குதிரையில் அமர்ந்தபடி ஒருவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்ததும்
நினைவுக்கு வந்தது. அவன் மகத ஒற்றனாக இருந்திருக்கக்கூடும்.
விஷ்ணுகுப்தரைத் தெரியாது என்று சொன்னால்
என்ன என்று ஒரு கணம் கோபாலனுக்குத் தோன்றினாலும் அது ஆபத்து என்று உடனே புரிந்தது. ராக்ஷசர் விஷ்ணுகுப்தரைத்
தெரியுமா என்று கேட்கவில்லை. எப்படித் தெரியும் என்று தான் கேட்கிறார். ஆக தெரியாது
என்று சொன்னால் தான் ஆபத்து என்று உணர்ந்தவராக கோபாலன் மெல்லச் சொன்னார். “நாங்கள்
இருவரும் ஒரே குருகுலத்தில் படித்தவர்கள்”
ராக்ஷசர் பார்வையில்
கூர்மை கூடியது. ”எந்த குருகுலத்தில்?”
”பாடலிபுத்திர குருகுலத்தில்
தான்”
ராக்ஷசர் உள்ளுக்குள்
திகைத்தாலும் வெளிப்பார்வைக்குத் தன் திகைப்பைச் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. அடுத்த
கேள்வியை அமைதியாகக் கேட்டார். “அவர் தந்தை யார்?”
“சாணக்”
அப்படியானால் சபதமிட்ட
போது சாணக்கின் மகன் என்று விஷ்ணுகுப்தர் சொன்னது பைத்தியம் முற்றி அல்ல.... ராக்ஷசர்
சிறிது நேரம் பேச்சிழந்தார். சாணக் சிறைப்பிடிக்கப்பட்ட சிறிது காலத்தில் அவர் மனைவி
இறந்து, சிறுவனான மகன் ஊரை விட்டுச் சென்று விட்ட கதையை அவரும் கேள்விப்பட்டிருக்கிறார்.
ஆனால் அந்த மகன் தான் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் என்ற உண்மை இப்போது தான் தெரிகிறது....
யோசித்துப் பார்த்தால் விஷ்ணுகுப்தர் யாராகவே இருந்தாலும் தனியொரு மனிதனை எண்ணி பயப்படக்
காரணம் இல்லை. ஆனால் இனம் தெரியாத ஏதோ ஒன்று ராக்ஷசருக்கு அடையாளம் தெரியாத ஒரு நெருடலை
ஏற்படுத்த ஆரம்பித்தது. அந்த மனிதரின் அறிவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். அறிவோடு
கூடிய அமைதியைக் கண்கூடாகவே பார்த்திருக்கிறார். ஆழத்திலிருந்து வெளிப்பட்ட வெறுப்பையும் கோபத்தையும் கூடப் பார்த்திருக்கிறார்.
தனி ஒரு மனிதனின் அறிவு, அமைதி, வெறுப்பு, கோபம் எல்லாம் மிக வலிமையான ராஜ்ஜியமான மகதத்தையும். தனந்ந்தனையும் இம்மியளவும்
பாதிக்க வாய்ப்பே இல்லை….. இருந்தாலும்…..
ராக்ஷசர்
எண்ண ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு கேட்டார். “நீங்களும் விஷ்ணுகுப்தரும் நெருங்கிய நண்பர்களா?”
கோபாலன்
இந்தக் கேள்வியில் ஆபத்தை உணர்ந்தார். சென்ற
முறை இங்கு விஷ்ணுகுப்தர் வந்திருந்த போது மறுநாள் அரசவையில் நடந்த அறிஞர்களின் சிறப்புக்
கூட்டத்திற்குச் செல்லவிருப்பதாகச் சொன்னதும், கோபாலன் மறுநாளே
வெளியூர் சென்றுவிட்ட போதிலும், அவருடைய சக ஆசிரியர் ஒருவர் மூலமாக அந்தச் சிறப்புக்
கூட்டத்தில் நடந்ததை அறிந்ததும் நினைவுக்கு வந்தது. பாடலிபுத்திரத்தில் தனநந்தனை மனதார
மதிப்பவர்களும், நேசிப்பவர்களும் அரிதிலும் அரிது. அதனால் விஷ்ணுகுப்தர் கோபாலனின்
நண்பர் என்பதை அறியாமல் அந்த சக ஆசிரியர் தட்சசீலத்தில் இருந்து வந்த விஷ்ணுகுப்தர்
என்ற ஆசிரியர் தனநந்தனிடம் ‘காரமாக’ப் பேசியதை வரிக்கு வரி சொல்லி குதூகலப்பட்டது இப்போதும்
கோபாலனுக்கு நினைவு இருக்கிறது. இந்த முறை வந்து விஷ்ணு என்ன செய்து விட்டுப் போயிருக்கிறானோ
தெரியவில்லை. பிரதம அமைச்சரின் இறுக்கமான முகத்தைப் பார்த்தால் அது நல்லதாக இருக்கவும்
வாய்ப்பில்லை. அதனால் தான் நண்பனை பார்த்தும், பேசி நட்பை வெளிப்படுத்தி நண்பனுக்குப் பிரச்னை ஏற்படுத்த
வேண்டாம் என்று எண்ணிப் போயிருக்க வேண்டும் என்பது கோபாலனுக்கு உறுதியாகியது. அதனால்
கோபாலன் தயக்கத்துடன் சொன்னார். “சிறு வயதில் நண்பர்கள்”
ராட்ஷசர் உடனே கேட்டார்.
“அப்படியானால் இப்போது நீங்கள் இருவரும் நண்பர்கள் இல்லையா?”
கோபாலன் சொன்னார்.
“சிறுவயதில் இங்கிருந்து விஷ்ணு போன பிறகு எங்களுக்குள் இருந்த தொடர்பு போய் விட்டது.”
ராட்ஷசர் அதை முழுவதும்
நம்ப முடியாதவர் போல கோபாலனைப் பார்த்தார். கோபாலன் இதற்குள் என்ன சொல்வது என்று மனதில்
தயார்ப்படுத்திக் கொண்டிருந்ததால் தொடர்ந்து சொன்னார். ”சுமார் பத்து வருடங்களுக்கு
முன் பாடலிபுத்திரத்தில் மறுபடியும் பார்த்தேன். முதலில் அடையாளம் தெரியவில்லை. அவரும்
என்னைத் தெரிந்தது போலக் காட்டிக் கொள்ளவில்லை. நானாக சந்தேகம் கொண்டு கேட்டேன். பிறகு
தான் மெல்ல ஒப்புக் கொண்டார். தட்சசீலத்தில் ஆசிரியராக இருப்பதாகவும், அறிஞர்களின்
சிறப்புக் கூட்டத்திற்கு வந்திருப்பதாகவும் சொன்னார். வீட்டிற்கு அழைத்தும் அவர் வரவில்லை.
புகழ்பெற்ற தட்சசீல கல்விக்கூடத்தில் பிரபலமான ஆசிரியராக இருப்பதால் என்னைப் போன்ற
சிறியவனிடம் நட்பு பாராட்டுவதோ, அடியவன் வீட்டுக்கு வருவதோ அவருக்குப் பிடிக்கவில்லை
என்று புரிந்து கொண்டேன். அந்த முறை இங்கிருந்து போகும் போது கூடச் சொல்லிக் கொண்டு
போகவில்லை. இப்போதும் சற்று முன் பயணியர் விடுதி முன்னால் அவரைப் போன்ற தோற்றமுள்ள
ஒருவர் குதிரையேறிப் போவதைப் பார்த்தேன். ஆனால் அவரா என்று தெரியவில்லை. அவராக இல்லாமலும்
இருக்கலாம். சென்ற முறையும் நானாகப் பேசியதால் தான் அவர் பேசினார். இந்த முறை அவர்
என்னைப் பார்த்தது போல் இருந்தது. ஆனாலும் நின்று பேசிவிட்டுப் போகவில்லை. அதனால் நெருங்கிய
நண்பர்கள் என்று எங்களைச் சொல்வதற்கில்லை.”
ராக்ஷசருக்கு கோபாலன்
சொல்வதில் எதையும் பொய் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. சென்ற முறையும் அரசவை நிகழ்ச்சிக்குப்
பிறகு சிறிது நேரத்திலிருந்து விஷ்ணுகுப்தரை ஒற்றன் பின் தொடர்ந்து போயிருக்கிறான்.
அப்போதும் அவர் இந்த ஆளைச் சந்தித்துப் பேசியதை ஒற்றன் பார்க்கவில்லை. இந்த முறையும்
விஷ்ணுகுப்தர் பாடலிபுத்திரம் நுழைந்த கணத்திலிருந்து ஒற்றன் அவரைக் கண்காணித்துக்
கொண்டிருக்கிறான். இப்போதும் அது நிகழவில்லை. விஷ்ணுகுப்தர் கோபாலனைப் பார்த்தது போலிருந்தது,
ஆனால் பேசாமல் வேகமாகப் போய் விட்டார் என்பதை ஒற்றனும் சொல்லியிருக்கிறான்.... அதனால்
இவர் சொல்வதெல்லாம் சரிதானாக இருக்க வேண்டும்... இந்த ஆளை அழைத்துப் பேசியதில் விஷ்ணுகுப்தர்
பாடலிபுத்திரத்திற்குப் புதியவர் அல்ல என்பதும், சாணக்கின் மகன் என்பதும் உறுதியாகத்
தெரிந்து விட்டது.
ராக்ஷசர் கோபாலனிடம்
சொன்னார். ”நீங்கள் போகலாம்”
கோபாலன் தயக்கத்துடன்
கேட்டார். “நீங்கள் விஷ்ணுகுப்தரைப் பற்றி ஏன் விசாரித்தீர்கள் என்பதை நான் தெரிந்து
கொள்ளலாமா பிரதம அமைச்சரே?”
ராக்ஷசர் கடுத்த
முகத்துடன் சொன்னார். “அது அரசாங்க காரியம். சொல்வதற்கில்லை”
கோபாலன் அதற்கு
மேல் எதுவும் பேசாமல் ராக்ஷசரை
வணங்கி விட்டு வெளியேறினார். அவர் சென்ற பிறகு ராக்ஷசர் கண்களை மூடி
யோசித்தார். ‘மன்னர் தனநந்தனிடம் இதைத் தெரிவிப்பதா
வேண்டாமா?”
(தொடரும்)
என்.கணேசன்