நல்லது நடக்க வழியில்லை என்று விஷ்ணுகுப்தர் சொன்னவுடன் வருத்தப்பட்டவனாக சந்திரகுப்தன் கேட்டான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் ஆச்சாரியரே?”
விஷ்ணுகுப்தர் சொன்னார். “அலெக்ஸாண்டரைப்
பற்றி நான் கேள்விப்படும் எல்லாத் தகவல்களும் அவனை அசாதாரணமானவனாகவே அடையாளம்
காட்டுகின்றன சந்திரகுப்தா. போர் புரியும் காலங்களில் அவன் முழுக் கவனமும் போரில் தங்கி
விடும் என்கிறார்கள். எதிரிகளின் பலவீனங்களைக் கண்டுபிடிப்பதிலும், கண்டுபிடித்ததைத்
தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதிலும் அவனுக்கு ஈடு இணை யாருமில்லை என்கிறார்கள். அதே போல்
காமக் களியாட்டங்களிலும் ஆழமாகப் போய் களிக்க முடிந்தவன் அவன் என்றாலும் அவற்றிலேயே
மூழ்கி விடாமல் தேவையான நேரங்களில் வேகமாக மேலே வந்து அவற்றிலிருந்து விலகி அப்போதைய
தேவைகளில் முழு கவனம் செலுத்த முடிந்தவன் என்கிறார்கள். மனித மனதை
ஆழமாக அறிந்த எனக்கு அது எவ்வளவு கடினமானது என்பது தெரியும். எதிலும்
மிக ஆழமாகச் செல்லவும், எதிலிருந்தும் எந்த நேரத்திலும் விலகி விடவும் முடிந்தவன்
மிக வலிமையானவன் சந்திரகுப்தா. அதுமட்டுமல்லாமல் தத்துவ சாஸ்திரங்களிலும் ஆழமான ஞானம் உடையவன்
அவன் என்று சொல்கிறார்கள். அவனுடைய குரு ஒரு மிகச் சிறந்த கிரேக்க ஞானியாம்.
அவரிடம் பயின்ற ஞானம் மட்டுமல்லாமல் போகிற இடங்களில் கூட ஞானத்தைத் தேடிக் கற்றுக்
கொள்ள முடிந்தவனாகவும், ஞானத்தை மதிப்பவனாகவும் அவனைச் சொல்கிறார்கள். அவனால்
மணிக்கணக்கில் தத்துவ ஞானங்களைப் பற்றி ஞானிகளுக்கு இணையாகப் பேச முடியும் என்றும் சொல்கிறார்கள்.
இப்படி உடல் வலிமையும், மன வலிமையும், அறிவுக் கூர்மையும் உள்ள ஒரு எதிரி ஆபத்தானவன்.
அவனை இங்கே அனைவருமாகச் சேர்ந்து எதிர்த்தால் வெல்வது ஒருவேளை சாத்தியமாகலாம். ஆனால்
அவனை பாரதத்தின் தலைவாசலில் உள்ள ஆம்பி குமாரன் ஆதரிக்கவே முடிவெடுத்திருக்கிற நிலையில்
பாரதம் ஆபத்தைத் தான் சந்திக்கும் நிலையில் இருக்கிறது”
சந்திரகுப்தன் சொன்னான்.
”நிலைமை எத்தனை மோசமாக இருந்தாலும் நாம் செய்ய முடிந்தது எதாவது கண்டிப்பாக இருக்கும்
என்று அடிக்கடி சொல்வீர்களே ஆச்சாரியரே.”
விஷ்ணுகுப்தர் பெருமூச்சு விட்டார். “உண்மை. இப்போதும் நாம் முயற்சி செய்ய
நிறைய இருக்கின்றன. அதைச் செய்வோம். பாரசீகத்திலிருந்து கிளம்பி இருக்கும் அலெக்ஸாண்டர்
நம் எல்லையை எப்போது வந்தடைவான் என்று நீ நினைக்கிறாய்?”
இதற்கு பதில் அவருக்குத்
தெரியாததால் அவர் அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை, அவன் அறிவைச் சோதிக்கத் தான்
இதைக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட சந்திரகுப்தன் சிறிது யோசித்து விட்டுச்
சொன்னான். “இரண்டு மாதங்களுக்குள் அவன் படையுடன் இங்கே வந்து சேர்வான் என்று தோன்றுகிறது
ஆச்சாரியரே”
“எதை வைத்து அப்படிச்
சொல்கிறாய் சந்திரகுப்தா?”
“பாரசீகத்திலிருந்து
இங்கே வரும் வரை இடையில் அலெக்ஸாண்டரின் படையை எதிர்க்கும் அளவுக்கு வலிமையுள்ளவர்கள்
யாருமில்லை. எல்லாரும் அவன் சொல்வதை ஒத்துக்
கொண்டு வழி விடுபவர்களாகவே இருக்கிறார்கள். அதனால் வழியில் யாரிடமும் போரிட்டு கால
தாமதம் நேர வாய்ப்பில்லை. ஆனால் படையோடு வரும் போது மிக வேகமாக அவர்கள் வந்து சேரவும்
வாய்ப்பில்லை. அதனால் தோராயமாக இரண்டு மாத காலத்தில் வந்து சேர்வார்கள் என்று எனக்குத்
தோன்றுகிறது.”
விஷ்ணுகுப்தரின்
முகத்தில் மலர்ந்த சிறு புன்னகை அவன் அனுமானம் சரியென்று அவர் நினைப்பதைத் தெரிவித்தது.
அதையே பெரிய பாராட்டாக எடுத்துக் கொண்ட சந்திரகுப்தன் அக்கறையுடன் அவரிடம் கேட்டான்.
“இந்த வேளையில் நாம் செய்ய முடிந்தது என்ன ஆச்சாரியரே?”
விஷ்ணுகுப்தர் ஆழ்ந்த
சிந்தனையுடன் சொன்னார். “ஆம்பி குமாரனைத் தவிர்த்து மற்றவர்களை ஒன்றுபடுத்த வேண்டும்.
ஒரே தலைமையில் அத்தனை பேரும் சேர்ந்து அலெக்ஸாண்டரை எதிர்த்துப் போரிட்டால் அவனைத்
தடுத்து நிறுத்த வாய்ப்பிருக்கிறது.”
சந்திரகுப்தன் முகத்தில்
கவலை தெரிந்தது. அவன் வாய் விட்டு எதையும் சொல்லவில்லை என்றாலும் அவன் கவலை தெரிவித்த
செய்தியைப் புரிந்து கொண்ட விஷ்ணுகுப்தர் சொன்னார். “அதை விட்டால் அலெக்சாண்டரை எதிர்த்து
வெல்ல வேறு வழியில்லை சந்திரகுப்தா.”
“உண்மை தான் ஆச்சாரியரே.
ஆனால் யார் தலைமை ஏற்பது என்பதில் கடுமையான போட்டி உருவாகுமே.”
விஷ்ணுகுப்தர் சொன்னார்.
“வலிமையும், தேசப் பரப்பும் சிறியதென்றாலும் மனதளவில் அரசர்கள் ஒவ்வொருவரும் தங்களை
ஆகாய உயர்விலேயே நினைப்பார்கள் என்பதால் அது சிக்கலான விஷயம் தான். ஆனால் இது போன்ற
சூழ்நிலைகளில் யார் வலிமை அதிகமானவனோ அவன் தலைமையில் மற்றவர்கள் இணைவது தான் மரபு....”
“இது குறித்து ஒவ்வொருவரையும்
சந்தித்துப் பேசப்போவது யார் ஆச்சாரியரே”
“அனைவருக்கும் பொதுவான
ஒரு ஆள் தான் அதைச் செய்ய வேண்டும். பாரத தேசத்தின் புதல்வனாக என்னை நினைத்துக் கொண்டிருக்கும்
நானே இப்போதைக்கு அதற்குப் பொருத்தமான ஆளாகத் தெரிகிறேன். அதனால் நானே செல்வதாக இருக்கிறேன்
சந்திரகுப்தா”
”உங்களுடன் நானும்
வரட்டுமா ஆச்சாரியரே?” சந்திரகுப்தன் ஆவலோடு கேட்டான்.
“உனக்கும் மற்றவர்களுக்கும்
வேறு வேறு வேலைகள் யோசித்து வைத்திருக்கிறேன் சந்திரகுப்தா. இவர்களை ஒன்று திரட்டுவது
மிக முக்கியமான வேலை தான் என்றாலும் மற்ற வேலைகளும் நமக்கு நிறைய இருக்கின்றன...”
சந்திரகுப்தன் தலையசைத்தான்.
“முதலில் எங்கே செல்வதாக இருக்கிறீர்கள் ஆச்சாரியரே?”
“அருகிலிருக்கும்
கேகய நாட்டுக்கு முதலில் செல்லலாம் என்று நினைக்கிறேன். அங்கே அமைச்சராக என் நண்பன்
இந்திரதத் இருப்பதால் அவனை வைத்து கேகய மன்னரிடம் உதவி கேட்கலாம் என்று நினைக்கிறேன்.
அதுவும் கஷ்டம் தான். ஆனால் இந்திரதத் நிலைமையைப் புரிந்து கொள்ளக் கூடியவன். கேகய
அரசருக்கும் புரிய வைக்குமளவு அறிவும் படைத்தவன். அங்கு ஆரம்பித்து மகதம் வரை செல்லலாம்
என்று நினைக்கிறேன்...”
சந்திரகுப்தன் மனத்தாங்கலுடன் மெல்லக் கேட்டான். “தனநந்தனிடம் போய் நீங்கள் உதவி கேட்கப் போகிறீர்களா ஆச்சாரியரே?” ஆச்சாரியரை அரசவையில் அவமானப்படுத்திய தனநந்தனை மறுபடி அவர் சந்திப்பதே தரம் குறைந்த செயலாக அவனுக்குத் தோன்றியது. அப்படி இருக்கையில் அவனிடம் சென்று அவர் உதவியும் கேட்பது அவர் தகுதிக்கு அடிமட்ட அவமானச் செயலாகத் தோன்றியது. அது மட்டுமல்லாமல் ஆச்சாரியர் அவனிடம் அவர் தந்தையைக் கொன்றவன் தனநந்தன் என்பதையும் அக்காலத்தில் அது எப்படி நடந்தது என்பதையும் ஒரு முறை மனம் விட்டுச் சொல்லியிருக்கிறார். ஆச்சாரியரின் தந்தையைக் கொன்றவனை, ஆச்சாரியரையே சபையில் அவமானப்படுத்தியவனை, ஆச்சாரியர் மறுபடி சென்று சந்தித்து உதவி கேட்பது சந்திரகுப்தனுக்கே சகிக்க முடியாத சிறுமையாகத் தோன்றியது.
அவன்
கேள்வியையும் முகபாவனையையும் வைத்து அவன் முழு எண்ண ஓட்டத்தையும் புரிந்து கொண்ட விஷ்ணுகுப்தர்
சொன்னார். “மகதத்தின் வலிமை சேராமல் அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரன் கூட்டணியை
மற்றவர்கள் சமாளிப்பது கஷ்டம் சந்திரகுப்தா. அது தோல்வியில் தான் முடியும். அதனால்
தனிப்பட்ட மான அவமானங்களைப் பார்ப்பதை விட பாரதத்தின் நலனைப் பார்ப்பது தான் முக்கியம்.”
பாரதம் என்ற சொல்லையே
பயன்படுத்துபவர்கள் குறைந்து விட்ட காலத்தில் பாரதத்தின் நலனுக்காக தன்மானத்தை விட்டு
எதிரியிடம் கூட உதவி கேட்கப் போகும் அந்த மகத்தான மனிதரை சந்திரகுப்தன் பிரமிப்புடன்
பார்த்தான். பின் மெல்லக் கேட்டான். “அவர்கள் உதவியைக் கேட்டுத் தான் ஆக வேண்டும் என்றால்
நீங்களே தான் போக வேண்டுமா ஆச்சாரியரே. வேறு யாரையாவது அனுப்பிக் கேட்கலாமே?”
“வேறு யாரை அனுப்புவது
சந்திரகுப்தா? தூதர் ஒருவரை அனுப்புவது போல் யாராவது ஒருவரை எங்கே அனுப்பியும் பயனில்லை.
உணர்வு பூர்வமாகவும், ஆத்மார்த்தமாகவும் பேச
முடிந்தவர்களாக இருக்க வேண்டும். உன்னைப் போன்றவர்களும் கூடப் போய் அப்படிப் பேச முடியும்
என்றாலும் மாணவன், வயதும் அனுபவமும் போதாதவன் என்ற எண்ணம் கேட்பவர்களுக்கு வந்து விட்டால்
சொல்வதை அவர்கள் கேட்டுக்கொள்ளக் கூடச் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் தான் நானே போகலாம்
என்று முடிவெடுத்தேன்.”
சந்திரகுப்தன் மெல்லக்
கேட்டான். “தனநந்தன் நீங்கள் சொல்வதற்குச் சம்மதிப்பான் என்று நம்புகிறீர்களா ஆச்சாரியரே?”
விஷ்ணுகுப்தர் சொன்னார்.
“என் தாய் மண்ணுக்காக நான் இதை முயற்சி செய்து பார்க்கவில்லை என்ற உறுத்தல் என் மரணம்
வரைக்கும் எனக்கு இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன் சந்திரகுப்தா”
எத்தனையோ முறை தன்
குருநாதரின் உயர்வுகளைக் கண்டு மெய்சிலிர்த்திருந்த சந்திரகுப்தன் அதிகபட்ச பிரமிப்பை
அந்தக் கணம் உணர்ந்தான். இந்த பாரதம் இவர் போன்ற ஒரு மகனைப் பெற்றிருப்பது அதன் மிகப்பெரிய
பாக்கியமே!
(தொடரும்)
என்.கணேசன்