சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, September 1, 2022

சாணக்கியன் 20

 

ந்திரகுப்தன் விஷ்ணுகுப்தரிடம் வந்து சொன்னான். “கேகய அமைச்சர் இந்திரதத் நம் கல்விக்கூடத்திற்கு வந்திருக்கிறார் ஆச்சாரியரே. அவர் நம் தலைமை ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்”

 

விஷ்ணுகுப்தர் மௌனமாகத் தலையசைத்தார். சந்திரகுப்தன் அவர் எதாவது சொல்கிறாரா என்று ஒரு கணம் காத்திருந்து பார்த்து விட்டு அவர் அறையில் இருந்து வெளியேறினான்.

 

இப்போதைய தலைமை ஆசிரியர் விஷ்ணுகுப்தருக்கும், இந்திரதத்துக்கும் முன்பு ஆசிரியராக இருந்தவர். எனவே வந்தவுடன் முதலில் அவரை வணங்கி ஆசிகள் பெற இந்திரதத் போயிருப்பது விஷ்ணுகுப்தருக்குப் புரிந்தது. இந்திரதத் விஷ்ணுகுப்தருக்கு நெருங்கிய நண்பர்.  சாதாரண சமயமாக இருந்திருந்தால் நண்பனை விஷ்ணுகுப்தர் ஓடோடிச் சென்று வரவேற்று இருப்பார். பேச நிறைய கதைகள் இருந்தன.  ஆனாலும் நண்பனிடம் சிறிது கோபத்தைக் காட்ட அவர் முடிவெடுத்து இருந்ததால் விஷ்ணுகுப்தர் அமைதியாக இருந்தார்.  

 

சிறிது நேரத்தில் இந்திரதத் அவர் அறை வாயிலில் வந்து நின்றார். “விஷ்ணு” என்று அழைத்த நண்பனைப் பார்த்து அமர்ந்த நிலையிலேயே விஷ்ணுகுப்தர் கைகளைக் கூப்பினார். “கேகய நாட்டு அமைச்சர் இந்திரதத்துக்கு இந்த அடியவனின் வணக்கங்கள்” என்று இறுகிய முகத்துடன் சொன்ன விஷ்ணுகுப்தரைப் பார்த்து இந்திரதத் புன்னகைத்தார்.

 

“தட்சசீல கல்விக்கூடத்தின் பிரசித்தி பெற்ற ஆச்சாரியருக்கு, இந்தக் கல்விக்கூடத்தின் முன்னாள் மாணவனின் வணக்கங்கள்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்த  இந்திரதத் நண்பனின் இறுக்கமான முகத்தினால் எந்தப் பெரிய பாதிப்பும் அடையாமல் நண்பனுக்கு எதிரில் அமர்ந்து கொண்டார். நண்பனின் இந்தக் கோபம் அவர் எதிர்பார்த்தது தான்...

 

விஷ்ணுகுப்தர் இறுகிய முகம் மாறாமல் சொன்னார். “இந்தக் கல்விக்கூடத்தின் பழைய மாணவனாக வந்தது போல் தெரியவில்லையே. படையெடுத்து வந்து வென்ற நாட்டின் கல்விக்கூடத்தைப் பார்வையிட வந்தது போல் அல்லவா தெரிகிறது...”

 

“எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி, வந்து பார்த்ததில் இங்கே நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. மாறாதது என் நண்பன் விஷ்ணு மட்டும் தான்.   அதே கோபம், அதே இறுக்கம்... சற்று முன் பேசிய தலைமை ஆசிரியரிடம் நான் ஒன்று கேட்க மறந்து விட்டேன். கோபம் அறிவாளிகளுக்கு சோபை தருவதில்லை என்று அவரது முன்னாள் மாணவன் விஷ்ணுகுப்தனுக்குச் சொல்லித் தந்ததில்லையா என்பதைக் கேட்டிருக்க வேண்டும்”

 

“கோபப்பட வேண்டியதற்குக் கோபப்படுவது உணர்வுகள் இருக்கும் மனிதனுக்கு இயல்பானது தான் என்று அவர் சொல்லி இருப்பார்”

 

“அப்படிக் கோபப்பட வேண்டியதற்குக் கோபப்பட்டு ஒருவன் தக்க நடவடிக்கை எடுக்கும் போது அதைப் பார்த்து அவன் நண்பன் கோபப்பட்டால் என்ன செய்வது என்று கேட்டால் அவர் என்ன சொல்வாரோ?”

 

விஷ்ணுகுப்தர் தன்னையும் மீறிப் புன்னகைத்தார். “உன் வாதத்திறமையும் குறையவில்லை நண்பனே”

 

“அது உன்னிடம் பழகியதில் நான் சிறிது கற்றுக் கொண்டது விஷ்ணு” என்று இந்திரதத் புன்னகையுடன் சொன்னார்.

 

விஷ்ணுகுப்தர் பெருமூச்சு விட்டார். நண்பனின் முகத்தில் இறுக்கம் தளர்ந்தாலும் வருத்தம் குறையவில்லை என்பதைக் கண்ட இந்திரதத் மென்மையாகக் கேட்டார். “என்ன வருத்தம் நண்பனே?”

 

“ஆம்பி குமாரன் முட்டாள்தனமாக நடந்து கொண்டான். அவனுக்குப் பாடம் கற்பிக்க நீ படையெடுத்து வந்தாய். அதிக உயிர்ச்சேதம் இல்லாமல் திறமையாக காந்தார அரண்மனையையே ஆக்கிரமித்து உன் நாட்டு பலத்தை உணர்த்தி அவனுக்கு பாடம் புகட்டி இருப்பதாக நினைக்கிறாய் இந்திரதத். ஆனால் பாடம் கற்றுக் கொள்ள முடியாதவன் ஆம்பி குமாரன். அதை அவனுக்கு ஆசிரியனாக இருந்து அறிந்து கொண்டவன் நான். அவன் உன் நாட்டைப் பழி வாங்க தக்க சமயம் பார்த்து இனிக் காத்திருப்பான். காந்தார அரசர் அதிக காலம் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று கேள்விப்படுகிறேன். ஆம்பி குமாரன் அரியணையில் விரைவிலேயே அமர்வான்....”

 

“நல்ல வழிகளில் பாடம் கற்றுக் கொள்ள முடியாதவர்கள் கடுமையான வழிகளில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் விஷ்ணு. அது அவர்களுடைய விதி. அதற்கு நாம் வருத்தப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை”

 

“ஆம்பி குமாரனுடைய விதியில் நம் பாரதத்தின் விதியும் பிணைந்திருப்பது தான் என் வருத்தத்திற்குக் காரணம் இந்திரதத். அலெக்சாண்டர் என்ற மாவீரன் தோல்வியே அறியாதவன் என்கிறார்கள். அவன் தன் நாட்டிலிருந்து கிளம்பி நீண்ட தூரம் வந்திருக்கிறான். வந்திருக்கும் வழியில் எல்லாம் வெற்றிகளை மட்டுமே அவன் கண்டிருக்கிறான். இப்போது பாரசீகத்தையும் வென்று விட்டான் என்று கேள்விப்படுகிறேன். அவன் அடுத்த குறி நம் பாரதமாக இருக்கும் என்று தோன்றுகிறது. அவன் இங்கே வரும் வேளையில் பாரதத்தின் தலைவாசலில் இருக்கும் காந்தாரமும், கேகயமும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அது அவன் வேலையைச் சுலபமாக்கி விடுமே என்ற வருத்தம் தான் என்னை வாட்டி எடுக்கிறது நண்பனே.”

 

இந்திரதத் சொன்னார். “ஆம்பி குமாரன் மூர்க்கனே ஒழிய முட்டாள் என்று சொல்லி விட முடியாது. இளவரசனாக இருக்கும் போது பொறுப்பற்றுத் திரிந்த எத்தனையோ பேர் அரியணையில் அமர்ந்த பின் பொறுப்புணர்வோடு நடந்து கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். லாப நஷ்டங்களுக்கான பொறுப்பு முழுமையாக அவர்கள் தலையிலேயே விழும் போது, அவர்கள் தானாக மாறுவதுண்டு...”

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “சற்று முன் இந்தக் கல்விக்கூடத்தில் மாறாதது நான் தான் என்றாய். இந்தக் கல்விக்கூடத்தால் மாற்ற முடியாதவன் என்ற பெருமை ஆம்பி குமாரனுக்கும் உண்டு இந்திரதத். அலெக்சாண்டர் பாரசீகத்திலிருந்து அப்படியே திரும்பித் தன் நாட்டுக்குப் போனால் நல்லது. அப்படி அவன் செல்லாமல் பாரதம் வரத் தீர்மானித்தால்  நமக்கு ஆபத்து தான்...”

 

”விஷ்ணு நீ அலெக்சாண்டருக்கு அதிக முக்கியத்துவம் தந்து பயப்படுகிறாய் என்று தோன்றுகிறது. நாமும் எதிலும் குறைந்தவர்கள் அல்ல. பாரதத்தின் தலைவாசலில் இருக்கும் காந்தாரமும், கேகயமும் படைபலம் குறைந்தவை அல்ல. வீரத்திலும் நாம் குறைந்தவர்கள் அல்ல. அதை மறந்து விடாதே”

 

விஷ்ணுகுப்தர் சொன்னார். “நான் அலெக்சாண்டரைப் பற்றிக் கேள்விப்படும் விஷயங்கள் எல்லாம் என்னைப் பயமுறுத்துகின்றன இந்திரதத். அவை உண்மையாக இருந்தால் அவனைப் பற்றிப் பயப்படாமல் இருப்பது முட்டாள்தனமாகத் தான் இருக்கும் என்று தோன்றுகிறது....”

 

சேனாதிபதி சின்ஹரனின் சேவகன் நன்றாக இருட்டி, மக்கள் நடமாட்டம் குறையும் வரை அமைதியாகக் காத்திருந்தான். பின் அவன் மெல்லக் கிளம்பினான். அந்தத் தாசி கேகய நாட்டுக்காரி என்பது சரியாக இந்தச் சமயத்தில் அவள் ஊரை விட்டு ஓடிப்போனதில் தெளிவாகத் தெரிந்தபடியால் சேனாதிபதியை போரிடச் செல்லாமல் கயிற்றாலோ சங்கிலியாலோ அவள் கட்டிப் போட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அவன் மனதில் எழுந்திருந்தது. மற்றவர்கள் நினைப்பது போல் சேனாதிபதி அவளோடு ஓடிப் போகக்கூடியவன் கிடையாது. அவளுடனும் போயிருக்க மாட்டான், போருக்கும் வரவில்லை என்றால் அவனை மயக்கத்திற்கு உள்ளாக்கி கட்டிப் போட்டிருப்பது தான் நடந்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது.

 

சேவகன் நேரடியாக அவன் மைனிகாவின் வீட்டுக்குப் போகாமல் நகரவீதிகளில் சற்று சுற்றிப் பயணித்தான். யாரும் அவனைப் பின் தொடரவோ கண்காணிக்கவோ இல்லை என்பது உறுதியான பிறகு அவன் அந்தத் தாசியின் வீட்டை அடைந்தான்.  கதவு சாத்தப்பட்டிருந்தது. ஆனால் தாளிடப்படவில்லை. அதனால் சற்றுப் பலமாகத் தள்ளியதில் கதவு திறந்து கொண்டது.  வீட்டினுள்ளே கும்மிருட்டு நிலவியது.

 

சேவகன் மெல்ல அழைத்தான். “சேனாதிபதி”

 

அவன் மெல்ல அழைத்ததே எதிரொலித்தது. தீப்பந்தம் ஒன்றைக் கொண்டு வந்திருக்கலாமோ என்று சேவகன் நினைத்த போது  உள்ளறையில் யாரோ மெல்ல அரற்றும் சத்தம் கேட்டது. சேவகன் உடனே சுவற்றைப் பிடித்துக் கொண்டே தட்டுத் தடுமாறி உள்ளறைக்குப் போனான். அங்கும் கும்மிருட்டு.

 

சுவரைப் பற்றிக் கொண்டே மெல்ல முன்னேறிய போது சாளரம் அவன் கைகளுக்குத் தட்டுப்பட்டது. சேவகன் மெல்ல அந்தச் சாளரக் கதவைத் திறந்தான். வெளியிலிருந்து பௌர்ணமி நிலவின் ஒளி அறையின் உள்ளே விழுந்தது. அந்த நிலவொளியில் மரக்கட்டிலில் சேனாதிபதி மயங்கிய நிலையில் தெரிந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்   


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

5 comments:

  1. Amazing conversations between Vishnugupta and Indradath. Your way of expressing those dialogues in Tamil is marvelous. முன்னாள் மாணவண், ல் ள் spelling mistake bro...

    ReplyDelete
  2. சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது... அற்புதம் ஐயா...

    ReplyDelete
  3. சேனாதிபதி தப்பித்து சென்று விடுவாரா? இல்லை மாட்டிக்கொள்வாரா??

    ReplyDelete