சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 26, 2022

யாரோ ஒருவன்? 104


ஜீம் அகமது காளிங்க சுவாமியிடம் சொன்னான். “நீங்க சொல்றது சரி தான் சுவாமிஜி. இதெல்லாம் எப்படி நடந்ததுன்னு புரியல. திடீர்னு மகேந்திரன் மகன் சூப்பர் மேனாயிட்டானா?”

காளிங்க சுவாமி சொன்னார். “அவன் சூப்பர் மேன் ஆகவில்லை. சூப்பர் மேன் ஒருத்தனின் உதவி அவனுக்குக் கிடைத்திருக்கிறது

யாரந்த சூப்பர் மேன்?”

நாகராஜ் மகராஜ் என்ற பெயரில் ஒருவன் இருக்கிறான். நாகங்களின் அருளால் அவனுக்கு அபூர்வசக்திகள் நிறைய கிடைத்திருக்கிறது. அவன் உதவி அந்த ரா அதிகாரிக்கு இருக்கற வரைக்கும் உங்களால் எதையும் அந்த அதிகாரிக்கு எதிராக எதையும் செய்ய முடியாது. ஆனால் அவனால் உங்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைமை தான் இப்போதைக்கு இருக்கிறது

ஜனார்தன் த்ரிவேதி பதறிப்போனார். “சுவாமிஜி. அன்னைக்கு என்னோட அரசியல் வாழ்க்கைக்குச் சொன்ன மாதிரி தயவு செய்து இதுக்கும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லிடாதீங்க. அந்த நாகராஜ் மகராஜ்க்கு மட்டுமா நாகங்களோட அருளும் சக்தியும் கிடைச்சிருக்கு. உங்களுக்கும் அது பரிபூரணமா இருக்கே. நீங்க தயவு செஞ்சு எங்களுக்கு வழிகாட்டுங்க.”

காளிங்க சுவாமி அஜீம் அகமதைப் பார்க்க அவனும் சொன்னான். “ஆமா சுவாமி

காளிங்க சுவாமி சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல் ஓடும் கங்கையையே பார்த்தார்.  இத்தனை காலம் வரை அவருக்கு எல்லாவற்றையும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது போல சொல்லித் தான் பழக்கம். ஏனென்றால் நடப்பது எதுவும் அவருக்கானதல்ல. ஆனால் இன்று முதல் முறையாக அவர் அருள்வாக்கு சொல்லப்போவதில் அவருடைய வேலையும் கலந்திருக்கிறது. அதை இந்த தீவிரவாதியும் அரசியல்வாதியும் அறிவது உசிதமல்ல…. அதனால் சொல்வதை யோசித்து அவர்கள் பங்கைச் சொல்வது போலத் தான் அவர் சொல்ல வேண்டியிருக்கிறது.

பின் அவர் சொன்னார். “எல்லா அற்புதங்களையும் செய்ய மகாசக்தியும் வேண்டும். அந்த மகாசக்தியைப் பயன்படுத்த முறையான மந்திர ஞானமும் வேண்டும். நாகராஜ் மகராஜ் ஒரு சக்தி வாய்ந்த ரத்தினக்கல்லை வைத்திருக்கிறான். அதை வைத்து மந்திரங்களைச் சொல்லித் தான் அவன் எல்லா வேலைகளையும் செய்கிறான். அந்த ரத்தினக்கல்லும், மந்திர ஞானமும் சேர்ந்து அவனிடம் இருக்கிற வரைக்கும் நீங்கள் அவன் செய்ய நினைப்பது எதையும் தடுக்க முடியாது

கவனமாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த அஜீம் அகமது உடனே கேட்டான். “அவனுடைய மந்திர ஞானத்தை நம்மால் எடுத்துவிட முடியாது. ஆனால் அந்த ரத்தினக்கல்லை அவனிடமிருந்து பிரித்து விட முடியும்னு சொல்ல வர்றீங்களா சுவாமிஜி

அஜீம் அகமதின் அறிவு வேகம் காளிங்க சுவாமியை மிகவும் கவர்ந்தது. இவனிடம் அதிகமாக வார்த்தைகளை வீணாக்க வேண்டியதில்லை. அவர் சொன்னார். ”ஆமாம்

அஜீம் அகமது கேட்டான். “அவ்வளவு சக்திகளை வெச்சிருக்கிறவன் கிட்ட இருந்து அந்த ரத்தினத்தைப் பிரிக்க முடியுமா சுவாமிஜி?”

சுலபமல்ல. ஆனால் நானும் நாகசக்தி பெற்றவன். எனக்கும் சில பிரயோகங்கள் தெரியும். நான் சொல்கிறபடி நீங்கள் கேட்டால் உங்களுக்கு என்னால் உதவ முடியும்என்றார் காளிங்க சுவாமி.

என்ன செய்யணும் ஸ்வாமிஜி சொல்லுங்கஜனார்தன் த்ரிவேதி சொன்னார்.

காளிங்க சுவாமி அவரிடம் சொன்னார். “உனக்கு அது போன்ற ஆளைத் தெரியாது.” பின் அவர் அஜீம் அகமதைப் பார்த்துச் சொன்னார். “உனக்குத் தெரிந்த ஆட்களில் அபார தைரியமும், திருடுவதில் சாமர்த்தியமும், தெய்வ நம்பிக்கை அல்லது குறைந்தபட்சம் தனக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது என்பதிலாவது நம்பிக்கை இருக்கிறவனுமான ஒருவனை நீ தேர்ந்தெடுத்து த்ரையோதசி திதி இருட்டுவதற்குள் என் காளி கோயிலுக்கு அனுப்பி வை...” 

அஜீம் அகமதுக்கு அபார தைரியமும், திருடுவதில் சாமர்த்தியமும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தெய்வ நம்பிக்கை இருக்கிறவன் என்று அவர் சொன்னது புன்னகையை வரவழைத்தது. புன்னகைத்தபடி அவன் கேட்டான். “ஏன் தெய்வ நம்பிக்கை அல்லது மேலான சக்தியில் நம்பிக்கை இருக்கிற ஆளைக் கேட்கிறீர்கள் சுவாமிஜி?”

காளிங்க சுவாமி சொன்னார். “நாகராஜிடம் சாதாரணமாக யாரும் நெருங்கக்கூட முடியாது. அப்படியிருக்கிற போது அவனிடமிருந்து அந்த ரத்தினத்தைத் திருடி விட்டு வரக் கண்டிப்பாய் முடியாது. அது முடிய வேண்டுமென்றால் அவன் நான் சொல்கிற நேரத்தில் சொல்கிற விதத்தில் முயற்சி செய்ய வேண்டும். அவன் திரும்பி வருகிற வரை நாகராஜ் அவனை எதுவும் செய்து விடாதபடி, போகிறவனுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நான் மந்திர ரூபத்தில் ஒரு சக்திக் கவசத்தைப் போட்டு அனுப்ப வேண்டும். அதற்கு அந்த மனிதனுக்கு தன்னை விடப் பெரிய சக்தி ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையாவது குறைந்த பட்சம் இருந்தாக வேண்டும். அந்த சக்தி அவன் அல்லா என்று நினைத்தாலும் சரி, ஏசுநாதர் என்று நினைத்தாலும் சரி, காளி என்றோ, கிருஷ்ணன் என்றோ, ஈஸ்வரன் என்றோ நினைத்தாலும் சரி எல்லாம் ஒன்று தான். ஆனால் மேலான ஒரு சக்தி இருப்பதாகவே நம்பாதவனுக்கு சக்திக் கவசம் எல்லாம் வேலை செய்யாது....”

அஜீம் அகமதுக்கு காளிங்க சுவாமி சொல்வது எல்லாம் புதிராகத் தோன்றியது. ஆனால் அதை எல்லாம் மூட நம்பிக்கை என்றோ, அர்த்தமில்லாதது என்றோ அவனால் ஒதுக்கி விட முடியவில்லை. ஏனென்றால் சற்று முன் தான் இந்த மனிதர் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களை அவர்களுடைய வார்த்தைகளிலேயே சொல்லி அசத்தி இருக்கிறார்....

அவனுக்கு ஒரே ஒரு சந்தேகம் வந்தது. அவன் அவரிடம் கேட்டான். “நாகராஜ் தமிழ்நாட்டிலிருந்துகிட்டு டெல்லியில் பாம்புகளை வரவழைச்சு அற்புதம் செஞ்ச மாதிரி நீங்க இங்கேயிருந்தே ஏதாவது அவனைச் செய்ய முடியாதா?”

காளிங்க சுவாமி சொன்னார். “அந்த ரத்தினம் அவன் கையில் இருக்கும் வரை நான் எதுவும் செய்ய முடியாது....”

அஜீம் அகமது யோசித்தான். அவர் சொன்ன மாதிரியான ஒருவன் அவனுக்குத் தெரியும். அவன் இந்த நாட்டவன் தான். மிக வித்தியாசமானவன். அசாத்திய தைரியமும், யாரும் சந்தேகப்பட முடியாத தோற்றமும், லாவகமாகச் செயல்படும் திறமையும் கொண்டவன். திருட்டை ஒரு கலை போல் செய்வான். கடவுளைக் கும்பிட்டு தான் எந்தவொரு வேலைக்கும் அவன் இறங்குவான்.

ஒரு முறை அஜீம் அகமது வேடிக்கையாகக் கேட்டான். “நீ செய்யும் இந்தத் தொழிலை உன் கடவுள் ஏற்றுக் கொள்கிறாரா?”

அவன் சொன்னான். “ஏற்றுக் கொள்ளா விட்டால் இந்த அளவு சம்பாத்தியம் இருக்கும் வேறொரு தொழிலை அவர் எனக்குக் காட்டட்டும்.”

அந்தப் பதில் அஜீம் அகமதை அன்று வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. மனிதரில் தான் எத்தனை ரகங்கள். சுவாமிஜி சொல்லும் வேலைக்கு அவன் பொருத்தமானவன் தான். ஆனால் பணம் தான் அதிகம் கேட்பான்...

காளிங்க சுவாமி சொன்னார். “பணத்தைப் பார்க்காதே

அஜீம் அகமது திகைத்தான். என்ன மனிதரிவர். மனதில் நினைக்க நினைக்க நினைப்பதற்குப் பதில் சொல்கிறாரே என்று ஆச்சரியப்பட்டபடி அவன் சொன்னான். ““சரி அந்தப் பொருத்தமான ஆளை உங்களிடம் அனுப்புகிறேன்.”

அவன் த்ரையோதசி திதியில் ராகு காலத்தில் வீட்டிலிருந்து கிளம்பி இருட்டுவதற்குள் என் கோயிலுக்கு வந்து சேர வேண்டும்.”

ஜனார்தன் த்ரிவேதி சந்தேகத்துடன் கேட்டார். “உங்கள் காட்டுக் காளிக் கோயிலில் தான் எப்போதும் பாம்புகள் நிறைஞ்சிருக்குமே. யாரையும் பக்கத்துலயே விடாதே. அந்த ஆள் எப்படி வருவான்....?”


காளிங்க சுவாமி சொன்னார். “அவனை பாம்புகள் எந்த தொந்திரவும் செய்யாது. தைரியமாய் வரலாம். த்ரையோதசி இரவில் அவனுக்கு மந்திரக்கவசம் உருவாக்கி அனுப்புகிறேன். பஞ்சமி நாளில் நான் சொல்லும் நேரத்தில் அவன் அந்த ரத்தினக்கல்லை அங்கிருந்து எடுக்க வேண்டும்””
       
ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “சுவாமிஜி திதி எல்லாம் எங்களுக்குச் சரியாக பார்க்க வராது. அது சில சமயம் முன்னே அல்லது பின்னே ஆகவும் வாய்ப்பிருக்கு. அதனால தேதி கிழமை சொல்லுங்கள்..”

காளிங்க சுவாமி சொன்னார். “22ஆம் தேதி வெள்ளிக் கிழமை, காலை பத்தரை மணியிலிருந்து 12 மணிக்குள் அவன் இருக்குமிடத்திலிருந்து கிளம்பி இருட்டுவதற்குள் கோயிலுக்கு வர வேண்டும். 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவில் நான் சொன்ன வேலையை அங்கே முடிக்க வேண்டும்


இருவரும் தலையசைத்தார்கள். அஜீம் அகமது கிளம்புவதற்கு முன் ஆவலுடன் அவரிடம் கேட்டான். “உங்கள் இந்த சக்திகள் எல்லாம் ரொம்ப சுவாரசியாமாயிருக்கு. இதை நான் கத்துக்கணும்னா என்ன செய்யணும்?”

காளிங்க சுவாமி சொன்னார். “நான் முப்பது வருஷம் சாதகம் செய்து தான் இதைக் கற்றேன். நீயும் குறைந்தது அந்த அளவாவது சாதகம் செய்ய வேண்டி வரும்

அஜீம் அகமது பெருமூச்சு விட்டு விட்டுக் கிளம்பினான். ஜனார்தன் த்ரிவேதி மறுபடி காளிங்க சுவாமிக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு அவனுடன் கிளம்பினார்.

      
(தொடரும்)
என்.கணேசன்

      

5 comments:

 1. sabash. sariyaana potti.

  ReplyDelete
 2. எந்த வேலை செய்தாலும் நாகராஜிடம் எடுபடாது... நாகராஜ் மனம் வந்து அந்த ரத்தினத்தை கொடுத்தால் தான் உண்டு....

  ReplyDelete
 3. It is already known that Nagraj will miss the rathinakkal for some period, so what they plan may come through

  ReplyDelete
 4. மும்முனை தாக்குதல்

  ReplyDelete