சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 25, 2022

சாணக்கியன் 19

 

ம்பி குமாரன் தன் வாழ்க்கையில் இப்படியொரு அவமானத்தை இது வரை சந்தித்ததில்லை. தோல்வியை விட, தோற்ற விதம் அவனை மிகவும் அவமானப்படுத்தியது. காந்தாரம் அவன் மண். தட்சசீலம் அவன் பிறந்து வளர்ந்த நகரம். அங்கே அவனுடைய எதிரிகள் நுழைந்து வென்று இது தான் உன் பலம் என்று கேவலப்படுத்தி விட்டார்கள். அவன் போருக்குத் தயாராகும் முன்பே அவனை வீழ்த்தி விட்டார்கள்.  கேகய நாட்டு அமைச்சர் இந்திரதத் அவன் இருப்பிடத்திற்கே வந்து அவனை ஒரு குறும்புக்கார வாண்டுப்பயலைப் பார்ப்பது போல் அலட்சியத்துடன் பார்த்ததும், பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும் என்று அவனுக்குப் பாடம் நடத்தியதும் அவனை ஆக்ரோஷப்படுத்தியது. இந்திரதத்தின் பேச்சுகள் காதில் நாராசமாக விழுந்தன.  அவன் தந்தை இந்திரதத் சொல்வதெல்லாம் உண்மை என்பது போல அடிக்கடி தலையாட்டியது சித்திரவதையாக இருந்தது. ஆனாலும் கூட முதல் முறையாக ஆம்பி குமாரன் கஷ்டப்பட்டு மௌனம் காத்தான்.

 

அறிவுரைகளின் கடைசியில் இந்திரதத் மென்மையாகச் சொன்னார். “ஆம்பி குமாரனே. உனக்கு ஆசிரியராக இருந்த விஷ்ணுகுப்தருடன் நான் இந்த மண்ணில் கல்வி கற்றவன். அதனால் இந்த மண் மீது எனக்கும் மிகுந்த மரியாதை உண்டு. எனக்குக் கல்வி தந்த இந்த நகருக்குப் படையோடு வர வேண்டியிருந்ததில் இப்போதும் வருத்தத்தை நான் உணர்கிறேன். ஆனால் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்பும் அப்படிச் செய்யாமல் இருப்பது வீரமும் அல்ல விவேகமும் அல்ல என்பதால்....”

 

ஆம்பிகுமாரனுக்கு  இந்திரதத்தின் நாக்கை இழுத்து அறுத்து வீச வேண்டும் என்று தோன்றியது. இந்திரதத் பேசிக் கொண்டே போனார். மறுபடியும் நாகரிக வார்த்தைகளில் வசவுகள்விஷ்ணுகுப்தரின் பெயரைச் சொன்னது அவனுக்கு மனக்கசப்பை மேலும் அதிகப்படுத்தியது. அந்த ஆணவ ஆசிரியரின் நண்பனா இந்த ஆள்…! அவர் குணங்களில் கொஞ்சம் இவரிடமும் இருக்கிறது. அவர் பிடிக்காத ஆட்களிடம் குறைவாகத் தான் பேசுவார். குறைவான பேச்சை அவர் பார்வை ஈடுகட்டி விடும். இந்த ஆள் நிறையப் பேசுகிறார். அவன் அங்கு வருவதற்கு முன்பும் அவன் தந்தையிடம் நிறைய பேசியிருந்தார். அவன் வந்த பின்னும் பேசுகிறார். ஆம்பி குமாரன் இறுகிய முகத்துடன் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அமர்ந்திருந்தான். ஏமாற்றி, கோழைகளைப் போல் திருட்டுத்தனமாக இங்கு வந்து ஆக்கிரமித்து அதை வெற்றி போல காட்டிக் கொள்ளும் இந்த எதிரிகளிடம் அவனுக்கு பேச ஒன்றுமில்லை....

 

ஒருவழியாக பேசி முடித்து காந்தார அரசரை வணங்கி, அவனிடம் தலையசைத்து விட்டு இந்திரதத் விடைபெற்றுக் கொண்டார். அவர் சென்ற பிறகு தந்தையும் மகனும் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருந்தனர். காந்தார அரசர் மகனாக எதாவது சொல்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து பின்னர் மெல்லக் கேட்டார். “சின்ஹரன் எங்கே போனான்?”

 

ஆம்பி குமாரன் அந்தப் பெயரைக் கேட்டவுடன் மனம் கொதித்தவனாகச் சொன்னான். “தெரியவில்லை. அவன் இங்கே ஒரு தாசியின் தாசனாக இருந்தான். அவள் இன்று அதிகாலையிலேயே ஊரை விட்டுப் போய் விட்டாள். அவளுடன் அவனும் போயிருக்கலாம் என்று தோன்றுகிறது. பெண் பித்தன்...”

 

காந்தார அரசர் பெருமூச்சு விட்டார். சின்ஹரன் போன்ற ஒரு மாவீரன் ஒரு பெண்ணின் அடிமையாகி கடமை மறந்து ஆபத்து காலத்தில் ஊரை விட்டு ஓடி விட்டது காந்தாரத்தின் துர்ப்பாக்கியம் தான். ஏற்கெனவே இப்படி ஒரு இளவரசனைப் பெற்றிருக்கும் காந்தாரம் இன்னும் எத்தனை துர்ப்பாக்கியங்களைச் சந்திக்கப் போகிறதோ தெரியவில்லை.

”நம் ஒற்றர்கள் ஏன் இப்படி கேகய நாட்டில் இருந்து படை வருவதை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை...” அவர் மெல்ல மகனைக் கேட்டார்.

 

ஆம்பி குமாரன் தர்மசங்கடத்துடன் நெளிந்து விட்டுச் சொன்னான். “சிறுபடை என்பதால் நம் எல்லையை எட்டும் வரை அவர்கள் நோக்கத்தை நம் ஒற்றர்கள் யூகித்திருக்க வாய்ப்பில்லை. …”

 

காந்தார அரசர் கேட்டார். “எட்டிய பின்….?”

 

ஆம்பி குமாரன் மௌனம் சாதித்தான். அவன் ஒற்றர்களுக்கு அதிக வேலையோ முக்கியத்துவமோ தரவில்லை என்பதனை தந்தையிடம் ஒத்துக் கொள்ள அவன் தன்மானம் விடவில்லை.  முக்கியமாக அவனும் காந்தாரத்தின் மீது கேகயம் படையெடுத்து வரும் என்பதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்போதும் கூட அவனால் நடந்திருப்பதை ஜீரணிக்க முடியவில்லை.  

 

“எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று எனக்கு வாக்களித்த நீ என்ன பார்த்துக் கொண்டாய் ஆம்பி குமாரா. கேகய மன்னர் என் நண்பரான படியால் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறார். இல்லா விட்டால் நாம் சிறையிலோ அல்லது இடுகாட்டிலோ அல்லவா இருந்திருக்க வேண்டி இருக்கும்?”

 

அவர் குற்றம் சாட்டும் தொனியில் பேச ஆரம்பித்தவுடன் ஆம்பி குமாரன் பொறுமை இழந்தான். இனி இவரிடமும் ஒரு பிரசங்கத்தைக் கேட்க அவன் தயாராக இல்லை. “உங்கள் நண்பரான கேகய மன்னரின் பெருந்தன்மையைப் பற்றிப் பேசாதீர்கள் தந்தையே. பெயருக்கு ஒரு தூதனை அனுப்பி எச்சரித்த அவர் அடுத்துச் செய்திருக்கும் காரியம் என்ன? இத்தனைக்கும் நீங்கள் தூதரிடம் எதிர்மறையாக எதையும் சொல்லி அனுப்பியிருக்கவில்லை. அப்படி இருந்தும் நீங்கள் வாக்களித்திருப்பதை நம்பாது அவர் படையை அனுப்பி இருக்கிறார். அந்தப் படையாவது முறைப்படி போர் அறிவிப்பைச் செய்து நம்முடன் போருக்கு வந்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.  அவர்கள் செய்ததில் மரபும் இல்லை. வீரமும் இல்லை….”

 

பொரிந்து தள்ளிய மகனை வேதனையுடன் பார்த்த காந்தார அரசர் சொன்னார். “அதைச் சொல்ல நீ தகுதி உடையவனாக இருக்கிறாயா என்று யோசித்துப் பார் மகனே. நீ அவர்களிடமிருந்து பசுமாடுகளைத் திருடிக் கொண்டு வந்ததும், ஆக்கிரமிப்பு செய்ததும் நேர் வழியிலா? அவர்கள் தரத்திலிருந்து சிறிது இறங்கியதற்கே இவ்வளவு வருத்தப்படுகிறாயே. நீ அவர்களுக்கு முன்னோடியாக இருந்தது உனக்குப் புலப்படவில்லையே….”

 

ஆம்பி குமாரன் கோபத்துடன் எழுந்து அவருக்குப் பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினான்.நிஜங்களை சந்திக்க மறுப்பவன் நிம்மதியாக இருக்க வழியில்லை மகனே” என்று அவர் விரக்தியுடன் முணுமுணுத்தார்.

 

ம்பி குமாரன் அனுப்பிய ஆறு முரட்டு வீரர்கள் சேனாதிபதி சின்ஹரனைத் தேடி வந்த போது சின்ஹரனின் மாளிகையில் அவனுடைய மூத்த சேவகன் மட்டுமே இருந்தான். அவன் பல முறை சொல்லிச் சலித்த பதிலையே இப்போதும் சொன்னான். “அவர் இன்னும் வரவில்லை”

 

ஆம்பி குமாரனின் முரட்டு வீரர்கள் இந்த முறை அந்த வார்த்தைகளை நம்பி திரும்பிச் சென்று விடவில்லை.  மாளிகை முழுவதும் தேடிப் பார்த்து விட்டுத் தான் சென்றார்கள். ஒருவேளை சின்ஹரன் இருந்திருந்தால் அவனைக் கொன்றிருப்பார்கள் என்றே அந்த சேவகனுக்குத் தோன்றியது. செல்வதற்கு முன் அந்த வீரர்கள் அவனிடம் சொல்லி விட்டுப் போனார்கள். ”சேனாதிபதி வந்தால் இளவரசரை உடனடியாகச் சந்திக்கச் சொல் சேவகனே.”

 

ஆம்பி குமாரன் சின்ஹரனைப் பார்த்தவுடன் கொன்று விடும்படி அந்த வீரர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான். சின்ஹரனை ஆக்கிரமித்துக் கொல்வது சுலபமல்ல என்பதால் அவர்களில் மூவருடைய குறுவாள்களில் விஷம் தடவப்பட்டிருந்தது. அது அந்தச் சேவகனுக்குத் தெரிந்திருக்கவில்லை என்றாலும் அவன் அவர்கள் உத்தேசத்தை அவர்களுடைய பார்வையிலும் நடவடிக்கைகளிலுமே உணர்ந்தான். சேனாதிபதி சின்ஹரன் ஒருவேளை ஆம்பி குமாரனைச் சந்திக்கச் சென்றாலும் உயிரோடு திரும்பி வர வாய்ப்பில்லை…

 

அந்தச் சேவகன் சின்ஹரனிடம் பல ஆண்டுகளாகச் சேவகம் புரிகிறான். எல்லோரும் நம்புவது போல் சின்ஹரன் தாசி மைனிகாவுடன் தட்சசீலத்தை விட்டுப் போயிருப்பான் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. சின்ஹரன் அந்த தாசியை ஒரு வேசி போல் பார்க்கவில்லை. அவளிடம் காமத்தைப் போலவே உண்மையாகவே அன்பும் சின்ஹரன் வைத்திருந்தான் என்பது அந்தச் சேவகனுக்கும் தெரியும். ஆனால் நாட்டைத் தியாகம் செய்து விட்டு அவளுடன் சின்ஹரன் போகக்கூடியவன் அல்ல. சின்ஹரனைப் போன்ற நல்லவன், மாவீரன் காமத்தாலும் அன்பாலும் பிணைக்கப்பட்டிருக்கலாமே ஒழிய தாய்நாட்டுக்கு எதிராக என்றும் எதையும் செய்யக்கூடியவன் அல்ல என்பதில் அந்தச் சேவகனுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. ஏதோ ஒரு சதியில் சின்ஹரன் சிக்கி இருக்கலாம்…..

 

இந்த எண்ணம் மனதில் வந்த பின் அந்தச் சேவகனால் சும்மா இருக்க முடியவில்லை. அந்தச் சதியிலிருந்து மீண்டு ஒருவேளை சின்ஹரன் திரும்பி வந்தால் இங்கே ஒரு சதி அவனுக்காகக் காத்திருக்கிறது என்பதை சின்ஹரன் அறிய மாட்டான். அவனை எச்சரிக்க வேண்டும். அது முக்கியம்…..

 

(தொடரும்)

என்.கணேசன்

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

3 comments:

  1. You have taken us to that period itself. Reading about that time politics is quite interesting.

    ReplyDelete
  2. ஆம்பி குமாரன் போன்றவர்கள் அதிகாரத்தில் இருப்பது... அந்த நாட்டு மக்களுடைய துர்பாக்கியம்...

    ReplyDelete
  3. தினமலரில் சொன்னது போல் படிப்பவர்களுக்கு நல்ல உத்வேகம் கொடுக்கிறது.

    ReplyDelete