சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 22, 2022

யாரோ ஒருவன்? 99



தீபக் தினமும் நாகராஜுடன் வாக்கிங் போவதற்கு ஒரு நாளும் தவறவில்லை. அதிகாலையில் எழுவது அவனுக்கு ஆரம்பங்களில் மிகவும் கஷ்டமாக இருந்த போதும் இப்போது பழகி விட்டது. தினமும் அந்த நேரமானால் அலாரம் இல்லாமலேயே தானாக அவன் விழித்துக் கொள்கிறான். இரண்டு நாட்களுக்கு முன் நாகராஜ் அடுத்த திங்கட்கிழமை  கோயமுத்தூரிலிருந்து போய் விடுவேன் என்று சொன்ன போது ஏதோ ஒரு சோகத்தை அவன் உள்மனம் உணர்ந்தது. அதை அவன் வெளிப்படையாக நாகராஜிடம் சொன்ன போது நாகராஜ் அவனைப் பார்த்து அன்பாய் புன்னகைத்தான்.

தீபக் கேட்டான். “நீங்க வந்த வேலை முடிஞ்சுடுச்சா அங்கிள்?”

நாகராஜ் சொன்னான். “முடியப் போகுது

அதை அன்று வேலாயுதத்திடம் சொன்ன போது அவர்அது என்ன வேலைன்னு கேட்டாயா?” என்று கேட்டார்.

தீபக் சொன்னான். “அவர் சில கேள்விகளுக்குச் சரியாய் பதில் சொல்றதில்லை. அதிகமா கேட்டால் இந்த அளவு நெருக்கமாய் இருக்கறதை தவிர்த்துடுவார்

அந்தப் பதில் வேலாயுதத்தை அதிருப்தியடைய வைத்தது. “நீ முன்ன மாதிரி இல்லைஎன்று சொன்னார்.

அந்த சமயத்தில் தர்ஷினியும் இருந்ததால் அவள் தாத்தாவைக் கடிந்து கொண்டாள். “கொஞ்சமாவது நாகரிகம் வேணும் தாத்தா. தனிப்பட்ட விஷயத்தை ஒருத்தர் சொல்ல விரும்பாட்டி துருவி துருவி கேட்கக்கூடாது. இத்தனை வயசாகியும் உங்களுக்கு இது தெரிய மாட்டேன்குதே       

இல்லம்மா. நம்ம பக்கத்து வீட்டுல ஒருத்தன் குடிவர்றான். பாம்பை எல்லாம் வீட்டுக்குள்ளே வெச்சிருக்கான். அவனைத் தேடி யார் யாரோவெல்லாம் வர்றாங்க. திடீர்னு போறேன்னு சொல்றான். ஏன் வந்தான்னும் தெரியல. ஏன் போறான்னும் தெரியல. நாளைக்கு எதோ ஒரு பிரச்சனையாயி யாராவது நம்ம கிட்டே கேட்டா பக்கத்து வீட்டுக்காரங்க நாமளே ஒன்னுமே தெரியாதுன்னு சொன்னா நல்லா இருக்குமா?” என்று வேலாயுதம் சமாளித்தார்.

தீபக் நேற்று தாயிடம் நாகராஜ் அடுத்த திங்கட்கிழமை கோயமுத்தூரை விட்டுப் போய் விடுவான் என்று சொன்ன போது ரஞ்சனி மகனிடம் கெஞ்சினாள். “டேய் அதுக்குள்ளே எப்படியாவது பேசி ஒரே ஒரு தடவை அவரைப் பார்க்க ஏற்பாடு பண்ணுடா. எனக்கு ஒன்னு ரெண்டு கேள்வி மட்டும் அவர்கிட்ட கேட்க வேண்டியிருக்கு

தீபக் சொன்னான். “என்ன கேள்வின்னு சொல்லு. நானே அவர் கிட்ட கேட்டு உனக்கு சொல்றேன்

ரஞ்சனி அதற்குச் சம்மதிக்கவில்லை. “அதெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியாது. அவர் கிட்ட அப்பாயின்மெண்ட் மட்டும் வாங்கிக் கொடு போதும். நானே அவர் கிட்ட கேட்டுக்கறேன்.”

தீபக் சொன்னான். “அஞ்சு லட்சம் ரெடி பண்ணச் சொன்னேனே. பணம் ரெடியா?”

ரஞ்சனி மகனை முறைத்தாள். தீபக் சிரித்துக் கொண்டே சொன்னான். “சரி சரி. முறைக்காதே. அவர் கிட்ட உனக்காக கெஞ்சி கேட்கறேன்

அன்று காலை வாக்கிங் கிளம்பிய போது இன்றைக்கு எப்படியாவது இது விஷயமாய் நாகராஜிடம் பேசி விட வேண்டும் என்று தீபக் உறுதியாக நினைத்துக் கொண்டான். ’அம்மா பூச்செடிகள் எல்லாம் நிறைய வைத்திருக்கிறார்கள். வேண்டுமானால் அவர்களே வந்து உங்கள் தோட்டத்தில் செடியை நட்டுத் தருவார்கள்என்ற வகையில் முன்பே அவன் சொல்லி வைத்திருந்தது இனி உதவாது. ஊரை விட்டே போகிறவன் இனி அந்த வீட்டில் பூச்செடிகள் வைப்பதில் ஏன் அக்கறை காட்டப் போகிறான்?

எதிர்ப்பட்ட நாகராஜுக்கும், சுதர்ஷனுக்கும் குட்மார்னிங் சொல்லி விட்டு வழக்கம் போல நாகராஜின் கை விரல்களைப் பிடித்துக் கொண்டு அவர்களுடன் நடக்க ஆரம்பித்தான். இப்படி விரல் பிடித்து நடப்பது இப்போதெல்லாம் இயல்பான விஷயமாகி விட்டது.

அங்கிள் வீட்டுல எங்கம்மா நச்சரிப்பைத் தாங்கவே முடியல. நீங்க போறதுக்கு முன்னாடி அவங்கள ஒரே ஒரு தடவை பார்த்துப் பேசிடுங்களேன். அவங்களுக்கு எதோ ஒன்னு ரெண்டு கேள்வி கேட்க இருக்காம். அது என்னன்னு சொல்லும்மா. நானே அவர் கிட்ட கேட்டு உனக்குச் சொல்றேன்னா அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்கறாங்க

நாகராஜ் ஒன்றும் சொல்லாமல் நடக்க ஒரு நிமிடம் பொறுத்துப் பார்த்து விட்டு தீபக் சொன்னான். “அங்கிள்... ப்ளீஸ் அங்கிள்

நாகராஜ் சொன்னான். “பாரு தீபக். நான் முதல்லயே சொல்லியிருக்கேன். நான் அப்பாயின்மெண்ட் இல்லாம யாரையும் சந்திக்கறதில்லை. ஒரு தடவை சொன்னா புரிஞ்சுக்கணும்.”

தீபக் உடனே சொன்னான். “நீங்க யாரோ ஒரு அதிகாரியை அடிக்கடி சந்திக்கிறீங்களாம். அந்த மாதிரி இதையும் ஒரு விதிவிலக்கா வெச்சுக்கோங்க அங்கிள். நான் இனி யாருக்கும் உங்க கிட்ட அப்பாயின்மெண்ட் கேட்க மாட்டேன்... இது சத்தியம்

நாகராஜ் புன்னகையுடன் கேட்டான். “யாரோ ஒரு அதிகாரியை நான் அடிக்கடி சந்திக்கிறேன்னு உன் கிட்ட யார் சொன்னது?”

வேலாயுதம் பெயரை தீபக் சொல்லவில்லை. “எப்படியோ எனக்கு தெரிஞ்சுது. அதை விடுங்க. சொன்னது உண்மையா பொய்யா அதை மட்டும் சொல்லுங்க

நாகராஜ் ஒன்றும் சொல்லவில்லை. தீபக் தொடர்ந்து நச்சரித்தான். “அங்கிள். நீங்க ஊரை விட்டு சீக்கிரமாவே போகலைன்னு வெச்சுக்கோங்க. நான் கண்டிப்பா நச்சரிச்சிருக்க மாட்டேன். நீங்க போயிட்டீங்கன்னா நான் வேணாலும் எப்பவாவது ஒரு தடவையாவது உங்கள பாக்கறதுக்குன்னே கூட உங்க ஊருக்கு வருவேன். ஆனா அம்மாக்கு வர முடியறது கஷ்டம். நான் என் அம்மா கேட்டு இது வரைக்கும் செய்யாதது ஒன்னுமேயில்லை அங்கிள். அதனால தான் கெஞ்சிக் கேட்டுக்கறேன்..”

நாகராஜ் பதில் எதுவும் சொல்லாமல் நடக்கவே தீபக் சொன்னான். “சரி அங்கிள். உங்களை என் நிலைமைல வெச்சுக்கோங்க. உங்க அம்மா தினம் உங்கள நச்சரிக்கிறாங்க. உங்களுக்கு உங்கம்மான்னா உயிர். அப்படி இருக்கறப்ப நீங்க என்ன பண்ணுவீங்க? அதை மட்டும் சொல்லுங்க

நாகராஜ் சுதர்ஷனிடம் சொன்னான். “எத்தனை சக்தி எனக்கு இருந்து என்ன பிரயோஜனம்? இந்தப் பையனோட வாயை மூட வைக்கிற சக்தி என் கிட்ட இல்லையே சுதர்ஷன், என்ன பண்றது?’

தீபக் சொன்னான். “வேற ஒன்னும் பண்ண வேண்டாம். எங்கம்மா என்னைக்கு எந்த நேரத்துல உங்கள வந்து பாக்கலாம். அதை மட்டும் சொல்லுங்க போதும்

நாகராஜ் சிரித்து விட்டான். ”சரி ஞாயிற்றுக்கிழமை மதியம் மூனு மணிக்கு என்னை வந்து பார்க்கச் சொல்லு. போதுமா?”

தேங்க்ஸ் அங்கிள். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். இன்னும் உங்கள நீங்க போகிற வரைக்கும் நச்சரிக்கவே மாட்டேன். இது சத்தியம்  என்று நாகராஜின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டு தீபக் சொன்னான். அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

வேறு விஷயங்களைப் பற்றிச் சிறிது நேரம் பேசினார்கள்.  திடீரென்று சுதர்ஷன் கேட்டான். “தீபக் உன் கல்யாணத்துக்கு எங்கள கூப்பிடுவியா இல்லயா?”

“அதுக்கு இன்னும் மூனு நாலு வருஷம் இருக்கு. ஆனா முதல் கல்யாணப் பத்திரிக்கையே அங்கிளுக்குத் தான்…”

“பொண்ணு யாரு. எங்க பக்கத்து வீட்டுப் பொண்ணு தானே?”

தீபக் லேசான வெட்கத்துடன் தலையசைத்தான்.    

நாகராஜ் கேட்டான். “அவங்க வீட்லயும், உங்க வீட்லயும் சம்மதம் சொல்லிட்டாங்களா?”

“இது பத்தி வீட்டுல எல்லாம் இன்னும் பேசல. ஆனா நாங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டோம்…”

வாக்கிங் முடிந்து நாகராஜின் வீட்டை அவர்கள் நெருங்கி விட்டார்கள். வழக்கம் போல் வேலாயுதம் வெளியில் தெரிந்தார். உற்சாகமாக நாகராஜுக்கு “குட் மார்னிங்” சொன்னார்.

அவன் புன்னகையுடன் “குட் மார்னிங்” சொன்னாலும் அவருடன் பேச நின்று விடாமல் உள்ளே போய் விட்டான். சுதர்ஷனும் அவனைப் பின் தொடர்ந்து உள்ளே போய் விட வேலாயுதம் வெளியே பாய்ந்து வந்து தீபக் வேகமாகப் போய் விடாதபடி அவன் கையைப் பலமாகப் பிடித்துக் கொண்டார். “என்னடா இன்னைக்கு ரொம்பவே சந்தோஷமாய் தெரியறே”

“ஒன்னுமில்லை தாத்தா. அம்மா அங்கிளைப் பார்த்து ஏதோ கேட்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. பல நாளா நச்சரிச்சு இன்னைக்கு தான் அங்கிள் கிட்ட அம்மாவுக்கு அப்பாயின்மெண்ட் வாங்கினேன். அங்கிள் அம்மாவை ஞாயிற்றுக்கிழமை மதியம் மூனு மணிக்கு வரச் சொல்லியிருக்கார்.”

வேலாயுதம் பிடி தானாகத் தளர தீபக் ”வரேன் தாத்தா” என்று சொல்லி வேகமாக நகர்ந்தான்.

வேலாயுதம் திகைப்புடன் அப்படியே சிறிது நேரம் நின்றிருந்தார். ரஞ்சனிக்கு நாகராஜிடம் கேட்க என்ன இருக்கிறது என்றோ, அதற்கு நாகராஜ் என்ன பதில் சொல்வான் என்றோ தெரியாவிட்டாலும் விளைவுகள் நல்லதாக இருக்காது என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை.

(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. Super thriller. ஒவ்வொரு வாரமும் நம்ப முடியாத திருப்பங்கள்.

    ReplyDelete
  2. Very interesting. What next? eagerly waiting.

    ReplyDelete
  3. நாகராஜ் வந்த வேலை முடிய போகுதுனா... அது ரஞ்சனியிடம் பேசுவதா? இல்லை விசேச நாக ரத்தினத்திற்காகவா?? இல்லை வேறு காரணமா???

    ReplyDelete
  4. Nagaraj's comments about Dheepak to Sudharsan is funny but true... Laughed together with them.

    ReplyDelete
  5. SIr, arange a meeting between ranjani and Nagu by next week sir, might be very interesting

    ReplyDelete