சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 15, 2022

யாரோ ஒருவன்? 98


ரேந்திரன் முன்பே தெரிவித்திருந்தபடி கல்யாணையும் சரத்தையும் ஏழு மணிக்குச் சந்தித்தான். இருவரும் முந்தைய தைரியத்தில் இல்லை என்பது அவர்களைப் பார்த்த போதே நரேந்திரனுக்கு நன்றாகத் தெரிந்தது. ஏதோ கவலை இருவரையும் அரித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது. முக்கியமாக கல்யாண் அமைதியிழந்து காணப்பட்டான்.

நரேந்திரன் இந்த முறை தனித்தனியாக அவர்களிடம் எதையும் விசாரிக்கவில்லை. அவர்கள் இருவரையும் அழைத்து உட்கார வைத்து விட்டுச் சொன்னான். “மாதவன் இறந்த வெடிகுண்டு வழக்கில் ஒரு பெரிய உண்மை வெளியாயிருக்கு. அதனால நீங்க மறுபடி இங்கேயிருந்து போனதிலிருந்து மாதவன் இறந்தது வரை தயவு செய்து இன்னொரு முறை சொல்லுங்களேன்.”

சரத் கல்யாணைப் பார்க்க கல்யாண் முன்பு சொன்னதையே சிறிதும் மாற்றாமல் சொன்னான். மாதவன், சரத், கல்யாண் மூவரும் சேர்ந்து தான் மணாலிக்கு ரயிலில் போனார்கள். அங்கே ஒரு விடுதியில் தங்கினார்கள். முதல் இரண்டு நாட்கள் மணாலியைச் சுற்றிப் பார்த்தார்கள். பனிப்பொழிவை ரசித்தார்கள். பின் சற்று தொலைவில் ஒரு மலைக்கு ட்ரெக்கிங் போக முடிவெடுத்தார்கள். போகும் அன்று காலை தான் மாதவன் தன் ஷூ பிய்ந்திருப்பதைக் கவனித்தான். சீக்கிரமாய் போய் ஒரு ட்ரெக்கிங் ஷூ வாங்கிவந்து விடுவதாகச் சொல்லி மாதவன் தனியாகப் போனான். போனவன் வரவேயில்லை. அவன் வராதது அவர்களை கவலைக்குள்ளாக்கியது. அப்போது தான் செய்திகளில் ஒரு காரில் வெடிகுண்டு வெடித்திருக்கிறது என்றும் அடையாளம் தெரியாத ஒரு இளைஞன் பலியாகி இருக்கிறான் என்றும் சொன்னார்கள். இருவரும் பயந்து கொண்டே வெடிகுண்டு வெடித்த இடத்தில் பார்க்கப் போனால் இறந்து போயிருந்தது மாதவன் தான் என்பது தெரிந்தது. இருவரும் அதிர்ந்து போனார்கள்.

நரேந்திரன் கேட்டான். “இறந்து போனது மாதவன் தான் என்பதை எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்?”

கல்யாண் சொன்னான். “அந்தக் கார் டிரைவர் சொன்ன அடையாளங்கள் எல்லாம் மாதவனோடதா இருந்துச்சு. அது மட்டுமில்லாம மாதவனோட டிரைவிங் லைசென்ஸ் பாதி கருகி அங்கே கிடந்துச்சு”

நரேந்திரன் சொன்னான். “அந்தக் கார் டிரைவர் இப்ப மாத்தி சொல்றான். அவன் கார்ல இருந்தது மாதவனில்லைன்னு சொல்றான்”

இரண்டு பேர் முகமும் பேயறைந்தது போல மாறியது. கல்யாண் விரைவில் சுதாரித்துக் கொண்டான். ஆனால் சரத்தால் அது முடியவில்லை.

கல்யாண் கேட்டான். “அப்படின்னா மாதவனோட டிரைவிங் லைசென்ஸ் எப்படி அங்கே பாதி கருகின நிலையில விழுந்து கிடந்துச்சு.”

நரேந்திரன் கல்யாணையே கூர்ந்து பார்த்தபடி சொன்னான். “யாரோ அப்பறமா வந்து அந்த இடத்துல போட்டுருக்காங்கன்னும் இப்ப கண்டுபிடிச்சிருக்காங்க”

சரத் முகத்தில் இரத்தம் வடிந்தது. கல்யாணும் திடுக்கிட்டான். ஆனால் இப்போது அவன் அதை மறைத்துக் கொள்ளாமலேயே கேட்டான். “ஏன்?”

நரேந்திரன் அவனுடைய மனோதிடத்தை மனதிற்குள் பாராட்டியபடி சொன்னான். ”தெரியல. அதான் உங்களுக்கு எதாவது சொல்ல முடிகிறதான்னு கேட்க வந்தேன்?”

கல்யாண் சொன்னான். “ஒன்னுமே புரியல. அப்படின்னா மாதவன் எங்கே?”

நரேந்திரன் மெல்ல எழுந்தபடி சொன்னான். “தெரியல. மாதவனுக்கு வேறெதாவது ஆயிருக்கலாம்னு சந்தேகமாய் இருக்கு”

அதற்குப் பின் அங்கு இருக்காமல் நரேந்திரன் விடைபெற்றுக் கொண்டான். அவன் போன பிறகு சரத் நடுங்க ஆரம்பித்தான். கல்யாண் அவன் தோளை இறுக்கப் பிடித்துக் கொண்டு சொன்னான். ”அமைதியாயிரு. அவங்க எதையும் கண்டுபிடிக்க முடியாது. நாமளா உளறாத வரைக்கும் நமக்குப் பிரச்சனையில்ல”


டெல்லி ஆஸ்பத்திரியில் மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், அவர்களை யாரெல்லாம் பார்க்கிறார்கள், அவர்கள் மருத்துவ ரிப்போர்ட்கள் என்னவெல்லாம் சொல்கின்றன என்ற தகவல்கள் எல்லாம் தினந்தோறும் விரிவாகவும், விளக்கமாகவும் நரேந்திரனுக்கு இரவு பத்து மணிக்கு மின்னஞ்சல் மூலம் வந்து சேர்கின்றன. அவர்கள் இருவரும் அந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து அவனுடைய ஒற்றன் ஒருவன் ஆஸ்பத்திரியில் உள்ள நர்ஸ் ஒருத்திக்குப் பணம் தந்து அந்தத் தகவல்களை ரகசியமாகப் பெற்று அவனுக்கு அனுப்பி வருகிறான்.

அன்று மாலையில் அங்கு நடந்த சம்பவங்கள் நரேந்திரனையும் திகைக்க வைத்தன. அந்த இருவரையும் கொல்வதில் தனக்கு விருப்பமில்லை என்று அவன் நாகராஜுக்குத் தெரிவித்த போது ”சரி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவன் சொன்னதை எப்படி சாதிக்கப் போகிறான் என்று நரேந்திரனுக்குச் சந்தேகமாகவே இருந்தது. இப்போது இருவரும் அரைப்பைத்தியங்கள் போல அவ்வப்போது நடந்து கொள்கிறார்கள் என்பதும், திடீர் திடீரென்று மாறுகிறார்கள் என்பதும், ரகசியமாக வைத்திருக்கக்கூடிய விஷயங்களையும் அவர்கள் வெளிப்படையாகப் பேசுகிறார்கள் என்பதும் கேள்விப்படுகிற போது அந்த இருவரையும் நம்பிக்கையோடு பொது இடங்களுக்கோ, புகார் கொடுப்பதற்காகவோ ஜனார்தன் த்ரிவேதி அழைத்துப் போக முடியாது என்பது புரிந்தது. அது அவருக்கே வினையாக முடியலாம். இன்றிரவு சஞ்சய் ஷர்மா தன் கல்லூரிக் காலத்தில் ஒரு காதலியோடு அனுபவித்த உல்லாச வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டானாம். மதன்லால் ஒரு கொலை வழக்கிலிருந்து விடுபட வைக்க ஒரு பணக்காரனிடமிருந்து வாங்கிய 35 லட்சத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தானாம்.  டாக்டர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்ட போது இருவரையும் சீக்கிரத்தில் குணப்படுத்தி விடமுடியாது என்று சொல்லிக் கொண்டார்களாம்.

மறுநாள் காலை எட்டு மணிக்கு அவன் நாகராஜுக்குப் போன் செய்தான். சுதர்ஷன் தான் வழக்கம் போல் முதலில் பேசினான். அவனிடம் நரேந்திரன் சொன்னான். “நான் பதினொன்றரை மணி விமானத்துல டெல்லி போறேன். இனி இங்கே வர வேண்டிய வேலை எதுவும் இல்லை. போறதுக்கு முன்னாடி மகராஜை ஒரே ஒரு தடவை பார்த்துட்டு போகணும்னு ஆசைப்படறேன். அதிக நேரம் எடுத்துக்க மாட்டேன். பத்தே நிமிஷம்”

“கேட்டுட்டு சொல்றேன்” என்ற சுதர்ஷன் ஒரு நிமிடம் கழித்து சொன்னான். “சரி ஒன்பது மணிக்கு மகராஜ் வரச் சொல்றார்”

சரியாக ஒன்பது மணிக்கு நரேந்திரன் நாகராஜ் வீட்டில் இருந்தான். நாகராஜைப் பார்த்து இரு கைகளையும் கூப்பியபடி அவன் உணர்ச்சிவசப்பட்டு சொன்னான். “நன்றிங்கற ஒரு சம்பிரதாயமான வார்த்தையைச் சொன்னால் அது போதாது. நான் என் வாழ்நாள் முழுசும் நீங்க செஞ்சிருக்கற இந்த உதவியை மறக்க மாட்டேன். நான் உங்களுக்கு எப்போதும் கடன்பட்டவனாவே தான் இருப்பேன். உங்களை மாதிரி சக்தி வாய்ந்த ஒருத்தருக்கு நான் திரும்பச் செய்ய ஒன்னுமில்லைன்னாலும் எப்பவாவது ஏதாவது காரியம் என்னால ஆகணும்னா தயவு செஞ்சு நீங்க என் கிட்ட சொல்லணும். ராமனுக்கு அணில் செஞ்ச சேவை மாதிரி அதை பாக்கியமா நினைச்சு நான் செய்வேன்”

நாகராஜ் மென்மையாகச் சொன்னான். “ஒருத்தனை எப்பவுமே காப்பத்தறது அவனோட தர்மம்னும், அழிக்கிறது அவனோட பாவங்கள்னும்  என் குரு அடிக்கடி சொல்வார். உன்னைக் காப்பாத்தினது உன்னோட தர்மம், உன்னைப் பெத்தவங்களோட தர்மம். நான் வெறும் கருவி அவ்வளவு தான்.... உனக்கிருக்கும் ஆபத்து முடிஞ்சுடலை. அது உன் பின்னாடியே இருக்கு. அதனால எச்சரிக்கையாவே இரு.”

நரேந்திரன் தலையசைத்தான். அவன் அந்த ஆபத்தினை அறிவான். அறிந்தே தான் அவன் களமிறங்கியிருக்கிறான். தந்தையின் படுகொலைக்குக் காரணமானவர்களைப் பழிவாங்காமல் நீண்ட காலம் வாழ்வதை விட இந்த முயற்சியில் மரணமே வந்தாலும் அவனுக்கு கௌரவமே. நாகராஜின் காலைத் தொட்டுக் கையை இரண்டு கண்களிலும் ஒற்றிக் கொண்டு கிளம்பினான்.

அவன் கார் ஏறிப் போவதையே ஒரு செடியின் பின்னால் ஒளிந்திருந்து பார்த்து விட்டு வேலாயுதம் இந்தச் செய்தியை மகனுக்குத் தெரிவிக்க ஓடினார்.

கல்யாண் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்குப் பரிமாறிக் கொண்டிருந்த மேகலா சமையலறைக்குப் போகும் வரை காத்திருந்து விட்டு அவர் அவனிடம் தாழ்ந்த குரலில் சொன்னார். “இப்பவும் அந்த அதிகாரி பக்கத்து வீட்டுக்கு வந்துட்டுப் போறான். எனக்கு என்ன சந்தேகம்னா பக்கத்து வீட்டுக்காரன் தன்னோட சக்தியால மாதவன் விஷயத்துல நடந்ததை எல்லாம் கண்டுபிடிச்சு அந்த அதிகாரி கிட்ட சொல்லியிருப்பானோ? இல்லாட்டி அடிக்கடி ஏன் வந்து போறான். இவனும் ஒரு தடவை வந்து பார்க்க அஞ்சு லட்சம்னு வாங்கறவன் அவனை மட்டும் ஏன் இத்தனை தடவை பார்க்க ஒத்துக்கிறான். இதுல எதோ ஒரு உள்விஷயம் இருக்கு. நீ என்ன சொல்றே?”

கல்யாணுக்கும் அவர் சொல்வது சரியாகத் தான் தோன்றியது. ஆனால் பழைய நிகழ்வைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. ஏனென்றால் அபூர்வ சக்திகள் எல்லாம் கோர்ட்டில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. சட்டம் அதை எல்லாம் அங்கீகரிப்பதில்லை….  அவனுடைய கவலைகள் எல்லாம் இப்போது தொழில் சம்பந்தமான பிரச்னைகளாக இருந்தது. இன்னும் எதுவும் சரியாகவில்லை…

(தொடரும்)
என்.கணேசன் 

4 comments:

 1. Even after 98th chapter suspense is not a little bit revealed. Going very interesting.

  ReplyDelete
  Replies
  1. Yes,, naanum atha thaan yosikkren., konjam kooda story oda suspense kuraiyave illa... great sir..

   Delete
 2. மாதவன் இறப்புக்கு இவர்கள் இருவரும் காரணமாக இருப்பார்களோ?

  ReplyDelete
 3. I guess Madhavan was brutally killed by both of his friends for Nagarathinam info!!!

  ReplyDelete