விஷ்ணுகுப்தரும் சந்திரகுப்தனும் குதிரைகள் பூட்டிய பயண வண்டியில் பயணித்தது ஒரு நீண்டநதிக் கரையோடு முடிவுக்கு வந்தது. ஒரு படகில் நதியைக் கடந்த பின் மறுபடியும் நடந்தும், மாட்டு வண்டிகளிலும் அவர்கள் பயணம் தொடர்ந்தது.
விஷ்ணுகுப்தர் ஒவ்வொரு நாள் இரவும்
அவன் என்னவெல்லாம் புதிதாகத் தெரிந்து கொண்டான் என்பதைக் கேட்பார். அவனுக்குச்
சில நாட்களில் புதிதாகச் சொல்ல ஒன்றுமே இருக்காது. அப்படி
அவன் புதிதாகக் கற்றதாக எதுவும் சொல்ல முடியாத நாளில் ‘நீ இன்று
உனக்குக் கிடைத்த நாளை வீணடித்து விட்டாய்” என்று சொல்வார்.
அவர் சொல்லிக் கொடுத்ததை மட்டும் அவன்
நினைவுபடுத்திச் சொன்னாலும் “நீயாக என்ன கற்றாய்?” என்று கேட்பார். சந்திரகுப்தன்
அவருக்குச் சொல்வதற்கென்றே ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் விழிப்புணர்வோடு கவனித்து வைத்திருந்து
அவர் கேட்கையில் எதாவது சொல்வான். அவன் என்ன சொன்னாலும் அதை அவர் பாராட்டுவார். அது எத்தனை
சிறிய விஷயமாக இருந்தாலும் அதை அவர் பாராட்டத் தவறியதில்லை. அவன் கற்றதில்
குறைபாடு இருந்தாலும் பாராட்டி விட்டுத் தான் அந்தக் குறையைச் சுட்டிக்காட்டுவார். அவன் கற்ற
விஷயம் மிக முக்கியமானதாக இருப்பதாக அவர் நினைக்கும் பட்சத்தில் அதையும் சொல்வார். ஆக ஒவ்வொரு
நாளும் அந்த நாளின் முடிவிற்குள் எதாவது கண்டிப்பாகக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்பது
அவர் எதிர்பார்ப்பாக இருந்து, போகப் போக அது அவனுடைய பழக்கமாகவே மாறி விட்டது.
அவனால் வேறு எதையும் கற்றுக் கொள்ள முடியாவிட்டால் வேறு மொழிகள் பேசும் சகபயணிகளிடமிருந்து புதிய முக்கியமான சொற்கள் சிலவற்றையாவது கற்றுக் கொண்டு அவரிடம் அவன் சொல்வான். அதையும் அவர் பாராட்டுவார். அவரைப் பொருத்த வரை புதிதாக எதுவும் கற்றுக் கொள்ளாத நாட்கள் வீணான நாட்கள். சிறியதாக இருந்தாலும் கூட ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொண்ட நாட்களே வாழ்ந்த நாட்கள்.
பெரும்பாலும் அவர் அவர்களுடன் பயணிக்கும்
ஆட்களைக் கவனிக்கச் சொல்வார். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கவனித்துச் சொல்லச்
சொல்வார். அவன்
சொல்லும் பதிலைக் கேட்டு விட்டு ஏன் அப்படி நினைக்கிறான் என்பதையும் சொல்லச் சொல்வார். சந்திரகுப்தன் அவரையும்
அப்படிக் கேட்பதுண்டு. அப்போது அவர் சொல்லும் பதில் மிக நுணுக்கமானதாகவும்,
தெளிவானதாகவும் இருக்கும். அதிலிருந்து
கவனிக்கும் கலையையும் அவன் விரிவாகவே கற்றுக் கொண்டான். ஒரு முறை கூட அவர்
“நான் தான் உன்னைக் கேட்பேன். நீ என்னைக் கேட்கக்கூடாது”
என்று கண்டித்ததில்லை.
அவர்களுடன் பயணிப்பவர்களில் சில சமயங்களில் ஒற்றர்களும் இருப்பதுண்டு.
ஒரு நாள் விஷ்ணுகுப்தர் ஒற்றர்கள் பற்றி அவனிடம் விரிவாகப் பேசினார்.
”ஒரு நாட்டுக்கு ஒற்றர்கள் மிக அத்தியாவசியம். மன்னன் எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அவனுக்கு அவனுடைய எதிரிகள் நடவடிக்கைகள் பற்றித்
தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். எதிரிகள் நடவடிக்கைகள் மட்டுமல்லாமல்
அவன் நாட்டு மக்களே என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதெல்லாம்
அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்தால் தான்
அவன் தன் தவறுகளைச் சரி செய்து கொள்ள முடியும். மக்களின் தவறுகளைக்
கண்டுபிடித்து, தண்டனைகள் வழங்கி அவர்கள் போக்கை மாற்ற முடியும்.
ஏனென்றால் கண்டுகொள்ளப்படாத குற்றங்கள் நாட்டில் அதிகரிக்கவே செய்யும்…”
ஒற்றர்கள் பெரும்பாலும் துறவிகள், ஆன்மிக யாத்திரை செல்லும்
பயணிகள், அல்லது வணிகர்கள் வேடத்தில் தான் இருப்பார்கள் என்றும்
அவர்கள் வேவு பார்க்கும் விதத்தைக் கூர்ந்து கவனித்தால் தான் அவர்கள் ஒற்றர்கள் என்று
கண்டுபிடிக்க முடியும் என்றும் விஷ்ணுகுப்தர் சொன்னார்.
திடீரென்று உடன் பயணிக்கிறவர்களில் யாராவது ஒற்றர்கள் இருக்கிறார்களா
என்று அவர் சந்திரகுப்தனைக் கண்டுபிடிக்கச்
சொல்வார். ஆரம்பத்திலேயே
கூட சந்திரகுப்தன் ஒற்றர்களைச் சரியாகக் கண்டுபிடித்து விடுவான். ஒரு முறை சந்திரகுப்தன் ஒற்றனல்லாத ஒரு ஆளை ஒற்றன் என்று சொல்லி விட்டான்.
விஷ்ணுகுப்தர் கேட்டார். “எப்படிச்
சொல்கிறாய்?”
“அந்த ஆள்
எல்லோரையும் கூர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார். மற்றவர்கள்
பேசும் போது காதைக் கூர்மைப்படுத்திக் கொண்டு அவர்கள் பேசுவதையே கேட்கிறார்.”
விஷ்ணுகுப்தர் சிரித்துக் கொண்டே சொன்னார். “சந்திரகுப்தா. சாதாரண மனிதர்களில் சிலருக்கும் அடுத்தவர்கள் விஷயத்தைத் தெரிந்து கொள்வதில் அபார அக்கறை உண்டு. உருப்படியாகத் தங்கள்
வாழ்க்கையில் ஒன்றும் செய்ய இல்லாத அவர்கள் கவனத்தை அடுத்தவர் வாழ்க்கைக்குத் திருப்பி
அவர்கள் வாழ்க்கையையும், அந்தரங்கங்களையும் அறிவதில் சுவாரசியம் காட்டித் தெரிந்து
கொண்டு அற்ப திருப்தி அடைவதுண்டு. நீ சொன்ன ஆள் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்...”
சந்திரகுப்தன் கேட்டான். “அப்படியானால்
ஒற்றர்களுக்கும் இந்த மாதிரி மனிதர்களுக்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி
ஆச்சாரியரே?”
“முகபாவனையிலும்
நடவடிக்கைகளிலும் சூட்சும வித்தியாசங்கள் இருக்கின்றன. சரியாகக்
கவனித்தால் உண்மையான ஒற்றர்களைக் கண்டுபிடித்து விட முடியும். ஒற்றனுக்கு
அது தொழில். அவன் வேவு பார்க்கும் போது அவன் அறியும் விஷயங்கள் அவன் முகபாவனையை
மாற்றி விடாது. ஆனால் மற்றவன் ஒற்றன் அளவுக்குத் தன் முகபாவனையைக் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்க மாட்டான். கேட்கும் விஷயங்களுக்கேற்ப அவன் முகபாவனை மாறிக் கொண்டேயிருக்கும். அதே போல்
ஒற்றனுக்கு அது தொழிலானதால் அவன் நகர்வுகளில் ஒரு ஒழுங்கு முறையும், நளினமும்
இருக்கும். அந்த அளவு சூட்சுமமான நகர்வுகள் சுவாரசியத்திற்காக அடுத்தவர்களைக்
கவனிப்பவனிடம் இருக்காது. ஒற்றன் அதிகமாகக் கவனிக்கும் தகவல்கள்
முக்கிய மனிதர்களுடையதாகவும்,
அரசியலைப் பாதிக்கக் கூடியவை குறித்தும் இருக்கும். அவர்களுக்குச் சாதாரண மனிதர்களின் தனிப்பட்ட அந்தரங்க
விஷயங்களில் ஆர்வம்
இருக்காது. ஆனால்
மற்றவன் அவனுக்கு நேர்மாறாக இருப்பான்….”
சந்திரகுப்தன் விஷ்ணுகுப்தரைப் பிரமிப்புடன் பார்த்தான். ஆச்சாரியரின் அறிவுக்கெட்டாத
விஷயங்கள் இந்த உலகத்தில் இருக்க முடியுமா?
அந்த விளக்கத்திற்குப் பின் சந்திரகுப்தன் ஒரு ஒற்றனைக் கண்டுபிடிக்கத்
தவறியதே இல்லை. எத்தனை ஜாக்கிரதையான ஒற்றனாக இருந்த போதும் அவனைத் தனித்தறிகிற கூரிய பார்வை
அவனுக்கு வந்துவிட்டிருந்தது.
ஒரு நாள் விஷ்ணுகுப்தர் சொன்னார். “இனி பத்து நாட்களுக்குள்
நாம் தட்சசீலம் சென்றடைந்து விடுவோம் சந்திரகுப்தா. அதன் பின்
உன் கல்வி, முறைப்படி ஆரம்பித்து விடும்”
சந்திரகுப்தன் உற்சாகமானான். வல்லபன் சொன்னது போல் அவன் அதிர்ஷ்டசாலி தான்.
ஆச்சாரியரிடமிருந்து கிடைத்த முறைப்படி அல்லாத கல்வியே அவன் அறிவையும்,
புரிதலையும் எத்தனையோ விசாலப்படுத்தி இருந்தது. பாடலிபுத்திரத்திலிருந்து கிளம்பிய சந்திரகுப்தனுக்கும் இப்போதிருக்கும் சந்திரகுப்தனுக்கும்
இடையே உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போன்ற வித்தியாசம் இப்போதே இருக்கிறது.
முறைப்படியான கல்வியும் கிடைத்தால் அவன் எத்தனையோ உயரங்களுக்குப் போக
முடியும்…
அவன் அவரிடம் கேட்டான். “ஆச்சாரியரே. தட்சசீலத்தில்
என்னவெல்லாம் கற்றுத் தருவார்கள்?”
விஷ்ணுகுப்தர் சொன்னார். “அங்கு வேதங்கள், தத்துவம், ஆயுர்வேதம்,
இலக்கணம், கணிதம், பூகோளம்,
வானவியல், வில்வித்தை, ஜோதிடம்,
பொருளாதாரம், அரசியல் ஆகியவை சொல்லித்தரப்படுகின்றன
சந்திரகுப்தா. ஒருவன் எதையெல்லாம் கற்க விரும்புகிறானோ,
அதை எல்லாம் கற்றுக் கொள்ளலாம். அது மட்டுமல்ல
நான் அங்கு ஆசிரியனான பின் இந்தப் பாடங்களில் ஆராய்ச்சிகள் செய்ய விரும்புபவர்களுக்கு
அதற்கும் ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருக்கிறேன். எந்தப் பாடத்திலும்
நேற்றைய கல்வியோடு நிறுத்திக் கொள்வது வருங்கால மாணவ சமுதாயத்திற்குச் செய்யும் துரோகம்
என்று நான் நினைக்கிறேன். நாம் நம் பங்குக்கு ஏதாவது புதிய அறிவார்ந்த
சேர்க்கையைச் சேர்க்க வேண்டும். சிலரையாவது அதைச் செய்ய ஊக்குவித்தால்
தான் கல்வி வளர்ச்சிப் பாதையில் இருக்கும்”
இத்தனை நாட்கள் அவருடன் பழகியதில் இந்த விஷயத்தையும் சந்திரகுப்தன்
கவனித்திருக்கிறான். எதையுமே அவர் எதிர்காலத்திற்கும் சேர்த்து யோசிக்காமல் இருந்ததில்லை.
அவன் எதிர்காலத்தில் சாதிக்கிறானோ இல்லையோ அவரைப் போன்ற ஒரு தொலைநோக்குள்ள
மனிதரைச் சந்திக்க முடிந்ததே பெரும் பாக்கியமென்று தோன்றியது.
சந்திரகுப்தன் கடவுளுக்கு நன்றி சொன்னான்.
(தொடரும்)
என்.கணேசன்
இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -
(அல்லது)
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.