சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, June 16, 2022

சாணக்கியன் 9

 

விஷ்ணுகுப்தர் பாடலிபுத்திரத்தை விட்டு  வெளியேறும் வரை அவரையே கண்காணித்து வந்த ஒற்றன் பிறகு ராக்‌ஷசரிடம் வந்து சொன்னான். “தாங்கள் கண்காணிக்கச் சொன்ன அன்று அந்த மனிதர் நள்ளிரவில் தான் விடுதிக்கு வந்து சேர்ந்தார். பெரும்பாலும் அவர் கங்கைக்குப் போய் வந்திருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது பிரபுநேற்று அவர் நகருக்கு வெளிப்புறத்தில் உள்ள ஒரு ஏழை வீட்டில் போய் சிறிது நேரம் பேசி விட்டு வந்தார். மறுபடி மாலையிலும் அதே வீட்டுக்குப் போய் அவர் பேசினார். என்ன பேசினார் என்று தெரியவில்லை. ஆனால் இன்று அதிகாலை அந்த வீட்டிலிருந்து ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு பாடலிபுத்திரம் விட்டு வெளியேறினார். அவருக்கு ஒரு பணியாள் தேவைப்பட்டு அதற்காக அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றிருக்கலாம் என்று தோன்றியது…. ஆனால் அந்தச் சிறுவனின் தாய்மாமன் மற்றவர்களிடம் பேசிய போது அந்த அந்தணர் தன் மருமகனுக்குக் கல்விகற்றுத் தருவதாகச் சொல்லி அழைத்துப் போயிருப்பதாகச் சொல்கிறான்….”

 

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பிறகும் ராக்ஷசருக்கு குழப்பமே மிஞ்சியது. பணிச் சிறுவனுக்காக விஷ்ணுகுப்தர் பாடலிபுத்திரம் வந்திருக்க வேண்டியதில்லை.  புரட்சிகரமான கருத்துள்ளவராக இழிகுலத்து மாணவனுக்கும் கற்றுத்தருவது அவரது கொள்கையாக இருந்தால்  தட்சசீலத்துக்கு அருகிலேயே யாராவது ஒரு சிறுவனைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம். விஷ்ணுகுப்தர் பாடலிபுத்திரம் வந்து போனதற்கான உண்மைக் காரணம் மகதத்தின் பிரதம அமைச்சருக்கு இன்னமும் பிடிபடவில்லை. ஆனால் விஷ்ணுகுப்தர் பாடலிபுத்திரத்தை விட்டு வெளியேறி விட்டதால் அவர் நிம்மதி அடைந்தார்.

 

 

பாடலிபுத்திரத்தை விட்டு வெளியேறும் வரை ஒற்றன் ஒருவன் தன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்ததை விஷ்ணுகுப்தர் அறிந்தே இருந்தார். அவர் கங்கைக்கரையிலிருந்து இரவில் விடுதிக்கு வந்த போதிலிருந்தே இந்த ஒற்றன் அவரைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.  அவர் அதைப் பெரிது படுத்தவில்லை. அவரும் சந்திரகுப்தனும் நீண்ட பயணத்தை மேற்கொண்டார்கள்.

 

அந்தக் காலத்தில் பெரும்பாலும் பயணிகள் கூட்டம் கூட்டமாகவே பயணித்தார்கள். வியாபாரிகள், தீர்த்த யாத்திரை போகிறவர்கள், துறவிகள் ஆகியவர்கள் தான் அதிகமாக நெடுந்தூரம் போகிறவர்கள். மற்றவர்களின் பயணங்கள் சிறுதூரப் பயணங்களே. அரசர்கள் மற்றும் அரச குடும்பத்தவர்கள் குதிரைகள் பூட்டிய ரதங்கள், அல்லது குதிரைகள் பூட்டிய பயண வண்டிகள் மூலம் போவார்கள். தூதர்கள், வீரர்கள் போன்றவர்கள் குதிரைகளில் வேகமாகப் போகிறவர்கள். மற்ற பயணிகள் கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும் தான் அதிகம் செல்வார்கள். இரவு நேரங்களில் வழியில் இருக்கும் கிராமங்களில் தங்குவார்கள். அல்லது வெட்டவெளிகளில் சிறிய கூடாரங்கள் அமைத்துத் தங்குவார்கள். கால்நடையாகப் போகிறவர்கள் முழுப் பயணத்தையும் கால்நடையாகவே போய் விட வேண்டியிருப்பதில்லை. சிறிது தொலைவு வரை அவர்களுக்கு மாட்டு வண்டிகளில் இடம் கிடைக்கலாம். சில சமயங்களில் சிறிது தூரம் குதிரையில் போகிறவர்கள் அவர்களை ஏற்றிச் செல்லலாம். ஒருவருக்கொருவர் முடிந்த அளவு உதவிக்கொள்வது அவர்களுக்கு இயல்பான விஷயமாக இருந்தது. சில இடங்களில் சில குழுக்கள் பிரிந்து வேறு பக்கமாக வேறு ஊர்களுக்குப் பயணிக்கும். வேறு சில ஆட்கள் அல்லது குழுக்கள் இவர்களுடன் சேர்ந்து கொள்வார்கள்.

 

வழியில் இருக்கும் கிராமங்களில் வசதியாக வாழும் விவசாயிகளின் வீடுகளில் எல்லோருக்கும் உணவு கிடைக்கும். அவர்கள் அப்படி வழிப்பயணிகளுக்கு உணவிட முடிந்ததைக் கடமையாகவும், ஒரு புண்ணியச் செயலாகவும் எண்ணினார்கள். வழியில் மரங்களில் இருக்கும் கனிகளும் பயணிகளின் வயிற்றை நிறைப்பதுண்டு. மாட்டு வண்டிகளில் பயணிப்பவர்கள் பாத்திரங்களையும் எடுத்து வருவதுண்டு. வழியில் வெட்ட வெளிகளில் கூடாரம் அமைத்து சமைத்துக் கொள்வதுண்டு. அப்படிச் சமைக்கையில் அங்கு இருக்கும் மற்றவர்களுக்கும் தந்து பகிர்ந்துண்டே அவர்களும் சாப்பிடுவது வழக்கம். சந்தித்துப் பிரிவதற்குள் எத்தனையோ நட்புகள் மனிதர்களுக்குள் உருவாவது உண்டு.

 

முதல் முறையாக இப்படிப்பட்ட பயணத்தை மேற்கொண்ட சந்திரகுப்தனுக்கு தினமும் புதிய புதிய அனுபவமாக இருந்ததுபாடலிபுத்திரத்திலிருந்து தட்ச சீலம் மிக நீண்ட தூரம் என்பதால் யாருமே கிளம்பிய இடத்திலிருந்து தட்ச சீலம் வரை அவர்களுடன் கடைசி வரை பயணிப்பவர்களாக இருக்கவில்லை. பல விதமான மனிதர்களை சந்திரகுப்தன் சந்தித்தான். விஷ்ணுகுப்தர் அவனிடம் சொன்னார். “கவனி. நீ ஒரு நாள் அரசனாகப் போகிறாய் என்றால் இந்த மனிதர்கள் எல்லாம் ஒரு நாள் உன் குடிமக்கள் ஆகலாம். தன் குடிமக்களைச் சரியாக அறியாதவன் அரசாளத் தகுதியில்லாதவனாகிறான். அதனால் நன்றாகக் கவனி. புரிந்து கொள்.”

 

சந்திரகுப்தனின் பாடம் அந்தப் பயணத்திலேயே ஆரம்பித்து விட்டது. சின்னச் சின்ன விஷயங்களில் எல்லாம் சூட்சுமமான விஷயங்களை அவர் அவனுக்குச் சொல்லித் தந்தார். அவர் பேசியதில் அனாவசியமான எதுவுமே இருந்ததில்லை. அவர் ஒவ்வொன்றையும்நீ அரசனாக வேண்டுமென்றால்” ”அரசனாகும் போதுஎன்று சொன்னது அவன் கனவை அவர் எதிர்கால நிஜம் என்றே எடுத்துக் கொண்டது போலிருந்தது. அவன் தாய்மாமனும், மற்றவர்களும் அவன் அரச கனவைக் கேலி செய்திருக்கிறார்கள். அவன் தாயின் அன்பான புன்னகையில் கூட அவன் அப்படி ஒரு நாள் ஆக முடியும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. அவனே கனவு மட்டுமே கண்டிருந்தானே ஒழிய, அந்தக் கனவு மிகமிகப் பிடித்திருந்ததே ஒழிய, அது நனவாகும் என்று நம்பியிருக்கவில்லை.

 

ஆனால் விஷ்ணுகுப்தர் அதை உறுதியாக நம்பியது போலத் தெரிந்தது.  அவர் அதை அஸ்திவாரமாக வைத்தே அவனுக்கு அறிவுரைகள் சொன்னார். அதனாலேயே அவர் சொன்னதை மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு அவர் சொன்னபடியே செய்தான். கவனிக்கச் சொன்னவர் சில சமயங்களில் அவன் என்ன கவனித்தான் என்று கேட்பார். அவன் சொல்லும் பதிலைக் கேட்டுக் கொண்டுஅதை ஏன் கவனிக்கவில்லை, இதை எப்படிக் கவனிக்கத் தவறினாய்என்றெல்லாம் கேட்பார். கவனிப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கின்றனவா என்று சந்திரகுப்தன் ஆச்சரியப்படுவான். அடுத்த முறை அதை எல்லாம் சேர்த்து கவனிப்பான்.

 

நிறைய கவனி. நிறைய கேள். ஆனால் குறைவாக மட்டுமே பேசு. நீ பேசிக் கொண்டிருக்கும் போது நீ கற்றுக் கொள்வதில்லைஎன்று விஷ்ணுகுப்தர் அவனிடம் சொன்னார். அவர் கற்பித்த எதிலுமே அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்ததையும் அவன் கவனித்தான்.

 

பயணத்தில் அவர்களுக்கு உணவு தந்தவர்களை மறக்காமல் வாழ்த்தும் பழக்கம் அவருக்கிருந்தது. ”அன்ன தாதா சுகீ பவ (அன்னமளித்தவன் நலமாக இருக்கட்டும்)” என்று வாழ்த்துவார். அவனும் அப்படிச் சொல்லக் கற்றுக் கொண்டான். பயணத்தில் எத்தனையோ பேர் அவர்களை மாட்டு வண்டிகளிலும், குதிரைகளிலும் ஏற்றிக் கொண்டு சென்றிருந்தார்கள். அவர்களை எல்லாம் பயணத்தின் முடிவில் வாழ்த்தும் பழக்கத்தையும் அவன் கற்றிருந்தான்.  அவர் அவனிடம் சொன்னார். “உனக்கு உதவியவன் உனக்கு உதவியதற்காக சந்தோஷப்பட வேண்டும். அந்த நிறைவை நீ அவனுக்கு ஏற்படுத்தவில்லை என்றால் எதிர்காலத்தில் அவன் உனக்கு உதவும் வாய்ப்பு வரும் போது உதவாமல் போகலாம்.”

 

எதுவுமே அந்தந்த நேரத்திற்கான செயல்களாக இருக்காமல் எதிர்காலத்திற்கும் சேர்த்து யோசிக்க வேண்டிய செயல்களாக இருக்க வேண்டும் என்று அவர் சொல்லிக் கொடுத்தார். சந்திரகுப்தன் சிந்திக்கும் விதங்களே சில நாட்களில் மாற ஆரம்பித்தன.

 

ஒரு நாள் அவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கையில் ஒரு முள் விஷ்ணுகுப்தரின் காலைக் குத்தி விட்டது. அந்த முள்ளை எடுத்துப் போட்டு விட்டு நடக்க ஆரம்பிக்காமல் அமைதியாகக் குனிந்து அந்த முட்செடியையே பிடுங்கி எறிய பார்த்தார். அது சுலபத்தில் வரவில்லை. அது ஆழமாக வேர் விட்டிருந்தது. ஆனாலும் பொறுமையாக அந்த மண்ணைக் குழிதோண்டி அந்த முட்செடியை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு தான் பயணத்தைத் தொடர்ந்தார். அதிலும் கூட சந்திரகுப்தன் பாடம் கற்றான். உதவியவர்களை வாழ்த்தியது போலவே, எதிரிகளை வேரோடு அழிப்பதும் முக்கியம், இல்லாவிட்டால் அவர்கள் நம்மை மறுபடியும் தொந்தரவு செய்யும் வாய்ப்பு இருக்கிறது...

 

(தொடரும்)

என்.கணேசன்

4 comments:

  1. Chakaya's teachings are golden not only to Chandragupta, also to us. Great man who led by example. Nicely written. Thanks a lot.

    ReplyDelete
    Replies
    1. Agreed 100 Percent. Marvellous Guru!

      Delete
  2. சந்திரகுப்தர் கற்றுக்கொடுக்கும் உயரிய பாடங்களை கற்க நாமும் தயாராவோம்...

    ReplyDelete
  3. விஷ்ணுகுப்தர் சொல்லித்தரும் உயரிய பாடங்களை கற்க இந்த தொடரில் இருந்து நாமும் தயாராவோம்....

    ReplyDelete