சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 13, 2022

அரக்கன்

 


அரக்கன்

.

பைக்கில் வந்திறங்கி, எதிர்க்குடிசை பாண்டியிடம் பேசிக் கொண்டிருக்கும் இளைஞன் முகம் மகாதேவனுக்கு மிகவும் பரிச்சயமுள்ளதாகத் தோன்றியது.    அவன் பைக்கை விட்டு இறங்கும் போது ஒரு கணம் தான் அவன் முகத்தை அவர் பார்த்திருந்தார்.  அதன் பின் அவன் அந்தப்பக்கம் திரும்பி விட்டதால், இப்போது அவன் முதுகு மட்டும் தான் அவருக்குத் தெரிகிறது. வயோதிகத்தினால் கண்பார்வை மங்கி வருவதால் அவன் அவர் சந்தேகப்படும் நபர் தானா என்பதை நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. அவன் திரும்பும் போது தான் சொல்ல முடியும். அதற்குள் அவர் மனம் அலை பாய்ந்தது.

 

அவர் அந்த இளைஞனையே உற்றுப் பார்ப்பதை பாண்டி கவனித்தான். பாண்டியின் கண்கள் கூர்மையானவை. அவன் உள்ளுணர்வும் மிகவும் எச்சரிக்கையானது. அவனைச் சுற்றி நடக்கும் எதையும் உடனடியாகக் கூர்ந்து கவனிப்பவன் அவன். அது அவனுடைய தொழிலுக்கு அவசியமும் கூட. அவனையோ அவன் வாடிக்கையாளர்களையோ கவனிக்கும் நபர் போலீஸாராகவோ, போலீஸ் ஒற்றராகவோ இருக்கலாம் என்ற சிறிய சந்தேகம் அவனுக்கு வந்தாலும் கூட, சினிமாப்படத்தில் கடவுள் மாயமாவது போல, அவன் இருந்த இடத்திலிருந்து மின்னல் வேகத்தில் மாயமாகி விடுவான். கவனிப்பது எதிர்க்குடிசை பெருசு என்பதால் பாண்டி பதறாமல்  அமைதியாகவே தன் வாடிக்கையாளனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

 

அந்த இளைஞன் பர்ஸிலிருந்து பணத்தை எண்ணிக் கொடுத்து, பாண்டி கொடுத்த சிறிய பொட்டலத்தை வாங்கிக் கொண்டு திரும்பினான். மகாதேவனுக்கு அந்த இளைஞன் அவர் சந்தேகப்பட்ட நபர் தான் என்பது உடனடியாக உறுதியாகியது. தொடர்ந்து அவருடைய அந்தராத்மாவின் ஆழத்திலிருந்து எழுந்த ஓலத்தை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. விதி வலிது! 

 

ஆனால் அந்த இளைஞன் எதிர்க்குடிசை முன் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த கிழவர் பக்கம் பார்க்கவில்லை. அவன் அவரைப் பார்த்திருந்தாலும் அவனுக்கு அடையாளம் தெரிந்திருக்காது.  அவன் பைக் ஏறி வேகமாகப் போய் விட்டான். அந்த இளைஞனின் பைக் பார்வையிலிருந்து மறையும் வரை மகாதேவன் அவனையே சோகமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

பாண்டி கேட்டான். “ஏன் அப்புடி பாக்கறே பெருசு? தெரிஞ்சவனா அந்தப் பையன்?”

 

இல்லையென அவர் தலையசைத்தார். என்றோ பிரிந்து விட்ட மகனை அறிந்தவன் என்று சொல்லக்கூட அவரால் முடியவில்லை. “இதே சாயல்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு பையன் இருந்தான். அவன் ஞாபகம் வந்துச்சு. அதான் பார்த்தேன்.”

 

பாண்டிக்கு அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. கிழவர் இந்தச் சேரிக்கு வசிக்க வந்து ஆறேழு வருடங்கள் ஆகி விட்டன. அவரைத் தேடி இது வரை யாரும் வந்ததில்லை. அவருக்குக் குடும்பம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அவர் அதைப் பற்றி யாரிடமும் பேசியதுமில்லை. அக்கம் பக்கத்தினர் சில சமயங்களில் குடும்பம் பற்றியோ, உறவுகள் பற்றியோ கேட்டால், “யாருமில்லை. எல்லாரையும் இழந்தாச்சுஎன்று மட்டும் பொதுவாகச் சொல்லி நிறுத்திக் கொள்வார். அதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டார். தெரிந்த ஆட்களின் சாயல் இருப்பவர்களைக் கூடச் சோகமாகப் பார்க்கும் அந்தக் கிழவரை அவன் இரக்கத்துடன் பார்த்தான்.

 

இந்தச் சேரிக்கு வந்ததிலிருந்து இன்று வரை அவர் ஒருவரிடமும் சண்டை போட்டோ, கோபப்பட்டோ அவன் பார்த்ததில்லை. ஏன், அவர் குரல் உயர்த்திப் பேசிக் கூட அவன் கேட்டதில்லை. எப்போதும் தானுண்டு, தன் வேலையுண்டு என்று தனிமையிலேயே இருப்பார். சேரியில் எல்லோரும் அவரைபரம சாதுஎன்றே நினைத்தார்கள். ஆனால் ஒரு காலத்தில் அவர் இதற்கு நேரெதிராக இருந்தார் என்பதையும், அவர் குடும்பத்தினரே அவரைஅரக்கன்என்று அழைத்தார்கள் என்பதையும் அவன் அறிய மாட்டான்.     

 

ரு வசதியான குடும்பத்தில், பெற்றோருக்கு இரண்டு பெண்களுக்கு அடுத்து பிறந்தவர் மகாதேவன். ஆண்பிள்ளையைத் தலையில் வைத்துக் கொண்டாடும் தலைமுறை அது. இரண்டு பெண்களுக்குப் பின் தவமிருந்து பெற்ற மகாதேவனை அவர் பெற்றோர் அப்படித் தான் கொண்டாடினார்கள். எல்லையில்லாத பாசம் காட்டி, மகன் கேட்கும் போதெல்லாம் ஏன், எதற்கு என்று கேட்காமல் பணத்தைக் கொடுத்து, எதற்கும், எப்போதும் கண்டிக்காமல் பெற்றோர் வளர்த்ததால் மகாதேவனிடம் நல்ல பண்புகள் எதுவும் ஆரம்பத்திலிருந்தே  இருக்கவில்லை. பொறுப்பற்றவராகவும், ஷோக்குப் பேர்வழியாகவும் வளர்ந்த அவருக்கு தன்னுடைய சுகம், சௌகரியம், தேவைகள் மட்டுமே என்றும் பிரதானமாக இருந்தன.  அவற்றில் ஏதாவது குறை இருந்தால், அதற்குத் தடங்கலாக யாராவது இருந்தால், அவரால் சிறிதும் சகித்துக் கொள்ள முடியாது. உடனே கோபத்தில் கத்தியும், ஆர்ப்பாட்டம் செய்தும், பொருட்களை உடைத்தும்  தன் அதிருப்தியை அவர் வெளிப்படுத்துவார். அதனால் வீட்டார் அவருடைய மனம் சிறிதும் கோணாமல் பார்த்துக் கொள்வார்கள். எப்படியோ அவர் சுமாராகப் படித்து ஒரு பட்டதாரி ஆனார்.

 

மிகவும் செல்லமாய், சிறப்புச் சலுகையுடன் வளர்ந்ததால் மகாதேவனால் எந்த வேலைக்கும் போக முடியவில்லை. பிறருக்கு வேலை செய்து சம்பாதிப்பதை அவர் அடிமைத்தனமாகவே பார்த்தார், அதனால் சுய தொழிலே நல்லது என்று முடிவெடுத்து தொழிலில் இறங்கினார். அதிலும் ஒழுங்கு முறையோ, உழைப்போ, முழுக்கவனமோ இல்லாததால், அதில் போட்ட முதலீடு கரையத் தொடங்கியது. இந்தக் கட்டத்தில் தான் அவருடைய பெற்றோர் நிலைமை பூதாகரமாகப் போவதை உணர்ந்தார்கள்.

 

கல்யாணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகப் போய்விடும்என்று யாரோ சொன்னார்கள். திருமணம் செய்து வைத்தால் மகனுக்குத் தானாகப் பொறுப்பு வந்து விடும் என்று அவர்களும் நினைத்தார்கள். அவர்கள் இறப்பதற்கு முன் புத்திசாலித்தனமாக, அரசாங்க வேலை பார்க்கும் ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணை மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.  பிரச்சினை கைமாறியது.

 

அவர் மனைவி கிரிஜா பத்தரை மாற்றுத் தங்கமாக இருந்தாள். மகள் மல்லிகாவையும், மகன் சுரேஷையும் அவருக்குப் பெற்றுத் தந்தாள்.  கணவர் சரியாகச் சம்பாதித்துத் தரா விட்டாலும்,  ஏழைக் குடும்பத்துப் பெண்ணான அவளுக்கு, தன் சம்பளத்தில் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கத் தெரிந்திருந்தது. கிரிஜா தன் சம்பளத்தில் எப்படியோ குடும்பத்தை நடத்தினாள். மகாதேவன் கடைசியாகச் செய்த கூட்டு வியாபாரத்தில் கூட்டாளி அவருக்குப் போதையை அறிமுகப்படுத்தி, அவர் போதையில் இருக்கையில், வியாபாரப் பணத்தைச் சுருட்ட ஆரம்பித்தான். மகாதேவனின் பெற்றோரின் சொத்து எல்லாம் முடிந்து, அவர் மனைவியின் பணம், நகை எல்லாம் முடிந்த அளவு பிடுங்கி, அந்த வியாபாரத்தில் போட்டார்.  ஆரம்பத்தில் கிரிஜா அவருக்கு நல்லவிதமாய் அறிவுரை சொல்லிப் பார்த்தாள். அவருக்கு எப்போதும் அடுத்தவர்களின் அறிவுரை அதிகப்பிரசங்கித்தனமாயும், அவரை  அவமானப்படுத்துவதாகவும் தான் தோன்றும். அதனால் அவர் கோபம் கொண்டு வீட்டில் பாத்திரங்களை உடைத்தும், மனைவியையும், பிள்ளைகளையும் அடித்தும் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தன்னுடைய அறிவுரை, பண நஷ்டத்திலும், மனக் கஷ்டத்திலும் முடிந்ததால் கிரிஜா அறிவுரை சொல்வதையே விட்டு விட்டாள்.

 

அவளுடைய பணமும், நகைகளும் தீர்ந்தவுடன் அவருடைய கூட்டாளி இனி இவரிடமிருந்து எதுவும் பெயராது என்பதைப் புரிந்து கொண்டு ஒரு நாள் இருப்பதை எல்லாம் சுருட்டிக் கொண்டு, சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவானான் அப்போதும் கூட கிரிஜா அவரிடம் கோபித்துக் கொள்வதற்குப் பதிலாகசனியன் விட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் சும்மா இருங்கள் போதும். என் சம்பளத்தில் எப்படியாவது சமாளிப்போம்என்று தான் சொன்னாள். ஆனால் போதைப்பழக்கம் அவரைச் சும்மா இருக்க விடவில்லை. அவருக்குக் குடும்ப செலவைச் சமாளிக்கும் பிரச்சினை பற்றிய கவலையில்லை. அதை கிரிஜா பார்த்துக் கொள்வாள். பணமில்லாமல் போதைப் பழக்கத்தைச் சமாளிக்க முடியவில்லை என்பது தான் அவருடைய தலையாய பிரச்சினையாக இருந்தது. கண்டவர்களிடம் கடன் வாங்கி அதற்குச் செலவு செய்ய ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் அவரை நெருக்க ஆரம்பித்தார்கள். 

 

அந்தச் சமயத்தில் தான் கிரிஜா, பட்டப்படிப்பு முடித்த மகள் மல்லிகாவின் திருமணத்திற்கு வரன் பார்க்க ஆரம்பித்தாள். அப்போது மகன் சுரேஷ் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான் கிரிஜா வங்கியிலும், தெரிந்தவர்கள், மற்றும் உறவினர்களிடமும், கடன் வாங்கி,  திருமண ஏற்பாடுகளை ஒருத்தியாகவே செய்தாள்.. கணவர் மகளைத் தாரை வார்த்துக் கொடுக்கும் போது அருகில் இருந்தால் போதும் என்று நினைத்தாள்.  

 

திருமணத்திற்குத் தேவையான நகைகளை எல்லாம் ஒரு நாள் வாங்கிக் கொண்டு வந்து அவரிடம் காட்டினாள். அதில் அவருக்கு கடனாளிகளைச் சமாளிப்பதற்கும், மேற்கொண்டு போதுமான அளவு போதைப் பொருள் வாங்குவதற்கும் வழி தெரிந்தது. மகள் திருமணத்திற்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கையில் அந்த நகைகளையும், திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த வெள்ளிச் சாமான்களையும் எடுத்துக் கொண்டு ஒருநாள் நள்ளிரவில் அவர் ஓடிப் போனார். போதை அப்போதைய சந்தோஷத்தைத் தவிர வேறு எதையும் லட்சியம் செய்வதில்லை. அதன் ஆதிக்கத்தில் இருந்த அவரும் மனைவியின் நிலைமை, மகளின் எதிர்காலம், நியாயம், தர்மம், மனிதாபிமானம், அன்பு, பாசம் என்று எதைப் பற்றியும் யோசிக்கவில்லை.   

 

அந்தப் பணத்தில் அவரால் மூன்று வருடங்கள் தாக்குப்பிடிக்க முடிந்தது.  கையிருப்பு முடிந்து, இனி கடனும் கிடைக்க வழியில்லை என்ற நிலைமை வந்த போது தான் வேலைகளுக்குப் போக ஆரம்பித்தார். எடுபிடி வேலைகள் கூடச் செய்தார். ஒரு காலத்தில் அடிமைத்தனம் என்று நினைத்த வேலைகளை விடப் பல மடங்கு கேவலமான வேலைகளையும் அவர் செய்ய வேண்டி வந்தது. அதட்டலையும், மிரட்டலையும். அவமானத்தையும் அவர் சகிக்க வேண்டி வந்தது. அறிவுரைகளைச் சகிக்க முடியாத மனிதருக்கு, கசப்பான அனுபவங்களையே வரிசையாகப் பாடங்களாகத் தந்து வாழ்க்கை அறிவுறுத்தியது. ஆடி அடங்கி வாழ்க்கையில் ஞானோதயம் வந்த போது,  வயோதிகமும் வந்து சேர்ந்திருந்தது. கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை வாழ்ந்திருந்ததால் ஆரோக்கியமும் முற்றிலும் பாழ்பட்டு விட்டது. முடிவில் போதைப்பழக்க மறுவாழ்வு மையம்ஒன்று அவரை போதை அரக்கனிடமிருந்து  காப்பாற்றியது. அதன்பின் அவர் ஒரு சிறிய ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்தார். உணவு ஓட்டலில் கிடைத்தது. தங்குவதற்கு அருகில் உள்ள அந்தச் சேரியில் ஒரு குடிசை குறைந்த வாடகைக்குக் கிடைத்தது.

 

வாழ்க்கையின் இறுதியில் யோசிக்க முடிந்த போது, நினைவில் இருத்திக் கொள்ள அவருக்கு இனிமையான நினைவுகள் எதுவும் இருக்கவில்லை. அது போன்ற நினைவுகளும் கூட முந்தைய காலத்தில் சம்பாதித்திருந்தால் மட்டுமே அல்லவா ஒருவர் வைத்திருக்க முடியும்?  வாழ்ந்த வாழ்க்கையைப் பரிசீலித்துப் பார்க்கையில், அவருக்குத் தன்னையே வெறுக்காமல் இருக்க முடியவில்லை. கடைசியாக, மகளின் திருமணத்திற்கென்று மனைவி கஷ்டப்பட்டு வாங்கிய நகைகளையும் எடுத்துக் கொண்டு ஓடி வந்ததை எண்ணுகையில் அவருக்கே அவரை மன்னிக்க முடியவில்லை. அவரது சகோதரிகளும், சில உறவினர்களும், சில அக்கம்பக்கத்தினரும் அவரை அரக்கன் என்று அவர் காதுபடவே சொன்னதுண்டு. அந்த அடைமொழி, அவருக்கு இப்போது தவறாகத் தெரியவில்லை. அவரே தன்னை அப்படித்தான் இப்போது நினைக்கிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அந்த அடைமொழியை நிரூபித்திருக்கிறார். செல்லமாய் வளர்ந்தவர்கள் எல்லாரும் அவரைப் போல் ஆகி விடுவதில்லை. பலரும் ஒருகாலத்தில் விழித்துக் கொண்டு ஒழுங்காகி விடுகிறார்கள். ஆனால் அவருக்கோ சாகப் போகிற காலத்தில் தான் ஞானோதயம் பிறந்திருக்கிறது.     

 

வாய்விட்டு நிறைய நாட்கள் அழுது இப்போது தான் அவர் ஓய்ந்திருக்கிறார். இப்போதெல்லாம் அவர் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. ஒரு காலத்தில் அற்ப விஷயத்திற்கு எல்லாம் வந்து கொண்டிருந்த கோபம் இப்போது பெரிய விஷயத்துக்கும் கூட வருவதில்லை. அவருக்கு கிடைக்கும் வசவுகள், கசப்பான அனுபவங்கள், வலிகள் எல்லாவற்றுக்கும் காரணம் அவருடைய பழைய கர்மாக்கள் என்று நம்பினார். அதெல்லாம் தனக்கு வர வேண்டியதே என்று நினைத்தார். ‘இதுவும் வேண்டும். எனக்கு இன்னமும் வேண்டும்!’ ஒவ்வொரு வலியையும், ஒவ்வொரு அவமானத்தையும் அவர் தனக்குக் கிடைக்கும் தண்டனையாகவே மனப்பூர்வமாகவே ஏற்றுக் கொண்டார். ஆனால் சுற்றியிருப்பவர்களோ அது புரியாமல், சில சமயங்களில், அவரை மகானைப் போல நினைப்பது அவருக்கு வேடிக்கையாக இருக்கும். அது போன்ற நேரங்களில் நான் மகா மட்டமானவன், அரக்கன், மனிதன் என்று சொல்லக்கூட லாயக்கில்லாதவன்என்று கத்திச் சொல்லத் தோன்றும். ஆனால் அதற்கும் மனம் சலிக்கும்.

 

பலரும் அவரிடம் குடும்பத்தைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். குடும்பம் ஒன்று இருப்பதையே யாரிடமும் அவர் சொல்லவில்லை.  இப்போதும்  நேராகச் சென்று மன்னிப்பு கேட்டால், அவருடைய பிள்ளைகள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ, அவருடைய மனைவி அவரை ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. ஆனால் இனி எந்த விதத்திலும் அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை என்று உறுதியாக முடிவெடுத்திருந்தார்.

 

ஆனால் கடைசியாக மனைவியையும், மகனையும், மகளையும் தூரத்தில் இருந்தாவது ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் என்று அவருக்கு மிகவும் ஆசையாக இருந்தது. ஒரு நாள் சென்று, தூரத்திலிருந்து அவர் வீட்டைக் கண்காணித்தார். அருகிலேயே போனாலும் அவர்கள் யாருக்கும் அடையாளம் தெரியும் தோற்றத்தில் அவர் இல்லை.   ஆனாலும் அவர் அவர்களை நெருங்க விரும்பவில்லை.

 

சுரேஷ் பைக்கில் வெளியே போவதையும், கிரிஜா பாசத்துடன் வெளியே வந்து அவனை வழியனுப்பி வைப்பதையும் பார்த்தார். மாலையில் மல்லிகா தாய் வீட்டுக்கு வந்தாள்.  சிறிது நேரத்தில் அவளும், கிரிஜாவும் கோயிலுக்குப் போனார்கள். போகும் போது அவரைத் தாண்டி தான் போனார்கள். மகள் முகத்தில் சந்தோஷமும், கழுத்தில் தாலியும், உடலில் தங்க நகைகளும் இருந்தன.  ஆனால் அவர் மனைவி கழுத்தில் வெறும் தாலிச் சரடு மட்டும் தான் இருந்தது. காதிலும் மூக்கிலும் தங்கம் இருந்தாலும் கழுத்தில் தங்கம் எதுவும் இல்லை. பழைய கடன்கள் இன்னமும் தீரவில்லை போல் இருக்கிறது. ஐந்தாறு மல்லிப்பூக்களைச் சேர்த்துக் கட்டி தலையில் அவள் வைத்திருந்தாள். அது ஒன்று தான் கூடுதல்.

 

திரும்பி வரும் போது ஒரு இடத்தில் அமர்ந்து குமுறிக் குமுறி அழுதார். அவரைத் திருமணம் செய்து கொண்டதைத் தவிர அந்த உத்தமி, வேறு எந்தத் தவறையும் செய்யவில்லையே! அழுது ஓய்ந்த பின் தன்னையே அவர் மனசமாதானப்படுத்திக் கொண்டார். ’இதெல்லாம் கொஞ்ச காலம் தான். இப்போது சுரேஷ் தலையெடுத்து விட்டான். அவன் அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்வான். அவள் கஷ்டங்கள் எல்லாம் தீரும்.’

 

அதன் பின் அவர் அவர்களைப் பார்க்கப் போகவில்லை. இனி எத்தனை காலம் இருக்கப் போகிறாரோ தெரியவில்லை. இறந்தாலும் அவர்களுக்குத் தெரிவிக்கிற மாதிரி எந்தக் குறிப்புகளையும், ஆதாரங்களையும்  அவர் தன்னிடம் வைத்திருக்கவில்லை. ’இறந்தால் அனாதைப் பிணமாக கார்ப்பரேஷன்காரன்  எடுத்துக் கொண்டு போகட்டும். குடும்பத்தாருக்கு எந்தச் செலவும் வேண்டாம். தலையில் வைக்கும் பூவாவது கிரிஜாவுக்கு மிஞ்சட்டும். நான் செத்த சமாச்சாரம் தெரிந்து அவள் அதையும் தியாகம் செய்ய வேண்டாம்.’

 

வைராக்கியத்துடன் வாழ்க்கையில் ஓரளவு அமைதியும் வந்து சேர்ந்திருக்கும் காலத்தில் தான் அவர் மகனைத் திரும்ப ஒருமுறை பார்க்கிறார். பாண்டியிடம் அவன் வந்து போதைப் பொருள் வாங்கிச் சென்றது அவருக்குப் பேரதிர்ச்சியாகவும், பெரும் வேதனையாகவும் இருந்தது. அவர் குடும்பத்தில் சரித்திரம் திரும்புகிறதா?

 

சுரேஷ் ஆட்கள் அதிகமில்லாத பூங்காவில் தனியாக அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு, அந்தப் போதைப் பொடியை மூக்கில் உறிஞ்சிக் கொண்டு இருந்தான். சொர்க்கத்தின் கதவுகள் திறப்பது போல் இன்பமாக இருந்தது. அவன் ஒரு மாதமாகத் தான் இந்தச் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். ஆரம்பத்தில் அவனுக்கு குற்றவுணர்ச்சி சற்று இருக்கத் தான் செய்தது. ஆனால் யோசிக்கையில் அது தேவையற்றது என்பது புரிந்தது. எதிலும் ஒரு அளவில் இருந்தால் பிரச்சினை இல்லை. அளவுக்கு அதிகமானால் தான் எதுவும் பிரச்சினை. அளவைத் தாண்டும் அளவு அவன் முட்டாள் அல்ல. அவன் அப்பாவைப் போல் கண்டிப்பாக ஆகிவிட மாட்டான். பின் இந்த வயதில் அனுபவிக்காமல் வாழ்க்கையில் எந்த வயதில் இந்த சந்தோஷங்களை எல்லாம் அனுபவிப்பது?

 

அருகில் யாரோ வந்து நிற்பது போல் தோன்றவே அவன் கண்களைத் திறந்தான். யாரோ ஒரு பிச்சைக்காரன்! சுரேஷ் சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து நீட்டினான். அந்தக் கிழவன் அதை வாங்க கையை நீட்டவில்லை.

 

என்ன தான் வேணும்?” என்று சிறு எரிச்சலுடன் சுரேஷ் கேட்டான்.

 

இந்தப் பழக்கத்தை விட்டுடு சுரேஷ்.” என்று சொல்லி அந்தக் கிழவன் கைகூப்பியது அவனுக்குத் திகைப்பாய் இருந்தது. கூர்ந்து பார்த்த பின் அவனுக்கு தந்தையின் அடையாளம் தெரிந்தது.

 

சுரேஷுக்கு முதலில் ஏற்பட்ட அதிர்ச்சி பின் கடுங்கோபமாய் மாறியது. அவன் தன் வாழ்க்கையில், இந்த மனிதனை வெறுத்தது போல் வேறு யாரையும் வெறுத்ததில்லை. அம்மாவும், அவனும், அக்காவும் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் இந்த நாய் தான்.  குடும்பத்திற்காக ஒரு சிறு துரும்பையும் நகர்த்தாத இந்த நாய், எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணமாய் இருந்த இந்த நாய், இப்போது அவனுக்கு அறிவுரை சொல்ல எங்கிருந்தோ வந்திருக்கிறது. அறிவுரை சொல்ல இந்த நாய்க்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

 

சுரேஷ் இறுக்கமான முகத்துடன், ஒரு புழுவைப் பார்ப்பது போல், தந்தையைப் பார்த்து வெறுப்பு கலந்த அலட்சியத்துடன் கேட்டான்.  நீ இவ்வளவு நாள் எங்கேயிருந்தே?”

 

மகன் மரியாதை தராமல் பேசியதற்கு மகாதேவன் வருத்தப்படவில்லை. இதைத் தான் அவர் சம்பாதித்திருக்கிறார். இதற்கு அவனைக் குறை கூற எதுவுமில்லை. அமைதியாகப் பதில் சொன்னார். “நரகத்தில் இருந்தேன். இப்பவும் அங்கே தான் இருக்கேன். நீயும் அங்கே வந்துடாதப்பா

 

அந்த ஆளின் கோபத்தைத் தான் சுரேஷ் சிறு வயதிலிருந்து பார்த்திருக்கிறான். அவரது அமைதி அவனுக்குப் புதியது. ஓங்கி நான்கு அறை அறைய வேண்டும் என்று தோன்றினாலும் அந்த ஆளின் உடலில் கை படுவது கூட அவனுக்கு அருவறுப்பாக இருந்தது. அலட்சியமாக அவன் இன்னொரு சிட்டிகைப் பொடி எடுத்து மூக்கின் நுனியில் வைத்து மெல்ல உறிஞ்சினான். அது தான் அந்த ஆளுக்கு அவன் தரக்கூடிய சரியான பதில் என்று தோன்றியது.

 

அவன் எண்ண ஓட்டங்களை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் ஒன்றும் சொல்லாமல் அவனையே மிகுந்த வேதனையுடன் பார்த்தார். அது அவனை மேலும் கோபமூட்டியது. “உன் மகன் உன்னை மாதிரி தானே ஆவான். அதுல என்ன தப்பிருக்கு?” என்று கேட்டான்.

 

மகாதேவன் வருத்தத்துடன் சொன்னார். “என் மகன் என்னை மாதிரி ஆகறது தப்பில்லை. ஆனால் கிரிஜாவோட மகன் அப்படி ஆகிறது சரியா சுரேஷ்?”

 

தாயின் பெயரைச் சொன்னது சுரேஷை அசைத்தது. அவன் கோபத்துடன்  சொன்னான். “பொண்டாட்டி, புள்ள மேல திடீர்னு அக்கறை வந்துடுச்சு.. வயசான காலத்துல உனக்கு குடும்பம் தேவைப்படுது. அதனால அக்கறை இருக்கறவன் மாதிரி நடிச்சு ஒட்டிக்க பாக்கிறியா? வாய்ல கெட்ட வார்த்தை வந்துடும். பேசாம போயிடு.”

 

மகாதேவன் பொறுமையாகச் சொன்னார். “நான் ஒட்டிக்க வரலை. அப்படி வர்றதுன்னா எப்பவோ வந்திருப்பேன். வந்து சேர்ற அருகதை எனக்கில்லை. ஏன் மன்னிப்பு கேட்கற அருகதை கூட எனக்கு இல்லை. இனி எப்பவும் நான் வரவும் மாட்டேன். இந்தப் பழக்கம் இப்ப சுகமா தெரியும். ஆனால் கடைசில பணம், மானம், மரியாதை, பெருமை எல்லாம் இழந்து கடைசில என்னை மாதிரி உன்னை ஆக்கிடும்ப்பா. அதுக்கு நானே ஒரு உதாரணம்ப்பா

 

சுரேஷ் கோபமாய்ச் சொன்னான். “மரியாதையா ஓடிப்போயிரு. உன்னைப் பார்க்கவே எனக்கு அருவருப்பாய் இருக்கு. அதனால கண்டிப்பா உன்னை மாதிரி நான் ஆயிட மாட்டேன். எனக்கு எந்த அளவுல நிறுத்திக்கணும்னு தெரியும்

 

மகாதேவன் விரக்தியுடன் சிரித்தார். ”இப்படி தான் நானும் ஆரம்பத்துல நினைச்சேன். இதை ஆரம்பிக்கிற ஒவ்வொருத்தனும் நினைச்சிருக்கான். புதைகுழில உள்ளே இழுத்துகிட்டே போய் அழிச்சுடற பழக்கம் இதுப்பா. என் அனுபவத்துல மட்டுமில்ல, என்னை மாதிரி எத்தனையோ பேர் அனுபவத்தை வெச்சும் சொல்றேன். வேண்டாம்ப்பா. எனக்காக வேண்டாம். உன் அம்மாவுக்காக விட்டுடுப்பா. அவளை நீயும் தண்டிச்சுடாதப்பா. அவ பாவம்ப்பா. அந்த உத்தமி ஏற்கெனவே என்னால நிறைய துக்கத்தை அனுபவிச்சிருக்கா. நீயும் அதையே அவளுக்குக் குடுத்துடாதப்பா. இதைச் சொல்ல தான் வந்தேன். இனி வந்து உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்ப்பாசொல்லச் சொல்ல அவர் உடைந்து போய் பேரழுகை அழுதபடி கைகூப்பி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

 

சுரேஷ் தந்தையை திகைப்புடன் பார்த்தான். அவர் சொன்னதையும் அம்மாவையும், நினைக்கையில் அவனையறியாமல் போதைப் பொட்டலத்தை அவன் கை தூர எறிந்தது. அந்தக் காட்சியை தூர இருந்து பார்த்து விட்டு ஆகாயத்தை நோக்கி கைகூப்பி விட்டு, மகாதேவன் வேகமாக நடக்க ஆரம்பித்தார். இனி மகன் கண்ணில் பட அவர் விரும்பவில்லை. வாழ்வில் ஒரு முறையாவது ஒரு நல்ல தகப்பனாகவும், நல்ல கணவனாகவும் இருக்க முடிந்த நிறைவு அவருக்கிருந்தது.

 

சில நிமிடங்கள் சிலை போல அமர்ந்திருந்த சுரேஷ் பின் சுயநினைவுக்கு வந்து, எழுந்து ஓடிச் சென்று தந்தை எங்கேயாவது தென்படுகிறாரா என்று அங்குமிங்கும் பார்த்தான். எத்தனை தேடியும் அவனால் அவரைப் பார்க்க முடியவில்லை. இனி எப்போதும் அவரைப் பார்க்க முடியாது என்று அவன் உள்ளுணர்வு சொன்னது. அவன் கண்கள் லேசாகக் கலங்கின.  

 

 

-    என்.கணேசன்

7 comments:

  1. I couldn't control my tears. Very touching story

    ReplyDelete
  2. Migavum niraivaaga irukiradhu. very good one.
    Regards
    Geetha Ramkumar

    ReplyDelete
  3. அங்கு சென்று படிக்கிறேன்..நன்றி

    ReplyDelete
  4. Sir வணக்கம். புதிய நாவல் எதுவும் எழுத வில்லை யா சார்.

    ReplyDelete
    Replies
    1. தற்சமயம் ஆழமனசக்தியின் மூன்றாம் நூல் எழுதிக் கொண்டிருக்கிறேன். அது முடிந்து தான் நாவல் எழுத ஆரம்பிக்க.வேண்டும். இவ்வருட இறுதியிலோ ஜனவரியிலோ எதிர்பார்க்கலாம்.

      Delete
  5. i wish his dad got his family back :( though its very typical ending .

    ReplyDelete