சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 25, 2022

யாரோ ஒருவன்? 82



நாகராஜ் மாதவனின் பெற்றோரைச் சந்தித்ததையும், பணம் அனுப்பியிருப்பதையும்  மறுப்பானா என்பது நரேந்திரனுக்குத் தெரியவில்லை. ஆனால் குறைந்த பட்சம் இந்தத் தகவலை அவன் பெற்றிருப்பது நாகராஜை திகைப்படையவோ, அதிருப்தியடையவோ வைக்கும் என்று நரேந்திரன் எதிர்பார்த்தான். இது போன்ற சமயங்களில் சில உயர்மட்ட ஆட்கள் கோபத்தையாவது வெளிப்படுத்துவதை அவன் பார்த்திருக்கிறான். எதுவாக இருந்தாலும் சட்டப்படி பார்த்துக் கொள்ளலாம் என்று கூடச் சிலர் அதிருப்தியுடன் சொல்வதுண்டு.

ஆனால் நாகராஜ் அலட்டிக் கொள்ளாமல் இருந்து அவனை அசத்தினான். நாகராஜ் ஒரு இரகசியத்தை அவனுடன் பகிர்ந்து கொள்வது போலச் சொன்னான்.  ”உண்மையில் மாதவன் என் நண்பன்லாம் கிடையாது. இறந்து போன ஆத்மாக்கள் என்னை எப்போதாவது தொடர்பு கொள்வதுண்டு... ஏதாவது தகவல்கள் சொல்றதுமுண்டு. அப்படி தான் ஒரு நாள் என்னை மாதவனோட ஆத்மா என்னைத் தொடர்பு கொண்டு பேசுச்சு. அவனோட பெற்றோரோட சேமிப்பெல்லாம் குறைஞ்சுகிட்டே வருதுன்னும், அவங்க ரொம்ப நல்லவங்கன்னும், எத்தனையோ தர்ம காரியங்கள் செய்யற நான் அவங்களுக்கும் பணம் தந்து உதவணும்னும் கேட்டுகிச்சு. அவங்க கிட்ட சும்மா பணம் தந்தா அவங்க ஏத்துக்க மாட்டாங்கங்கறதால சின்ன ஒரு கதை ஜோடிச்சு அவங்களுக்கு அந்தப் பணத்தை அனுப்பி வெச்சேன். அவ்வளவு தான்....”

நரேந்திரன் அவனை வினோதமாகப் பார்த்தான். ஆனால் அவன் அப்படிப் பார்த்தது நாகராஜை எந்த விதத்திலும் சங்கடப்படுத்தவில்லை. நரேந்திரன் மெல்லக் கேட்டான். “ஆனா நீங்க மாதவனோட சூட்கேஸ்ல எதையோ தேடிப் பார்த்தீங்கன்னும் அவன் வீட்ல சொன்னாங்களே...”

ஆமா மாதவன் ஆத்மா ஒரு பொருள் அவனோட பழைய உடைமைகள்ல இருக்கான்னு பார்க்கச் சொல்லியிருந்துச்சு. ஒருவேளை இருந்தா என்ன பண்ணனும்னும் சொல்லியிருந்துச்சு. அதனால தான் எதையோ சொல்லி அந்த சூட்கேஸையும் பார்க்க வேண்டியதா போச்சு. ஆனா அவன் சொன்ன பொருள் அந்த சூட்கேஸ்ல இருக்கலை.... அதனால எனக்கு அந்த வேலை செய்ய வேண்டியிருக்கல...”

அது என்ன பொருள்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

அப்படி ஒரு பொருள் இருந்து அதை நான் எடுத்திருந்தா உங்க கிட்ட கண்டிப்பா சொல்லியிருப்பேன். அது இல்லாததால உங்க கிட்ட சொல்லறதுல அறமும் இல்லை, அர்த்தமுமில்லை...” நாகராஜ் அமைதியாகச் சொன்னாலும் கறாராகவே சொன்னான்.

எனக்கு இந்தக் கேஸுக்கு உபகாரமா இருக்கும்கிறதால தான் கேட்டேன்.”

இல்லை... உங்களுக்கு அந்தத் தகவல் எந்த விதத்திலும் பயன்படப்போறதில்லை. அதனால உங்களுக்கு அந்த வருத்தம் வேண்டாம்...”

நீங்க கோயமுத்தூர் வந்து மாதவனோட ஒரு நண்பன் வீட்டுக்குப் பக்கத்துல தங்கியிருக்கிறதும் மாதவனோட ஆத்மா சொல்லித்தானா?”

இங்கே நான் வந்து தங்கினது என் தனிப்பட்ட ஒரு வேலைக்காக. “

நரேந்திரன் பதில் வராது என்று தெரிந்தும் முயற்சி செய்து பார்ப்பதில் தப்பில்லையே என்று எண்ணியவனாக அடுத்த கேள்வியைக் கேட்டான். “உங்க பூர்விகம் பத்தி சொல்ல முடியுமா?”

சொல்ல முடியாது... “ எந்த விதமான தயக்கமும் இல்லாமல் நாகராஜ் சொன்னாலும் அவன் குரலில் கோபமோ, அகங்காரமோ தெரியவில்லை. ஒரு சாதாரண கேள்விக்குச் சொல்கிற சாதாரணமான பதில் போலத்தான் சொன்னான்.

மன்னிக்கணும்.... இந்த வழக்குக்கு எதாவது பயன்படுமோன்னு தான் கேட்டேன்.”

அது பயன்படாதுன்னு தான் நான் சொல்லலை. உங்களுக்கு உதவக்கூடிய ஒரு முக்கியமான தகவலைச் சொல்லட்டுமா?”

நரேந்திரன் திகைத்தான். “சொல்லுங்களேன்....”

உங்க எதிரி இந்தியாவுக்குள்ளே நுழைஞ்சிட்டான்...”

நரேந்திரன் திகைப்பு அதிகரித்தது. “எந்த எதிரி?”

உங்கப்பா மகேந்திரனைக் கொன்னவன்

அவன் தந்தை பெயரைத் தெரிந்து வைத்திருக்கிறான், அவர் இறந்த விதத்தையும் தெரிந்து வைத்திருக்கிறான்... அப்படியானால் அவன் தந்தையைக் கொன்றவன் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறான் என்ற தகவலும் சரியாகத்தானிருக்க வேண்டும்...

உங்களுக்கு எப்படித் தெரியும்?” நரேந்திரன் கேட்டான்.

ஒரு ஆள் என் முன்னால உட்கார்ந்திருக்கறப்ப அவங்க சம்பந்தப்பட்ட எத்தனையோ விஷயங்கள் எனக்குத் தெரியும்... அதுல சிலது அந்த ஆளுக்குப் பிரயோஜனப்படற தகவலா இருக்கும். சிலது பிரயோஜனம் இல்லாத தகவலா இருக்கும்....”

நரேந்திரன் அவனை பிரமிப்புடன் பார்த்தான். அவனுக்கு நம்பக் கஷ்டமாக இருந்தது. “அப்படின்னா இன்னும் ஏதாவது தெரியற விஷயத்தைச் சொல்லுங்களேன்....”

இப்ப உங்கம்மா டெல்லில விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிட்டிருக்காங்க. மத்தியானம் ஒன்னும் சாப்பிடலை...”

நரேந்திரனுக்கு அது உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால் அவன் தாய் டெல்லியில் இருப்பதைச் சரியாக நாகராஜ் சொல்லியது ஆச்சரியமாக இருந்தது. “அப்படின்னா மாதவன் உண்மையா எப்படி இறந்தான்னு சொன்னீங்கன்னா எனக்கு உதவியாயிருக்கும்

நாகராஜ் புன்னகைத்தான். “எல்லாத்தையும் நானே சொன்னா உங்க திறமைக்கு வேலையிருக்காது. நீங்களே கண்டுபிடிங்க

சொல்லி விட்டு நாகராஜ் எழுந்து விட்டான். வேறுவழியில்லாமல் நரேந்திரனும் எழுந்திருக்க வேண்டியிருந்தது. “நன்றி

நாகராஜ் தலையசைத்தான். நரேந்திரன் கிளம்பினான். நரேந்திரன் வாசலைத் தாண்டும் போது நாகராஜ் எச்சரித்தான். “உங்களை ஆபத்து சூழ்ந்திருக்கு. எச்சரிக்கையாயிருங்க

அவன் குரலில் ஒருவித மென்மை தெரிந்தது. நரேந்திரன் தலை தாழ்த்தி வணங்கிச் சொன்னான். “சரிங்க. ரொம்ப நன்றி

அவன் வெளியே வந்து விட்டான். வெளியே காரில் ஏறுவதற்கு முன் தாயிற்குப் போன் செய்தான். “அம்மா என்ன பண்ணிகிட்டிருக்கீங்க...”

சுமித்ரா சொன்னாள். “விஷ்ணு சஹஸ்ரமநாமம் சொல்லிட்டிருந்தேன். ஏன் கேட்கறே நரேன்

சும்மா தான். சரி மத்தியானம் என்ன சாப்பிட்டே?’

அவள் அவனுடைய வித்தியாசமான கேள்விகளில் குழப்பமடைந்தது தெரிந்தது. ”இன்னிக்கு ஏகாதசி.... அதனால உபவாசம்.... அதனால தான் விஷ்ணு சஹஸ்ரநாமமும் சொல்லிட்டிருந்தேன். ஆமா ஏன் இந்த நேரத்துல போன் பண்ணி இதையெல்லாம் கேட்டுகிட்டிருக்கே

சும்மா தான். ராத்திரி பேசறேன்ம்மாஎன்று சொல்லி விட்டு கார் ஏறிய நரேந்திரன் பிரமிப்புடன் இருந்ததால் அவன் வெளியே காரின் அருகே நின்று கொண்டு போன் பேசிய போது வேலாயுதம் அவனை மொபைலில் புகைப்படம் எடுத்ததை கவனித்திருக்கவில்லை.


வேலாயுதத்துக்குத் தன் மொபைல் போனில் நரேந்திரனைப் படம் பிடிக்க முடிந்தது பரமதிருப்தியாக இருந்ததுஅவன் நாகராஜின் வீட்டுக்கு வந்த போது அக்கம்பக்கம் பார்க்கிறவனாக இருந்தான். அவர் உற்றுப் பார்த்ததைக் கவனித்து நின்று அவரைக் கூர்ந்து ஆராய்ந்தது அவருக்குச் சிறு படபடப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அரை மணி நேரம் பக்கத்து வீட்டில் இருந்து விட்டு வெளியே வந்தவன் போன் பேசியதில் முழுக்கவனமாக இருந்ததால் அவன் அறியாமல் அவனைக் கவனிக்கவும், படமெடுக்கவும் அவருக்கு முடிந்தது.

நாகராஜிடம் அருள்வாக்கு கேட்க வருபவனாக இருந்திருந்தால் அவன் முற்பகல் நேரத்தில் தான் வந்திருக்க வேண்டும். அன்று ஏற்கெனவே பதினோரு மணி வாக்கில் ஒரு சீக்கியர் வந்து போயிருந்தார். அவர் வந்த போதும், போகும் போதும் தெரிந்த பயபக்தி  நான்கு மணிக்கு வந்த இளைஞனிடம் இல்லை. இவன் என்ன வேலையாக வந்தானோ தெரியவில்லை...

அன்று இரவு மகன் வந்தவுடன் நரேந்திரனின் புகைப்படத்தை அவர் காண்பித்தார். “இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு இவன் வந்திருந்தான். என்ன விஷயமான்னு தெரியலை. ஆனால் நான் அவனைப் பார்க்கிறதைப் பார்த்து அவனும் நின்னு என்னைப் பார்த்தான். கொஞ்சம் வில்லங்கமான ஆள் போலத் தெரியுது...”

கல்யாண் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துத் திகைத்துப் போனான். “அப்பா இவன் தான் மாதவன் சாவு விஷயமா  எங்களை விசாரிக்க வந்த ரா அதிகாரி.... இவன் ஏன் நாகராஜைப் பார்க்க வந்தான்?”

அந்தத் தகவல் வேலாயுதத்தையும் அதிர வைத்தது. ”என்னடா சொல்றே? அப்ப அவன் கேட்ட நாகராஜ் இந்த நாகராஜ் தானா?”

தெரியலை....” என்று கல்யாண் பலவீனமாகச் சொன்னான்.      

  

(தொடரும்)
என்.கணேசன்     

இந்த நாவலையும், சாணக்கியன் உட்பட அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.




2 comments:

  1. Going very interesting. Very eager to know next what.

    ReplyDelete
  2. நாகராஜ் தேவையானதை மட்டும் சொல்லிவிட்டு தன் பேச்சை முடித்துக் கொண்டார்.... மீதி புதிர் வேறு ஒரு சம்பவம் நடந்தால் வெளிபடும் போல....

    ReplyDelete