சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 4, 2022

யாரோ ஒருவன்? 79


புதுடெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் ஃப்ரான்சில் இருந்து வந்திறங்கிய விமானத்திலிருந்து கடைசி ஆளாக அந்தப் பயணி வெளியே வந்தான். விலையுயர்ந்த ஆடைகளும், தங்க ஃபிரேமிட்ட மூக்குக் கண்ணாடியும் அவனைச் செல்வந்தனாகக் காட்டின. நடுத்தர வயதினனாக இருந்த அவனிடம் ஒரு கம்பீரமான அலட்சியம் இயல்பாகவே தெரிந்தது. அவசரமில்லாத அமைதியுடன் நிதானமாக இறங்கிய அவன் விமானநிலையத்தை தன் இயல்பான அலட்சியத்தோடு மேலோட்டமாகப் பார்ப்பது போல் தெரிந்தாலும் அவன் கூர்மையான பார்வை விமான நிலையத்தை மிகக்கூர்மையாகவே அலசியது. இந்தியா இத்தனை வருடங்களில் நிறையவே மாறிவிட்டது….
             
பரிசோதனைப் பகுதியில் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் வரிசையில் நின்ற அவனை யாரும் சர்வதேசத் தீவிரவாதி என்று சந்தேகிக்க முடியாதபடி அவனிருந்தான். அவன் பாஸ்போர்ட்டில் பெயர் ஆல்பர்ட் அலெக்ஸாண்டர் என்று இருந்தது. அவன் பாஸ்போர்ட்டில் சமீபத்தில் பல நாடுகளுக்குப் பயணித்திருந்ததற்கான முத்திரைகள் இருந்தனஅவனிடமிருந்த ஆவணங்களின்படி அவன் கலைப்பொருள்களை சேகரிப்பவன். அடுத்த வாரம் ஜெய்ப்பூரில் நடைபெறவிருக்கும் கலைப்பொருள்கள் ஏலத்திற்காக அவன் இந்தியாவுக்கு வந்திருப்பதாகத் தான் உடன் பயணித்தவர்களிடமும், விசாரித்த அதிகாரிகளிடமும் தெரிவித்திருக்கிறான். அவன் இயக்கத்தவர்கள் இந்தியாவில் சுமார் மூவாயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஏழு பேருக்குத் தான் அவன் இந்தியா வருவது தெரியும்…. அந்த ஏழு பேரும் தங்கள் உயிரைக் கொடுத்தாவது ரகசியம் காப்பவர்கள். அஜீம் அகமது என்ற அவன் பெயரை மறந்தும் உச்சரிக்காதவர்கள்

பரிசோதனை முடிந்து ஒரு சூட்கேஸோடு நிதானமாகவே வந்த அஜீம் அகமதை வரவேற்க அந்த ஏழு பேரில் ஒருவன் மட்டுமே வந்திருந்தான். அவனும் அறிந்தவனாகக் காட்டிக் கொள்ளாமல் முன்பின் தெரியாத அன்னியனை வரவேற்க வந்திருப்பவன் போலவெல்கம் மிஸ்டர் ஆல்பர்ட் அலெக்சாண்டர்என்ற அட்டையை உயர்த்திப் பிடித்தபடி நின்றிருந்தான். நிதானமாக அங்கிருந்த மக்கள் கூட்டத்தினூடே பார்வையைப் பரவ விட்டு தன் பெயரைப் பார்த்து விட்டு வருபவன் போல அவனை நெருங்கிய அஜீம் அகமது நுனி நாக்கு ஆங்கிலத்தில்ஹலோ….ஐம் ஆல்பர்ட் அலெக்சாண்டர்…” என்றான்.

யாராவது அவனை ரகசியமாகக் கவனித்துக் கொண்டிருந்தால் கூட, சின்ன சந்தேகம் கூட எழாதபடி அவர்கள் நடவடிக்கை இருந்தது. பயபக்தியுடன் குனிந்து வணக்கம் சொல்லி அஜீம் அகமதிடமிருந்து சூட்கேஸை வாங்கிக் கொண்ட அந்த ஆள் முன்னால் நடக்க அஜீம் அகமது தன் பழைய அலட்சிய நிதானத்துடனேயே அவனைப் பின் தொடர்ந்தான்.

வெளியே நிறுத்தியிருந்த விலையுயர்ந்த காரில் ஏறிக் கொள்ளும் வரை இருவரும் அன்னியர்களாகவே நடந்து கொண்டார்கள்சூட்கேஸைக் காரின் டிக்கியில் வைத்து விட்டு அந்த ஆள் காரின் பின்கதவைத் திறந்து பயபக்தியுடன் நின்றான். அஜீம் அகமது உட்கார்ந்தவுடன் கதவைச் சாத்தி விட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தவன் அமைதியாக காரைக் கிளப்பினான்.

கார் டெல்லியின் புறநகர்ப் பகுதியில் ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு பங்களாவை நோக்கி விரைய ஆரம்பித்தது.     


ரேந்திரன் நாதமுனியிடம் மெல்லக் கேட்டான். ”அப்படி நாகரத்தினங்கள் உருவாகறது உண்மையாயிருந்தா இன்னேரம் நிறைய பேர் கிட்ட அந்த நாகரத்தினங்கள் இருந்திருக்கணுமே? அப்படி இருக்கிறதா தெரியலையே?”

நாதமுனி சொன்னார். “அந்த நாகரத்தினங்கள எல்லா பாம்புகளும் உருவாக்கிடறதில்லை. அப்படி உருவாகிறப்ப மனிதர்கள் கூட இருக்கறதும், பார்க்கறதும் கூட ரொம்ப ரொம்ப அபூர்வம் தான். பெரும்பாலும் அந்த மாதிரி நேரங்கள்ல அந்த நாகங்கள் தனிமையையும், பாதுகாப்பான இடங்களையும் தான் நாடுது... காடுகள்லயோ, தனியிடங்கள்லயோ இருக்கறப்ப அந்த நாகங்கள் உதிர்க்கிற ரத்தினங்களை எடுத்து பத்திரப்படுத்திக்க ஜனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதில்லை. அந்த ரத்தினங்கள் மண்ணோடு மண்ணா போயிடுது ரிஷிகேசத்துக்கு பக்கத்துல இருக்கற ஒரு காட்டுக் காளி கோயில்ல யாரோ ஒரு சுவாமிஜி இருக்காராம். அந்தக் கோயில் எல்லாம் பாம்புகளால நிறைஞ்சிருக்குமாம். அவர் கிட்டயும் நாகரத்தினங்கள்  இருக்குன்னு சொல்றாங்க. அந்தக் காட்டுக் கோயிலுக்கு சாதாரணமா யாரும் போறதில்லையாம். பாம்புகள் விடாதாம். அந்த சுவாமிஜியைத் தரிசிக்கறது கூட அமாவாசை நாள்ல ராத்திரி ரிஷிகேசத்துல தான் முடியுமாம். அதே மாதிரி  ஹிமாச்சல் பிரதேசத்துல எதோ கிராமத்துல யாரோ ஒரு மகராஜ் இருக்காராம்அவர் கிட்ட நாகசக்தி நிறைய இருக்குன்னு சொல்றாங்க. அதுக்கு அவர்கிட்ட இருக்கற நாகரத்தினங்க தான் காரணம்னு சொல்றாக….”

அவர் இரண்டாவதாகச் சொன்ன அந்த மகராஜ் தான் பரந்தாமன் வீட்டுக்கு வந்து விட்டுப் போன நாகராஜ் என்பது அவருக்கு இப்போதும் தெரிந்திருக்கவில்லை என்பதை நரேந்திரன் கவனித்தான்.  ”அந்த ரெண்டு பேரையும்  நீங்க பார்த்துப் பேசினதுண்டா?”

இல்லை…” நாதமுனி குரலில் வருத்தம் தொனித்தது. “ரிஷிகேஷ் சுவாமிஜியை அமாவாசை ஒரு நாள் தான் பார்க்க முடியும், அதுவும் ராத்திரி மட்டும் தான் பார்க்க முடியும்கிறதால கூட்டம் அதிகம் இருக்குமாம். அதனால அவரை சந்திக்கறது ரொம்ப கஷ்டம். அந்த மகராஜ் கிட்டயும் அப்பாயின்மெண்ட் உடனடியா கிடைக்காதாம். மாசக்கணக்கில் காத்திருக்கணுமாம். பணமும் லட்சக்கணக்குல வாங்கறதா கேள்வி. அவ்வளவெல்லாம் தர்ற நிலைமைல அடியேன் இல்லை….”

கல்யாணோட அப்பா விசேஷ நாகரத்தினம் பத்தி விசாரிச்சார்னு சொன்னீங்க. மத்த நாகரத்தினங்க மாதிரி அதுக்கும் ஏதாவது குறிப்புகள் நம்ம இலக்கியங்கள்லயோ, பழங்காலச் சுவடிகள்லயோ இருக்கா?”

இல்லை…. அது பாம்பாட்டிகள் பரம்பரை பரம்பரையா நம்பற விஷயம். அதே மாதிரி பழங்குடி மக்கள்ல பாம்புகள வணங்குறவுக செவிவழிச் செய்திகளா அதைப்பத்தி நிறைய சொல்றாகஆயிரம் வருஷத்துக்கு ஒரு தடவை தெய்வசக்தி இருக்கற ஏதாவொரு நாகம் அந்த மாதிரி விசேஷ நாகரத்தினத்தை உதிர்க்குமாம். அப்படி உதிர்த்தவுடனே அது இறந்துடுமாம்அந்த விசேஷ நாகரத்தினம் சாதாரண நாகரத்தினத்த விட பலமடங்கு அபூர்வ சக்தியை அதை வெச்சிட்டிருக்கறவனுக்குத் தரும்கிறாக…. அது எந்த அளவு உண்மையோ தெரியலை…”

நீங்க மாதவன் சாவுல ஏதோ சந்தேகம் இருந்துச்சுன்னு சொன்னீங்களேயார் மேல சந்தேகம்? என்ன சந்தேகம்?”

மாதவன் மட்டுமே அந்த வெடிகுண்டுக் கார்ல போயிருக்கறதே எனக்கு யதார்த்தமா படலை. அந்த சமயத்துல மத்த ரெண்டு பேரும் அவன் கூட இல்லாததும், இங்கே வந்த பிறகு அவங்க ரெண்டு பேர் கிட்ட தெரிஞ்ச ஏதோவொரு திருட்டுத்தனமும் அவங்க எதையோ மறைக்கறாகன்னு நினைக்க வெச்சுது. அது எதனாலன்னு சரியா சொல்லத் தெரியலஆனாலும் என் மனசு உணர்ந்த விஷயத்தைச் சொல்றேன்…. 

அவரிடம் பேசி முடித்து விட்டுத் திரும்பி வருகையில் பலவித யோசனைகள் நரேந்திரன் மனதில் அலைபாய்ந்தன. நாதமுனி சந்தேகப்பட்டது போலத் தான்  உண்மை இருந்திருக்கிறது என்பதை அவன் அவரிடம் தெரிவிக்கவில்லை…. மதன்லால் தெரிவித்திருந்த உண்மைகளை வைத்து மறுபடியும் சரத்தையும், கல்யாணையும் விசாரிக்க வேண்டியிருக்கிறது என்றாலும் அதற்கு முன் அவன் நாகராஜையும் பார்த்துப் பேச வேண்டியிருக்கிறது….

வழியில் காரை நிறுத்தி அவன் நாகராஜுக்குப் போன் செய்தான். வழக்கம் போல் நாகராஜின் உதவியாளன் சுதர்சன் தான் பேசினான். நரேந்திரன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மிகுந்த மரியாதையும், பணிவும் கலந்த தொனியில் பேசினான். ”நான் அன்னைக்கு போன் பண்ணினப்ப மூனு நாள் கழிச்சு போன் செய்யச் சொல்லியிருந்தீங்க. மகராஜைப் பார்த்துப் பேச நான் எப்ப வரட்டும்?”

சுதர்சன் உடனடியாக எதுவும் சொல்லவில்லை. என்ன சொல்வதென்று அவன் யோசிப்பது போலத் தெரிந்தது. அவன் வேறு ஏதாவது காரணம் சொல்லி மறுத்தால் அதிகாரத்தைப் பிரயோகித்து சர்வ வல்லமையுள்ள நாகராஜிடம் பேச முடியாது என்பதே நிலைமை என்பதால் நரேந்திரன் அவசரமாகச் சொன்னான். “நான் மகராஜின் நேரத்தை நிறைய எடுத்துக்க மாட்டேன். முக்கியமான கேள்விகள் சிலது மட்டும் தான் கேட்க இருக்கு. அவர் கிட்ட பேசறது அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வர எனக்கு ரொம்ப உதவியாய் இருக்கும். ப்ளீஸ்…”

லைன்லயே இருங்க. கேட்டு சொல்றேன்என்ற சுதர்சன் மூன்று நிமிடங்கள் கழித்துச் சொன்னான். “நாளைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு நீங்க வரலாம். அரை மணிநேரத்துக்குள்ளே என்ன கேட்கணுமோ கேட்டு முடிச்சுக்கோங்க.”

அது போதும். ரொம்ப நன்றிஎன்ற நரேந்திரன் இது வரை இந்தப் பணிவுடன் யாரிடமும் பேசியதில்லை என்பதை நினைவுகூர்ந்தான். பிரதமர் அலுவலகம் வரை உடனடியாகத் தொடர்பு கொள்ள முடிந்த ஒருவனிடம் ஒரு வேலை ஆக வேண்டியிருந்தால், அவன் ஒரு குற்றவாளியாக இல்லாத பட்சத்தில், இப்படியும் குழைய வேண்டியிருக்கிறது….



(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.





3 comments:

  1. Ajeem Ahmed entry is awesome. Now the cat and mouse game begins, I think.

    ReplyDelete
  2. நரேந்திரன் கேள்விக்கு மகாராஜ்கிட்ட விடை கிடைக்குமா? அல்லது அவரும் புதிர் போடுவாரா??
    இந்த சந்திப்பை வேலாயுதம் எவ்வாறு எடுக்கொள்ளப் போகிறார்???

    ReplyDelete
  3. Hi sir, I'm reading this novel again and again, I think its 3rd time,.,

    Now only I noticed one thing, மதன்லால் சிம்லா hotel ல் கடத்தப்படும் போதும் அந்த hotel ல் AA என்று ஆல்பர்ட் அலெக்சாண்டர் என்று தான் பெயர் கொடுத்தீர்கள், இப்போது அஜீம் வரும் போது பதாகை லயும் அதே பெயர் கொடுத்திருக்கிறீர்கள்.,

    நரேந்திரன் fix பண்ண பெயரே அஜீம் வர்றதுக்கு கும் use பண்ணீட்டீங்க..

    ReplyDelete