சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 12, 2021

யாரோ ஒருவன்? 40


ன்று அதிகாலையிலும் அதே கனவு தீபக்குக்கு வந்தது. ”என் மரணம் இயற்கையானதல்ல. திட்டம் போட்டு என்னைக் கொன்னுட்டாங்க....” என்று அதல பாதாளத்திலிருந்து கேட்பது போல பலவீனமாய் ஒரு குரல் கேட்டது. தீபக் தூக்கிவாரிப் போட்டது போல் படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் அவன் இருந்திருந்ததால் அவனால் கண்களை முழுமையாகத் திறக்க உடனடியாக முடியவில்லை. மறுபடி ஒரு முறை அந்தப் பலவீனமான குரல் காதில் ரீங்காரம் ஆனபின் கஷ்டப்பட்டு அவன் கண்களைத் திறந்தான். இது மூன்றாவது நாளாக வரும் கனவு. ஒவ்வொரு நாளும் கேட்ட வார்த்தைகளில் சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருந்தாலும் சொல்லப்பட்ட விஷயம் ஒன்று தான். அந்த தொனியும் ஒன்று தான். அந்தக் குரலில் தாங்க முடியாத வலியை தீபக் இன்று அழுத்தமாகவே உணர்ந்தான்.    

அவன் கடிகாரத்தைப் பார்த்தான். மணி 4.10. மறுபடி படுத்து உறங்க முயன்றான். முடியவில்லை. தொடர்பு கொள்ள முயல்வது யாருடைய ஆத்மா? அது ஏன் அவனைத் தொடர்பு கொள்ள முயல்கிறது?... கேள்விகள் மனதைத் துளைக்கும் போது உறக்கம் சாத்தியமல்ல. எழுந்து விட்டான்.

ஐந்தே கால் மணிக்கு வேலாயுதம் போன் செய்தார். “அவங்க ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்கடா. இன்னைக்கு இடது பக்கமா போறாங்க.... எப்படியாவது இன்னைக்கு அவன் கிட்ட பாம்புகள் பத்திப் பேசு. என்ன சொல்றான்னு பார்ப்போம்....”

வீட்டை விட்டுக் கிளம்பிய தீபக்குக்கு நாகராஜிடம் பாம்புகள் பற்றிப் பேசுவதை விட அவனுக்கு வரும் கனவு பற்றிப் பேசுவது மிக முக்கியமாக இருந்தது. இன்று நாகராஜிடம் அது குறித்த கூடுதல் தகவல்கள் வாங்கி விட வேண்டும் என்று அவன் உறுதியாக இருந்தான்.

ரேஸ்கோர்ஸின் சுற்றுப் பாதையில் அவன் நடக்க ஆரம்பித்த பிறகு சிறிது தூரத்திலேயே நாகராஜும், சுதர்ஷனும் அவனுக்குக் கிடைத்தார்கள். “ஹலோ அங்கிள். குட் மார்னிங்என்று தீபக் உற்சாகமாகச் சொன்ன போது நாகராஜ் புன்னகையுடன்குட் மார்னிங்என்றான். அந்த இளைஞனின் உற்சாகம் அவனையும் தொற்றிக் கொண்டது போலிருந்தது.

அவர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்த தீபக் இந்த முறை சுதர்ஷன் அருகில் இருக்காமல் நாகராஜ் அருகில் இருந்தான். ”அங்கிள் இன்னைக்கு அதிகாலையிலயும் எனக்கு அதே கனவு வந்துச்சு. முழிச்சதுக்கப்பறம் தூக்கமே வரலை. நான் நேத்து அப்பா அம்மா ரெண்டு பேர் கிட்டயும் கேட்டேன். அவங்களுக்கு நெருங்கின சொந்தம் யாராவது சந்தேகப்படற மாதிரி அகால மரணமடைஞ்சிருக்காங்களான்னு கேட்டேன். ரெண்டு பேருமே இல்லைங்கறாங்க. எனக்கு ஒன்னும் புரிய மாட்டேன்குதுஎன்னைத் தொடர்பு கொள்ள நினைக்கிற ஆத்மா யாரோடதுன்னு தயவு செய்து கண்டுபிடிச்சு சொல்லுங்களேன்....”

நாகராஜ் சில வினாடிகள் மவுனமாக இருந்து விட்டுச் சொன்னான். “நான் உனக்கு நெருங்கின ஆத்மான்னு தானே சொன்னேன். பின்னே ஏன் அவங்க கிட்ட போய் நீ கேட்டாய்?”

தீபக் திகைத்து விட்டுச் சொன்னான். “எனக்கு நெருங்கின ஆத்மான்னா அவங்களுக்கும் நெருங்கின ஆத்மாவாய் தான அங்கிள் இருக்கணும். அப்படி இல்லைன்னா என் நெருங்கிய நண்பர்கள் யாராவது செத்திருக்கணும். அப்படி என் நண்பர்களும் கூட யாரும் சாகலையே அங்கிள்

நாகராஜ் எதுவும் சொல்லாமல் நடந்தான். அவன் முகத்தில் இப்போது புன்னகையில்லை. தொலைதூரப் பார்வை பார்த்தபடி அவன் நடக்க நேற்று மாதிரி ஏதாவது ஆகி விடுமோ என்று தீபக் பயந்தான். நடக்கும் போது நட்பு உணர்வுடன் பிடித்துக் கொள்வது போல மெல்ல நாகராஜின் கையை அவன் பிடித்துக் கொண்டான். நாகராஜ் கையை உதறி விடுவானோ, கோபித்துக் கொள்வானோ என்ற லேசான பயம் தீபக்குக்கு இருந்தது. நல்ல வேளையாக அப்படி எதுவும் நாகராஜ் செய்யவில்லை. ஆனால் ஒன்றும் சொல்லவுமில்லை.

அந்த ஆத்மா எங்கப்பா அம்மாவுக்கு நெருங்கின ஆத்மா இல்லையா அங்கிள்?” தீபக் கேட்டான்.

தெரியலைநாகராஜின் குரல் வறண்டிருந்தது.  

தீபக் கெஞ்சும் தொனியில் சொன்னான். “கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்களேன் அங்கிள். நான் ஏதாவது நம்பரோ, பூ பேரோ சொல்லட்டுமா?”

நாகராஜ் சொன்னான். “அப்படி எல்லா நாளும் அந்த முறைல தெரியாது.”

”அப்படின்னா எந்த முறைல தெரியும்?”

“சுதர்சனை அப்புறமாய் கேள் சொல்வான்”


தீபக் சுதர்சனைப் பார்க்க, சுதர்சன் பிறகு சொல்கிறேன் என்று சைகையுடன் தலையசைத்தான். தீபக் ஏமாற்றத்துடன் தலையசைத்தான்

அதைக் கவனித்த நாகராஜ் கனிவாகச் சொன்னான். “அந்தக் கனவு தினம் வர்றது தான் உனக்குப் பிரச்சினையா இருக்குன்னா நீ கவலைப்படாதே. இனி அந்தக் கனவு உனக்கு வராது

தீபக் அந்தக் கனிவான வார்த்தைகளில் நெகிழ்ந்தவனாய்ச் சொன்னான். “தேங்க்ஸ் அங்கிள்.” அவன் விரல்கள் நாகராஜின் விரல்களை நன்றியுடன் அழுத்தின. நாகராஜ் புன்னகைத்தான்.

சில நிமிடங்கள் மூவரும் மவுனமாகவே நடந்தார்கள். திடீரென்று நாகராஜ் கேட்டான். “நீ அம்மா செல்லமா? அப்பா செல்லமா?”

இந்தக் கேள்வியை தீபக் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அதற்கு உற்சாகமாக அவன் பதிலளித்தான். “இரண்டு பேர் செல்லமும் தான். ஆனா அம்மா கிட்ட செல்லம் அதிகம். அம்மா தான் என்னோட ஆத்மார்த்தமான சிநேகிதி. நான் இது வரைக்கும் அம்மா கிட்ட எதையுமே மறைச்சதில்லை. தப்பு செஞ்சா கூட, திட்டினாலும் பரவாயில்லைன்னு நான் அம்மா கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவேன்...”

மறுபடி சில நிமிடங்கள் மவுனம். இனி அவனைப் பற்றிய கேள்விகள் எதாவது கேட்கலாம் என்று தீபக் எண்ணிய போது நாகராஜ் தன் இருபக்கத்து ஆட்களுக்கும் சொல்வது போல் பொதுவாகச் சொன்னான். “சரி. இனி இயற்கை பேசுவதைக் கேட்போம்...”

தீபக்குக்குப் புரியவில்லை. சுதர்ஷனைப் பார்த்தான். சுதர்ஷன் உதடுகள் மீது விரல்களை வைத்துஇனி எதுவும் பேசாதேஎன்று சைகை செய்தான். காற்றின் ஒலியையும், பறவைகளின் ஒலியையும், தங்கள் காலடி ஓசைகளையும் கேட்டுக் கொண்டே மூவரும் நடந்தார்கள். சில நிமிடங்களில் தீபக் தனக்குள்ளே ஒரு பேரமைதி படர்வதை உணர்ந்தான். அது வித்தியாசமான அனுபவமாய் அவனுக்கிருந்தது.

ஒரு சுற்று முடிந்து அவர்கள் நாகராஜின் வீடு வந்து சேர்ந்தார்கள். நாகராஜும், சுதர்ஷனும் தீபக்கைப் பார்த்து தலையசைத்து விடைபெற்றார்கள். அவர்கள் வெளி கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல தீபக் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தான்.

வாடா. வாக்கிங் முடிஞ்சுதாஎன்று சத்தமாகச் சொல்லிக் கொண்டே வேலாயுதம் தீபக்கை வரவேற்றார். அந்தச் சத்தம் கேட்டாவது நாகராஜ் அவர் பக்கம் திரும்புவான், அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு ஹலோ சொல்லியோ, கையசைத்தோ நட்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் நினைத்தது வீணாகியது. நாகராஜ் மட்டுமல்ல சுதர்ஷன் கூட அந்தப் பக்கம் திரும்பவில்லை. அவர்கள் இருவரும் வீட்டுக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டார்கள்.

அதில் ஏமாற்றம் அடைந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாத வேலாயுதம் தீபக்கிடம் தாழ்ந்த குரலில் கேட்டார். “என்னடா அவன் பாம்பைப் பத்தி ஏதாவது பேசினானா?”

அதையெல்லாம் பேச முடியல தாத்தா. இயற்கை பேசறதைக் கேட்கலாம்னு என் வாயை அடைச்சுட்டார் அவர். பேசாமல் தான் நடந்து வந்தோம்

நாகராஜின் கையைப் பிடித்துக் கொண்டபடியே தீபக் வந்ததைத் தூரத்தில் இருந்தே கவனித்திருந்த வேலாயுதம் இந்தப் பதிலில் ஏமாற்றம் அடைந்தார். ’இவ்வளவு நெருக்கமாய் இவனிடம் பழக ஆரம்பித்தாலும் முக்கியமான விஷயங்களைப் பற்றி நாகராஜ் இவனிடமும் வாயைத் திறக்க மாட்டேன்கிறானே. அதற்கான வழியையும் விவரமாய் அடைத்து விடுகிறானே ஏன்என்ற கேள்வி அவர் மனதை நெருடியது.




(தொடரும்)
என்.கணேசன் 

2 comments:

  1. Mystery is deepening and this novel is unassuming and very interesting.

    ReplyDelete
  2. ஒரு வேலை அந்த கனவு வருவதற்கு நாகராஜ் தான் காரணமாக இருக்குமோ?

    ReplyDelete