சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 29, 2021

இல்லுமினாட்டி 113



க்ரிஷ் பெயரைத் தெரிவித்து அலைபேசி அடித்தது. சிந்து இதயத்தில் ஒரு பாரத்தை உணர்ந்தாள். இனி இவன் என்ன சொல்லப் போகிறானோ என்று நினைத்துக் கொண்டே எடுத்துப் பேசினாள். “ஹலோ

சிந்து, க்ரிஷ் பேசறேன்

சொல்லுங்கள்

விஸ்வம் போன் செய்தானா?”

அதற்குள் இவன் எப்படி அறிந்தான்என்று சிந்து திகைத்தாள். விஸ்வத்தைப் பற்றி இவனும் இவனைப் பற்றி விஸ்வமும் விவரங்களை எப்படியோ சீக்கிரமே தெரிந்து கொண்டு விடுகிறார்கள். க்ரிஷ் ஜெர்மனி போவான் என்று விஸ்வமும் முன்பே தெரிந்து வைத்திருந்து சொன்னது நினைவுக்கு வந்தது. அவள் பதில் சொல்லவில்லை.

ஆனால் க்ரிஷ் அந்த மௌனத்திலேயே பதிலைப் படித்துக் கொண்டுஅவன் என்ன சொன்னான் சிந்து?” என்று கேட்டான்.

சிந்து அதற்கும் பதில் சொல்லவில்லை. ஆனால் க்ரிஷ் அவளை வற்புறுத்திக் கேட்டான். “சொல் சிந்து. அவன் என்ன சொன்னான்?”

சிந்து சொன்னாள். “க்ரிஷ் என்னை வற்புறுத்திக் கேட்காதீங்க ப்ளீஸ். நான் யாரைப் பத்தியும் யார் கிட்டயும் சொல்ல விரும்பல. நீங்க பயப்படாதீங்க. நீங்க வர்றதுக்கு முன்னால் நான் உங்க வீட்டுக்குப் போக மாட்டேன். போய்த் தான் ஆகணும்கிற நிலைமை வந்தால் நானே தற்கொலை செய்துக்கறேன் போதுமா? என்னாலே யாருக்கும் எந்தக் கஷ்டமும் வராது...” சொல்லச் சொல்ல அவள் குரல் உடைந்தது.

முட்டாள் மாதிரி பேசாதே. உன்னை மாதிரி ஒரு தைரியமான பொண்ணு தற்கொலையைப் பத்திப் பேசலாமா?”

அடுத்தவங்க கையால சாகறதை விடத் தற்கொலை மேல் க்ரிஷ்சிந்து விரக்தியுடன் சொன்னாள்.

க்ரிஷ் மென்மையாகச் சொன்னான். “நீ என் அண்ணா கூட வாழ்ந்து பேரன் பேத்தி எல்லாம் பிறந்த பின்னால் செத்தா போதும் சிந்து

சிந்து அந்த வார்த்தைகளில் கண்கலங்கினாள். “க்ரிஷ் உங்களுக்கே தெரியும். இது ஆரம்பத்திலிருந்தே நாடகம்னு. அதனால தான் நீங்க ஊர்ல இல்லாதப்ப நான் அங்கே இருக்கக்கூடாதுன்னு ஊரை விட்டே அனுப்பியும் வெச்சீங்க இப்ப என்ன பேச்செல்லாம் மாறுது...”

இப்போ நீயும் பழைய சிந்துவா இல்லை.... அதனால நானும் பழைய மாதிரி பேசலை

நான் பழைய சிந்துவா இல்லைன்னு உங்களுக்கெப்படித் தெரியும்?”

உன் புதுக் குடும்பதோட நீ சேர்ந்திருக்கிற ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்தேன். நடிப்பில்லாத உண்மையான சந்தோஷம் உன் முகத்துல தெரிஞ்சுது. இந்த சிந்துவை நம்பலாம்னு என் மனசு சொல்லுச்சு...”

அவளைப் பற்றி அவ்வப்போதே அவன் வெளிநாட்டில் இருந்தாலும் கூட அறிந்து கொள்கிறான் என்பது அவளைத் திகைக்க வைத்தது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கேட்டாள். “நம்பிக்கை இருக்கற ஆள் எதுக்கு விஸ்வம் என்ன சொன்னான்னு கேட்கறீங்க?”

விஸ்வத்தை உன்னால சமாளிக்க முடியாதுன்னு தான் கேட்டேன் சிந்துஎன் அளவுக்கு உனக்கு அவனைத் தெரியாது.... உன்னை அவன் கிட்டே இருந்து என்னால காப்பாத்த முடியும்னு நான் நம்பறேன்...”

ஆனால் சிந்துவால் அதை நம்ப முடியவில்லை. க்ரிஷ் புத்திசாலியாக இருந்தாலும் மிக மென்மையானவன். விஸ்வத்திடமிருந்து அவளைக் காப்பாற்ற அவனால் முடியாது. குரல் கரகரக்க சிந்து சொன்னாள். “க்ரிஷ். அன்னைக்கு நீங்க என் மனசை ஆராய்ச்சி செஞ்சு சொன்ன விஷயங்களுக்கும், என் அம்மா விலாசம் போன் நம்பரெல்லாம் தந்து டெல்லிக்கு அனுப்பி வெச்சதுக்கும் நான் உங்களுக்கு நன்றி சொல்லணும். இவ்வளவு செஞ்சதே போதும் வேறெந்த உதவியும் வேண்டாம். இப்போ நான் சந்தோஷமாய் இருக்கேன். ஆபத்து அவன் மூலமாய் வர்றப்ப நான் சந்தோஷமாவே செத்தும் போவேன். ஆனா உங்க குடும்பத்துக்கு எந்தப் பிரச்னையும் கண்டிப்பா ஏற்படுத்த மாட்டேன்...”

க்ரிஷ் கண்கலங்கக் கேட்டான். “அப்ப எங்கண்ணா கதி? நீ இல்லாட்டி அவன் உடைஞ்சு போயிடுவான் சிந்து. அவன் ரொம்ப நல்லவன்அவன் மாதிரி ஒருத்தன் உனக்குக் கணவனாய் கிடைக்க நீ கொடுத்து வெச்சிருக்கணும்...”

அவளுக்கும் கண்கலங்கியது. ஒரு நாடகத்தில் ஆரம்பித்திருந்தாலும் அவள் இந்த சில நாட்களாக உதயை நேசிக்க ஆரம்பித்திருக்கிறாள். முன்பெல்லாம் அவன் போன் செய்கையில் அவள் சலிப்போடு தான் பேச ஆரம்பிப்பாள். இப்போதெல்லாம் அவன் அழைத்துப் பேசும் நேரத்திற்காக அவள் ஆவலாகக் காத்திருக்கிறாள். கண்களில் நீர் வழியச் சொன்னாள். ”அவர் கிட்டே நான் யார் அனுப்பிச்சு வந்த ஆள்னு சொல்லிடுங்க. தானா அவர் என்னை வெறுக்க ஆரம்பிச்சுடுவார்

அப்படிச் சொல்றதானால் நான் ஆரம்பத்திலேயே சொல்லியிருப்பேனே சிந்து. அவன் மனசு வேதனைப்படறதைப் பார்க்க முடியாமல் தானே சிந்து நான் சொல்லலை. அவன் ஆரம்பத்திலிருந்தே உன்னை உண்மையாகவே காதலிச்சான் சிந்து.... இப்போ நீயும் மாறியிருக்கே. அவனை முதல் அளவுக்கு வெறுக்கலைன்னு நான் நினைக்கிறேன்....”

சிந்து வாயடைத்துப் போனாள். அவள் உதயிடம் ஆரம்பத்தில் என்ன உணர்ந்தாள் என்பது முதற்கொண்டு க்ரிஷ் அறிந்து வைத்திருக்கிறான்.... “க்ரிஷ் நான் என்ன மாறினாலும் பிரயோஜனம் இல்லை. விஸ்வத்தை ஏமாத்த முடியாது. அவன் எதையும் நான் சொல்லித் தான் தெரிஞ்சுக்கணும்கிற அவசியம் இல்லை. எப்போ வேணும்னாலும் என் மனசுக்குள்ளே இருக்கறத அவனால் தெரிஞ்சுக்க முடியும். அது போதும் என்னைக் கொல்றதுக்கு...”

அவன் இப்ப உன் மனசுக்குள்ளே இருக்கறதைப் படிக்கற நிலைமைல இல்லை சிந்து. இப்ப மட்டுமில்லை இன்னும் கொஞ்ச நாளைக்கு அவன் உன் கிட்ட சக்திகளைச் செலவு செய்யும் நிலைமையில் இல்லை.... அதனால தான் அவன் உன் கிட்ட போன் செய்து தான் பேசியிருக்கான்.....”

சிந்துவின் மனதில் பாதி நம்பிக்கையும், பாதி சந்தேகமும் குடிகொண்டன. அவள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இப்படி எல்லாம் இவன் சொல்கிறானோ....

சிந்து என்னை நம்பு. நீ ஒத்துழைச்சா அவன் கிட்டே இருந்து உன்னையும் என் குடும்பத்தையும் சேர்ந்தே என்னால காப்பாத்த முடியும். அவன் என்ன சொன்னான்னு சொல்லு....”

சிந்து மெல்ல விஸ்வம் சொன்னதைச் சொன்னாள்.

க்ரிஷ் சொன்னான். “நல்லது. அடுத்த தடவை அவன் போன் பண்ணி என்ன செய்யணும்னு சொன்னால் மறுக்காமல் ஒத்துக்கோ. உடனே அவன் சொன்னதை என் கிட்டே சொல்லிட்டு நீ டெல்லியிலிருந்து சென்னை கிளம்பிப் போ. மீதியை நான் பார்த்துக்கறேன்... அண்ணா கிட்ட மட்டுமில்லாமல் எங்கம்மா கிட்டயும் பேசு... கூப்பிட்டுப் பேசினாலே அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க....”

பத்மாவதியைச் சொன்னவுடனே சிந்து புன்னகைத்தாள். “அவங்களே கூப்பிட்டு பேசிகிட்டு தான் இருக்காங்க....”

நல்லது..... சரி ஞாபகம் வெச்சுக்கோ. அவன் போன் பண்ணினவுடனேயே எனக்குத் தெரிவி. அதன் பிறகு டெல்லியில் இருக்காதே. சென்னை போயிடு.... எல்லாமே நல்லபடியா முடியும். தைரியமாயிரு...”

அந்த தைரியம் தான் சிந்துவுக்கு வரவில்லை. விஸ்வத்தை ஏமாற்றுவது சுலபம் அல்ல என்பதை அவள் அறிவாள்....


ம்யூனிக்கிலிருந்து வாஷிங்டன் போய் வர போலி பாஸ்போர்ட், விசா போன்ற உதவிகள் செய்ய வேண்டும் என்று விஸ்வம் கேட்டதற்கு வாங் வேயும், சாலமனும் திகைத்தாலும் பின் வாங் வே மெல்ல சாலமனிடம் சொன்னார். “நீங்கள் ஏதாவது செய்து தானாக வேண்டும் சாலமன்...”

ம்யூனிக்கில் எர்னெஸ்டோவைத் தீர்த்துக் கட்டுவது கஷ்டம் என்று விஸ்வம் நினைக்கிறான், வாஷிங்டனுக்குச் செல்லும் போதோ, வாஷிங்டனிலோ, வாஷிங்டனிலிருந்து திரும்பும் போதோ அவரைக் கொல்வது அவனுக்கு எளிதாக இருக்கலாம் என்று தான் இந்த உதவியைக் கேட்கிறான் என்று நினைக்கும் போதே வாங் வேக்கு இனித்தது. இந்த விஸ்வத்தை அவர் நன்றாக அறிவார். ஒன்றில் குறி வைத்து விட்டால் அந்த இலக்கை அடையாமல் அவன் ஓய மாட்டான் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இதற்கு உதவ முடியா விட்டால் மற்ற கனவுகள் எதுவும் நிறைவேறாது என்று எண்ணியவராகத் தான் சாலமனிடம் அப்படி சொன்னார்.

ஆனால் சாலமனுக்கு அதில் உள்ள சிக்கல்களின் அளவு தெரியும். நாளையே அவர் வாஷிங்டன் போக வேண்டும். விஸ்வத்திற்கு போலி பாஸ்போர்ட், விசா கூட அவரால் ஏற்பாடு செய்து விட முடியும். ஆனால் ம்யூனிக்கிலிருந்து வாஷிங்டன் போக உதவ வேண்டும் என்றால் மற்ற ஆட்களின் உதவியையும் பெற்றால் ஒழிய அது நடக்காது. விமானநிலையம் அவர் கண்காணிப்பில் இல்லை... இம்மானுவல் இப்போது ம்யூனிக்கில் தான் இருக்கிறான்.... ஆனாலும் வருங்கால இல்லுமினாட்டி உளவுத்துறையின் தலைவனாகப் பொறுப்பேற்கவிருக்கும் அவர் தன்னை விஸ்வத்துக்கு நிரூபிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.....

கடைசியில் விஸ்வத்தின் வேண்டுகோளுக்கு அவர் ஒத்துக் கொண்டார்.



(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. Very very interesting and thrilling sir. A real great novel.

    ReplyDelete
  2. சிந்துவுக்கு எந்த மாதிரியான‌ கட்டளை வரும் என்பது தெரியவில்லை....
    விஸ்வம் அடுத்த நகர்வு என்ன?

    ReplyDelete
  3. ஆரம்பத்தில் இருந்தே மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது...
    நன்றி தோழரே...

    ReplyDelete