சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 22, 2021

இல்லுமினாட்டி 112



வாங் வே சொன்னார். “வரும் புதன் கிழமை மாலை வாஷிங்டனில் ஒரு பொது நிகழ்ச்சி நடக்கிறது. அதில் அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி எல்லாரும் கலந்து கொள்கிறார்கள். அதில் தலைவரும் கலந்து கொள்கிறார். மறுநாள் காலை நம் இயக்கத்தின் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளப் போகிறார். அது முடிந்து அன்று மாலையே வீடுதிரும்புகிறார்...’

விஸ்வம் யோசித்தான். இப்போது எர்னெஸ்டோவின் வீட்டில் அக்ஷயும், அந்தப் பல அடுக்குப் பாதுகாப்பும் இருப்பதால் வீட்டில் அவரைத் தீர்த்துக் கட்டுவது அவ்வளவு சுலபமல்ல. இந்தப் போக்குவரத்து சமயமே அனுகூலம் என்று நினைத்த விஸ்வம் நிமிர்ந்து சாலமனிடமே கேட்டான். “போக்குவரத்தின் போது இதே அளவுப் பாதுகாப்பும் அவரைப் பின் தொடருமா?”

சாலமன் சொன்னார். “இல்லை. அவருக்குத் தன்னைச் சுற்றி இத்தனை பாதுகாப்பு எப்போதும் பிடித்தமானதல்ல. நாங்களாக வற்புறுத்தி ஓரளவு பாதுகாப்பை அவர் மீது திணிக்கிறோம். அதை மட்டும் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்வார். இப்போது கூடுதலாக அந்த அமானுஷ்யனும் இருப்பான் என்று நினைக்கிறேன்....”

விஸ்வம் சொன்னான். “எனக்கு அவருடைய பயணத்தின் போது தரப்படும் அந்தப் பாதுகாப்பு விவரங்கள் வேண்டும்...”

சாலமன் சொன்னார். “பெரும்பாலும் அதை ஏற்பாடு செய்வது இம்மானுவல் தான். இந்த முறை பாதுகாப்புக்கு என்று அமானுஷ்யன் வந்திருப்பதால் அவனுடைய அபிப்பிராயத்தையும் கேட்பார்கள் என்று நினைக்கிறேன். இரண்டு நாட்களில் வெளியாகி விடும். அது வெளியானவுடன் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்

விஸ்வம் தலையசைத்து விட்டுச் சொன்னான். ”எனக்கும் வாஷிங்டன் போக ஒரு போலி பாஸ்போர்ட்டும், விசாவும் வேண்டும். நான் இங்கிருந்து வாஷிங்டன் போய் வர நீங்கள் எனக்கு உதவ வேண்டும்

சாலமன் திகைத்தார். அவர் ஒன்றும் சொல்லாமல் லேப்டாப்பைப் பார்த்தார். வாங் வேயும் திகைத்தார் என்பது அவருடைய முகபாவனையைப் பார்த்த போதே தெரிந்தது. ஆனால் விஸ்வம் அதைப் பார்த்துத் தன் கோரிக்கையைத் திரும்பப் பெறவில்லை. செய்ய முடியுமா, முடியாதா என்பது போல் பார்த்தான்.

வாங் வே சாலமனிடம் கேட்டார். “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் சாலமன்?”

ஜெர்மனியிலிருந்து கிளம்பும் ஒவ்வொரு விமானமும், ஒவ்வொரு கப்பலும், எல்லைப் பகுதியைக் கடக்கும் ஒவ்வொரு தரைவழி வாகனமும் கடும் பரிசோதனைக்குட்படுத்தாமல் வெளியே அனுப்பப்படுவதில்லை. அதில் கடுமையான சோதனைகள் இருக்கின்றன....” என்றார் சாலமன்.

விஸ்வம் வறண்ட குரலில் சொன்னான். “சுலபமாக முடியும் வேலைகளுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை

சாலமன் ஒன்றும் சொல்லவில்லை. வாங் வேயும் தர்மசங்கடமான மௌனம் காத்தார். அவருக்கு விஸ்வம் விடுத்த கோரிக்கைகளில் தவறு தெரியவில்லை. ஆனால் ஆரம்பத்திலிருந்து அவன் அவனுக்காக வேண்டியதை மட்டுமே பேசுகிறான், எல்லாம் செய்து தந்தால் அவர்களுக்கு அவன் என்ன திரும்பச் செய்வான் என்பதைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை என்பது அவருக்கு நெருடலாக இருந்தது.

வாங் வே மெல்லச் சொன்னார். “அவர் ஏன் தயங்குகிறார் என்றால் இதிலிருக்கும் ஆபத்து மிகப் பெரியது. முக்கியமாக உங்களைத் தான் எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்....”

சாலமன் தொடர்ந்தார். ”ஆறடி உயரம், ஒடிசலான உடல்வாகு, முகவாய்க்கட்டையில் ஆழமான கீறல் இந்த மூன்றையும் தான் அவர்கள் பிரதானப்படுத்திப் பரிசோதிக்கிறார்கள். முதலிரண்டை மறைக்க முடியாது, மூன்றாவதைத் தாடியால் மறைக்க முடியும் என்பதால் முதலிரண்டு பொருந்தியிருந்து தாடி வைத்த ஆசாமிகளை அவர்கள் இரட்டிப்பு பரிசோதனைகள் செய்து விட்டுத் தான் போக அனுமதிக்கிறார்கள்.”

விஸ்வம் சொன்னான். “புரிகிறது. ஆனால் உங்களைப் போல் உயர்பதவியில் பல காலம் இருப்பவர்களுக்கு நண்பர்கள் பல இடங்களிலும் இருப்பார்கள். முயற்சி செய்தால் பல வழிகள் தெரியும்..”

சாலமனும் வாங் வேயும் யோசித்தார்கள். அதைப் பார்த்து விட்டு விஸ்வம் வாங் வேயிடம் சொன்னான். “இந்த இயக்கம் உலகத்தையே ஆளக்கூடியது. இதை ஆபத்துகள் இல்லாமல், கஷ்டங்கள் இல்லாமல் யாரும் கைப்பற்ற முடியாது. நேரடியாகப் பங்கேற்க முடியாது என்றீர்கள். அதை நான் ஏற்றுக் கொண்டேன். இந்த உதவிகளும் முடியாதென்றால் இந்த முயற்சியில் உங்கள் பங்கு பூஜ்ஜியமாகத் தான் இருக்கும். நாம் நம் முயற்சியில் வெற்றி பெற்றால் எனக்கடுத்த இடம் உங்களுடையதாகத் தான் இருக்கும் என்று வாக்குத் தருகிறேன். உளவுத்துறைத் தலைவராக உங்கள் நண்பர் தான் ஆக்கப்படுவார் என்பதையும் உறுதி கூறுகிறேன்....”

இருவர் முகங்களும் இந்த வாக்குறுதியில் மலர்ந்தன. விஸ்வம் தொடர்ந்து தன் நிலைமையைச் சொன்னான். ”என் பழைய சக்திகளோடு நான் இருந்தேன் என்றால் எந்த உதவியையும் உங்களிடம் நான் கேட்டிருக்க மாட்டேன். என்னாலேயே அனைத்தும் முடியும். இப்போதும் சேமித்து வைத்திருக்கும் சக்திகளில் இது முடியும் என்றாலும் இதிலேயே நான் என் சக்திகளை விரயம் செய்து விட்டால்  முக்கியமான வேலைக்கு என் சக்தி போதாமல் போய் விடும். சிறிய பின்னடைவும் நமக்கு ஆபத்தாகப் போய் விடும் என்பதால் உங்களைக் கேட்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?”


க்ரிஷ் எர்னெஸ்டோவின் பங்களாவிலிருந்து அவன் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பியது இம்மானுவலின் காரில் தான். போகும் போது இம்மானுவல் சொன்னான். “சிந்துவின் அலைபேசிக்கு இரண்டு நாள் முன்பு ஒரு வெளிநாட்டிலிருந்து போன்கால் வந்திருக்கிறது, முன்பு போலவே அந்த அழைப்பு எங்கிருந்து என்று கண்டுபிடிக்க முடியவில்லை

க்ரிஷுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அழைத்திருப்பது விஸ்வமாகத் தான் இருக்க வேண்டும் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரியும்... அழைத்து அவன் என்ன சொன்னான், இவள் என்ன செய்யப் போகிறாள் என்றெல்லாம் தெரியவில்லை.

இம்மானுவல் க்ரிஷிடம் கேட்டான். “அவளிடம் பிரச்னை எதுவும் இல்லையல்லவா க்ரிஷ்?”

க்ரிஷ் சொன்னான். “இது வரை இல்லை. இனியும் இருக்காதபடி நான் எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டுத் தான் வந்திருக்கிறேன்....”

அவள் விஸ்வத்தின் ஆள் என்று சந்தேகப்படுபடி ஏதாவது இருக்கிறதா?” இம்மானுவல் க்ரிஷைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.

அவள் அவளுடைய கடந்த காலத்தால் பாதிக்கப்பட்டவள். அவளுடைய பல வினோதமான நடவடிக்கைகளுக்குமே அவளுடைய கடந்த காலம் தான் காரணமாக இருந்திருக்கிறது. அவள் தாய் போய் விட்டதும், தந்தை அலட்சியம் செய்ததும் தான் பிரச்னை

க்ரிஷுக்குத் தெரியும் இம்மானுவலின் கேள்விகளுக்கு இதெல்லாம் சரியான நேரான பதில்கள் இல்லை என்று. ஆனால் அவனுடைய சகோதரனின் காதலியை அவன் காட்டிக் கொடுப்பதாக இல்லை. ..

இம்மானுவல் சொன்னான். “இப்போது டெல்லி போய் அவள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள் போல் தெரிகிறது. தாயும் அவள் குடும்பமும் இவளுடன் இணைந்து விட்டார்கள் போலிருக்கிறது. ஃபோட்டோக்கள் பார்க்கிறாயா?”

இம்மானுவல் ஒரு உறையை நீட்டினான். அதில் சிந்து அவள் தாயுடனும், அவள் குடும்பத்துடனும் மகிழ்ச்சியாகவும், பாசமாகவும் இருக்கும் புகைப்படங்கள் நிறைய இருந்தன. ஒன்றில் சிந்துவும் அவள் தாயும் தோள் மேல் கை வைத்தபடி சிரித்திருந்தார்கள். இன்னொன்றில் சிந்துவும், ரகுவும், நவீனும் கைகோத்து நின்றிருந்தார்கள். இன்னொன்றில் நால்வரும் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இம்மானுவலிடம் க்ரிஷ் புகைப்படங்களைத் திரும்பத் தந்தான்.

ஓட்டலில் க்ரிஷை இறக்கி விட்டு இம்மானுவல் போய் விட்டான். க்ரிஷ் ஆழ்ந்த சிந்தனையுடன் அறைக்குப் போனான். இந்தப் படங்களைப் பார்த்தால் சிந்துவின் தாய் ஓடிப்போனவளாய் இருக்கும் என்று தோன்றவில்லை. அப்படி இருந்திருந்தால்  கடுமையான வெறுப்பைத் தாய் மீது வைத்திருந்த சிந்து இப்படிப் பாசத்துக்கு மாறியிருக்க மாட்டாள். தாய் மீது மட்டுமல்லாமல் அவள் இரண்டாம் கணவன் மீதும், அவள் மகன் மீதும் கூடப் பாசம் நீண்டு இருக்கிறது என்றால் தாய் கண்டிப்பாகக் குற்றமற்றவளாக இருக்க வேண்டும். அவர்களும் நல்லவர்களாகவே இருக்க வேண்டும். இவளைத் தாய் விட்டுப் போனதற்கும் வலுவான காரணம் இருக்க வேண்டும்.... அதனால் தான் நன்றி தெரிவித்து சிந்து குறுந்தகவல் அனுப்பி இருக்கிறாள். இதெல்லாம் நல்ல அறிகுறிகளாகத் தெரிந்தாலும் அவன் குடும்பத்திற்கிருக்கும் ஆபத்து முடிந்து விடவில்லை. விஸ்வம் அவளுக்குக் கட்டளையிட்டால் அவள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதைச் செய்து தானாக வேண்டும்....

க்ரிஷ் சிறிது யோசித்து விட்டு கடிகாரத்தைப் பார்த்தான். இப்போது இந்தியாவில் இரவு ஒன்பது மணியிருக்கும்.... அவளுக்கு அவன் போன் செய்து பேசத் தீர்மானித்தான்.


(தொடரும்)
என்.கணேசன் 




2 comments:

  1. Both sides move shrewdly. Very very interesting sir.

    ReplyDelete
  2. விஸ்வம் தற்போது அமெரிக்கா செல்கிறான்.... கிரிஷை அடக்கி வைக்க.., சிந்துவிடம் ஏதேனும் கட்டளைகள் இடலாம்...

    ReplyDelete