சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 3, 2021

யாரோ ஒருவன்? 30


தீபக் வந்தவுடன் கல்யாணைப் பார்த்துஹாய் அங்கிள்என்று சொல்லி விட்டு வேலாயுதத்தைப் பார்த்துஹாய் தாத்தாஎன்றான். சில காலமாகவே இந்த மரியாதைக் குறைவான நெருக்கத்தை வேலாயுதம் ரசிக்கா விட்டாலும் பேத்திக்காக வேலாயுதம் லேசாகப் புன்னகைத்து வைத்தார். கல்யாண்வாடாஎன்றான்.

வீட்டு முன்னிருந்த புல்வெளியில் அவர்களுடன் உட்கார்ந்தபடியே தீபக் வேலாயுதத்திடம் தாழ்ந்த குரலில் மிகுந்த சுவாரசியத்துடன் கேட்டான். “தாத்தா , நீங்க பக்கத்து வீட்டுல இருந்து எப்ப பாம்பு சீறுகிற மாதிரி சத்தத்தைக் கேட்டீங்க. அது பாம்பு சீறும் சத்தம் தான்னு உறுதியாய் சொல்ல முடியுமா?”

வேலாயுதம் தீபக்கிடம் தகவல்களைத் தணிக்கை செய்து தான் சொல்ல வேண்டும் என்று மகனுடன் கலந்தாலோசித்துத் தீர்மானித்திருந்தார். சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “மூனு நாளாய் தினமும் தான் ராத்திரியானால் கேட்குது.... அது பாம்பு சீறும் சத்தம் தான்கிறதுல சந்தேகமேயில்லை.”

எங்கேயிருக்கறப்ப அந்தச் சத்தம் கேட்குது?”

தீபக்கின் இந்த விசாரணைத் தொனியை அவர் வெறுத்தார். வேண்டா வெறுப்பாய் சொன்னார். “என் அறையிலிருக்கறப்ப தான். ராத்திரி பதினோரு மணி தாண்டினா அப்பப்ப அந்தச் சத்தம் கேட்குது

அவர் சொல்லச் சொல்ல தர்ஷினி வீட்டுக்குள்ளேயிருந்து அவர்களை நோக்கி வந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவன் முகத்தில் பூத்த மகிழ்ச்சியும், அந்த மகிழ்ச்சி அவள் முகத்திலும் பிரதிபலித்ததும் வேலாயுதத்துக்குப் பிடிக்கவில்லை. இதெல்லாம் நல்லதுக்கில்லை....

அவன் அவளைப் பார்த்துக் கையை உயர்த்தி விட்டு வேலாயுதத்திடம் சொன்னான். ”தாத்தா. சிலர் குறட்டை விடறதே பாம்பு சீறுகிற மாதிரி தான் இருக்கும். நல்லா யோசிச்சு சொல்லுங்க. கேட்டது குறட்டையாகவும் இருக்கலாம் இல்லையா?”

பாம்பைக் கண்ணால பார்த்துட்டேண்டா மடையாஎன்று மனதினுள் அலறினாலும் வெளியே அமைதியாக அவர் சொன்னார். “இல்லடா. அது பாம்பு சீறும் சத்தம் தான். எனக்குச் சந்தேகமேயில்லை...”

தீபக் பக்கத்து வீட்டைப் பார்த்தான். வெளியே யாரும் தெரியவில்லை.அந்த வீட்டுல யாரெல்லாம் இருக்காங்க?”

வேலாயுதம் சொன்னார். “நாகராஜுன்னு ஒருத்தனும், அவனோட உதவியாளன் சுதர்ஷன்னு ஒருத்தனும் தான் இருக்காங்க.. அந்த நாகராஜைப்  பார்க்க தினம் யாராவது வி..பி ஒருத்தர் வந்துட்டுப் போறாங்க. அவனைப் பார்த்துட்டுப் போக அஞ்சு லட்சம் ரூபாயாம். அவனுக்கு எதோ விசேஷ சக்தி இருக்கு போலஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு மேல பாக்க மாட்டானாம்.... அந்த சுதர்ஷன் போன்ல பேசிகிட்டிருந்தது காதுல விழுந்துச்சு....”

கேட்டதெல்லாம் தீபக்கை வியப்பில் ஆழ்த்தியது. “அந்த ஆளைப் பார்த்து நீங்க பேசலையா?”

அவன் வெளிய வர்றதே அத்தி பூத்த மாதிரி தான் இருக்கு. முந்தா நாள் சாயங்காலம் அவன் வாக்கிங் போகிறப்ப ஓடிப் போய் பேசினேன். அவன் பேசிகிட்டே வேகமா நடந்தான். ஆனாலும் கஷ்டப்பட்டு கூடவே போனேன். ஆனா திடீர்னு ஒரு போன்கால் வந்து போன்ல பேசிகிட்டே அவன் போயிட்டான். என்னை மறந்தும் போயிட்டான்னு பார்க்கறப்பவே தெரிஞ்சுது...”

தீபக் யோசனையுடன் பக்கத்து வீட்டையே பார்த்தான்.  பின் மெல்ல சொன்னான். “அரை மணி நேரத்துக்கு அஞ்சு லட்ச ரூபாய் வசூல் பண்றான்னா கண்டிப்பா அவன் ரொம்ப சக்தி வாய்ந்தவனாய் தான் இருக்கும். ஏன்னா யாருமே சும்மா அஞ்சு லட்சத்தைத் தூக்கிக் கொடுத்துட மாட்டாங்க... நாகங்கள் மூலமா அபூர்வ சக்திகள் கிடைக்கும்னு நம்ம முன்னோர் எல்லாம் நம்பினாங்க...  அதுக்கேத்த மாதிரி நீங்க பாம்பு சீறுறதையும் கேட்டிருக்கீங்க. அவனுக்கு அபூர்வ சக்திகள் இருக்கும்கிறது வசூலிக்கிற பெரிய தொகை மூலமாகவும் தெரியுது. நான் அந்த ஆளைப் பார்த்தே ஆகணுமே...”

கல்யாண் தந்தையை அர்த்தத்துடன் பார்த்துப் புன்னகைத்தான்.  வேலாயுதம் சொன்னார். “அவன் வெளியே வர்றதே அபூர்வமாய் இருக்கே. அதனால பக்கத்து வீட்டுக் காரன் நானே அவனைப் பார்த்துப் பேசிப் பழக முடியாமல் இருக்கேன்....”

அந்த ஆள் வரலைன்னா நாமளே போய் அவரைப் பார்க்கணும் தாத்தா.”

அஞ்சு லட்சம் கொடுத்தா? அப்படிக் கொடுக்கறதுன்னாலும் மாசக்கணக்கில் காத்துருந்தா தான் முடியுமாம். அவனைப் பார்க்க எவனோ ஒருத்தன் போன்ல கெஞ்சியிருப்பான் போல இருக்கு. அந்த ஆள் கிட்ட  சுதர்ஷன் முடியாதுன்னு கறாரா சொல்றதை நான் என் காதால் கேட்டிருக்கேன்....”

தீபக் புன்னகைத்தான். “ஒரு வழி நமக்கு ஒத்து வரலைன்னா வேற வழியைக் கண்டுபிடிக்கணும் தாத்தா. மாத்தி யோசிக்கணும். இன்னைக்கே அந்த ஆள் கிட்ட நான் பேசிக் காட்டறேன் பார்க்கறீங்களா?”

வேலாயுதமும் கல்யாணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வேலாயுதம் சொன்னார். “அதையும் தான் பார்ப்போமே

தன்லால் நரேந்திரன் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த போதே ஆள் யார் என்று யூகித்து விட்டான். ஆனால் அவன் அந்த ரா அதிகாரியை அலட்சியப்படுத்தி தன் பாதுகாப்பான நிலையையும், தைரியத்தையும் உணர்த்த விரும்பினான். அதனால் தலைகுனிந்து மும்முரமாக ஒரு ஃபைலைப் படிக்க ஆரம்பித்தான்.  

நரேந்திரன் தன்னை அவன் பார்த்ததையும், என்ன ஏதென்று கேட்காமல் தலைகுனிந்து ஃபைலைப் படிக்க ஆரம்பித்ததையும் கவனித்தான். அவன் யார் என்பதை மதன்லால் யூகித்திருப்பான் என்பதும், நீ எவனாய் இருந்தால் எனக்கென்ன என்று செய்கைகளால் தெரிவிப்பதையும் உணர்ந்தான்.  ஆனால் எல்லா விதமான மனிதர்களையும் கையாளும் விதம் அறிந்தவர்களே ராவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதற்கான தேர்வுகள் முடிந்து வென்று தான் அவன்ராவில் நுழைந்திருக்கிறான்.

நரேந்திரன் மதன்லாலின் மேசைக்கு எதிரே இருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தபடியே அழைத்தான். “மதன்லால்

வயதில் சிறியவன் தன்னை அப்படிப் பெயரிட்டு அழைப்பதை மதன்லால் அவமானமாக உணர்ந்தான். அந்தப் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த போலீஸ்காரர்கள் மூவரும் நரேந்திரனைத் திகைப்புடன் பார்த்தார்கள். அவன் உயரதிகாரி என்பதை அவனுடைய தோரணையும், உறுதியான குரலும் அவர்களுக்குத் தெரிவித்தது.   அந்த மூவருமே மதன்லாலின் அராஜகங்களையும், அவமானப்படுத்துதலையும் தினமும் சந்தித்து வருபவர்கள் என்பதால் மதன்லாலைப் பெயர் சொல்லி அழைக்கும் அந்தக் காட்சியை ரசித்துப் பார்க்க ஆரம்பித்தார்கள். நிலைமையைப் பார்வையாலேயே உணர்ந்த மதன்லால் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு நரேந்திரனைப் பார்த்தான்.

நான் நரேந்திரன்என்று சொன்ன நரேந்திரன் தன் விசிட்டிங் கார்டை நீட்டினான்.

மதன்லால் அலட்சியமாக அதை வாங்கிப் பார்த்தான். ரா அதிகாரி என்று தெரிந்தவுடன் காட்ட வேண்டிய மரியாதையையும் அவன் தன் முகத்தில் காட்டவில்லை. முகத்தின் கடுமையைக் கொஞ்சமும் குறைக்காமல் அவன் அலட்சியமாகக் கேட்டான். “என்ன விஷயம்?”

நீங்கள் மணாலியில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த போது பார்த்த வழக்கு ஒன்றைப் பற்றிய சில தகவல்களைக் கேட்க வந்திருக்கிறேன்

அங்கிருந்து நான் மாற்றலாகிப் பல வருடங்கள் ஆகி விட்டதால் அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்காது. மணாலி போலீஸ் ஸ்டேஷனிலேயே எல்லா ரெகார்ட்ஸும் இருக்கும். அங்கே போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டுமல்ல. நான் பிசியாக இருக்கிறேன். ஒரு முக்கிய வழக்கு சம்பந்தமாய் நான் ஐஜி கிட்ட ஒரு ரிப்போர்ட் தர வேண்டியிருக்கிறது. அதனால் இப்போது எதைப் பத்தி பேசவும் எனக்கு நேரமில்லை…” என்று மதன்லால் முகத்தில் அலட்சியம் காட்டிச் சொன்னான்.

அந்த வழக்கை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்குக் காத்திருக்க நேரமில்லை. அதனால் எனக்குத் தேவையான தகவல்களை முதலில் சொல்லுங்கள். உங்கள் ஐஜி தேவேந்திரநாத்திடம் வேண்டுமானால் நான் பேசுகிறேன்…” என்று சொன்ன நரேந்திரன் தன் அலைபேசியை எடுத்தான்.

ஐஜியின் பெயரைச் சொல்லி அவர் போன் நம்பரையும் வைத்திருக்கும் ரா அதிகாரியை அலட்சியப்படுத்தி அனுப்ப முடியும் என்று மதன்லாலுக்குத் தோன்றவில்லை. அவனைப் பணிய வைக்கும் தோரணையில் பேசும் நரேந்திரனை அந்தப் போலீஸ்காரர்கள் மிகுந்த மரியாதையுடன் ரசித்து பார்ப்பது அவனுக்கு ஆத்திரத்தை அளித்தது. ஆனால் அதைக் காட்ட வழியில்லை.  நரேந்திரன் ஐஜியிடம் பேசினால் அவன் சற்று முன் ஐஜியிடம் ரிப்போர்ட் தர வேண்டியிருப்பதாய்ச் சொன்ன பொய்யிற்கு அவரிடமும் அவனிடம் விளக்கம் தர வேண்டியிருக்கும்…. அது மேலும் அதிக அவமானத்திற்கு உள்ளாக்கும்.

இந்த ஆளிடம் பேசவும் வேண்டும். எதற்கும் பதிலும் சரியாக அளிக்கக் கூடாது. அப்படித் தான் சாதுரியமாக இவனை அலைக்கழித்து அவமானப்படுத்திப் பழிதீர்க்க வேண்டும் என்று மதன்லால் முடிவு செய்தான்.



(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. Sema interesting. Your introduction of Deepak and Madanlal is superb and realistic. Hats off to your story writing skill.

    ReplyDelete
  2. The way Narendran handles Madanlal is really superb. The explanation given for that attitude also notable thing. This kind things makes us feel realistic.

    ReplyDelete
  3. இரண்டு பக்கமும் பரபரப்பான இடத்துல வநத் முடிஞ்சிடுச்சே....

    ReplyDelete
  4. பரபரப்பான இடத்தில் தொடரும் என்று போட்டு அடுத்த வாரம் வரையில் வாசிப்பவரை ஆவலுடன் எதிர்கொள்ள வைப்பதில் மிகவும் தேர்ந்து விட்டீர்கள்.அருமை

    ReplyDelete
  5. Naren eppadi madanlalai pesavaika pokiran. Deepak eppadi nagarajai sanshika pokiran.....waiting

    ReplyDelete