சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 27, 2021

இல்லுமினாட்டி 104



விஸ்வத்துக்கு அந்த சர்ச்சின் பாதாள அறையே மிகவும் பிடித்தமான இடமாக இருந்தது. இருட்டாக இருந்தாலும் அங்கேயே அவன் அதிக காலத்தைக் கழித்தான். சில சமயங்களில் தியானத்தில் இருப்பான். சில சமயங்களில் எதிர்காலத்தைத் திட்டமிட்டபடி அமர்ந்திருப்பான். சில சமயங்களில் வேறுபல சிந்தனைகளில் இருப்பான். ஆனால் அவன் அமர்ந்திருப்பது மட்டும் கதேயின் கவிதை எழுதப்பட்டிருக்கும் சுவரைப் பார்த்தபடி தான் இருக்கும். டார்ச் விளக்கு போட்டால் ஒழிய எதுவுமே அங்கே பார்க்க முடியாது என்றாலும் கதேயின் அந்தக் கவிதையின் கடைசி வரிகள் மானசீகமாய் அவன் மனதில் ஒளிரும்.

But heard are the voices - Heard are the Sages,
The Worlds and the Ages; "Choose well; your choice is

"Brief and yet endless; "Here eyes do regard you
"In eternity's stillness; "Here is all fullness,
"Ye have to reward you, "Work, and despair not."

(ஆனால் குரல்கள் கேட்கப்படுகின்றன
கேட்டது முனிவர்களும், உலகங்களும், யுகங்களும் தான்.
"நன்றாகத் தேர்ந்தெடு; ன் தேர்வு
"சுருக்கமானது என்றாலும் முடிவில்லாதது;
"இங்கே கண்கள் உன்னைக் கணக்கிடுவது
"நித்தியத்தின் பேரமைதியில்:  இங்கேயே முழுமை,
"நீ உனக்கே வெகுமதி அளிக்க வேண்டும்,
"வேலை செய், விரக்தியடையாதே.")

சுமார் இருநூறு வருடங்களுக்கும் முன் எழுதப்பட்ட கவிதையாக ஏனோ அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்காகவே அந்தக் கவிஞன் எழுதிய கவிதை வரிகளாகவே விஸ்வத்துக்குத் தோன்றியது. மேற்போக்காகப் பார்க்கையில் எளிமையாகத் தோன்றினாலும் அவன் மனம் சோர்வு அடைந்த போதெல்லாம் அந்த வரிகளே அவனுக்கு உற்சாகமூட்டின.

அக்கவிதை அவன் விதியைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறது. முடிவெடுப்பது சுருக்க காலமானாலும் விளைவுகளோ நித்தியமானது. அதனாலேயே நித்தியத்தின் கண்கள் அவன் என்ன முடிவெடுக்கின்றான் என்று கவனித்துக் கொண்டிருக்கின்றன. அவன் அவனையே கௌரவித்துக் கொள்ள வேண்டும். என்ன செய்ய வேண்டுமோ அதைத் தவறாமல் செய்ய வேண்டும். தடைகள் வரலாம், விளைவுகள் புலப்படக் கால தாமதமாகலாம். அவன் விரக்தியடையக் கூடாது என்று அவனுக்கு அறிவுரை சொல்வதாகவே அந்தக் கவிதையைக் கண்டான்.

அவனுக்குத் தோன்றியது தவறல்ல என்பதை இல்லுமினாட்டியின் ஆரகிளும் சொல்லியிருப்பதாக ஜிப்ஸியும் சொல்கிறான், எல்லாம் முடிவெடுக்கப்படும் இடம் இது தானாம். அது தெரிந்து தான் ஜிப்ஸி இங்கே அழைத்து வந்திருக்கிறானா, இல்லை ரகசியமாய் ஒளிந்து கொள்ளும் வசதி இங்கே இருக்கிறது என்ற காரணம் மட்டும் தானா என்று விஸ்வத்துக்குத் தெரியவில்லை.  ஜிப்ஸியை அவன் கேட்கவில்லை....

ஜிப்ஸியை நினைக்கையில் அவன் பல விதங்களில் புதிராகவே இருப்பது போல் விஸ்வத்துக்குத் தோன்றியது. அவன் பல சமயங்களில் எங்கே போகிறான், எப்படிப் போகிறான் என்பதும் விஸ்வத்துக்கு மர்மமாகவே இருந்தது. ஆனாலும் விஸ்வம் அவனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முற்படவில்லை. ஒன்றை மட்டும் விஸ்வம் உறுதியாக நம்பினான். அவன் நண்பன் தான். எதிரியல்ல....

எதிரி என்ற வார்த்தையோடு அவன் மனதில் க்ரிஷ் நினைவுக்கு வந்தான். க்ரிஷும் ஜெர்மனிக்கு வரப் போகிறான் என்றும் அவனும் அவர்களுடன் சேர்ந்து ஏதோ தீர்மானிக்கப் போகிறான் என்றும் வாங் வே கடிதம் எழுதியிருந்ததும் நினைவுக்கு வந்தது. விஸ்வம் முடிவெடுக்கும் போதெல்லாம் க்ரிஷும் எங்கிருந்தாவது வந்து சேர்ந்து விடுகிறான். விதி இருவரையும் எப்படியோ பிணைத்து வைத்திருப்பதாய்த் தோன்றியது. ஒருவர் வாழ்க்கையில் இன்னொருவர் குறுக்கிடாமல் இருக்க முடிவதில்லை.

எல்லாமே ஒரு தீர்க்கமான முடிவை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாய் விஸ்வத்துக்குத் தோன்றியது. வாங் வேயின் கடிதம் அதற்கு ஒரு அறிகுறி.  இல்லுமினாட்டியின் தலைமைக்குழு உறுப்பினரான வாங் வே எந்த அளவுக்கு அவனுக்கு உதவுவார், உதவ முடியும் என்று தெரியவில்லை என்றாலும் அவர் மூலமாக இல்லுமினாட்டியில் கண்டிப்பாக கால் பதிக்கலாம் என்றும், அப்படிக் கால் பதிக்க முடிந்தால் தலைமைப்பதவியையே பிடித்து விடலாம் என்றும் அவனுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது.

இப்போதைக்கு க்ரிஷை விடத் தொந்தரவான எதிரி அவனுக்கு எர்னெஸ்டோ தான். இந்த உடலில் சேர்ந்து கொண்ட போது அவன் நோக்கம் அவரைக் கொல்வதாக இருக்கவில்லை. ஆனால் இல்லுமினாட்டியின் உளவுத்துறை அனுமானித்தது போல அவனுக்கு இப்போது அவரைக் கொல்வது மிக முக்கியமானதாகி விட்டது. அவர் தலைமைப்பதவியில் உட்கார்ந்து கொண்டு பெரிய தடையாக இருக்கிறார். அவரை அங்கிருந்து நீக்கினால் ஒழிய அவனுடைய மற்ற திட்டங்கள் எதையும் அவனால் நிறைவேற்ற முடியாது.

பழைய விஸ்வமாக இருந்திருந்தால் அவனுக்கு அவர் கதையை முடிப்பது பெரிய விஷயமல்ல. எப்படிப்பட்ட பாதுகாப்பில் இருந்தாலும் அவனால் அவரைக் கொன்று விட முடியும். இப்போது இந்தப் பாழாய்ப் போன போதை உடம்பில் தேவையான அளவு சக்திகளைச் சேமிக்க ஆரம்பித்திருந்தாலும் அவரைக் கொல்வது சற்று சிரமம் தான். போதாததற்கு எல்லாரும் அமானுஷ்யன் என்று அடைமொழியில் அழைக்கப்படும் அக்‌ஷயும் அவரைப் பாதுகாக்க வந்து சேர்ந்திருக்கிறான்.  

எர்னெஸ்டோவை நெருங்குவதென்றால் அக்‌ஷய் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவனுடைய புகைப்படங்கள் விஸ்வத்திடம் இருக்கின்றன. ம்யூனிக் விமான நிலையத்தில் ஜிப்ஸி எடுத்த அந்தப் புகைப்படங்களில் நேராக அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். பயமில்லாத கூர்மையான தெளிந்த பார்வை ஆள் சாதாரணமானவனல்ல என்று காட்டுகின்றது. முழுவதுமாகத் தெரிந்து கொள்ள விஸ்வம் தன் சக்திகளைப் பயன்படுத்தினால் போதும். ஆனால் இவனைப் போன்ற கூடுதல் சக்தி படைத்தவர்களை அறிந்து கொள்ள விஸ்வம் அதிக சக்தி பிரயோகிக்க வேண்டி வரும். அக்‌ஷயை அறிய சக்திகளைச் செலவு செய்து விட்டால் எர்னெஸ்டோவைக் கொல்லவும், மற்ற வேலைகளுக்கும் சக்திகள் போதாது என்பதால் விஸ்வம் அதைத் தவிர்த்தான். ஜிப்ஸி அக்‌ஷயின் திறமைகளைப் பற்றிச் சொல்லியிருந்தான். அதனால் அதே போதும்....

க்ரிஷைப் பற்றி விஸ்வம் பெரிதாகக் கவலைப்படவில்லை.  அவனை எப்போது வேண்டுமானாலும் இந்தியா அனுப்பி விடலாம். இன்னேரம் சிந்து அவனுடைய வீட்டில் ஒரு ஆளாகக் கண்டிப்பாக மாறியிருப்பாள். உதயிடம் அவன் பிரயோகித்த சக்தியும், சிந்து உபயோகித்த யுக்தியும் சேர்ந்து அவள் மேல் உதய் காதல் வசப்பட்டிருப்பான். அதனால் சிந்துவிடம் எப்போது வேண்டுமானாலும் ஆக வேண்டிய சில வேலைகளைச் செய்யச் சொல்லலாம். குடும்பத்தினருக்கு ஆபத்து என்றால் க்ரிஷ் இங்கே இருக்க மாட்டான். போய் விடுவான். அதனால் அவனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை... .

விஸ்வத்தின் மனம் மெல்லத் தெளிவடைய ஆரம்பித்தது. அமைதியாக மேலே வந்தான்.  ஜிப்ஸி சர்ச்சின் ஜன்னல் அருகே உட்கார்ந்திருந்தான். அவனிடம் விஸ்வம் சொன்னான். “நண்பா. எனக்கு எழுத ஒரு காகிதமும், பேனாவும் வேண்டும்..”

அவன் கேட்பான் என்று முன்கூட்டியே எதிர்பார்த்துத் தயாராக இரண்டையும் ஜிப்ஸி வைத்திருந்தான், இரண்டையும் விஸ்வத்திடம் நீட்டினான். விஸ்வம் அங்கிருந்த மரநாற்காலியில் காகிதத்தை வைத்து கீழே அமர்ந்து வாங் வேக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தான்.

“அன்பு நண்பரே!

தலைமை ஏற்க எனக்கு அழைப்பு விடுத்துத் தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. அதற்கு உங்களால் ஆன உதவிகளையும் செய்வதாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

தலைமை நாற்காலி தற்போது காலியாக இல்லை என்பது தாங்கள் அறிந்தது தான். நாற்காலி காலியானால் ஒழிய அதில் அமர வழியில்லை. எனவே அதற்கான முயற்சியும் எடுக்க வேண்டியிருக்கிறது. அதே போல், அப்படிக் காலி செய்து நாற்காலியில் அமரும் போது இயக்கத்தில் ஏற்படும் சலசலப்புகளைச் சமாளிக்கவும் வேண்டியிருக்கிறது. இந்த இரண்டு பணிகளுக்கும் உங்களிடம் எதிர்பார்க்கும் உதவிகளை நீங்கள் செய்ய முடிந்தால் மட்டுமே உங்கள் கடிதத்திற்கும், அழைப்பிற்கும் ஒரு பொருள் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என்று நன்றாக யோசித்து முடிவு எடுக்க வேண்டுகிறேன். அப்படி இல்லாமல் மதில் மேல் பூனையாக இருந்து கொண்டு கடைசியில் வெல்லும் பக்கம் சாய்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் தங்கள் மனதில் இருக்குமானால் இந்த உதவி சமாச்சாரத்தைத் தாங்கள் தாராளமாக மறந்து விடலாம். நானும் தங்கள் கடிதத்தை மறந்து விடுகிறேன். தாங்கள் சிந்தித்து உறுதியாக உதவ முன்வருவதானால் நாம் மேற்கொண்டு ஆக வேண்டியதை நேரில் சந்தித்தே பேச வேண்டியிருக்கிறது.  

பதிலைத் தாங்களும் 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டுகிறேன்.

தங்கள்
நண்பன்"

(தொடரும்)
என்.கணேசன் 

2 comments:

  1. The fact that you are using an old poem to fit your novel is amazing. Moreover Goethe is really considered as an illuminati and he wrote the poem. It all make us feel the circumstances and storyline are real. Great sir.

    ReplyDelete
  2. விஸ்வம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்... கிரிஷ் எடுக்கப் போகும் முடிவு என்ன??

    ReplyDelete