சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, May 20, 2021

இல்லுமினாட்டி 103



சிந்துவின் தந்தையின் வாழ்க்கை முறை அவர் மனதைப் போலவே மிகவும் குறுகியது. அதில் பெரிய மாறுதல்களை அவர் விரும்பியதுமில்லை. வழக்கமான ஒரே மாதிரியான வாழ்க்கையே அவருக்குப் பாதுகாப்பானதாகவும், பிரச்சினைகள் இல்லாததாகவும் உணர்ந்ததால் அவர் கால அட்டவணை போல் ஒரே விதமான வாழ்க்கையையே விரும்பி வாழ்ந்தார்.

அவர் முதல் மனைவி போல இரண்டாவது மனைவி புத்திசாலி அல்ல என்பது அவருக்கு நிம்மதி தரும் விஷயமாக இருந்தது. அவளைப் பொருத்தவரை அவளுடைய கணவரே புத்திசாலி. அவர் சொன்னதே வேதவாக்கு. அவள் மூன்றாவது வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. கையெழுத்து மட்டுமே போடத் தெரியும்.  பத்திரிக்கைகள் எல்லாம் படிக்க மாட்டாள். எந்தச் செய்தியையும் அவள் எழுத்துக் கூட்டிப் படிப்பதற்கு நிறைய நேரம் ஆகி விடும் என்பதால் அவள் படிப்பதே இல்லை. தொலைக்காட்சியில் சில தொடர்களை விரும்பிப் பார்ப்பாள். அது ஒன்று தான் அவளுடைய ஒரே பொழுது போக்கு. கணவருக்குப் பிடிக்காது என்பதால் அவள் அக்கம் பக்கத்திலும் யாரிடமும் பேசாமலிருப்பாள். அதனால் அவளுக்கு உலகநடப்புகளும் தெரியாது. பிரச்சினைகள் இல்லாமல் அவர் வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டிருந்தது.

அவர் இரண்டாவது மகள் மூத்த மகளைப் போல் படிப்பில் சிறந்து இருக்காதது மட்டும் தான் அவருக்குப் பெரிய வருத்தம். ஆனால் மற்றபடி அவளும் தாயைப் போலவே அவரை அதிமேதாவியாகவும், மிகநல்லவராகவும் மதித்து அன்பு காட்டி வந்ததால் சொந்த வீட்டில் கதாநாயகராக நிம்மதியாக வாழ்ந்து வந்தார். முதல் மனைவியுடன் வாழ்ந்த நான்கரை வருடங்கள் தான் அவர் நிம்மதியைத் தொலைத்திருந்த காலம். அவள் அவரை விடப் புத்திசாலித்தனமும், துணிச்சலும் அதிகமிருந்து அவரை மதிக்காமல் வாழ்ந்து அவருக்குத் தந்த சித்திரவதை எல்லாம் இப்போது இல்லை. புத்திசாலித்தனத்திலும், துணிச்சலிலும் அவளைப் போலவே இருந்த மூத்த மகளும் அவர் வாழ்க்கையை விட்டுப் போன பின் தொடர்ந்து நிம்மதி தான் அவர் வாழ்க்கையில்.

அவருடைய மாறாத கால அட்டவணையில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு இரவு உணவு அவர் வீட்டுப் பக்கத்தில் இருந்த பிரபலமான ஓட்டலில் தான். அதில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக எந்த மாற்றமும் இல்லை. அங்கும் இடம் காலியிருந்தால் ஒரே சாப்பாட்டு மேசையைத் தான் தேர்ந்தெடுத்து அவர்கள் மூவரும் உட்கார்வார்கள். அந்த இடத்தில் வேறு யாராவது உட்கார்ந்திருந்தால் அதற்கு மிக அருகில் காலியாக இருக்கும் இடத்தில் அவர்கள் உட்கார்வார்கள். குறைவான உணவுகள் சாப்பிடுவதாக இருந்தாலும் நிறைய நேரம் இருந்து நிதானமாக அதை அனுபவித்துச் சாப்பிடுவார்கள். பின் திருப்தியுடன் கம்பீரமாக அவர் எழுந்து முன் நடக்க அவர்கள் பின் தொடர்வார்கள். மூத்த மகள் வீட்டில் இருந்த காலத்திலும் கூட அவளை அவர்கள் ஒரு முறை கூட அழைத்து வந்ததில்லை. அவளுக்கு இடம் கொடுத்தால் அவளும் தாயைப் போலவே மாறி விடுவாள் என்று ஆலோசித்து தான் அவள் அவருடன் இருந்த காலத்திலும் வைக்க வேண்டிய இடத்திலேயே வைத்திருந்தார்.

இன்று மாதத்தின் முதல் ஞாயிறு. மாலையிலிருந்தே அவர் மனைவியும் மகளும் பரபரப்பாக இருந்தார்கள்.  அவர்கள் தயாராகி அவருக்காக ஐந்து நிமிடங்கள் காத்திருந்த பிறகு அவர் மெல்ல எழுந்து தயாரானார். சென்ற வருடம் தான் அவர்கள் சின்னக் கார் ஒன்றை வாங்கியிருந்தார்கள். அந்தக் காரில் ஓட்டல் வந்து சேர்ந்தார்கள்.

ஓட்டலில் வந்து சேர்ந்த போது அவருடைய வழக்கமான சாப்பாட்டு மேசையே காலியாக இருந்ததில் அவருக்கு பரமதிருப்தி. பதினைந்து வருடங்களாக வருவதால் ஓட்டலில் சர்வர்கள் அனைவரும் அவரை நன்றாக அறிவார்கள். ஓட்டலில் சாப்பிட வருபவர்களிலும் பலருக்கு அவரை நன்றாகவே தெரியும். அவர்கள் அமர்ந்தவுடன் சர்வர்  மெனுவைக் கொண்டு வந்து தந்தான். அவரே பார்த்து மூவருக்கும் ஆர்டர் செய்து வேறெதாவது வேண்டுமா என்று அவர்களிடம் கேட்க இருவரும் அவர் எதிர்பார்த்த பதிலான “அதுவே போதும்” என்று வழக்கம் போலச் சொன்னார்கள். சர்வர் நகர்ந்த பின் தான் பக்கத்து மேசையில் நான்கு பேர் வந்து அமர்ந்தார்கள்.

அதில் அமர்ந்த பெண் ஒருத்தியின் முகம் தெரிந்த முகமாக இருக்கிறதே என்று உற்றுப் பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தார். அது அவள் மூத்த மகள் சிந்து. ஆனால் தோற்றத்தில் தான் நிறைய மாற்றம். செல்வச்செழிப்பில் அவள் தெரிந்தாள். அதன் பின் தான் மற்றவர்களைக் கவனித்தார். அவர் மூத்த மனைவியும் அவள் காதலனான வக்கீலும். கூட இருந்த இளைஞன் அவர் அறியாதவன் என்றாலும் அவன் சாயலைப் பார்த்து அவர்களுடைய மகன் என்பதை அவரால் யூகிக்க முடிந்தது. அவர்களைத் தனியாகவும், மூத்த மகளைத் தனியாகவும் பார்த்திருந்தால் அவர் அதிர்ந்திருக்க மாட்டார். ஆனால் மூத்த மகள் அவர்களுடன் சேர்ந்து கொண்டது மட்டுமல்ல அவர்களுடன் இங்கே வந்திருந்தது அவரை ஆத்திரப்படுத்தியது.

செய்த சத்தியத்தைக் காற்றில் பறக்க விட்டு விட்டு மகளுடன் அவர் முன்னாலேயே குடும்பத்துடன் மிருதுளா வந்தமர்ந்ததை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவருடைய மனைவியும், சின்ன மகளும்  ஓரக்கண்ணால் அவர்களைப் பார்த்தது பிடிக்கவில்லை. .உணவுக்கு ஆர்டர் செய்திரா விட்டால் உடனடியாக அங்கிருந்து கிளம்பிப் போயிருப்பார்.

அவர்கள் உடைகளும், நகைகளும் மிக வசதியாக இருக்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்தியது. சர்வர் வந்த போது அவரவருக்குப் பிடித்ததை அவர்கள் தனித்தனியாக ஆர்டர் செய்ததையும் அவர்கள் மிகவும் ஜாலியாக அவர்களுக்குள் பேசிக் கொண்டதையும் அவர் சின்ன மகள் பிரமிப்புடன் பார்த்தாள். அக்காவும் தம்பியும், அம்மாவும் மகளும், குடும்பமே சேர்ந்தும் செல்பி எடுத்துக் கொண்டார்கள்.

நால்வரும் இவரையும், மனைவி மகளையும் இருப்பதாகவே கண்டு கொள்ளவில்லை. ரகு சிந்துவைக் கேட்டார். “உன் பர்த்டேக்கு உனக்கு என்ன வேணும் சிந்து?”

“ஒன்னும் வேண்டாம் அப்பா” சிந்து அப்பாவை அழுத்திச் சொன்னாள்.

நவீன் சொன்னான். “அக்காவை என்ன கேட்கிறது. நான் சொல்றேன். அவளுக்குக் கருப்பு ப்ரெசா கார் வாங்கிக் குடுங்க”

“அவளுக்குக் காசு மாலை பத்து பவுனுக்கு வாங்கிக் கொடுங்க. கல்யாணம் ஆகப் போகிற பொண்ணு” என்றாள் மிருதுளா.

ரகு சொன்னார். “ரெண்டுமே வாங்கிக் குடுத்தா போச்சு”

பக்கத்து மேசையில் இருந்து இதையெல்லாம் கேட்பது அவருக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. அவர் சின்ன மகள் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பது அவருக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அருகில் இருக்கும் மனைவியைப் பார்த்தார். அவள் இப்போது ஓரக்கண்ணால் பார்ப்பதை விட்டு நேராகவே மிருதுளாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மிருதுளாவின் பட்டுச் சேலையையும் உடலில் இருந்த நகைகளையும், அவள் கம்பீரமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததையும் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.  அவள் தலையசைத்த போதெல்லாம் அவள் காதுகளில் இருந்த வைரத் தோடுகளின் ஜொலிப்பு அவர்கள் மீதும் அடிக்கடி விழுந்தது. பக்கத்து மேசை மனிதர்களின் பகட்டில் அவர் தன் வழக்கமான கம்பீரத்தையும், பெருமையையும் இழந்து கொண்டிருப்பது அவருக்குச் சகிக்க முடியாததாக இருந்தது.

நல்ல வேளையாகப் பக்கத்து மேசை ஆட்கள் வேகமாகச் சாப்பிட்டுக் கைகழுவப் போனார்கள். அவர் நிம்மதி அடைந்தார். இவர்கள் வழக்கம் போல மெல்லச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.  வழக்கம் போல மனைவியும் மகளும் அடிக்கடி அவரைப் பெருமையுடன் பார்க்காமல் இருந்தது அவரை வேதனைப்படுத்தியது.

கை கழுவி விட்டு வந்தவர்கள் நிதானமாக அவருடைய மேசையருகே நடந்து வந்தார்கள். அவர் அருகே வந்தவுடன் மிருதுளா தன் பலங்கொண்ட வரைக்கும் கையை ஓங்கி அவர் கன்னத்தில் அறைந்தாள். அவர் இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. நாற்காலியோடு சேர்ந்து ஒரு சுற்று ஆடி எப்படியோ விழாமல் மேசையைப் பிடித்துச் சமாளித்தார்.

“பொறுக்கி ராஸ்கல்” என்று மிருதுளா மனதில் சேர்த்து வைத்திருந்த வெறுப்பனைத்தையும் சேர்த்து அவரைப் பார்த்துக் கத்தி விட்டுக் கோபமாக நடக்க ஆரம்பித்தாள். மற்ற மூவரும் கூட அவரைக் கேவலமாகப் பார்த்தபடியே சென்றார்கள்.

ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், கல்லாவில் இருந்தவர், சர்வர்கள்  அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர்கள் நான்கு பேரும் வெளியேறிய பின் ஒரு ஆள் இன்னொரு ஆளிடம் கேட்டார். “என்ன ஆச்சு?”

அந்த ஆள் சொன்னது சிந்துவின் தந்தை காதில் விழுந்தது. “இந்த ஆள் ஏதோ சில்மிஷம் பண்ணியிருப்பான் போலிருக்கு. அதான் அந்தம்மா அறைஞ்சு திட்டிட்டு போயிருக்கு”

“சே இத்தனைக்கும் குடும்பத்தோட வேற வந்திருக்கான். வயசும் ஆயிருக்கு” என்று மற்ற ஆள் சொன்னார்.

உண்மை தாய்க்கும் மகளுக்கும் தெரிந்து விட்டது, இரண்டு பேரும் தன் தந்திரத்தையும் மீறிச் சேர்ந்து விட்டார்கள், இப்போது செல்வச்செழிப்போடு சந்தோஷமாகவும் இருக்கிறார்கள் என்ற ஆத்திரத்துடன் இந்த அடியும், பேச்சும் அவமானமாகச் சேர்ந்ததை அவரால் சகிக்க முடியவில்லை. வீங்கிய கன்னத்துடன் வேகமாக எழுந்து கைகழுவிக் கொண்டு அவர் குனிந்த தலையுடன் வெளியேற  அவர் மனைவியும் மகளும் பின் தொடர்ந்தார்கள்.

அவர்கள் மாதத்தில் முதல் ஞாயிறு அங்கு வருவது அன்றோடு நின்று போனது.

(தொடரும்)
என்.கணேசன் 

5 comments:

  1. super episode. sema handling.

    ReplyDelete
  2. one tight slap with one comment leads to many assumptions and a bad perception.

    ReplyDelete
  3. சிந்துவின் அப்பாவுக்கு இது போதாது தான்... இருந்தாலும் பரவாயில்லை...

    ReplyDelete
  4. Dear Mr. Ganesan, all around we have pandemic news & lock down - stressful time for everyone. Let us pray we overcome this quickly. During this time, it will be very useful if you can publish this story at least twice a week. There will be something positive to look forward. I highly appreciate your other posts regarding Gita & other jewels. Some of your old wonderful posts of yours can also be reposted.
    You are already doing so much for the society spending your time & effort. I may be asking for too much, but might help many in this tough situation. Thanks Kannan

    ReplyDelete