அன்றிரவுச் சாப்பாட்டின் போது தீபக் தன் காலை அனுபவத்தைத்
தாயிடம் விவரித்துக் கொண்டிருந்தான். ரஞ்சனி அவனுக்குத்
தாய் மட்டும் அல்ல. சிறந்த தோழியும் கூட. அவன் சொல்லும்
எல்லாவற்றையும் அவள் மிகுந்த சுவாரசியத்துடன் கவனமாகக் கேட்பாள். சில நேரங்களில்
தோழியாய்ப் புரிந்து கொண்டு உற்சாகப்படுத்துவாள். சில நேரங்களில்
தாயாய் கண்டிப்பாள். அவள் ஆதரித்தாலும், கண்டித்தாலும்
அவனால் அவளிடம் எதையும் சொல்லாமல் இருக்க முடிந்ததில்லை.
சரத்திற்கு அனைத்தையும் விரிவாகக் கேட்கும்
பொறுமை கிடையாது. சில விஷயங்கள் அவனுக்குச் சுவாரசியமாக இருக்கும். அவற்றை
அவன் ஆர்வத்துடன் கேட்பான். சில விஷயங்கள் அவனுக்குப் போரடித்து விடும். அவற்றில்
அவன் கவனம் தங்காது. அதைத் தந்தையின் முகபாவத்திலேயே தீபக் கண்டுபிடித்து விடுவான். அதனால்
அது போன்ற விஷயங்களை சரத்திடம் இரத்தினச் சுருக்கமாகச் சொல்லி முடித்து
விடுவான்.
சரத்துக்கு இன்றைய விஷயம் சுவாரசியமானதாகவே
தோன்றியது. பக்கத்து வீட்டுக்கு ஒரு மர்ம மனிதன் குடிவந்திருப்பது பற்றி ஏற்கெனவே கல்யாண்
அவனிடம் சொல்லி இருந்ததால் அந்த மர்ம மனிதனைப் பற்றிக் கூடுதலாய்த் தகவல் தெரிந்து
கொள்ள சரத் ஆர்வமாக இருந்தான்.
தீபக் சொல்லிக் கொண்டிருந்தான்.
“... அந்த நாகராஜ் கண்ணுல படலையே என்ன பண்ணறதுன்னு நான் யோசிச்சுகிட்டே காக் எடுத்து
நிமிர்ந்தப்ப கதவு திறக்கிற சத்தம் கேட்டுச்சு. திரும்பிப்
பார்த்தால் அவரே நிற்கிறார். சிரிப்பே இல்லாத முகம். ஆழமான பார்வை.....
ஆனால் ரொம்ப காலம் தெரிஞ்ச ஒருத்தர் மாதிரி அவரைப் பார்த்தவுடனே ஏனோ தோணுச்சு. அவரோட அசிஸ்டெண்ட்
சுதர்ஷன் என்னைப் பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கிற பையனாய் அறிமுகப்படுத்தினார். விளையாடறப்ப
காக் இங்கே விழுந்திடுச்சு. அதை எடுக்க வந்திருக்கான்னு சொன்னார். நான் கிடைச்ச
சந்தர்ப்பத்தை நழுவ விடலை. போய் என்னை அறிமுகப்படுத்திகிட்டேன்....”
சரத்தும் ரஞ்சனியும் மிகவும் ஆர்வமாக
அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தீபக்
அந்தக் காட்சியையே அவர்கள் முன்னால் கொண்டு வந்திருந்தான். அவன் அவனுக்கும் நாகராஜுக்கும்
இடையே நடந்த சம்பாஷணையைச் சொன்னான். பின் அது தடைப்பட்டதையும்
சொன்னான். “தர்ஷினியைக் காண்பிச்சு அவர் என்னை அனுப்பிச்சுட்டார்.
இல்லாட்டி நான் கண்டிப்பாய் அவர் வீட்டுக்குள்ளே போக முடிஞ்சிருக்கலாம்…”
ரஞ்சனி சொன்னாள்.
“அப்படியெல்லாம் போகறது ஆபத்துடா. நீ பார்த்த பாம்பு
எல்லாம் பல்லு பிடுங்கினது. அந்த வீட்டுல விஷப்பாம்பு ஏதாவது
இருந்து அது உன்னைக் கடிச்சு வெச்சுட்டா என்னடா செய்யறது. டிவியிலயும்,
யூட்யூப்லயும் பார்க்கறதோட நிறுத்திக்கோ. அந்த
மாதிரி மர்மமாய் இருக்கிற இடத்துக்கெல்லாம் போகாதே…”
“பாம்பு கிட்ட பயம் தேவையில்லைம்மா. அதெல்லாம் அனாவசியமாய்
யாரையும் கடிக்காது. மனுஷன் மாதிரியெல்லாம் தேவையில்லாமல் யாரையும் உபத்திரவம் பண்ணாது…..
நான் உன் கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன். அந்த
நாகராஜ் பார்க்கறதே பாம்பு பார்க்கிற பார்வை மாதிரி தான் எனக்கு தெரிஞ்சுது.
அந்த ஆள் கிட்ட ஏதோ சக்தி இருக்குங்கறது மட்டும் நிச்சயம் அம்மா.
என் மனசுல இருக்கறத அவர் படிக்கிற மாதிரி இருந்துச்சு. எனக்கு அவரை ஏனோ பிடிச்சுப் போச்சு. அவருக்கும் என்னைப்
பிடிச்ச மாதிரி தான் இருந்துச்சு. என்னைப் பார்த்து புன்னகைச்சார்.
அந்த ஆள் அடிக்கடி புன்னகைக்கிற ரகமாய் தெரியலை….”
ஆனால் ரஞ்சனிக்கு அந்தப் பாம்பு மனிதன் ஏனோ பயத்தை ஏற்படுத்தினான். அந்த வீட்டில் நிஜமாகவே
பாம்பு இருக்கிறதா இல்லை அவனே பாம்பு மாதிரி சீறுகிறானா என்று தெரியவில்லை.
இது போன்ற அசாதாரணமான மனிதர்கள் ஆபத்தையும் ஏற்படுத்த வல்லவர்கள்…
அவள் மகனை எச்சரிக்க எண்ணி வாயைத் திறந்தாள். தீபக்
அவசர அவசரமாய் இடது கையால் தாய் வாயை மூடினான். “என்ன சொல்ல வர்றேன்னு எனக்குத் தெரியும்.
பயப்படாதே. நான் எச்சரிக்கையாய் இருப்பேன்…”
என்று புன்னகையுடன் சொன்னான்.
பல சமயங்களில் அவள் எதையும் அவனிடம் வாய்விட்டுச் சொல்ல வேண்டியதே
இல்லை. சொல்லாமலே
அவன் கண்டுபிடித்து விடுவான்…. திடீரென்று ரஞ்சனி வேறு ஒரு உலகத்திற்கோ,
வேறொரு காலத்திற்கோ போனது போல் இருந்தது. அதிலிருந்து
மீண்டு அவள் வந்த போது அவள் முகத்தில் இனம் புரியாத சோகம் படர்ந்தது.
தாய் முகத்தில் தெரிந்த சோகம் தீபக்கை என்னவோ செய்தது. “என்னம்மா?” என்று கேட்டான்.
அவள் பலவந்தமாய் சோகத்தைப் புன்னகையால் மூடினாள். “ஒன்னுமில்லைடா.”
மதன்லால் வீட்டின் முன் இரவு ஒன்பது மணிக்கு ஒரு கார் வந்து
நின்றது. சத்தம் கேட்டு மதன்லால் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். உள்ளூர்
கவுன்சிலர். மதன்லால் வெளியே வந்தான். “என்ன விஷயம்?”
கவுன்சிலர் தாழ்ந்த குரலில் சொன்னான். “தலைவர்
உங்க கிட்ட பேசணும்னார்”
மதன்லால் அவனை உள்ளே அழைத்து வரவேற்பறையில்
உட்கார வைத்தான். அவன் அலைபேசியை எடுத்து எண்களை அழுத்தி விட்டு “ஹலோ ஐயா...
மதன்லால்ஜி பேசறார்” என்று சொல்லி அலைபேசியை மதன்லாலிடம் தந்தான்.
மதன்லால் அந்த அலைபேசியை வாங்கிக் கொண்டு
தனதறைக்குப் போய்க் கொண்டே பேசினான். “ஹலோ”
ஜனார்தன் த்ரிவேதி கேட்டார். “என்ன விஷயம்?”
மதன்லால் தனதறைக்குள் நுழைந்து கதவைத்
தாளிட்டுக் கட்டிலில் அமர்ந்து கொண்டு நரேந்திரன் வந்து விசாரித்ததை விரிவாகத் தெரிவித்தான். அவனிடம்
மட்டுமல்லாமல் மணாலியில் க்யான் சந்திடமும் சென்று நரேந்திரன் விசாரித்திருப்பதையும்
சொன்னான். ”.... ஐயா அந்த ஆள் பேச்சு வாக்குல சஞ்சய் காணாமல் போனதாய் வேற
சொன்னான். உண்மையா ஐயா?”
ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “ஆமாம். காசுக்காக
யாராவது கடத்தியிருந்தா கூப்பிட்டு பேரமாவது பேசியிருப்பான். அதுவும்
இல்லை. எங்களுக்கு நரேந்திரன் மேல தான் சந்தேகம் இருக்கு. ஆனா உறுதியாய்
சொல்ல முடியலை. அவனை நம்ம ஆளுங்க பின் தொடர்ந்துட்டு தான் இருக்காங்க. ஆனால் அவன்
ஆளுகளும் இப்போ என் வீட்டுக்கு வெளியே இருந்து உளவு பார்க்கிறார்கள்னு தெரியுது. போன்கால்களையும்
ஒட்டுக் கேட்க வாய்ப்பிருக்குன்னும் புரியுது. அதனால நமக்குப்
பிரச்சனை ஏற்படுத்தற
மாதிரியான போன்கால் எதையும் நான் பேசறதேயில்லை...”
மதன்லால் கேட்டான். “இவனைக்
கொஞ்சம் தட்டி வைக்க முடியாதா ஐயா?”
”ஆட்சி கையில
இருந்தால் தட்டி வைக்கிறது மட்டுமல்லாமல் அடக்கி ஒடுக்கியும் வைக்கலாம். அவனுக்கு
பிரதமர் கிட்டயும் நல்ல செல்வாக்கு இருக்குன்னு எனக்குத் தகவல் கிடைச்சிருக்கு. அதனால இப்போதைக்கு
நாம எதையும் செய்ய முடியாது....”
அந்தத் தகவலால் மதன்லால் கவலை அடைந்தான். “அவன் அந்த
வழக்கோட பழைய விசாரணை அதிகாரிகளுக்கு என்னென்னவோ நடக்கிறதுன்னு மறைமுகமா மிரட்டிட்டு
வேற போயிருக்கான் ஐயா”
ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். ”ஜாக்கிரதையாய்
இரு. நரேந்திரன் ஆபத்தானவனாயும், நேர் வழியில்
தான் போகணும்கிற எண்ணமில்லாதவனாகவும் தெரியறான். அதானல எங்கேயும்
தனியாகப் போகாதே....”
மதன்லால் “ஏன் ஐயா
நாம அஜீம் அகமது கிட்டயே இவனைக் கவனிச்சுக்கச் சொல்லக் கூடாது....?”
என்று மெல்லக் கேட்டான்.
“அவன் எந்த
நாட்டுல இருக்கானோ. அவன் ஆளுகளுக்கே கூட அவன் இருக்கற இடம் தெரியல. இங்கே இருக்கிற
அவன் ஆளு காதில் விஷயத்தைப் போட்டு வெச்சிருக்கேன்....பார்ப்போம்...”
அஜீம் அகமது எங்கே இருந்தாலும், அவனைப்
பாதிக்கிற எல்லாத் தகவல்களையும் உடனுக்குடன் பெற்று விடுவான், வேகமாக
இயங்குவான் என்று மதன்லால் கேள்விப்பட்டிருக்கிறான். ’அவன் இதைப்
பாதிக்கிற விஷயமாய் நினைப்பானா இல்லையா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!’
(தொடரும்)
என்.கணேசன்