சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 25, 2021

இல்லுமினாட்டி 95



க்ரிஷ் ஆழ்ந்த ஆலோசனையில் இருந்தான். சற்று முன் தான் இம்மானுவல் அவனை அலைபேசியில் கூப்பிட்டுப் பேசினான். விஸ்வத்தின் கூட்டாளி பற்றிய குறிப்புகள் நிறையக் கிடைத்திருப்பதாகவும், அதை வைத்து அவனுடைய அடையாளம் பற்றி முடிவெடுப்பதற்கு க்ரிஷ் ம்யூனிக் வருவது நல்லது என்றும் இம்மானுவல் சொல்லியிருந்தான். இந்தியாவிலிருந்து கிளம்பிய கணம் முதல் அங்கு போய்ச் சேரும் வரை க்ரிஷின் பாதுகாப்புக்கு முழு ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னான். விஸ்வம் அவர்களுக்குச் சிக்காமல் வெளியே இருக்கும் வரை எர்னெஸ்டோவுக்கு இணையாக க்ரிஷுக்கும் அவனால் நேரக்கூடிய அபாயம் இருப்பதால் எந்த விதமான அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் இம்மானுவல் இருந்தான்.

க்ரிஷுக்குத் தன் சொந்தப் பாதுகாப்பு பற்றிய கவலையை விடக் குடும்பத்தின் பாதுகாப்பு பற்றிய கவலை தான் பெரிதாக இருந்தது. முதலைமைச்சர் குடும்பம் என்பதால் அவர்கள் பாதுகாப்புக்கான வெளி ஏற்பாடுகள்  உயர்மட்டத்திலேயே இருக்கும், இல்லுமினாட்டியும் கூட அதற்கான ஏற்பாடுகள் செய்யும் என்றாலும் அவன் கவலைப்பட்டது உள் ஏற்பாடுகளைத் தான். சிந்து அவன் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருக்கும் வரை அந்த வீட்டில் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். க்ரிஷ் போய் வருவதற்குள் எதிரியென்று வீட்டாரும், வெளியாட்களும் உணராத சிந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அந்த ஆபத்து தான் க்ரிஷை நிறைய யோசிக்க வைத்தது.

மாஸ்டர் “உன் இதயம் காட்டுகிற வழியில் போ. ஆனால் அறிவையும் கூடவே வைத்துக் கொள்” என்று சொன்னபடி இரண்டையும் சேர்த்து தான் இது வரை சிந்து விஷயத்தில் அவன் நடந்து வருகிறான்இப்போதைக்கு சிந்துவிடம் சில மாற்று சிந்தனைகளை அவன் ஏற்படுத்தி இருக்கிறான். உதயின் காதலையும் காப்பாற்ற வேண்டும்,  சிந்து இந்தக் குடும்பத்தில் எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று எதிர்மாறான இரண்டு ஆசைகளை நிறைவேற்ற எச்சரிக்கையுடன் செயல்படுகின்றான். சிந்து ஒரேயடியாக மாறுவது நடக்கக்கூடிய காரியமல்ல. அவன் அவளை மாற்ற முடிவதில் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தாலும் கூட அதற்குச் சிறிது காலமாவது தேவைப்படும். அது நடக்கும் வரை அவளை அவன் எதிரியின் ஆளாகவே தான் நினைக்க வேண்டும்.  

சிந்து விஸ்வத்தின் ஆள் என்றாலும் அவளிடம் விஸ்வம் முடிவாக என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னும் தெரிவித்திருக்கவில்லை என்பது அவன் யூகமாக இருந்தது, ஏனென்றால் அவன் மாஸ்டர் சொல்லிக் கொடுத்த பயிற்சிகள் செய்து ஓரளவு அவள் மனதை ஊடுருவிப் பார்க்க முயன்ற போது உதயைக் காதலிக்கும் திட்டத்தைத் தவிர வேறு ஒரு திட்டவட்டமான திட்டத்தை  அவனால் உணர முடியவில்லை. அதனால் உதயிடம் பழகி அவனைக் காதலித்து அவன் வீட்டுக்குப் போய்க்கொண்டிரு, பின் என்ன செய்ய வேண்டும் என்று சமயம் வரும் போது சொல்கிறேன் என்று மட்டுமே விஸ்வம் அவளிடம் சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது. அப்படி இருந்தால் எந்த நேரத்திலும் விஸ்வத்தின் கட்டளை அவளுக்கு வரலாம். அப்படி வந்தால் அவள் அதைக் கண்டிப்பாகச் செய்தே தீரவேண்டியிருக்கும். இல்லாவிட்டால் அவள் மனோகர் மாதிரியே உயிரை விடவேண்டி வரும்.

இப்படி ஒரு நிலைமை இங்கு இருக்கையில் அவன் எப்படி நிம்மதியாக வெளிநாடு போய் விட்டு வர முடியும்? போகவில்லை என்றால் அவன் என்ன காரணத்தை இல்லுமினாட்டியிடம் சொல்வான்? சிந்துவைப் பற்றி வந்திருக்கும் சந்தேகத்தைப் பற்றிச் சொன்னாலோ உடனடியாக சிந்துவை அப்புறப்படுத்தி விடுவார்கள். உதய்க்கு சிந்து கிடைக்க மாட்டாள். என்ன செய்வது என்று யோசித்து ஒரு முடிவுக்கு இறுதியாக வந்த க்ரிஷ் மறுநாள் அதிகாலையிலேயே சிந்துவுக்குப் போன் செய்து பேசினான். “அவசரமாக உன்னிடம் சிறிது பேச வேண்டியிருக்கிறது சிந்து” என்றான்.

இவனால் இரவெல்லாம் யோசித்து அழுது உறக்கம் கெட்டிருந்த சிந்து கறாராகச் சொன்னாள். “க்ரிஷ் நேற்றோட விஷயத்தைத் தொடரும் பேச்சாக இருந்தால் தயவுசெய்து வேண்டாம். நீ சொன்னது எனக்குப் புரிந்து விட்டது. அதை இன்னொரு தடவை சிறிது மாற்றிக் கூட நான் கேட்க விரும்பவில்லை”

“அதைப் பேசப் போவதில்லை. இது வேறு விஷயம்”

“சரி நான் வர வேண்டுமா இல்லை நீங்கள் வருகிறீர்களா?”

“நானே வருகிறேன். அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன். பேச எனக்குப் பத்து நிமிஷங்கள் போதும்”

சிந்து சம்மதித்தாள். சொன்னபடியே க்ரிஷ் அரை மணி நேரத்தில் இருந்தான். சிந்து இரவெல்லாம் அழுது தூக்கம் தொலைத்திருந்தாலும் அதைத் தோற்றத்தில் அவனுக்குக் காட்டவில்லை. “என்ன விஷயம்?” என்று அமைதியாகக் கேட்டாள்.

“நான் அவசரமாய் வெளிநாடு போக வேண்டியிருக்கிறது. நான் இல்லாத நாட்களில் நீ என் வீட்டுக்கு வருவதை நான் விரும்பவில்லை” என்று க்ரிஷ் அமைதியாகச் சொன்னான்.

“இதை என்னிடம் சொல்வதற்குப் பதிலாக உங்கள் அண்ணாவிடமே சொல்லி இருக்கலாமே. அவர் தீர்மானமும் அதுவானால் வீட்டுக்கு அந்த நாட்கள் என்று இல்லை எந்த நாளிலுமே வர மாட்டேன்” என்று முகம் சிவந்து அவள் சொன்னாள்.

க்ரிஷ் சொன்னான். “அவனிடம் சொல்வதற்குப் பதிலாக நீ யார் என்பதை உன்னை இங்கே அனுப்பியவனின்  சக்தி வாய்ந்த எதிரிகளிடம் சொன்னால் போதும் அவர்கள் மீதியைப் பார்த்துக் கொள்வார்கள். நீ எங்கேயும் எப்போதும் போக வேண்டியிருக்காது”

முதல் முறையாக ஒரு வித்தியாசமான க்ரிஷை சிந்து பார்க்கிறாள். சுற்றி வளைத்துப் பேசாமல் ‘நீ யார் என்று எனக்குத் தெரியும், நீ யார் அனுப்பி வந்தாய் என்றும் எனக்குத் தெரியும், அனுப்பியவன் உத்தேசமும் எனக்குத் தெரியும்’ என்பதையும் அவளுக்கு அவன் புரிய வைத்தான். அவனிடம் வழக்கமான அன்பு தெரியவில்லை... மென்மை தெரியவில்லை.... அவளைப் புரிந்து கொண்டதன் சாயல் கூடத் தெரியவில்லை.

அவளுக்கு விஸ்வத்தின் எதிரிகள் யார் என்று தெரியாது. ஆனால் அவன் சொன்னதிலிருந்து யாராயிருந்தாலும் அவர்கள் வலிமை வாய்ந்தவர்கள், பொல்லாதவர்கள் என்ற தொனியை சிந்து உணர்ந்தாள். அவளைப் பற்றி அவன் அவர்களிடம் இது வரை சொல்லவில்லை, அவள் மறுத்தால் க்ரிஷ் சொல்லி விடுவான், பின் அவள் நீண்ட நாள் உயிர்வாழ முடியாது என்பதை கூடுதல் வார்த்தைகள் இல்லாமல் சிந்து உணர்ந்தாள்.

“உதய் கேட்டால் என்ன சொல்வது?” என்று மெல்ல சிந்து கேட்டாள்.

”அவசரமாக வெளியூர் போக வேண்டி இருக்கிறது. தவிர்க்க முடியாதது என்று சொல்”

“எப்போது நான் திரும்பி வருவது?”

“நான் உனக்கு போன் செய்து தெரிவிக்கிறேன்”

அவள் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைமையை உணர்ந்தாள். போகா விட்டால் உயிரே போய் விடும் என்கிறான் இவன். போனாலோ அது தெரிய வந்தால் விஸ்வம் உயிரை எடுத்து விடுவான். ஏனென்றால் அவன் எந்த நேரத்திலும் அடுத்து செய்ய வேண்டிய வேலையை அவளிடம் சொல்லலாம். அவள் என்ன செய்வாள்?

ஓரளவு அவள் மன ஓட்டத்தை க்ரிஷால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் விஸ்வத்துக்கும் பயப்படுகிறாள். அவனுக்குத் தெரிய வந்தால் ஆபத்தாயிற்றே என்ன செய்வது என்று யோசிக்கிறாள். க்ரிஷ் சொன்னான். “உன்னை அனுப்பியவன் கேட்டால் நான் உன்னைக் கண்டுபிடித்து விட்டேன், நான் மிரட்டித் தான் நீ போனாய் என்று சொல். அவன் நல்லவனாக இல்லாமலிருக்கலாம், ஆனால் முட்டாள் அல்ல. அதனால் புரிந்து கொள்வான். நான் சொல்லியும் கேட்காமல் நீ இங்கேயே இருந்து அவர்களிடம் சிக்கிச் செத்தால் அதை அவனும் வீரமாய்ப் பார்க்க மாட்டான், முட்டாள்தனமாய் தான் நினைப்பான்.”

சிந்து தளர்ந்து போனாள். இத்தனை நாட்கள் அவளிடமிருந்த அசாத்தியத் துணிச்சலும், தன்னம்பிக்கையும் இப்போது விலகிப் போயிருந்தன. விஸ்வம், க்ரிஷ் என்ற இரண்டு மலைகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டதைப் போல் உணர்ந்தாள். இவனும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விட்ட பின் அடுத்தது என்ன என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது.  

அதை அவள் நேரடியாகவே அவனிடம் கேட்டாள். “நீங்கள் திரும்பி வந்த பிறகு?”

க்ரிஷ் அமைதியாகச் சொன்னான். “அதை அப்போது பார்ப்போம்”

எல்லாமே அவன் அறிந்து கொண்ட பின் ’இனி பார்க்க என்ன இருக்கிறது’ என்று அவள் நினைத்துக் கொண்டாள். ஏன் இன்னும் உதயிடமும், வீட்டாரிடமும் சொல்லாமல் இருக்கிறான் என்பதும் புரியவில்லை. இனி இந்த நாடகத்தைத் தொடர்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை.

அதைப் புரிந்து கொண்டவன் போல் க்ரிஷ் சொன்னான். “நான் இப்போதும் உன்னைக் கெட்டவளாக நினைக்கவில்லை சிந்து. உன் குழந்தைப் பருவத்தின்  அநியாய பாதிப்புகளால் தடம் மாறிப் போனவளாகவே நினைக்கிறேன். அன்பினால் நீயும் மாற்றப்பட முடிந்தவளாகவே நினைக்கிறேன். ஆனால் அதே சமயத்தில் நீ மாறுவதற்கு முன் என் குடும்பத்தார் யாரும் உன் மூலமாகப் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதிலும் எச்சரிக்கையாக இருக்கிறேன்...”

அவன் போய் விட்டான்.

(தொடரும்)  
என்.கணேசன்

3 comments:

  1. Nice going. Krish is great but not foolish. He takes steps intelligently. Now what will Sindhu do?

    ReplyDelete
  2. சர்த்தான்.... இப்போ க்ரிஷும் அக்க்ஷய்யும் ம்யுனிச்சில் சந்திக்கப்போகிறார்கள்..?

    ReplyDelete
  3. க்ரிஷ் சிந்துவை கையாண்ட விதம் அருமை.... சிந்துவை திரும்பி வரும் வரை செயல்பட விடாமல்...நிறுத்தி வைத்த விதமும் அருமை...

    ReplyDelete