சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 18, 2021

இல்லுமினாட்டி 94


தய்க்கு சிந்து சடாரென்று போனது மிகவும் வருத்தமாய் இருந்தது. க்ரிஷிடம் அவன் கோபித்துக் கொண்டான். ”ஏண்டா அவள் தான் என்ன கண்டுபிடித்தாய்னு கேட்டால் பேருக்கு ஏதாவது சொல்லிட்டு போலாம் தானே. அதை விட்டுட்டு ஆராய்ச்சி செய்யறேங்கற பேர்ல ஆளுகளையுமா இப்படி போஸ்ட் மார்ட்டம் செய்யறது? அதை வெளிப்படையாய் வேறு சொல்கிறாய். அவள் தான் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிகிட்டு வருகிறாள் தானே? என்னைக் காதலிக்கிறாள். நம் எல்லோரிடமும் அன்பாய் பழகுகிறாள். இப்படியே போச்சுன்னா முழுசுமா ஒருநாள் மாறியும் இருப்பாள். நீ அதுலயும் குறை கண்டுபிடிச்சு, அவளைக் கஷ்டப்படுத்தித் துரத்திட்டியே”

உதயிடம் கோபத்துடன் துக்கமும் வெளிப்பட்டதைக் கவனித்த க்ரிஷ் அண்ணனுக்காக அனுதாபப்பட்டான். அவள் காதலும் பொய், குடும்பத்தாரிடம் காட்டிய அன்பும் பொய் என்று தெரிந்தால் இவன் என்ன ஆவான் என்று நினைக்கவே அவனுக்கு மிகவும் கஷ்டமாய் இருந்தது.  

க்ரிஷ் சொன்னான். “பாரு. காயத்தைச் சுத்தம் பண்ணி மருந்து போடறப்ப வலிக்கும் தான். ஆனால் அந்த வலிக்குப் பயந்து அப்படியே விட்டுட்டா நிலைமை விபரீதம் ஆயிடும். சிந்து இப்ப வருத்தத்துல போயிருக்கலாம். ஆனால் அவள் புத்திசாலி. வீட்டுக்குப் போய் யோசிப்பா. அப்ப தான் மாற்றம் வரும். இல்லாட்டி அவ வெளியே சந்தோஷமாயிருக்கிற மாதிரி இருக்கும். ஆனால் அந்த சந்தோஷம் ஆழமாயிருக்காது. உள்ளுக்குள்ளே அந்தப் பழைய துக்கம், வலி எல்லாம் அப்படியே தானிருக்கும். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறவ அப்படி உள்மனக் காயத்தோடவே இருந்துட்டா உனக்குப் பரவாயில்லையா?”

உதய்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. சில நேரங்களில் ஏதோ ஆழ்ந்த யோசனையில் சிந்து மூழ்குவதை அவனும் கவனித்திருக்கிறான். கூடவே இருக்கும் போதும் ஏதோ தனியுலகில் அவள் இருப்பது போல அவனும் உணர்ந்திருக்கிறான். இவன் சொல்வது போல் அது அவளுடைய உள்மனக்காயத்தின் விளைவாக இருந்து, அவள் அதில் இப்போதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதில் அவனுக்கும் சம்மதமில்லை. ஆனால் தம்பி காயத்திற்கு மருந்து போட்டு அனுப்பியிருக்கிறானா இல்லை, காயத்தைக் கிளறிவிட்டு அனுப்பியிருக்கிறானா என்பதை அவனுக்கு உறுதியாகக் கணிக்க முடியவில்லை. ஆனால் தம்பியை அதற்கு மேலும் கோபித்துக் கொள்ள அவனால் முடியவில்லை. அவன் ஆத்மார்த்தமாகத் தான் அறிவுரை கூறி இருக்கிறான் என்பது சிந்துவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவன் கண்கள் ஈரமாகச் சொன்ன விதத்திலேயே அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் சிந்து ஏதோ ஒரு மாதிரியாகிப் போன விதம் அவன் மனதை என்னவோ செய்து கொண்டிருக்கிறது. ’பேசாமல் நானே இவனிடம் கேட்டுக் கொண்டு அவளிடம் விஷயத்தைப் பக்குவமாய்ச் சொல்லி இருக்கலாம்....’


சாமுவலுக்கு வாங் வே போன் செய்து கர்னீலியஸ் கூடுதலாகக் கண்டுபிடித்திருந்த வாசகத்தைத் தெரிவித்திருந்தார்.

உங்கள் மகாகவி ஒருவன் அற்புதக் கவிதை ஒன்றை எழுதிய அவ்விடம் இரு தளம் கொண்டது

அந்த வாசகத்தைப் படித்தவுடன் முதலில் சாமுவலுக்கு எரிச்சல் தான் வந்தது. கவிஞர்கள் எங்கே உட்கார்ந்து கவிதை எழுதினார்கள் என்பதை எல்லாம் யாராவது கண்டுபிடிக்க முடியுமா? அதிலும் கவிஞனின் பெயர் கூட இல்லை. யாரது மகாகவி? அவன் எப்போது எழுதிய கவிதை? அந்த வாசகத்தில் ‘இரு தளம் கொண்டது’ என்பது மட்டும் தான் ஒரு உபயோகமான தகவலாகத் தோன்றியது. ஜெர்மனியில் இருக்கிற இல்லுமினாட்டி கோயில்கள் எல்லாம் பார்த்தாகி விட்டது. அவற்றில் எதிலும் விஸ்வமும், கூட்டாளியும் இல்லை. அதில்  இரு தளம் கொண்ட பழைய இல்லுமினாட்டி கோயில்களை மறுபடி பரிசோதித்துப் பார்க்க வேண்டும். 

இல்லுமினாட்டி உளவுத்துறையின் உபதலைவருக்கு பார்த்ததையே மறுபடி பார்க்க சலிப்பாக இருந்தது. அதில் ஒரு பிரச்னையும் இருந்தது. அவர் சில குறிப்பிட்ட வகைகளை மட்டும் தேர்ந்தெடுத்து மறுபடி தேடுகிறார் என்ற செய்தி மட்டும் உளவுத்துறையின் தலைவனான இம்மானுவலுக்குத் தெரிந்தால் ஏன் என்ற கேள்வி ஒன்று எழும். ஒரு கேள்வி பின் பல கேள்விகளை எழுப்பும்.  அது பேராபத்து.   
        
இம்மானுவல் இப்போதெல்லாம் அவருக்குப் பார்க்கவோ, பேசவோ அதிகம் கிடைப்பதில்லை. முந்தா நாள் அவனைப் பார்த்த போது அவன் கையில் விஸ்வத்தின் கூட்டாளி பற்றிய ஃபைல் இருந்தது. அது முன்பு பார்த்ததை விட தடிமனாக இருந்தது. கேட்டாலும் அவன் பதில் சொல்ல மாட்டான் என்று தெரிந்தே சாமுவல் ஃபைலில் எழுதியிருந்த பெயரைப் பார்த்தபின் நினைவு வந்தது போலக் கேட்டார். “இவனைப் பற்றி எதாவது தகவல் கிடைத்திருக்கிறதா?”

“சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவுமில்லை” என்று சொல்லியபடி இம்மானுவல் நகர்ந்து விட்டான்.   

சாமுவலுக்குக் கோபம் பொங்கியது. உபதலைவரிடம் கூட மறைக்கிற இந்தப் போக்கு அவனுடைய அகம்பாவத்தைக் குறிப்பதாகவே அவர் நினைத்துக் கொண்டார். அதிர்ஷ்டம் அவர் பக்கம் இருந்து ஒரு மாற்றம் இல்லுமினாட்டியில் வருமானால் இவனைத் தக்க விதத்தில் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

ஏற்கெனவே பார்த்திருந்த பழைய இல்லுமினாட்டிக் கோயில்களில் இருதளம் உள்ள கோயில்களைத் தேர்ந்தெடுத்து ஏதாவது சாக்கு சொல்லிக் கொண்டு தானே நேரில் செல்வது  என்று தீர்மானித்தார். போய் விசாரிக்கையில் ஏதாவது கவிஞர் அந்த இடத்திற்கு வந்து போனதோ, அங்கு கவிதை எழுதியதோ நடந்திருக்கிறதா என்றும் மெல்லக் கேட்டுப் பார்க்க வேண்டும். இதற்கு மற்றவர்களை அனுப்பினால் ஏதாவது பேச்சு வாக்கில் ஏதாவது உளறி தகவல் இம்மானுவலை எட்ட வாய்ப்பிருக்கிறது. எனவே அது வேண்டாம்...


சிந்து தன்னைப் பிரம்மப் பிரயத்தனம் செய்து கட்டுப்படுத்திக் கொண்டு தான் உடையாமல், வெடிக்காமல், வீடு வந்து சேர்ந்தாள். வீட்டுக்கு வந்து தன் படுக்கையில் விழுந்த போது அவள் அது வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த அழுகை குமுறிக் கொண்டு வந்தது. அவள் நினைவு தெரிந்த நாளில் இருந்து அழுததில்லை. அழுகையை அவள் பலவீனமாக நினைத்தாள். அதிலும் அவள் தந்தை, சித்தி, தங்கை முன் என்றுமே துக்கத்தின் சாயலைக் கூடப் பிற்காலங்களில் அவள் காட்டியதில்லை. வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள் அழுவதில்லை என்று எங்கோ எதிலோ படித்தது மனதில் பசுமையாகப் பதிந்திருந்தது. இதுநாள் வரை வெற்றிகரமாகச் சமாளித்தவளுக்கு இன்று தாக்குப்பிடிக்க முடியவில்லை.

அவளிடம் எல்லாவற்றையும் சொன்ன க்ரிஷின் முகத்தில் ஒரு கேலியோ, அவள் பழைய வாழ்க்கையை அக்கு வேறு ஆணி வேறாகப் பரிசீலித்து விட்ட கர்வமோ, ஒரு குற்றவாளிக்கு நீதிபதி சொல்லும் தீர்ப்பின் பாவனையோ தெரிந்திருந்தால் அவள் கண்டிப்பாக உடைந்திருக்க மாட்டாள். அவை எதுவும் ஒரு சதவீதம் கூட அவனிடம் தெரியவில்லை. அவள் வலியை உணர்ந்து அதில் பங்கு கொண்டவனாய் அவனும் வலியுடன் அவளிடம் பேசினான். அவன் கைவிரல்கள் அவள் கையைப் பிடித்திருந்ததில் கூட அவன் இரக்கம் வெளிப்பட்டது. அவன் கண்களில் தெரிந்த ஈரம் பொய் அல்ல என்பதை அவள் தன் அந்தராத்மாவில் உணர்ந்தாள். வாழ்க்கையில் நிறைய சம்பாதித்து யாருமே நினைத்துப் பார்க்க முடியாத உயரத்திற்குப் போய் அவளை அலட்சியம் செய்தவர்கள்  எல்லாம் பொறாமைப்படும்படி வாழ்ந்து காட்ட வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டிருந்தாள். அதைக்கூட அவன் அறிந்தவனாய் அன்புக்கு எதுவும் இணையில்லை. அதற்கு ஈடாக நீ எதைச் சம்பாதித்தாலும் முடிவில் ஏமாந்து தான் போவாய் என்று ஆத்மார்த்தமாய் சொன்னது அவளை நிறையவே பாதித்தது. அதை அவனைத் தவிர வேறு யார் சொல்லி இருந்தாலும் அவள் அத்தனை முக்கியத்துவம் தந்திருக்க மாட்டாள். சாதிக்க முடியாதவனின் கையாலாகாத தத்துவம் என்று மனதிற்குள் பரிகசித்து ஒதுக்கியிருப்பாள். ஆனால் அவன் அதிகாரம், பணம், அறிவு, சொத்து, சாதனை என எல்லாவற்றிலும் உச்சத்திலேயே இருப்பவன். அவள் இனி வாழ்நாள் எல்லாம் உழைத்தாலும் எதிலும் அவனை எட்டவே முடியாது. அவன் அத்தனை அதிர்ஷ்டங்களுடன் அன்பையும் அளவில்லாமல் பெற்றவன். அப்படி எல்லாவற்றையும் அடைந்து உயரத்தில் இருப்பவன், பெற்றிருக்கும் அன்பை மற்றவற்றோடு வாழ்க்கையில் எடைபோடும் முழுத்தகுதியும் உள்ளவன், அவளிடம் அவள் இதயத்துடன் பேசுவது போலச் சொல்லியிருக்கிறான்.. ”உண்மையான நேசம் தரும் சந்தோஷத்தையும், நிறைவையும் அது எதுவுமே தந்துவிட முடியாது.... நீ புத்திசாலி.... தைரியமானவள். நீ முயற்சி செய்தால் உனக்கு எதுவும் முடியாததல்ல. நீ மாற வேண்டும்

அவனை பத்து வருடங்கள் முன் அவள் சந்தித்திருந்து, அவன் இந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கண்ணீரின் நடுவில் நினைத்துக் கொண்டாள். அப்போது கண்டிப்பாக அவள் மாறியிருப்பாள். இப்போதோ அவள் திரும்பிச் செல்ல முடியாத பயணத்தில் நிறைய தூரம் வந்து விட்டவள். இனி அவள் மாற நினைத்தாலும் விஸ்வம் விட மாட்டான்..... அவள் என்ன செய்வாள்?

(தொடரும்)
என்.கணேசன்


Total 151 chapters

6 comments:

  1. I feel pity for Sindhu. Her situation made her so. How can she escape? Very eager to know.

    ReplyDelete
  2. அன்புக்கு எதுவும் இணையில்லை. அதற்கு ஈடாக நீ எதைச் சம்பாதித்தாலும் முடிவில் ஏமாந்து தான் போவாய்... It's universal Truth .. Thank you Ganeshan Sir

    ReplyDelete
  3. சிந்துவின் நிலையோ மிகவும் இக்கட்டானது. அவள் என்ன முடிவு எடுப்பாள். எப்படி இதிலிருந்து மீளப்போகிறாள்.அறிந்து கொள்ள அடுத்த வாரம் வரையில் காத்திருக்க வேண்டும் அல்லவா!

    ReplyDelete
  4. சாமுவல் இந்த முறையாது கண்டுபிடிப்பாரா...? அவர் கண்டிவறிவதை காண ஆவலாக உள்ளேன்....

    சிந்து தற்போது இக்கட்டான நிலையில் இருந்து எப்படி மீளப்போகிறாள்?

    ReplyDelete