சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 4, 2021

இல்லுமினாட்டி 92


லைபேசி அலற ஆரம்பித்தது. கர்னீலியஸ் அதை மௌனமாக்கி விட்டு இந்தப் பயிற்சியைச் செய்ய ஆரம்பித்திருக்க வேண்டும் என்று தன்னையே கடிந்து கொண்டார். அலட்சியம் செய்து விட்டுத் தொடர அந்தச் சத்தம் அனுமதிக்கவில்லை. பெருமூச்சு விட்டவராக அந்தக் கடைசி வாசகத்தை மறுபடி நினைவுபடுத்திக் கொண்டார். உங்கள் மகாகவி ஒருவன் அற்புதக் கவிதை ஒன்றை எழுதிய அவ்விடம் இரு தளம்  கொண்டது....” .  அதை மனதின் ஒரு மூலையில் நினைவுபடுத்திக் கொண்டே அலைபேசியில் அழைப்பது யாரென்று பார்த்தார். வாங் வே.

அலைபேசியை எடுத்துப் பேசிய கர்னீலியஸ் எந்த சந்தர்ப்பத்தில் அவருடைய அழைப்பு வந்திருக்கிறது என்று விளக்கிய போது வாங் வே பல முறை மன்னிப்பு கேட்டார். அது சம்பிரதாயமான வார்த்தைகளாக இருக்காமல் உண்மையாகவே அவர் உணர்ந்ததாய் இருந்தது. தினமும் ஏதாவது கூடுதலாகத் தெரிந்ததா, தெரிந்ததா என்று கேட்கும் அவர் இந்த முறை, தெரிய ஆரம்பித்ததை இடைமறித்து விட்டோமே என்று பச்சாதாபப்பட்டார். எல்லா நேரங்களிலும் பயிற்சி பலனளிப்பதில்லை, சில அபூர்வ சமயங்களில் மட்டுமே மனம் லயித்து வெற்றி கிடைக்கிறது என்று கர்னீலியஸ் அவரிடம் முன்பே சொல்லியிருந்தது அவருடைய குற்றவுணர்ச்சியை அதிகரித்திருந்தது. அவர் மட்டும் இப்போது ‘ஏதாவது கூடுதலாகத் தெரிந்ததா?’ என்று கேட்கப் போன் செய்யாமல் இருந்திருந்தால் முழுமையாகவே எல்லா விவரங்களும் கிடைத்திருக்கலாம்; அவர் என்ன செய்வது என்று அதற்கேற்றபடி தீர்மானித்திருக்கலாம்...

இந்த எண்ண ஓட்டத்தில் மனம் நொந்தவராக வாங் வே ”இனிமேல் நான் போன் செய்ய மாட்டேன். நீங்களே போன் செய்யுங்கள்...” என்று சொல்லி, கூடுதலாகத் தெரிந்த அந்த ஒரு வாக்கியத்தை அவரிடம் கேட்டு எழுதிக் கொண்டார்.


மாலை நேரத்தில் சிந்து உதயின் வீட்டுக்குப் போன போது வீட்டில் பத்மாவதி இருக்கவில்லை. அவள் ஏதோ கோயிலுக்குப் போயிருந்தாள். உதயும், கிரிஷும் மட்டும் தான் வீட்டில் இருந்தார்கள்.

வாசலுக்கு வந்து வரவேற்ற உதயிடம் சிந்து கேட்டாள். “நான் வருவது க்ரிஷுக்குத் தெரியாது தானே? நீங்கள் சொல்லவில்லை அல்லவா?”

அவன் புன்னகையுடன் “சொல்லவில்லை” என்று சொன்னான். சிந்துவுக்குத் திருப்தியாக இருந்தது. இருவரும் சேர்ந்து க்ரிஷ் அறைக்குப் போனார்கள். உள்ளே க்ரிஷ் தரைவிரிப்பு ஒன்றில் தியானத்தில் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு எதிரே ஒரு தேஜஸ்வியான மனிதரின் புகைப்படம் இருந்தது. அவள் வாயைத் திறந்து யாருடைய புகைப்படம் அது என்று கேட்க முற்பட்ட போது உதய் அவள் உதடுகளில் விரலை வைத்து ‘சத்தம் வேண்டாம்’ என்று எச்சரிக்கை செய்தான்.

சிந்து தலையசைத்தாள். ஆனாலும் உதய் அவள் உதடுகளில் இருந்து அவனுடைய விரலை எடுக்காமல் அவளைக் காதல் பார்வை பார்க்க அவள் அவன் விரலுக்கு முத்தமிட்டு வைத்தாள். இது போன்ற செய்கைகளில் ஆரம்பத்தில் உணர்ந்த அருவருப்புகளை அவள் உதறித்தள்ளப் பழகியிருந்தாள். சின்ன சந்தோஷத்துடன் அவன் விரலை எடுத்தான். சிந்துவுக்கு ஒருவிதத்தில் க்ரிஷ் தியானத்தில் இருந்தது வசதியாக இருந்தது. க்ரிஷையும் அவன் அறையையும் அவன் அறியாமல் ஆராய அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

க்ரிஷ் சிலை போல அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் தெரிந்த அமைதி அவளுக்கு அசாதாரணமாகத் தெரிந்தது. அவன் ஏதோ ஒரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான் என்று தோன்றியது. அவனுடைய பெரிய அறையில் இரண்டு அலமாரிகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அறிவியலில் இருந்து ஆன்மிகம் வரை எல்லாத் துறைகளிலும் புத்தகங்கள் இருந்தன.  சில புத்தகங்களை எடுத்துப் பார்த்தாள். எடுத்துப் பார்த்த எல்லாப் புத்தகங்களிலும் பல பக்கங்களில் பக்கவாட்டில் க்ரிஷ் எழுதிய குறிப்புகள் இருந்தன. அவன் படிக்காமல் வெறுமனே எடுத்து வைத்திருக்கிற புத்தகங்கள் எதுவும் இல்லை என்பது புரிந்தது. அவனைப் பற்றி அவள் படித்திருந்த குறிப்புகளில் எத்தனையோ படித்திருந்த போதும் நேரில் பார்த்து உணர்வது கூடுதல் பிரமிப்பாக இருந்தது...

க்ரிஷின் குரல் கரகரத்துக் கேட்டது. “என்ன ரெண்டு பேரும் திடீர்னு?”

சிந்து திரும்பி க்ரிஷைப் பார்த்தாள். தியானத்திலிருந்து மீண்டிருந்த அவன் முகத்தில் அந்தப் புகைப்படத்தில் இருந்த ஆளைப் போலவே தனி தேஜஸ் தெரிந்த மாதிரி உணர்ந்தாள். ஏதோ ஒரு பேரின்ப அனுபவத்திலிருந்து திரும்பியவன் போல் அவன் குரல் மென்மையும் நிறைவும் கொண்டதாய் இருந்தது.  அந்தத் தியான அனுபவத்தினாலோ என்னவோ வழக்கமாய் பார்க்கும் சந்தேகத்துடன் சேர்ந்த கூரிய பார்வையையும் காணோம். அவளை அன்பாகவே அவன் பார்த்த மாதிரி இருந்தது.

சிந்து சொன்னாள். “உங்க கிட்டே எனக்கு கொஞ்சம் கேட்க வேண்டியிருந்தது. அதனால் தான் நேரிலேயே பார்த்துப் பேசலாம் என்று வந்தேன்.”

உதய் லேசாய் சிரித்துக் கொண்டே சொன்னான். “உன் கிட்டே சொல்ல வேண்டாம்னு சொன்னாள். திடீர்னு வந்து கேட்டால் தான் நீ உள்ளதை உள்ளபடி சொல்வாயாம்”

சிந்து முதலில் அந்தப் புகைப்படத்தைக் காட்டிக் கேட்டாள். “இது யார் ஃபோட்டோ”

க்ரிஷ் புன்னகையுடன் சொன்னான். “இது என் குரு. மாஸ்டர்னு கூப்பிடுவோம்... இதைக் கேட்கத் தான் வந்தாயா என்ன?”

உதய் சிந்துவிடம் சொன்னான். “முதல்ல உட்கார். அவன் அறைக்கு வந்தால் அவனாய் எப்போதும் உட்காரச் சொல்ல மாட்டான். ஏன்னா நாம உட்கார்ந்தா சீக்கிரம் வெளியேற மாட்டோம். அவனோட படிப்பு, ஆராய்ச்சி எல்லாம் தடைப்பட்டுப் போகும்னு நினைப்பான். அதனால நமக்கு வேணும்னா நாமளா உட்கார்ந்துக்கணும்”

சொல்லி விட்டு அங்கிருந்த இருக்கை ஒன்றில் சிந்துவை அமர வைத்து விட்டுத் தானும் ஒரு இருக்கையில் உதய் உட்கார்ந்து கொண்டான். க்ரிஷ் அண்ணனைப் பார்த்து அசட்டுச் சிரிப்பு சிரித்தது அவன் சொன்னது பொய் அல்ல என்று ஒத்துக் கொள்வதாய் இருந்தது.  

சிந்து ஒரு புன்னகை உதிர்த்து விட்டுச் சொன்னாள். “இல்லை நான் என்னைப் பற்றிக் கேட்க வந்தேன். ஹரிணி என்னைப் பற்றி நீங்க எதோ ஆராய்ச்சி செய்துகிட்டிருக்கிறதா சொன்னாள் அல்லவா. அதனால் தான் என்ன கண்டுபிடித்திருக்கிறீர்கள் என்று உங்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று வந்தேன்....”

உதயை வைத்துக் கொண்டே இப்படித் தைரியமாகக் கேட்கும் அவள் துணிச்சலை க்ரிஷால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. புத்திசாலித்தனத்தோடு சேர்ந்திருக்கும் இந்தத் தைரியத்திற்காகத் தான் விஸ்வம் இவளைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்....

உதய் சொன்னான். “பத்திரிக்கைகளில் வரும் சைக்காலஜிகல் க்விஸ் மாதிரி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி என்ன கணிப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று படித்துப் பார்ப்பதில் எல்லாம் இவளுக்கு ஆர்வமாம்...”

க்ரிஷ் உடனடியாக எதையும் சொல்லாமல் யோசித்தான். முடிவில் அவன் “நான் உன்னை வைத்து ஆராய்ச்சி எல்லாம் செய்யவில்லை. அவர்கள் சும்மா சொல்கிறார்கள்” என்று சொல்வான் என்று சொல்லித் தவிர்க்கப் பார்ப்பான் சிந்து எதிர்பார்த்தாள்.  

ஆனால் க்ரிஷ் அப்படிச் சொல்லாமல் அவளை அசத்தினான். “சிந்து. உண்மை எல்லா நேரங்களிலும் கசப்பானது தான். அதனால் தான், சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வரும் போது கூட, அதற்குக் கொஞ்சம் தேன்பூசி இனிமையாகச் சொல்லி, புத்திசாலிகள் எதிர்ப்பு வராதபடி தப்பிக்கிறார்கள். எனக்கு அப்படி இனிமையாகச் சொல்லும் வித்தை எல்லாம் தெரியாது. உள்ளதை உள்ளபடி சொல்வேன். நீயும் வாய் வார்த்தைக்கு அப்படிச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து வந்ததாய்ச் சொன்னாலும், நான் சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வாய் என்று எனக்குத் தெரியாது.  நீ வருத்தப்பட்டால் இவன் என்னைச் சும்மா விட மாட்டான். கோபம் வந்து என்னோடு சண்டைக்கு வருவான். எதற்கு வம்பு? நான் எதுவும் சொல்லா விட்டால் உனக்கும் நிம்மதி. இவனுக்கும் திருப்தி”

சிந்து க்ரிஷின் இந்த உபாயத்தை எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்லப் போகிறான் என்று தெரியாவிட்டாலும் கசப்பானதாகத் தான் இருக்கும் என்று சொல்கிறான். அதைக் கேட்டு அவளுக்கு வருத்தமாகும் என்கிறான். உதய்க்குக் கோபம் வரும் என்கிறான். அப்படியும் சொல்லச் சொன்னால் ஏடாகூடமாய் என்னென்ன சொல்வான் என்று சொல்ல முடியாது. சொல்லி அவள் மறுத்தால் ‘இதற்காகத் தான் நான் சொல்ல மாட்டேன். நீ தான் என்னை வற்புறுத்திக் கேட்டாய்’ என்று சொல்வான்....

ஆனால் எதையும் தெரிந்து கொள்ளாமல் திரும்பிப் போய் குழப்பத்திலும், பயத்திலுமேயே மறுபடியும் தங்கியிருக்க சிந்துவுக்குச் சிறிதும் விருப்பமிருக்கவில்லை. என்ன ஆனாலும் சரி அவன் மனதில் உள்ளதை வாய் விட்டுச் சொல்ல வைக்காமல் அவள் திரும்பிப் போவதாய் இல்லை.

“பரவாயில்லை சொல்லுங்கள். சொல்வது உண்மையாக இருந்தால் நான் கண்டிப்பாக வருத்தப்பட மாட்டேன்.” என்று சிந்து தைரியமாகச் சொன்னாள்.

(தொடரும்)
என்.கணேசன்



3 comments:

  1. Sindhu's courage is impressive. How is Krish going to handle her? Whether brothers will split because of her? Waiting to know.

    ReplyDelete
  2. கிரிஷ் கண்டிப்பாக உண்மையை சொல்லி விடுவான்... ஆனால் சூசகமாக சொல்லுவான்...என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
  3. I have read upto chapter 79 only.
    How to read from chapter 80. Please clarify

    ReplyDelete