சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 15, 2021

யாரோ ஒருவன்? 23


யாரோ விளையாடறாங்கன்னு நினைக்கிறேன். ஆத்மாக்கள் தேடி வர்றதெல்லாம் கட்டுக்கதை தான். இந்த நாட்டில் தான் அதுக்குப் பஞ்சமேயில்லையே.” என்றான் கல்யாண். அவன் தீபக்கின் கனவுக்கு முக்கியத்துவம் காட்டி நண்பனைப் பயமுறுத்த விரும்பவில்லை.  தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வென்றே ஒதுக்கி விட்டான்.

ஏன் இத்தனை வருஷம் கழிச்சு இப்படி?” என்று சரத் சந்தேகத்தோடு கேட்டான்.

நீ நினைக்கிற அந்தப் பழைய விஷயத்தைத் தான் அந்த மொட்டைக்கடுதாசிக்காரன் சொல்றான்னு உனக்கு எப்படித் தெரியும்? அவன் விளையாட்டா, பொதுவா அப்படிச் சொல்லியிருக்கலாமே

அப்படின்னா ஏன் நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் இந்த மொட்டைக்கடுதாசி?”

நமக்கு இப்படி எழுதிப் போட்ட மாதிரியே எத்தனையோ போஸ்ட் பாக்ஸ்ல அந்த முட்டாள் எழுதிப் போட்டிருக்கலாம். நமக்கு எப்படித் தெரியும்? நாமளே இதை வெளியில் நாலு பேருக்குச் சொல்வோமா? அந்த மாதிரியே அவனுகளும் அமுக்கமாய் இருக்கலாம். பாரு சரத். நாட்டுல வேலைவெட்டி இல்லாத பயலுக நிறைய இருக்காங்க. அவனுகளுக்கு நேரமும் போக மாட்டேங்குது. இப்படி எதாவது எழுதிப்போடுவான். இல்லைன்னா எதோ ஒரு போராட்டத்துல குதிப்பான். எதுவும் கிடைக்கலைன்னா தற்கொலை பண்ணிட்டு சாவான். இந்த பைத்தியக்காரன்களை நாம பெருசா நினைக்கக் கூடாது...”

சரத்துக்கு அவன் சொல்வது சரிதானென்று தோன்ற, லேசாய் சிரிப்பு வந்தது. ஓரளவு பாரம் குறைந்தது போல் ஒரு உணர்வு ஏற்பட மெல்ல எழுந்தான்.

ரேந்திரன் மணாலிக்கு வந்து ஒரு நாள் முடிந்து விட்டது. இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு அங்கிருந்த மனிதர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதும், அப்படித் தேடிக் கண்டுபிடித்தாலும் அவர்களுக்கு இருபத்தியிரண்டு வருடங்களுக்கும் முந்தைய நிகழ்வுகளை நினைவுபடுத்த முடிவதும் அவ்வளவு சுலபமாக இல்லை. அந்தக் காலத்து மணாலி எப்படி இருந்தது, நகர வீதிகள் எப்படி இருந்தன, வசித்த ஆட்கள் எங்கே வசித்தார்கள், அப்போதைய ஆட்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள் என்பதையெல்லாம் வைத்து ஒரு தெளிவான சித்திரத்தை, பிம்பத்தை மனதில் நிறுத்துவது பெரிய வேலையாகத் தான் இருந்தது. ஆனாலும் அந்தப் பெரிய வேலையில் சலிப்பில்லாமல் இறங்கியிருந்தான்.

டெல்லியில் அவனைப் பின் தொடர்ந்த துப்பறியும் ஏஜென்ஸி கும்பல் இங்கேயும் மிகவும் கவனமாக அவனைப் பின் தொடர்ந்து வந்தது. ஒரு முறை பார்த்த துப்பறியும் ஆசாமி மறுமுறை அவ்வளவு சீக்கிரமாகப் பார்க்கக் கிடைக்கவில்லை என்றாலும் அந்த ஆட்களின் செயல்முறைகள் ஒரேபோல் தான் இருந்ததால் பலவித உருவங்களுக்குள் ஒரே துப்பறியும் நிறுவனத்தை அவனால் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிந்தது. அவன் அவர்களைப் பெரிதாக நினைக்கவில்லை.

அவன் தந்தை மகேந்திரன் அஜீம் அகமது அந்தச் சமயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் வசித்தான் என்பதைக் கண்டுபிடித்து தான் அங்கே கடைசியாக வந்திருந்தார். அதனால் மணாலியில் அந்தக் காலக்கட்டத்தில் அந்தப் பகுதியில் இருந்தவர்களைச் சந்தித்துக் கேள்விகள் கேட்டான். அவன் தந்தை மகேந்திரனின் புகைப்படம் காண்பித்துக் கேட்டான். பலருக்கு அவரைத் தெரிந்திருக்கவில்லை. சிலர் நினைவுபடுத்திக் கொண்ட மாதிரி இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட எல்லாருமே அஜீம் அகமது பெயரைக் கேட்கும் வரை அவனிடம் இயல்பாகப் பேசினார்கள். அஜீம் அகமது பெயரைச் சொன்னவுடனே முகம் மாறினார்கள். ஒருவித இறுக்கமும் பயமும் அவர்களைச் சூழ்வதை நரேந்திரன் கவனித்தான். அதன் பின் இல்லை, தெரியாது, நினைவில்லை என்ற வார்த்தைகளே அவர்களிடமிருந்து திரும்பத் திரும்ப வந்தன.  இப்படி அஜீம் அகமதை விசாரித்து வந்திருக்கும் ஒருவனிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தால் கூட அவன் வந்து பழிவாங்கி விடுவானோ என்று அவர்கள் பயந்தது போலிருந்தது.

அப்படிப்பட்டவர்களுடன் பேசி ஒரு தகவலும் கிடைக்காமல் சலித்துப் போன நரேந்திரனுக்கு அதிர்ஷ்டவசமாய் முகமது யூனுஸ் என்ற முதியவர் கிடைத்தார். அந்தப் பகுதியில் அப்போது ஐந்து அறைகள் மட்டுமே கொண்ட சிறிய லாட்ஜ் ஒன்றை நடத்தி வந்தவர் அவர். இப்போதும் அந்த லாட்ஜ் அப்படியே மாற்றம் இல்லாமல் இருக்கிறது. அந்தப் பகுதியில் மாற்றமேயில்லாத பழைய கட்டிடம் அவருடையது தான் என்று பலரும் சொல்லியிருந்தார்கள்.  

முன்பு பலரிடம் பேசியிருந்த அனுபவத்தின் காரணமாக நரேந்திரன் அவரிடம் எடுத்தவுடன் அஜீம் அகமது பற்றிக் கேட்கவில்லை. ஏன் அவர் மட்டும் அந்த லாட்ஜைப் புதுப்பிக்காமல் பழைய மாதிரியே வைத்துள்ளார் என்று நரேந்திரன் ஆர்வம் காரணமாகக் கேட்டான்.      

ஒரே மகன் கனடாவில் இருக்கிறான். அங்கேயே செட்டில் ஆகி விட்டான். இங்கே அவன் திரும்ப வரப்போவதில்லை. அப்படி இருக்கும் போது இந்தக் கட்டிடத்துக்கு ஏன் நான் செலவு செய்ய வேண்டும்? என் காலம் முடியும் வரை எனக்கு வருமானத்திற்கு இது ஒரு வழி. அந்த அளவில் தான் இதை நான் நடத்திக் கொண்டு வருகிறேன். நான் செத்தவுடன் என் மகன் இதை விற்று விட்டுத் தான் போகப்போகிறான்...”

நீங்கள் கனடா போகவில்லையா?”

ஒரு மாதம் போயிருந்தேன். சலித்து விட்டது. பக்கத்தில் யாருடனும் பேச வழியில்லை. வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடைக்க வேண்டும். சனி ஞாயிறு தான் மகன் எங்கேயாவது கூட்டிக் கொண்டு போவான். நயாகரா போய்ப் பார்த்தேன். அருமையாக இருந்தது. மற்ற இடங்கள் எல்லாம் சாதாரணம் தான். அதை விட மணாலியே பரவாயில்லை.  இங்கே என்றால் நண்பர்களும், உறவினர்களும் இருக்கிறார்கள். யாரும் கிடைக்காவிட்டால் டூரிஸ்ட்களிடம் கூடச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம். அதனால் மகனிடம் சொல்லி விட்டேன். இனி நான் வரமாட்டேன். அப்பாவைப் பார்க்க வேண்டுமென்றால் குடும்பத்தோடு நீ இந்தியாவுக்கு வா. என்னை அங்கே கூப்பிடாதே என்று சொல்லி விட்டேன்….”

முதியவருக்குப் பேசுவதில் நிறைய ஆர்வம் என்பது புரிந்தது. அன்பானவராகத் தெரிந்தார். அவர் கேட்டார். “நான் ஏன் இந்த லாட்ஜைப் புதுப்பிக்கவில்லை என்று கேட்கவோ, கனடாவுக்குப் போகவில்லை என்று கேட்கவோ நீங்கள் வரவில்லை என்று நினைக்கிறேன். எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?”

நரேந்திரன் தன் தந்தையின் புகைப்படத்தை அவருக்குக் காட்டினான். “இவர் இருபத்தியிரண்டு வருஷங்களுக்கு முன் ஒரு ஆளைத் தேடி இங்கே வந்தார். அப்படி வந்தவர் திரும்பவும் டெல்லிக்கு வரவில்லை. “

மூக்குக் கண்ணாடியைச் சரிப்படுத்திக் கொண்டு அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்த முகமது யூனுஸ் பின் அவனிடம் நீங்கள்?” என்று கேட்டார்.

நரேந்திரனுக்கு இவரிடம் தன் பதவியைச் சொல்வதை விட உறவைச் சொல்வது உதவும் என்று தோன்றியது. ”நான் அவர் மகன்என்றான்.

முகமது யூனுஸ் முகத்தில் கனிவும், இரக்கமும் தெரிந்தது. “உங்கள் அப்பா யாரைத் தேடி இங்கே வந்தார்?” என்று அவர் கேட்டார்.

இந்த இடம் வரை எல்லா இடங்களிலும் சுமுகமாகத் தான் போனது. இந்தக் கேள்விக்கான பதில் சொன்ன பிறகு தான் இறுக்கமும், தந்தி வாசகங்களும், மௌனமும்... நரேந்திரன் சொன்னான். “அஜீம் அகமது என்ற தீவிரவாதியைத் தேடி இங்கே வந்தார்.”

அந்தப் பெயர் அவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது என்றாலும் அவர் மற்றவர்களைப் போல் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கவில்லை.   ”உங்கள் தந்தை ஏன் அவனைத் தேடி வந்தார்

அவர் போலீஸ் அதிகாரியாக இருந்தார். அதனால் தான் ஒரு விசாரணை விஷயமாய் அவனைப் பிடிக்க வந்தார்.”

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?”

நானும் போலீஸ் அதிகாரி தான்....”

போலீஸ் அதிகாரியான உங்கள் அப்பா திரும்பி வராவிட்டாலும் கூட, நீங்களும் போலீஸ் அதிகாரியாகி இருக்கிறீர்கள். அவரைத் தேடி வந்திருக்கிறீர்கள்?”

நரேந்திரன் தலையசைத்தான். முகமது யூனுஸ் அவனை வியப்புடன் பார்த்தார். ”அல்லாவின் தீர்மானமே தீர்மானம்...” என்று முணுமுணுத்த அவர் அமைதியாகச் சொன்னார். “உங்கள் தந்தையை நான் பார்த்திருக்கிறேன்.”



(தொடரும்)
என்.கணேசன்



2 comments:

  1. நரேந்திரன் தன்னை பின் தொடரும் துப்பறியும் நிறுவனத்தை கண்டுபிடித்தது அற்புதம் 👌....

    முகமது யூனுஸ் சொல்ற தகவல்ல தான் கதை சூடுபிடிக்கப்போகிறது...

    ReplyDelete
  2. Very very interesting sir.

    ReplyDelete