சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 22, 2021

யாரோ ஒருவன்? 24


ரேந்திரன் அந்தப் பதிலை யாராவது சொல்ல மாட்டார்களா என்று தான் நேற்றிலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் என்றாலும் அதை முதல் முறையாகக் கேட்கையில் திகைப்பு மேலிட்ட பின்பே மகிழ்ச்சியும் ஆர்வமும் மெல்ல மனதில் எழுந்தன. அவன் நன்றியுடன் சொன்னான். “விவரமாகச் சொல்லுங்களேன்

முகமது யூனுஸ் அவனையே சிறிது நேரம் பார்த்தார். ஆனால் அவர் கவனம் இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு போய் அன்றைய சூழ்நிலையைப் பார்ப்பது போல் நரேந்திரனுக்குத் தோன்றியது. அவர் சொல்ல ஆரம்பித்தார்.  “உன் அப்பா வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் அஜீம் அகமது மணாலிக்கு வந்தான். இங்கே ஒரு நட்சத்திர ஓட்டலில் அவன் தங்கியிருந்தான். அவன் ஒரு ராஜாவைப் போல.... எங்கே போனாலும் அவனுடன் ஒரு பட்டாளமே போகும். அவனை எல்லாராலும் பார்க்க முடியாது. அவன் கூட இருக்கும் அடியாட்களை வைத்து தான் அவன் வந்திருப்பது தெரிய வருமாம். அதை விவரமறிந்தவர்கள் சொன்னார்கள். அவனுடன் வரும் பட்டாளத்திலும் பல அடுக்குகள் உண்டு. அவனுக்கு மிக நெருங்கியவர்கள் மட்டும் அவனைச் சுற்றி இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் அவன் இருக்கும் பகுதியில் அங்கங்கே தங்கிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட ஆட்களில் ஐந்து பேர் இங்கே இரண்டு அறைகளில் தங்கியிருந்தார்கள்....”

கடுமையான கசப்பு மருந்தைச் சாப்பிட்டவர் போல முகமது யூனுஸ் முகம் சுளித்தார். “அவனோ, அவன் பட்டாளமோ எங்கே தங்கினாலும் தங்குவதற்குக் காசு தரமாட்டார்கள். சாப்பிட்டால் சாப்பாட்டுக்குக் காசு தரமாட்டார்கள். ஆனல் சாப்பிட என்ன தயாரிக்க வேண்டும் என்று எந்த விதமான தயக்கமும் இல்லாமல் சொல்வார்கள். சொன்னபடி சமைத்துப் போடவில்லை என்றால் அந்த இடத்தைத் துவம்சம் செய்து விடுவார்கள். அவன் நீண்ட காலத்துக்குத் தொழில் நடத்த முடியாதபடி செய்து விடுவார்கள். அதனாலேயே எல்லாரும் சகித்துக் கொள்வார்கள். எப்போது தான் போவார்களோ என்று ஆவலோடு காத்துக் கொண்டிருப்பார்கள். நானும் அப்படித் தான் இருந்தேன். அவர்கள் வந்திருந்தது நல்ல சீசன் சமயம்.  எங்களைப் போன்ற ஆட்கள் நாலு காசு சம்பாதிப்பதே அந்த சீசன் சமயத்தில் தான். ஐந்து அறைகளில் இரண்டு அறைகளை அந்தத் தடியர்களுக்கு ஒரு வார காலம் தரவேண்டியிருந்தது. எதிர்க்கவோ மறுக்கவோ வழியில்லை…. அப்போது தான் உன் அப்பா அஜீம் அகமது பற்றி விசாரித்துக் கொண்டு வந்தார்….”

சொல்வதை ஒரு நிமிடம் நிறுத்தி முகமது யூனுஸ் நரேந்திரனை யோசனையுடன் பார்த்தார். கிட்டத்தட்ட மகேந்திரனும் இந்த இளைஞனின் தோரணையில் தான் உட்கார்ந்திருந்தார். அசைக்க முடியாத தைரியம் அவருடைய முகத்திலும் நடவடிக்கைகளிலும் இருந்தது.  அவர் முகத்தில் ஒரு ஒளி வீசியது போல் அன்று உணர்ந்தது கூட இன்னும் முகமது யூனுஸுக்கு நினைவிருக்கிறது. ஹூம்…. அணையப் போகும் விளக்கில் இருந்த கூடுதல் பிரகாசம் அது என்று அப்போது புரிந்திருக்கவில்லை. வருத்தத்துடன் அவர் தொடர்ந்தார். உன் அப்பா கேட்டதற்கு நானும் அஜீம் அகமதைத் தெரியாது என்று தான் சொன்னேன். அவன்  ஆட்கள் ஐந்து பேர் இங்கேயே இருக்கையில் நான் வேறென்ன செய்ய முடியும்? அவர் இங்கிருக்கும் அறைகளைச் சோதிக்க வேண்டும் என்று சொன்னார். சோதனை போடவும் செய்தார். அஜீம் அகமது ஆட்கள் மேல் சந்தேகம் வந்து அவர்களை விசாரிக்கவும் செய்தார். அந்த ஆட்கள் டூரிஸ்ட் ஆட்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டார்கள். ஆனால் அவர் அதை நம்பவில்லை என்பது அவரைப் பார்க்கும் போதே எனக்குத் தெரிந்தது. அது அந்த ஆட்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். அவர் போனவுடன் ஐவரில் இரண்டு பேர் அஜீம் அகமதுக்குத் தகவல் தெரிவிக்க ரகசியமாய் ஓடினார்கள்…. அதற்குப் பின் உன் அப்பா இந்த ஊரிலேயே இரண்டு நாட்கள் அவனைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தார் என்று நான் கேள்விப்பட்டேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.   அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. மூன்று நான்கு நாட்கள் கழித்து இங்கிருக்கும் ஆட்கள் போய் விட்டார்கள். அதனால் அஜீம் அகமதுவும் போய்விட்டிருப்பான் என்று யூகித்தேன். ஆனால் உன் அப்பா பற்றிப் பின் யாரும் பேசவில்லை…”

நரேந்திரன் கண்களை மூடி யோசித்தான். அவன் தந்தை உயிரோடு இருந்து அந்த ஊரை விட்டு அஜீம் அகமது தப்பித்துப் போயிருக்க வழியில்லை. அவரைக் கொன்ற பிறகு தான் அஜீம் அகமது தப்பித்திருக்க வேண்டும்.

நரேந்திரன் கேட்டான். “நீங்கள் அஜீம் அகமதைப் பார்த்திருக்கிறீர்களா?”

இல்லை அவனைப் பார்த்ததில்லை. என் நண்பர் ஒருவர் பக்கத்தில் இருந்தார். அவர் அவனை ஒரு தடவை தூரத்திலிருந்தாவது பார்த்துவிட வேண்டும் என்று இரண்டு நாள் அவன் தங்கியிருக்கும் நட்சத்திர ஓட்டலுக்கு வெளியே காத்திருந்து பார்த்திருக்கிறார். அவன் பார்வை அவர் மேல் விழுந்து நடுங்கியிருக்கிறார். இங்கே வந்து என்னிடம் சொன்னார். “சைத்தானின் பார்வை என் மேல் விழுந்த மாதிரி இருந்தது. பயங்கரமானவன் என்பதை அவன் பார்வையிலேயே உணர்ந்து விட்டேன்என்று சொன்னார். அதே போல் வேறொரு ஆளும் சொல்லக் கேட்டிருக்கிறேன்….”

அவர்கள் இரண்டு பேரும் இப்போது இருக்கிறார்களா?”

இல்லை. அல்லா அவர்களை அழைத்துக் கொண்டு பல வருடங்களாகி விட்டன. எனக்கு அவர்கள் சொன்னதைக் கேட்டபின் அவனைப் பார்க்க மனம் இல்லை. இறைவனையும், இறைவன் அருள் பெற்றவர்களையும் பார்த்தால் புண்ணியமாவது உண்டுஇது போன்ற சைத்தானைப் பார்க்க ஆசைப்படுவதும் ஒரு வகையில் பாவம் தான்.”

இந்த அளவு தீவிரமாக அந்த முதியவர் அஜீம் அகமதை வெறுப்பது நரேந்திரனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவன் காரணம் கேட்ட போது முகமது யூனுஸ் சொன்னார். “மனிதன் உயர்ந்த நெறிகளுடனும், தர்மசிந்தனையுடனும் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எங்கள் மதத்தில் தினமும் ஐந்து முறை தொழுகை சொல்லப்பட்டிருக்கிறது. தினசரி ஐந்து முறை கருணையே வடிவான இறைவனைத் தொடர்பு கொள்கிறவன் அடிக்கடி தன் மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டவனாகிறான். அப்படிப்பட்டவனுக்கு அடுத்தவனுக்குத் தீங்கு நினைக்கவோ, செய்யவோ மனம் வராது. அப்படி  எண்ணம் வந்தால் அவன் அல்லாவைத் தொழவில்லை, இறைவன் அருள் அவன் மீது விழவில்லை என்று அர்த்தம். அப்படிப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பது தான் சரி…”

அவர் அந்த அளவு உறுதியாகச் சொன்னது மாறுபட்ட சிந்தனையை நரேந்திரனுக்குக் காட்டியது. அவன் கேட்டான். “அதற்குப் பிறகு அவன் திரும்பவும் மணாலிக்கு வந்திருக்கிறானா?”

எனக்குத் தெரிந்து இல்லை. ஏனென்றால் அவனோடு வரும் கூட்டம் பின் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அவன் தனியாக ரகசியமாய் வந்து போயிருந்தால் எனக்குத் தெரிய வழியில்லை…”

அவன் தங்கிய நட்சத்திர ஓட்டல்?”

அது பத்து வருடங்களுக்கு முன் விற்கப்பட்டு இப்போது அது இப்போது ஒரு ஆஸ்பத்திரியாகி இருக்கிறது. அதில் வேலை செய்தவர்கள் எல்லாம் பல இடங்களுக்குப் போயிருப்பார்கள்.”

உங்களுக்குத் தெரிந்து அவனுடன் தொடர்பில் இருந்த யாராவது இங்கே இன்னமும் இருக்கிறார்களா? என் தந்தை வேறு யாரையாவது தொடர்பு கொண்டதாவது உங்களுக்குத் தெரியுமா?”

முகமது யூனுஸ் அவனைச் சிறிது தயக்கத்துடன் பார்த்தார். நரேந்திரன் சொன்னான். “என்னிடம் சொல்லப்படும் விவரங்கள் எனக்குள்ளேயே ரகசியமாக இருக்கும் பெரியவரே. நீங்கள் சொன்னதாக எந்தத் தகவலும் கண்டிப்பாக வெளியே தெரியாது.”

முகமது யூனுஸ் சொன்னார். “உங்கள் தந்தை உள்ளூர் போலீஸ் உதவியுடன் அவனைக் கைது செய்ய எதோ முயற்சி எடுத்ததாகச் சிலர் ரகசியமாய் பேசிக் கொண்டார்கள். அது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அஜீம் அகமது சிக்கவில்லை. உங்கள் தந்தையைப் பற்றி அதன் பிறகு யாரும் பேசவில்லை….”

உள்ளூர் போலீஸ் சரியாக மகேந்திரனுக்கு உதவவில்லை என்ற அபிப்பிராயம் ரா உயர் அதிகாரிகளுக்கு இருந்ததென்பது இப்போதைய ரா தலைவர் மூலம் நரேந்திரனுக்குத் தெரிந்திருந்தது.   அப்போதைய ரா தலைவர் சில அதிகாரிகள் மூலம் விசாரணை கூட மேற்கொண்டார் என்றும் அவர் சொன்னார். ஆனால் அது சம்பந்தமான எழுத்துபூர்வமான எந்த விவரங்களும்ராவிடம் இப்போது ஏனோ இல்லை.



 (தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. Mohamed Yunus's words echo the real feelings of true Muslim Brothers. You do justice to all religions sir. May God bless you.

    ReplyDelete
  2. எனக்கும் இந்த மாதிரி ஐந்து வேளையும் தொழுகை நடத்தும் நண்பர்கள் உள்ளார்கள்

    இறைவனை இந்துமதத்தை விட அதிகமாக பக்தி செலுத்துபவர்கள்
    ஐந்து வேளை தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் தான்

    ReplyDelete
  3. நரேந்திரனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?... என்பதை அறிய ஆவல் ஏற்படுகிறது..

    ReplyDelete