சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, December 31, 2020

இல்லுமினாட்டி 83



சிந்து விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாத மனக்குழப்பத்தில் இருந்த க்ரிஷ் கடைசியில் மாஸ்டரிடமே ஆலோசனை கேட்பது என்ற முடிவுக்கு வந்தான். சென்ற முறை அவரை மானசீகமாகத் தொடர்பு கொள்ள முடிந்திருந்ததால் மறுபடியும் முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குள் பிறந்திருந்தது. அதனால் முயற்சி செய்தான்.

இந்த முறை அவரைத் தொடர்பு கொள்ளவும் உணரவும் அவனுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. ’உதயிடம் தெரிந்த வசிய அலைகளின் மூலம் எங்கே என்று கேட்டாய். விஸ்வம் என்று தெரிவித்து விட்டேன். இனி என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியவன் நீ. அதை விட்டு விட்டு மறுபடி என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்?’ என்று மாஸ்டர் பிடிகொடுக்காமல் நழுவுகிறாரோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. ஆனால் அவன் மாஸ்டரை விடுவதாய் இல்லை. குரு-சிஷ்ய பந்தம் எல்லா பந்தங்களுக்கும் மேலானது. கிட்டத்தட்ட இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே உள்ள பிணைப்பு போலத் தான். அதில் எல்லைகளோ, கட்டுப்பாடோ கிடையாது. சரணாகதி என்று காலைப் பிடித்தால் காப்பாற்றாமல் போக இறைவனுக்கே வலிமை போதாது என்கிற போது குரு சிஷ்யனிடமிருந்து தப்பிக்க வழியேது?

இந்த சிந்தனையோடு விடாமல் முயன்ற க்ரிஷ் ஒரு கட்டத்தில் மனம் லேசாகி லேசாகி மிதப்பது போல உணர ஆரம்பித்தான். அவனே ஒரு பறவை போல இமயமலையில் பறந்து அவரைத் தேடிப் போவது போலப் போனான். முடிவில் மெல்ல மெல்ல மாஸ்டரை உணர ஆரம்பித்தான். மாஸ்டர் அவனைப் பார்த்துப் புன்னகைத்ததைத் தெளிவாக நேரில் பார்ப்பது போல் அவனால் பார்க்க முடிந்தது.

“வர வர உன் தொந்தரவு அதிகமாகி விட்டது” என்று அவர் செல்லமாகக் கடிந்து கொண்டார்.

“சிஷ்யன் மனதை தெளிவிக்க வேண்டியது குருவின் கடமை. அதைச் செய்யாமல் இமயமலையில் போய் உட்கார்ந்து கொண்டால் சிஷ்யன் மனம் தெளிய வேறெங்கே போவான்” என்று க்ரிஷ் புன்னகையுடன் சொல்லி விட்டு  மானசீகமாக அவரிடம் தன் நிலைமையைச் சொல்ல ஆரம்பித்தான். சிந்துவை அனுப்பி வைத்தவன் விஸ்வம் என்று தெரிந்தாலும் உதய் மனதில் அவள் நீக்க முடியாத இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டதால் அவனைப் படுகாயப்படுத்தாமல் அவளை அப்புறப்படுத்த முடியாது என்கிற நிலைமை இருப்பதை வருத்தத்துடன் சொன்னான். அதே போல் பத்மாவதி அவளை மருமகளாக மனதில் வரித்துக் கொண்டிருப்பதைச் சொன்னான். எதிரியின் கருவி என்று தெரிந்த பின்னும் அவளுடைய இளமைக்காலம் முதல் நடந்ததெல்லாம் அறிந்த பின் அவனுக்கே அவள் மீது பச்சாதாபம் தான் மேலோங்கி நிற்கிறது என்பதையும் சொன்னான். அவளை இல்லுமினாட்டியில் ஒப்படைப்பது தான் அவர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்று அறிவு சொன்னாலும், அவள் சித்திரவதைக்கு ஆளாவதையும், முடிவில் கொல்லப்படுவதையும் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்பதையும் அவரிடம் கண்கலங்கச் சொன்னான். காரணம் அவள் பிறந்ததிலிருந்தே குற்றம் எதுவும் செய்யாமல் கடுமையாகத் தண்டிக்கப்பட்டவள் என்பதையும் இப்போது உதயின் காதலி என்பதையுமே மனம் திரும்பத் திரும்பச் சொல்கிறதென்று சொன்னான்.  ஆனால் அதே நேரத்தில் அவள் விஸ்வத்தின் கருவி என்பதால்,. அவன் உண்மையான உத்தேசம் தெரியா விட்டாலும் அவள் மூலம் அவன் என்னேரமும் அவர்களுக்கு எந்த ஆபத்தையும் வரவழைக்க முடியும் என்ற நிலைமையும் இருப்பதைச் சொன்னான். இந்தச் சூழ்நிலையில் அவன் என்ன செய்வது நல்லது என்று மாஸ்டரைக் கேட்டான்.


அவர் சொன்னார். “உன் இதயம் காட்டுகிற வழியில் போ. ஆனால் அறிவையும் கூடவே வைத்துக் கொள்”



”தகவலைச் சொன்னால் இல்லுமினாட்டி தலைமைக்குத் தெரிவித்து விடுகிறேன். அல்லது எழுதித் தந்தால் அதை அங்கே சேர்த்து விடுகிறேன்” என்று சொன்ன சாமுவலை கர்னீலியஸ் சிறு வருத்தத்துடன் பார்த்தார்.

“நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லாமல் சொல்கிறேன் என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. இது மிக முக்கியமான விஷயம். பல காலத்திற்கும் முன்னாலேயே தலைமைக்குத் தெரிவித்திருக்க வேண்டியது. அப்போது முக்கியமில்லை என்று நினைத்து விட்டு விட்டோம். இப்போது நடப்பதெல்லாம் பார்க்கையில் முக்கியத்துவம் புரிகிறது. அதனால் தான் தெரிவிக்க நினைக்கிறேன். ஆனால் தலைமையிடமே சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லி அனுப்பவோ, எழுதி அனுப்பவோ நான் விரும்பவில்லை....”

அந்தப் பணிவான பேச்சு பலவீனத்திற்கு அறிகுறி அல்ல என்பதையும் கிழவர் தன் முடிவில் இருந்து பின் வாங்க மாட்டார் என்பதையும் சாமுவல் புரிந்து கொண்டார். ’இப்போது நடப்பதெல்லாம் பார்க்கையில் முக்கியத்துவம் புரிகிறது. அதனால் தான் தெரிவிக்க நினைக்கிறேன்.’ என்று அவர் சொன்னது நடக்கும் சம்பவங்களுக்குச் சம்பந்தப்பட்டது என்பதைப் புரிய வைத்ததால் சாமுவலின் மூளை மிக வேகமாக வேலை செய்தது.

சாமுவல் மிகவும் கவனமாகப் பேசினார். “நீங்கள் நம் இயக்கத்தின் மிக மூத்த உறுப்பினர் என்பதால் உங்களிடம் சொல்வதற்கு எனக்குத் தயக்கமில்லை. விஸ்வத்தால் தலைவரின் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். அதனால் அவர் யாரையும் சந்திப்பதையோ, வெளியே எங்கும் செல்வதையோ தவிர்த்து வருகிறோம். விஸ்வத்தைக் கண்டுபிடித்து அவன் சம்பந்தமாக ஒரு முடிவு தெரியாமல் இந்த நிலைமை சரியாகும் என்று தோன்றவில்லை. எதற்கும் அவரிடம் நீங்கள் சொன்னதைத் தெரிவிக்கிறேன்.”

கர்னீலியஸ் தலையசைத்தார். ஆனாலும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.

சாமுவல் மெல்ல எழுந்து விடைபெற்றார். அப்போதும் கர்னீலியஸ் மனதை மாற்றிக் கொள்கிறபடி தெரியவில்லை. வாசலை நோக்கி நான்கு அடிகள் வைத்த சாமுவல் போகும் முன் ஏதோ நல்ல யோசனை புலப்பட்டது போலத் திரும்பி கர்னீலியஸிடம் சொன்னார். “ஒரு வேளை தலைவரை நீங்கள் சந்திக்க ஏற்பாடு செய்ய முடியா விட்டால் தலைமைக்குழு உறுப்பினர்கள் யாராவது ஒருவரைச் சந்திக்க நான் ஏற்பாடு செய்யட்டுமா?”

சாமுவல் வாங் வேயை மனதில் வைத்து தான் அப்படிச் சொன்னார்.

கர்னீலியஸ் யோசித்தார். தலைவரிடம் சொல்ல முடியா விட்டால் உபதலைவரிடம் சொல்வது தான் சரியாக இருக்குமென்று அவருக்குத் தோன்றியது. ஆனால் தலைவர் ம்யூனிக் பங்களாவிலேயே அடைபட்டுக் கிடக்க வேண்டி வந்தால் உபதலைவருக்கு வேலை அதிகமாகி விடும். தலைவர் போக வேண்டிய முக்கிய நிகழ்வுகளுக்கெல்லாம் அவர் தான் போக வேண்டி வரும். இந்த நிலையில் உபதலைவர் இருக்கையில் அடுத்ததாய் அவரிடம் தான் சொல்வேன் என்று முரண்டு பிடிப்பதும் தவறு என்று தோன்றியது. உபதலைவருக்கு அடுத்தபடியாக இருப்பது தலைமைக்குழு உறுப்பினர்களே. அவர்கள் யாராவது ஒருவரிடம் தெரிவிப்பதும் முறையான செயலே. சொன்னது மிக முக்கியமான தகவல் என்று அவர்கள் உணர்ந்தால் கண்டிப்பாய் தலைவரின் கவனத்திற்கு அவர்கள் கொண்டு செல்வார்கள். கூடி ஆலோசித்து முடிவெடுப்பார்கள்...

கர்னீலியஸ் சம்மதித்து விட்டுச் சொன்னார். “அவர்களே என்னிடம் வர வேண்டும் என்றில்லை. நான் வேண்டுமானாலும் போய் அவர்களைச் சந்திக்கச் சித்தமாக இருக்கிறேன்”

சாமுவல் சரியென்று தலையசைத்து விட்டு, தன் பரம திருப்தியை வெளியே காட்டிக் கொள்ளாமல் வணக்கம் தெரிவித்து அங்கிருந்து விடைபெற்றார்.

அன்றிரவு வாங் வேக்குப் போன் செய்து சாமுவல் தகவலைச் சொன்ன போது வாங் வே பரபரப்பானார். அவர் கர்னீலியஸை மிக நன்றாக அறிவார். அதிகார வட்டத்தில் கர்னீலியஸ் மிக முக்கியமாக ஆள் இல்லை என்றாலும் அனைவரும் அறிந்த ஆள் தான். வருடத்திற்கு ஒரு முறை இல்லுமினாட்டி உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நாளில் அவர்களுக்கு பழங்காலச் சுவடிகளிலிருந்து உறுதிமொழியைப் படித்துக் காட்டுவது கர்னீலியஸ் தான். எல்லோரும் மிகவும் மதிக்கக்கூடியவர். இல்லாததை இருப்பது போல் சொல்லி சில்லறைத்தனமாய் முக்கியத்துவம் தேடும் ஆள் அவரல்ல. இப்போதைய சூழ்நிலையில் பயன்படக்கூடிய மிக முக்கியமான தகவல் அவரிடம் இருக்கிறது, அது தலைமைக்கு முன்பே தெரிவித்திருக்க வேண்டிய தகவல் என்று அவர் சொன்னால் அப்படியே முக்கியமானதாகத் தான் இருக்க வேண்டும்...

சாமுவல் சொன்னார். “இதை எர்னெஸ்டோவிடமோ, இம்மானுவலிடமோ நான் சொல்லாமல் உங்களிடம் சொல்கிறேன் என்று வெளியே தெரிந்தால்....”

வாங் வே சொன்னார். “இதில் உங்களுக்கு எதுவும் பிரச்னை ஆகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். கவலைப்படாதீர்கள்.”

முதல் முறையாக அதிர்ஷ்டம் அவர் கதவைத் தட்டுவது போல் வாங் வே உணர்ந்தார். கர்னீலியஸ் சொல்வது போலவே மிக முக்கியமான தகவலாக இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால் அவருடைய திட்டங்களில் ஏதாவது ஒன்றாவது நிறைவேறலாம். எதிர்பார்த்ததற்கு மாறாக கர்னீலியஸ் முக்கியம் என நினைத்திருக்கும் தகவல் வாங் வேக்கு முக்கியமாக இல்லாமல் போனால் கூட நஷ்டமில்லை. அவர் சொன்னதை தலைமைக்குச் செய்தியாக அனுப்பி விடலாம்...

வாங் வே அவசரமாக சாமுவலிடம் கேட்டார். “கர்னீலியஸை இங்கே அழைத்து வருகிறீர்களா? இல்லை நான் வாஷிங்டன் வரட்டுமா?”

(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. மாஸ்டரும் தீர்வை சொல்லாம் சஸ்பென்ஸ் வைத்து விட்டாரே.... இந்த முறையாவது கர்னீலியஸ் அந்த ரகசியத்தை வெளியிடுவாரா???

    ReplyDelete
  2. நாவல் வாங்கி 2 நாளில் படித்து முடித்தேன்.அருமையான நாவல்.அக்சய் கிரிஸ் விஸ்வம் ஜிப்ஸி எர்னஸ்டோ இம்மானுவேல் எல்லாரும் இன்னும் மனதை விட்டு நீங்கவில்லை.

    ReplyDelete